பக்கம் எண் :

பதினாறாம் போர்ச்சருக்கம்9

வேலாயுதமும், தெவ்வன் யானைஉம் - பகைவனான அக்காசீராசனது யானையும்,
துணிய - துண்டுபட்டுவிழும்படி, ஏ ஒன்று - ஒரு பாணத்தை, எய்தான் -
பிரயோகித்தான்; (எ -று.)-கேமதூர்த்தி - க்ஷேமதூர்த்தி.                (14)

15.- கேமதூர்த்தி வீமனதுயானையை அடித்துத்தள்ளுதல்.

கேமனக்கரியினின்றுங்கிரியினின்றிழியுமாளி
யாமெனத்தரணியெய்தியடல்வயிர்த்தண்டொன்றேந்தி
வீமனன்றூர்ந்தவெங்கைவெற்பினைப்புடைத்துவீழ்த்தான்
பூமருதாரினானும்பூவின்மேற்சுரும்பிற்பாய்ந்தான்.

     (இ-ள்.) கேமன் - கேமதூர்த்தி,- அ கரியினின்றுஉம் - அந்த
யானையினின்றும், கிரியினின்று இழியும் ஆளி ஆம் என - மலையினின்று
இறங்குகின்ற சிங்கம்போல, தரணி எய்தி - தரையில் இறங்கி வந்து,- அடல்
வயிர்தண்டு ஒன்று ஏந்தி - மிக்க வலிமையையுடைய கதாயுதமொன்றை எடுத்து
(அதனால்), வீமன் அன்று ஊர்ந்த - வீமசேனன் அப்பொழுது ஏறிநின்ற, வெம்கை
வெற்பினை - வெவ்விய துதிக்கையையுடைய மலைபோன்றதான யானையை,
புடைத்து - அடித்து, வீழ்த்தான் - கொன்று கீழேதள்ளினான்; பூ மரு தாரினான்
உம்- மலர்களால் தொடுக்கப்பட்ட போர் மாலையையுடையவனான வீமசேனனும்,-
பூவின்மேல் சுரும்பின் - மலரிற்பாய்கிற வண்டுபோல, (பூவின்மேல்) பாய்ந்தான் -
தரையிற் குதித்தான்; (எ - று.)-பூ- இரட்டுற மொழிதல்.                 (15)

16.- வீமனும் கேமதூர்த்தியும் கதாயுத்தஞ்செய்தல்.

கரியமர்க்கொருவரானவிருவருங்காலினின்று
பரியவக்கதைப்போர்வல்லபார்த்திவர்பலருங்காணக்
கிரியொடுகிரிசெய்பூசலிதுவெனக்கிளக்குமாறு
புரிவிலார்பொருதபோர்மற்றியாவரேபுகலவல்லார்.

     (இ-ள்.) கரி அமர்க்கு - யானைமேலேறிச்செய்யும் போரில், ஒருவர்
ஆன -ஒப்பற்றவராகிய, இருவர்உம் - இரண்டுபேரும் [வீமனும் கேமனும்],
காலின் நின்று -(யானையில்லாமையால்பூமியிற்) கால்களால் நின்றுகொண்டு,
பரிய அ கதை போர்வல்ல பார்த்திவர் பலர்உம் காண - பருத்த
கதாயுதத்தாற்செய்கின்ற அந்த யுத்தத்தில்வல்ல அரசர்களெல்லலாரும் (வியந்து)
காணும்படி,- கிரியொடு கிரி செய் பூசல் இதுஎன கிளக்கும் ஆறு - மலையும்
மலையும் (தம்மிற் பகைத்துச்) செய்கின்றபோர் இதுவென்று (ஒப்புமையாற்)
சொல்லுமாறு, புரிவு இலார் -(வேறு ஓர்) எண்ணமும்இல்லாமல், பொருத -
செய்த, போர் - யுத்தத்தை, யாவர் ஏ புகல வல்லார் -எவர்தாம் (இத்
தன்மையதென்று) சொல்லவல்லவர்? (எ - று.)-புரிவு -(போரைத்தவிர்த்து
வேறொன்றில்) விருப்புமாம். மற்று - அசை.                        (16)