பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்91

     (இ - ள்.) 'மட்டுபடாமல் - அளவுபடாமல், வரு - வருகிற, தெவ்வர் -
பகைவர்கள், மலையின் -(இப்படி) போர்செய்தால், எமர் ஆன வர் தானை -
எம்முடையவர்கள்சேனை, இன்று - இன்றைக்கு, நின்று  தட்டுப்படாது - நிலைநின்று
காணப்படாது,' என்னா - என்று எண்ணி, பட்டு படாத - (முன்போர்களில்) இறந்து
ஒழியாத, வடி வேல் நரபாலர் - கூர்மையையுடைய வேலையுடைய
மனிதர்களைக்காக்கிற அரசர்கள், சூழ - சுற்றிலும்வரும்படி, முட்டு படாத முரண்
நன்னன் - தடைப்படாத வலிமையுடைய கர்ணன், முனைந்து சென்றான் - விரைந்து
(எதிரிற்) போனான்; (எ -று.)- பட்டு படாத - ஆயுதம் பட்டிறவாதஎனினுமாம்.
                                                           (165)

75.- இரண்டுகவிகள் - ஒருதொடர் : பலமன்னவர் சேனையோடு தருமன்
எதிர்த்துச்செல்ல, இருவரும் பொருதலைக்கூறும்.

பாஞ்சாலரிற்கேகயரிற்பலபாடைமாக்க
ளாஞ்சார்பினில்வந்தடைந்தோர்களினன்றுபோரின்
மாஞ்சாரொழிந்தபலமன்னருஞ்சூழவண்டு
பூஞ்சாறருந்துநறுந்தாமம்புனைந்ததோளான்.

     (இ-ள்.) பாஞ்சாலரின் - பாஞ்சாலதேசத்தாருள்ளும், கேகயரின் -
கேகயநாட்டருள்ளும், ஆம் சார்பினில் வந்து - தக்க துணையாக வந்து,
அடைந்தோர்கள் - சேர்ந்தவர்களாகிய, பல பாடைமாக்களின் - பலபாஷைகள்
பேசுகிற (வேறுபலதேயத்து) மனிதருள்ளும், போரில் மாஞ்சார்ஒழிந்த - போரில்
இறந்தவர்கள்போகமிகுந்த, பல மன்னரும்-, சூழ - சுற்றிலும்வரும்படி, அன்று -
அப்பொழுது, வண்டு பூ சாறு அருந்தும் - வண்டுகள் மலர்களின் தேனை
யுண்ணுகிற, நறுதாமம் - மணக்கின்றமாலையை, புனைந்த - தரித்த, தோளான் -
தோள்களை யுடையவனாகிய,- (எ -று.) - "தருமன்மைந்தன் என மேற்கவியோடு
இயையும். மாஞ்சார் - மாய்ந்தார் என்பதன் இடைப்போலி. பி - ம்: நறுந்தார்கள்.
                                                              (166)

76.மன்னன்றருமன்றிருமைந்தன்மலையவந்த
கன்னன்கருத்துங்கடுஞ்சேனையுங்கண்டுமேற்போய்ப்
பொன்னம்பொருப்போரிரண்டென்னவெம்பூசல்செய்தார்
இன்னந்தமக்குத்தமையன்றியெதிரிலாதார்.

     (இ-ள்.) மன்னன் தருமன் திரு மைந்தன் - தருமராசனது சிறந்த புத்திரனாகிய
யுதிட்டிரன், மலையவந்த போர்செய்தற்குவந்த, கன்னன் - கர்ணனது, கருத்துஉம் -
எண்ணத்தையும், கடு சேனை உம் - மிகுந்த சேனையையும், கண்டு - பார்த்து,
மேல் போய் - அவன் மேல் எதிர்த்துச்செல்ல,- தமக்கு தமை அன்றி -
தங்களுக்குத் தங்களையே யல்லாமல், இன்னம் எதிர் இலாதார் - வேறு
உவமையில்லாத தருமனும் கர்ணனும், அம் பொன் பொருப்பு ஓர் இரண்டு
என்ன -அழகிய பொன்மயமான இரண்டு மேருமலைகள்போலச் (சிறிதுஞ்
சலனமில்லாமல்),வெம் பூசல் செய்தார் - கொடிய யுத்தத்தைச் செய்தார்கள்;
(எ -று.)- போய் -போக.                                        (167)