பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்95

84.- சேனைநாதன் தளர்ந்ததுகண்டு தருமன் பொரலுறுதல்.

முன்சேனை யோடும் வலியுற்று முனைந்து கொற்ற
மன்சேனை நாதன் பொழிவா ளிமழையின் மூழ்கித்
தன்சேனை நாதன்மு தல்யாவ ருந்தளர்தல் கண்டு
நன்சேனை நாலு முடன்சூ ழநடக்க லுற்றான்.

     (இ - ள்.) முன் - முன்னே, சேனையொடுஉம் - சேனையுடனே, வலி உற்று
முனைந்து - வலிமைபொருந்திப் போர்செய்து, (பின்பு), கொற்றம் மன் சேனைநாதன்
- வெற்றியையுடைய துரியோதனராஜனது சேனைக்குத் தலைவனான கர்ணன், பொழி
- சொரிகிற, வாளி மழையின் - பாணவருஷத்திலே, மூழ்கி - முழுகி, தன் சேனை
நாதன்முதல் யாவர்உம் - தனது சேனைத்தலைவன் [திட்டத்துய்மன்] முதலிய
யாவரும், தளர்தல் - சோர்வடைதலை, கண்டு - பார்த்து, (தருமபுத்திரன்), நன்
சேனை நாலும் உடன்சூழ - நல்ல நால்வகைக் சேனைகளுந் தன்னுடன் சுற்றிலும்
வரும்படி, நடக்கல் உற்றான் - எதிர் செல்பவனானான்; ( எ -று.) - பி -ம்:
யாருந்.                                                      (175)

வேறு.

85.- கிருபன்முதலியோர்மீது அம்புஎய்து கொண்டு
தருமன் கர்ணனைக் குறுகுதல்.

கிருபனென் றெண்டிசையும் வரிசிலைக் குரைசெய்முனி
            கிருதவன்மன்சிந்தை விரகுடைச் சகுனியெனு,
நிருபரங் கங்கடொறு நிரையினிற்றுளையுருவ நெடியவம்
                        பைம்தறு பதுபடப் படமுடுகி,
முரண் மிகுந் திண்கடவுண் முரசுடைக் கொடிகொளணி
       முகிலின்வந் தண்டர்குல முதல்வனத்தனுவினொடு,
தரணியின் கண்சமர மலைவதொத் திரதமிசை தருமன்மைந்
                 தன்பரிதி புதல்வனைக் குறுகினனே.

     (இ-ள்.) கிருபன் என்ற - கிருபாசாரியனென்று, எண்திசை உம் -
எட்டுத்திக்குகளிலும், வரி சிலைக்கு - கட்டமைந்த வில்லின் தொழிலுக்கு, உரை
செய்- சிறப்பித்துச்சொல்லப்படுகிற, முனி - முனிவனும், கிருதவன்மன் -
கிருதவர்மாவும்,சிந்தை விரகு உடை - மனத்தில் வஞ்சனையையுடைய, சகுனி -
சகுனியும், எனும் -என்கிற, நிருபர் - அரசர்களது, அங்கள்கள்தொறுஉம் -
உடம்புகள்தோறும்,நிரையினில் - வரிசையாக, துளை உருவ - துளைத்துச்
செல்லும்படி, நெடிய அம்பு -நீண்ட அம்புகள், ஐம்பது அறுபது படப்பட -
ஐம்பதும் அறுபதுமாகப்பொருந்தும்படி, முடுகி - விரைவாக எய்து கொண்டு,-
அணி முகிலின் - அழகியமேகமாகிய வாகனத்தின் மேல் (ஏறி), அண்டர் குலம்
முதல்வன் - தேவர்கூட்டத்துக்குத் தலைவனான இந்திரன், அ தனுவினொடு -
அவ்விந்திர வில்லுடனே,தரணியின்கண் - பூமியில், வந்து-, சமரம் மலைவது -
போர்செய்வதை, ஒத்து-,முரண் மிகும் - போர்த்தொழில் மிகுந்த, திண் - வலிய,
கடவுள் -தெய்வத்தன்மையையுடைய, முரசு உடை கொடி கொள் - முரசத்தின்
வடிவத்தையுடைய, துவசத்தைக்கொண்ட, தருமன் மைந்தன் - யுதிட்டிரன்,
இரதம்மிசை  தேரின்மேலே, பரிதி புதல்வனை - சூரியபுத்திரனானகர்ணனை,
குறுகினன் - சமீபித்தான்;