ஒன்பதாவது சல்லியபருவம் 'சல்யபர்வம்'என்ற வடசொல்தொடர், திரிந்தது; சல்லியனது சம்பந்தமானபருவமென்று, ஆறாம்வேற்றுமைத் தொகையாகக் கொள்க; இனி, இரண்டாம்வேற்றுமையுருபும் பயனுமுடன்தொக்கதொகையாக, சல்லியனைப்பற்றிய பருவமெனினும் அமையும். சல்லியன் துரியோதனாதியர்க்குச் சேனைத்தலைவனாய்நின்று ஒரு நாள் போரை நடத்திய கதையைக் கூறும்பாக மென்று பொருள். பர்வம் - கணு: கரும்பு மூங்கில் முதலியவற்றிற்கு ஏகதேசமாகிய [ஏகதேசம் -ஒருபகுதி] கணுப்போல, நூலுக்கு ஏகதேசமாகிய உறுப்பை 'பருவம்' என்பது -உவமவாகுபெயர். சல்லியன்- (பகைவர்க்கு) அம்புநுனிபோல் (வருத்தஞ் செய்)பவன்; சல்யம் - அம்புமுனை. இவன் - மத்திரநாட்டரசன்; பாண்டு மகாராசனது இரண்டாவது மனைவியாகிய மாத்திரிக்கு உடன்பிறந்தவனாதலால், நகுல சகதேவர்க்கு மாமனாவன். இவன், பாண்டவர் அஜ்ஞாதவாசம் நீங்கிய பின் அவர்களுக்குப் போர்த்துணைசெய்யும் பொருட்டுத் தன்நாட்டிலிருந்து வரும்பொழுது, வழியில் துரியோதனன், தருமபுத்திரன் செய்ததென்று தோன்றும்படி ஆங்காங்குத் தண்ணீர்ப்பந்தல் முதலியன வைத்து எல்லாப்பொருளுங்குறைவற அமைத்து வஞ்சனையாக விருந்துசெய்விக்க, இவன், அதனை உண்டு, அங்ஙனந் தன்னை உபசரித்தவற்குத் துணைசெய்யத்தான் கடமைப்பட்டிருப்பதாக வாக்களித்து, பின்னர் அது துரியோதனன்செய்த சூதென்றுதெரிந்து வருந்தியும், வாக்குத்தத்தஞ்செய்துவிட்டமைபற்றி, அவனுக்கே துணையாயினான். இவன் துரியோதனாதியர்க்கு நான்காவது சேனைத்தலைவன். [முதற் பத்து நாளில் பீஷ்மனும், அடுத்த ஐந்துநாளில் துரோணனும், அதற்கு அடுத்த இரண்டு நாளில் கர்ணனும் சேனாதிபதியாயிருந்து ஒழிந்தனரென அறிக.] கீழ்ஆதிபர்வம் முதலாகவும், மேல் சௌப்திகபர்வம் முதலாகவும் கதாநாயகரான பாண்டவரது சரித்திரபாகத்தின் விஷயத்தைக்குறிக்குஞ் சொற்களாற் பருவங்களுக்குப் பெயரிடும் ஆசிரியர், இங்கு (அவ்வாறே பாண்டவர் சேனைத்தலைவர்பெயரால் சுவேதபர்வம், திருஷ்டத்யும்நபர்வம் எனப் பெயர் குறியாது) பீஷ்மபர்வம், கர்ணபர்வம், சல்லியபர்வம் எனத் துரியோதனாதியரின் சேனைத்தலைவரைப் பற்றின சொற்களாற் பெயரிடக்காரணம் என்னையோ வெனின்,-எதிரிகளது சிறப்பை நன்கு எடுத்துக்காட்டி அப்படிப்பட்டவர்களை இவர்கள்வென்றிட்டார்களெனக் கதாநாயகரைப்பெருமைப்படுத்த வேண்டியென்க. இனி, சல்லியவதபர்வம் என்பதுசல்லியபர்வமென நின்ற தென்றலு மொன்று, பிறவற்றிற்கும் இங்ஙனமேகொள்க. |