பக்கம் எண் :

110பாரதம்சல்லிய பருவம்

     வீமன்புஷ்பயாத்திரையாக அளகாபுரிக்குசென்று அங்குப்
பூஞ்சோலைக்குக் காவலாகவுள்ளவரும் தன்னையெதிர்த்துப் போர்
செய்தவர்களுமான யக்ஷர் வித்தியாதரர் அரக்கர் முதலிய பல
தேவசாதியாரைத் தான் தனியேபொருது அழித்து வென்றிட்டபொழுது
அவனதுபலபராக்கிரமங்களைக் குறித்து யக்ஷராசனான குபேரன்
மிக்கவியப்படைந்தனனாதலாலும், அசுரர்களைக் கொல்லுவதற்கென்றே
தேவர்களின் வேண்டுகோளால் சிவகுமாரனாய்த் திருவவதரித்து அங்ஙனமே
சூரபதுமன் முதலிய அசுரர்களையெல்லாம் அழித்த முருகக்கடவுளும்
வியக்கும்படி வீமன் தவறாது எளிதிற் பகையழித்துவருதலாலும், வீமன்
அலட்சியமாகச்செய்த சராசந்தவதம் முதலியவற்றை அருகிலிருந்து கண்டும்
சடாசுரன்வதை மணிமான்வதை கீசகன்வதை முதலியவற்றைக் கேட்டும்
கண்ணபிரான் வீமனது பலபராக்கிரமங்களைக் குறித்து மிகவும்
ஆனந்தமடைதல் பற்றியும், கருமசாக்ஷியும் உலகத்துக்கெல்லாம்
கண்ணுமானஇருட்டொகுதியையழிக்கின்ற சூரியனும் அதிசயிக்கும்படி
அவனினுஞ்சிறப்பாகவீமன் பகையிருளை வேரற ஒழித்துவந்தமைபற்றியும்,
'தனகரற்குங் குமரற்குந்தண்டுழாய் முடியவற்குந் தினகரற்கு மேலான
சிந்தையுடன் செருச்செய்வோன்'என்றார்.  தநகரன் - பொருளைச்
சேர்ப்பவனெனக் காரணப்பொருள்படும்.                    (145)

146.-எங்குப்போர்செய்வதென்று துரியோதனன் கேட்கக் கண்ணன்
விடைகூறத் தொடங்கல்.

எவ்விடைவீமனும்யானுமிகல்புரிதற்கிடமென்று
பொய்விடையேழடர்த்தோனைப்புயங்ககேதனன்கேட்ப
மெய்விடையானிரைப்பின்போய்வேயூதுந்திருநெடுமால்
அவ்விடையாங்கிருவருக்குமாம்பரிசாலருள்புரிந்தான்.

     (இ -ள்.) 'வீமன் யானும் -, இகல் புரிதற்கு - போர் செய்தற்கு,
இடம் -உரிய இடம், எ இடை - எந்த இடம்?' என்று -, புயங்ககேதனன்-
பாம்புக்கொடியையுடைய துரியோதனன், பொய் விடை ஏழ் அடர்த்தோனை-
வஞ்சனையமைந்த எருதுகளேழைப் பொருது அழித்தவனான கண்ணபிரானை,
கேட்ப - கேட்க, - மெய் விடை ஆன் நிரை பின்போய் - உண்மையான
எருதுகளோடு கூடிய பசுக்கூட்டங்கள் என்னுமிவற்றின் பின்னே சென்று,
வேய்ஊதும் - புள்ளாங்குழலை ஊதின, திரு நெடு மால் - சிறந்த பெரிய
கண்ணபிரான், ஆங்கு - அப்பொழுது, இருவருக்கும் ஆம் பரிசால் -
(துரியோதனன் வீமன் என்ற) இரண்டுபேருக்கும் இசையும்விதமாக, அ
இடை -(போருக்குரிய) அந்த இடம் இன்னதென்பதைக்குறித்து, அருள்
புரிந்தான் -சொல்லியருள்பவனானான்; (எ - று.)

    மாயையால் அசுரர்கள் ஆவேசிக்கப்பெற்ற எருதுகளாதலின்,
'பொய்விடையேழ்' என்றார்.  சிலவற்றை 'பொய்விடை' என்னவே, பிறவற்றை
'மெய்விடை' என்னவேண்டிற்று.

    விடையேழடர்த்த விவரம் - கண்ணன் நப்பின்னைப் பிராட்டியைத்
திருமணஞ் செய்துகொள்வதற்காக, அவள் தந்தையி னேற்பாட்டின்