பக்கம் எண் :

114பாரதம்சல்லிய பருவம்

     (இ -ள்.) நெடு தால கேதனன் - நீண்ட பனைமரத்தின்
வடிவத்தையெழுதிய கொடியையுடைய பலராமன், கேட்டு அருளி -
(கண்ணன்கூறிய போர் வரலாறுகளைக்) கேட்டு, மா மனம் தளர்வுற்று -
(தனது)சிறந்தமனம் தளர்ந்து, 'ஆட்டு அரவம் உடையவற்கோ போரில்
அழிவுவருவது - படமெடுத்தாடுந் தன்மையுள்ள பாம்பின் வடிவ மெழுதிய
கொடியையுடைய துரியோதனனுக்கோ யுத்தத்தில் அழிவு உண்டாவது! இனி-
இப்பொழுது, நாட்டம்ஏது - குறிக்குந்தொழில் யாது? என்று-, நராந்தகனை
வினவுதலும் - கண்ணபிரானை வினாவிய வளவிலே,-விரி திரை நீர்
மறந்தான்- பரவுகிற அலைகளையுடைய திருப்பாற்கடலில்  யோகநித்திரை
செய்தலைவிட்டு இங்குத் திருவவதரித்த - திருமாலாகிய கண்ணபிரான்,
மீட்டும்அவற்கு உரை செய்தான் - மறுபடியும் அந்தப் பலராமனுக்குக்
கூறுபவனானான்; (எ - று.)

    'ஆட்டரவமுடையவற்கோ அழிவுவருவது போரில்' என்று தனது
சிறந்தமாணாக்கனுக்கு அழிவு நேர்வதுபற்றி, பலராமன் மனந்தளர்ந்தன
னென்க. நாட்டம் - ஆகுபெயராய், உத்தேசிக்கப்பட்ட காரியத்தைக்
குறிக்கும்.நராந்தகன் - நரகாந்தகன் என்பதன் விகாரம்.

    நரகனைக்கொன்ற கதை:- திருமால்வராகாவதாரஞ்செய்து பூமியைக்
கோட்டாற் குத்தியெடுத்தபொழுது அத்திருமாலினது பரிசத்தாற்
பூமிதேவிக்குக்குமாரனாய்ப்பிறந்தவனும், அச்சமயத்திற்
சேர்ந்துபெறப்பட்டவனாதலால்அசுரத்தன்மைபூண்டவனுமானநரகனென்பவன்,
பிராக்சோதிஷமென்னும்பட்டணத்திலிருந்துகொண்டு, சகல பிராணிகளையும்
மிக உபத்திரவித்து, தேவர்சித்தர் கந்தருவர் முதலானவர்களுடைய
கன்னிகைளையும் ராஜாக்களுடையகன்னிகைகளையும் பலாத்காரமாய்
அபகரித்துக்கொண்டுபோய்த் தான்மணம்புணர்வதாகக் கருதித் தன்
மாளிகையிற் சிறைவைத்து, வருணனுடையகுடையையும் மந்தரகிரிச்சிகரமான
ரத்தினபருவதத்தையும் தேவர் தாயானஅதிதிதேவியின் குண்டலங்களையுங்
கவர்ந்து போனதுமன்றி,இந்திரனுடையஐராவதயானையையும் அடித்துக்
கொண்டு போகச் சமயம்பார்த்திருக்க, அஞ்சிவந்து பணிந்து முறையிட்ட
இந்திரனது வேண்டுகோளால்,கண்ணபிரான், கருடனை வரவழைத்து,
பூமிதேவியமிசமான சத்தியபாமையுடன்தான் கருடன் மேலேறி, அந்நகரத்தை
அடைந்து, சக்கராயுதத்தைப்பிரயோகித்து, அவன் மந்திரியான முரன்
முதலிய பல அசுரர்களையும்இறுதியில் அந்நரகாசுரனையும் அறுத்துத்
தள்ளியழித்திட்டனன் என்பதாம்.

    'விரிதிரைநீர்மறந்தான்' என்றது, திருப்பாற்கடல்நாதனாகிய திருமால்
தேவர்களின் வேண்டுகோளால் அங்குநின்று கண்ணனாக வந்து
தோன்றினனாதலின்;  இங்ஙனங்கூறினது, உபசாரவழக்கு.  நீர் - கடலுக்கு
இலக்கணை.  பாற்கடல் நீரெனப்படுதலை "தாழிதரையாகத் தண்டயிர் நீராக"
எனப் பிறவிடத்துங் காண்க.                                 (151)