யவனே! நீநயந்தனை கேள் - (நான் சொல்வதை) நீ விரும்பிக்கேள்: உறு போரிடை - நேர்ந்துள்ள போரிலே, நேர் மலைந்திடுவோர் - எதிர்த்து நின்றுபோர் செய்பவர்களான, இருவோரினும் - இரண்டு வீரர்களுள்ளும், ஆநிலன் -வாயுகுமாரனான வீமன், பலவான் - பலசாலி; முகுர ஆனனன் தரு சேய் -திருதராட்டிரன் பெற்ற புத்திரனான துரியோதனன், அதிலே வினை ஆதிகன் -வீமசேனனுடைய தனினும் போர்த்தொழிற்றிறம் மேம்பட்டவன்: நான் இயம்பல்தகாது - நான் ஒன்றையுஞ் சொல்லுதல் தகுதியன்று: இவர் இருவோர்களும் -இவ்விரண்டு பேரும், ஆயிரம் நாள் மலைந்தனர் ஆயினும் - மிகப்பல நாள்போர்செய்தாராயினும், வீவொடு - மரணத்தோடுகூடி, வானகம் புகுதார் -சுவர்க்கலோகத்தைச் சேரார்; (எ-று.)
வாஸவன் - அஷ்டவசுக்களுக்குத் தலைவனென்றும், ஐசுவரியமுடையவ னென்றும் (வசு - செல்வம்) காரணப்பொருள்படும். இந்திரன் அருச்சுனனைத் தன்னுலகத்துக்கு அழைத்துப்போனபொழுது அவனுக்கு ஆரம் முதலிய ஆபரணங்களைக் கொடுத்ததை "ஆடையுங் கலனு மந்த்ரத்துடனடற்படையு நல்கி, யேடவி ழலங்கலானோராசனத் திருத்தியென்றும், தேடுதற்கரிய தூயவமுதுசெம்பொற்கலத்திற், கூடவுண்டமரர்க்கெல்லாங் குரிசிலாஞ் சிறப்புச் செய்தான்" என்று கீழ் நிவாதகவசர் காலகேயர்வதைச் சருக்கத்தில் வந்ததனால் உணர்க. இரண்டுவீரர் எதிர்த்துத் தெரிந்தயுத்தஞ்செய்கையில் மத்தியஸ்தராய் நிற்பாருள் ஒருவன் இடையில் ஒன்றைச்சொல்லுதல் அநீதியென்பான், 'நானியம்பல்தகாது' என்றான். வீவு - தொழிற்பெயர்; வு- விகுதி; உ - விகுதியெனின், வ் - எழுத்துப்பேறு. (181) 182. | மாறுகொண்டவராவிகொணீள்கதை மாருதன்சுதனோடி வணோருரை, கூறலிங்கிதமேயலவோருரை கூறில்வஞ்சகமாமி வனாண்மையின், நூறுமைந்தரினாதிபனாகிய நூனலந்திகழ்மார்பனையாருயிர், ஈறுகண்டிடலாமவனூருவை யேறுபுண்படவேயெதிர்மோதிலே. |
(இ -ள்.) மாறுகொண்டவர் - பகைமைகொண்டவர்களது, ஆவி - உயிரை, கொள் - வாங்குகிற, நீள் கதை - நீண்ட கதாயுதத்தையுடைய, மாருதன் சுதனோடு - வாயுகுமாரனான வீமனுடன், இவண் - இவ்விடத்தில் [அல்லது இப்பொழுது], ஓர் உரை கூறல் - (நான்) ஒரு வார்த்தை சொல்லுதல்,இங்கிதமே அல - இனிமையானதன்று; ஓர் உரை கூறில் - (அன்றி) ஒருவார்த்தையைச் சொன்னாலோ, வஞ்சகம் ஆம் - (அது) வஞ்சனைக்குஇடமாம்; இவன் - வீமன், ஆண்மையின் - (தனது) பராக்கிரமத்தால், அவன்ஊருவை - துரியோதனனது தொடையை, ஏறு புண் பட - மிக்கவிரணப்படும்படி, எதிர் மோதில் - எதிரிலே தாக்கினால், நூறு மைந்தரின்ஆதிபன் ஆகிய - (திருதராட்டிர) குமாரர் நூற்றுவருள் தலைவனான, நூல்நலம் திகழ் மார்பனை - சாமுத்திரிகசாஸ்திரத்திற்கூறிய நல்லிலக்கணம்விளங்கும் மார்பையுடைய துரியோதனனை, ஆர் உயிர் ஈறு கண்டிடல் ஆம் -அரிய உயிர் அழியச் செய்திடலாம்; (எ - று.) |