இச்செய்யுள் - ஒன்று நான்கு ஐந்து எட்டாஞ்சீர்கள் கூவிள்சீர்களும், மற்றைநான்கும் புளிமாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட எண்சீராசிரியச்சந்தவிருத்தம். தந்தன தனன தனன தானன தந்தன தனன தனன தானன - என்பது, இதற்குச் சந்தக்குழிப்பாம். (195) வேறு. 196.-பலராமன் செல்ல,துரியோதனன் குற்றுயிராய்க் கிடத்தல். வெற்றி புனைபல பத்ர ராமனுமெய்த்து ணைவனிவை சொற்ற காலையின், மற்றை யநுசனொ டுற்ற நீள்களம் வட்டமிடவொரி மைப்பினேகினன், அற்றை யடலம ரிற்சு யோதன னற்ப வுயிர்நிலைநிற்ப நீடுடன், முற்று முகுகுரு திக்கண் மூழ்குற மொய்த்த கழுகினி ழற்கண்மேவினன். |
(இ -ள்.) வெற்றிபுனை - சயத்தை அழகிதாகக்கொண்ட, பலபத்ரராமனும்- பலராமனும், மெய் துணைவன் இவை சொற்ற காலையில் - உண்மையன்புடைய தம்பியான கண்ணன் இவ்வார்த்தைகளைச் சொன்னவளவில், மற்றை அநுசனொடு - மற்றொருதம்பியான சாத்தகியுடனே, உற்ற நீள் களம் வட்டம் இட ஒர் இமைப்பின் ஏகினன் - பொருந்தியபெரியபோர்க்களமாகிய அந்தச் சமந்தபஞ்சகத்தைப் பிரதக்ஷிணஞ்செய்யுமாறு ஒருமாத்திரைப்பொழுதிலே சென்றான்; அற்றை அடல்அமரில் - அன்றைத்தினத்தில் நடந்தவலியபோரில், சுயோதனன் - துரியோதனன், அற்பம் உயிர்நிலை நிற்ப - தனது உயிர் உடம்பிற் சிறிதளவேநிலைபெற்றிருக்க, நீடு உடல்முற்றும் - நீண்ட உடம்புமுழுவதும், உகுகுருதிக்கண் மூழ்குற - பெருகுகிற இரத்தத்திலே முழுகும்படி, மொய்த்த கழுகின் நிழற்கண் - (அங்கு வந்து) சூழ்ந்த கழுகுகளின் நிழலிலே, மேவினன் - கிடந்தான்; (எ - று.) சிறந்த புண்ணியக்ஷேத்திரமாதலின், சியமந்தபஞ்சகத்தை வலஞ் செய்து சென்றன னென்க. பலபத்ர னென்ற திருநாமம் - வடமொழியில், வலிமையினால் விளங்குகிறவ னென்று காரணப்பொருள்படும். இச்செய்யுள் - ஒன்று மூன்று ஐந்து ஏழாஞ் சீர்கள் தேமாச்சீர்களும், இரண்டு ஆறாஞ் சீர்கள் கருவிளச்சீர்களும், நான்கு எட்டாஞ்சீர்கள் கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்டஎண்சீராசிரியச் சந்தவிருத்தம். தத்த தனனன தத்ததானன தத்த தனனன தத்த தானன - என்பது, இதற்குச் சந்தக்குழிப்பாம். (196) வேறு. 197.-சூரியன்அஸ்தமித்தலும், பாண்டவர் படைவீட்டுக்கு மீளுதலும். மைந்தி னாற்பெரியோனெனும் வாயுவின் மைந்த னாற்றுரி யோதனன் மாமுடி, சிந்த வார்த்தனர் நீடிசை காவலர் சிந்திவாழ்த்தினர் |
|