இச்செய்யுள் - ஒன்று இரண்டு ஐந்து ஆறாஞ் சீர்கள் கருவிளச்சீர்களும், மூன்று ஏழாஞ்சீர்கள் தேமாச்சீர்களும், நான்கு எட்டாஞ்சீர்கள் கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட எண்சீராசிரியச்சந்த விருத்தம். தனதன தனனன தந்த தானன தனனன தனனன தந்த தானன - என்பது, இதற்குச் சந்தக்குழிப்பாம். (200) வேறு. 201.-இதுமுதல் மூன்று கவிகள்- குளகம்: பாண்டவரை இன்றிரவிற் கொல்வேனென்றுகூறி அசுவத்தாமன் துரியோதனனிடம் விடை பெறுதல். முனைத்தலைய ழிந்துடல் சோரவும்யான்வினை முடிப்பனெனு நெஞ்சுடை வாள்வய வீரனை, அனைத்துல கினுங்குரு வானச ராசனனளித்தமுனி யன்புற மார்பு தழீஇனன், நினைத்தநினை வின்படியேமிகு போர்செய்து நினக்கவனி தந்திட நீதலை நாளினில், எனைத்தனிதெளிந்திலை யாதவன் மாயையி னெனப்பரிவு கொண்டுசில் வாய்மைகள் கூறியே. |
(இ -ள்.) முனைத்தலை - போர்க்களத்திலே, உடல் அழிந்து சோரவும் -உடம்பு சிதைந்து தளரவும், யான் வினை முடிப்பன் எனும் - 'நான் கருதியதொழிலை [பாண்டவரைக்கொல்லுதலை] நிறைவேற்றக்கடவேன்' என்றுஎண்ணுகிற, நெஞ்சு உடை - வன்மனத்தையுடைய, வாள் வய வீரனை -ஆயுதவலிமையையுடையவீரனான துரியோதனனை, அனைத்து உலகினும் குருஆன சராசனன் அளித்த முனி - எல்லாவுலகங்களிலும் குருவென்று பிரசித்திபெற்ற வில்வித்தையில் வல்லவனாகிய துரோணன் பெற்ற புதல்வனானஅசுவத்தாமன், அன்பு உற - அன்புமிக, மார்பு தழீஇனன் - மார்பிலேஅணைத்துக்கொண்டு, 'நினைத்த நினைவின்படியே - நீ எண்ணிய எண்ணத்தின்படியே, மிகு போர்செய்து - மிக்கபோரைச் செய்து, நினக்கு அவனிதந்திட - உனக்கு (நான்) பூமி முழுதையும் உரியதாகக் கொடுத்திடும்படி,நீ-, தலைநாளினில் - முற்காலத்தில், எனை - என்னை, யாதவன் மாயையின் -கண்ணன்செய்த மாயையால், தனி தெளிந்திலை - தனியே நம்பினாயில்லை'என - என்று, பரிவுகொண்டு சில் வாய்மைகள் கூறி - அன்பு கொண்டு சிலவார்த்தைகள் சொல்லி, (எ - று.)-'கூறி' யென்ற வினையெச்சம், 203-ஆங்கவியில் மூன்றாம் அடியில் வரும் 'என' என்ற வினையெச்சத்தைக்கொள்ளும். அசுவத்தாமனைத் துரியோதனன் சேனாபதியாக்கினால் அவனையழித்தல்எவராலுமாகாதே யென்று பாண்டவர் கவலைப்பட்டதைத் திருவுளத்திற்கொண்டு, கண்ணன், துரியோதனனிடம் தூதுசென்று மீளும்பொழுது, (விசுவரூபத்தின்பின்), சபையாரனைவருங்காண அசுவத்தாமனைத் தனியேயழைத்துச் சென்று அவனோடு சில பேசிக்கொண்டிருக்கையில் தனது கைம்மோதிரத்தைக் கீழே நழுவவிட, அதனை அவன் எடுத்துக்கொடுக்கையில் கண்ணன் 'சூரியனைப் பரிவேஷம் சூழ்ந்துள்ளதுபார்' என்று சொல்லி அவன் சூரியனைப் |