பொறாமைஅணுகப்பெறாத, ஏற்றமும் - உயர்வையும், இரு நிலம் மதித்திட- பெரிய உலகத்திலுள்ளார் கொண்டாடும்படி, இனிது கோல் ஓச்சுதல் - (யாவர்க்கும்) இனிமையாகச் செங்கோல் செலுத்தல், நிருபர்க்கு இயல்பு - அரசர்களுக்குரிய இயற்கை, எனும் - என்கிற, முறைமையோ - ஒழுங்கையோ, பார்த்திலை - சிறிதும் நோக்கினாயில்லை; நரை கெழு முடி தலை - நரைத்தல்பொருந்திய மயிர்முடியையுடைய தலையையுடைய, என் பிதா - எனது தந்தையான துரோணனும், மீ படு நதி மகன் - மேலுலகத்திற் பொருந்திய ஆகாசகங்காநதியின் குமாரனான பீஷ்மனும், முறித்த வில் விதுரனே - ஒடித்தெறிந்த வில்லையுடைய விதுரனும், போல் - என்னும் இவர்போன்ற, பல குரவரும் - மற்றும் பலபெரியோர்களும், உரைத்த - சொன்ன, சொல் உறுதி - உறுதிமொழிகளை, நீ கேட்டிலை - நீ கேட்டு அவற்றின்படி நடந்தாயில்லை; (எ - று.) அருள்நீதி முறைமை இன்சொல் அறம் என்னும் இவை அடைதற்கு உரியவை என்றும், கடுஞ்சொல் அதருமம் பொறாமை கொடுங்கோன்மை என்னும் இவை அடைதற்குரியவையல்ல என்றும் சிறிதும் உணராமல், நீ அருளின்றி நீதியழிந்து கடுஞ்சொற்கூறி அறத்தைக் கைவிட்டுப் பொறாமை பூண்டு பழிப்படைந்து கொடுங்கோல் செலுத்தினாய்; இங்ஙனம் தானறியாமையோடு அறிவுடைய பெரியோர் பலர் நீதிபோதிக்கக் கேட்டு அவற்றின்படி நடவாமல் அவற்றை யிகழ்தலுஞ்செய்தாய்; ஆதலின், இப்படிப்பட்ட இழிவான நிலைமையை யடைந்தாயென்றபடி. அறிவினாலும் ஒழுக்கத்தாலுமாகிய முதிர்ச்சியோடு பிராயமுதிர்ச்சியையு முடைமையைக் காட்டுவான், 'நரைகெழுமுடித்தலை' என்ற அடைமொழிகொடுத்தான். இந்த அடைமொழி, துரோணன் வீடுமன் விதுரன் என்ற மூவர்க்கும் உரியது. அருளாவது - தொடர்புபற்றாது இயல்பாக எல்லாவுயிர்களின் மேலும் செல்வதாகிய கருணை. வழங்குவது வழக்கு என ஏதுப்பெயர். அழுக்காறு எனினும், அழுக்கறுத்தலெனினும் ஒக்கும்; அழுக்காறு - அழுக்கறு என்ற முதனிலை திரிந்ததொழிற்பெயர். அழுக்கறு - ஒருசொல்; அழுக்கு அறு எனப்பிரித்து, குற்றத்தை நீக்குதலெனப் பொருள்தரக்கூடிய இது - குற்றமுடையனாதலென்ற பொருளை யுணர்த்துதலை எதிர்மறையிலக்கணை யென்றலுமுண்டு. "கொடுப்பதழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉ, முண்பதூஉ மின்றிக் கெடும்" என்றபடி அழுக்காறு தன்னையுடையாரையேயன்றி அவரைச் சார்ந்தாரையும் அழிக்கும் மிக்ககொடுங்குணமாதலால், இது சமீபத்திலும் வரவொட்டாதபடி அஞ்சப்படுவ தென்பது தோன்ற, 'அழுக்காறணுகுறா வேற்றம்' எனப்பட்டது. நிலம் - இடவாகுபெயர். அரசனாற் செய்யப்படும் நிஷ்பட்சபாதமான முறைமை ஒருபாற் கோணாது செவ்வியகோல்போலுதலால், கோலென்றும், செங்கோலென்றுங் கூறப்படும். முறைமையோ, ஓ - உயர்வு சிறப்போடு, கழி விரக்கம். நரை - மயிர்வெளுத்தல், முதனிலைத் தொழிற்பெயர் முறித்தவில் விதுரன் - வில்முறித்த விதுரன். குரவர் - குரு என்பதன் |