பன்மையானகுரவ: என்னும் வடசொல்லின் திரிபு. சொல் உறுதி - சொற்களிலுள்ள நல்ல நீதி. திலகம் - நெற்றிப் பொட்டு. திலகமாம் மூர்த்தி -திலகரூபமாயிருப்பவனென்க.
இச்செய்யுள் - நான்காஞ்சீரும் எட்டாஞ்சீரும் கூவிளச்சீர்களும், மற்றையாறும் கருவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட எண்சீராசிரியச்சந்தப்போலிவிருத்தம். தனனனதனத்தன தனனனா தாத்தன தனனன தனத்தன தனனனா தாத்தன - என்ற சந்தக்குழிப்பு. 'உறாததோர்', 'அழுக்காறு', 'என்பிதா' என்றஇடங்களில் ஒத்துவராததால், இது சந்தமாகாகது சந்தப்போலியாயிற்று. 'உறலிலோர்', 'அழுக்கறவணுகுறா', 'எனபிதா' என்று பாடங்கொள்ளின் சந்தத்துக்கு ஒக்கும். (202) வேறு. 203.-அசுவத்தாமன்சபதஞ்செய்யத் துரியோதனன் சிகாமணியளித்தல். இடியிடித்திடு சிகரிக ளாமென வெறிம ருச்சுதன் முதலிக லோர்தலை, துடிது டித்திட வவரவர் சேனைக டுணிப டப்பொரு தெழுபுவி நீபெற, விடிவதற்குமுன் வருகுவன் யானென விடைகொ டுத்தன னரவவி லோதனன், முடியுடைத்தன துடைய சிகாமணி முனிமகற் கினி தருள்செய்து மீளவே. |
(இ -ள்.) இடி இடித்திடு சிகரிகள் ஆம் என - இடிவிழப்பெற்ற மலைகள்போல, எறி மருத் சுதன் முதல் இகலோர் தலைதுடிதுடித்திட - கதாயுதங்கொண்டு தாக்குகிற வாயுகுமாரனான வீமன் முதலிய பகைவர்களுடைய தலைகள் பதைபதைத்துவிழும்படியாகவும், அவர் அவர் சேனைகள் துணிபட - அந்தந்தப் பகைவீரர்களுடைய சேனைகள் துண்டுபடும்படியாகவும், எழு புவி நீ பெற - ஏழுதீவுகளாகவுள்ள பூமி முழுவதையும் நீ பெறும்படியாகவும், விடிவதற்கு முன் - இவ விரவுகழிவதற்குமுன்னே, பொருது - போர்செய்து, யான் வருகுவன் - நான் மீண்டுவருவேன், என - என்று (அசுவத்தாமன்) சொல்ல,- அரவம் விலோதனன் - பாம்புக்கொடியையுடையவனான துரியோதனன், தனது உடையமுடி உடைசிகாமணி - தன்னுடைய கிரீடத்தின் மேலணிவதான சிரோரத்தினத்தை, முனிமகற்கு - துரோணபுத்திரனான அசுவத்தாமனுக்கு, இனிது அருள் செய்து - மகிழ்ச்சியோடு கொடுத்து, மீள விடை கொடுத்தனன் - (போய் வெற்றியோடு) திரும்பி வரும்படி அனுமதிகொடுத்தனுப்பினான்; (எ -று.) இவ்விரவு கழிவதற்குமுன் நான் சென்று போர்செய்து பகைவர் யாவரையும் அழித்துப் பாண்டவர் தலையைக் கொய்துவருவேன்; நீ பின்பு நிலவுலகமுழுவதையும் தனியரசாட்சி செய்யலாம் என்று |