பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்165

    இம்மையில் நினைத்தகாரியத்தை முடித்தலாகிய காமியபல சித்தி,
அழித்தற்கரிய பிராரப்தகருமத்தால் ஒருகால்தடைப்படினும் மறுமையில்
பேரின்பமனுபவித்தலாகிய பயன் தவறாதாதலின், கடவுளைப் பூசித்தல்
தகுதியேயென்று கருதின னென்க.  கருத்தில் இருத்தி - மனத்தில் தியானித்து
என்றபடி.  ஆகமம் - ஒருகாலத்தில் சிவபிரானது திருமுகத்தினின்று
தோன்றியவையும், சிவபிரானைப் பூசித்தல்  முதலிய விதங்களை விவரமாகக்
கூறுபவையும் ஆன காமியம் முதலிய இருபத்தெட்டுநூல்கள்
'பங்கயமலர்கொண்டு' என்றும் பாடம்.                            (210)

7.-சிவபிரான் பிரசன்னமாய்அவனுக்கு ஆயுதமளித்தல்.

அன்றவன்மறையின்முறையினாற்புரிந்தவருச்சனைதனையுவந்தருளி
நின்றனன்விழியுமிதயமுங்களிப்பநீறுடையேறுடைக்கடவுள்
வன்றிறன்முனிவன்மதலையும்விதலைமாறிமாறடர்ப்பதோர்
                                     படைநல்கு
என்றனனென்றவுரைமுடிவதன்முனேதியொன்றீசனுமீந்தான்.

     (இ -ள்.) அன்று - அப்பொழுது, அவன் - அசுவத்தாமன், மறையின்
முறையினால் - வேதங்களிற்கூறியுள்ள முறைமைப்படி, புரிந்த - செய்த,
அருச்சனைதனை - பூசையை, நீறு உடை ஏறு உடை கடவுள் - விபூதியை
யுடையவனும் ரிஷபத்தையுடையவனுமான சிவபிரான், உவந்து அருளி -
ஏற்றுக்கொண்டு மகிழ்ந்து கருணை கொண்டு, விழியும் இதயமும் களிப்ப
நின்றனன் - (அசுவத்தாமனது) மனமும் கண்களும் களிப்படையும்படி
(அவனுக்குத் தரிசனந்தந்து) நின்றான்; (அப்பொழுது), வல் திறல் முனிவன்
மதலையும் - கொடிய வலிமையையுடைய அந்தணனாகிய துரோணாசாரியனது
குமாரனான அசுவத்தாமனும், விதலை மாறி - மனக்கலக்க மொழிந்து, மாறு
அடர்ப்பது ஓர் படை நல்கு என்றனன் - 'பகைவர்களைத் தவறாமல்
அழிப்பதொரு ஆயுதத்தை (எனக்குக்) கொடுத்தருள்வாய்' என்று
வேண்டினான்; என்ற உரை முடிவதன் முன் - என்று இங்ஙனம்
பிரார்த்தித்தவார்த்தை முடிவதற்குமுன் [உடனே என்றபடி], ஈசனும் -
சிவபிரானும், ஏதிஒன்று - ஓராயுதத்தை, ஈந்தான் - கொடுத்தருளினான்;
                                                   (எ - று.)

    சிவபிரான் தரிசனந்தந்தமாத்திரத்தில்தான் அப்பிரானருள் பெற்றுத்
தனதுசபதத்தை நிறைவேற்றிவிடலாமென்று தைரியங்கொண்டமை தோன்ற,
'விதலைமாறி' என்றார்.  மாறு - மாற்றார்க்குப் பண்பாகுபெயர்.  குமாரனான
பக்தனது வேண்டுகோளின்படி கடவுள் கருணைசெய்த விரைவை விளக்குவார்,
'என்ற வுரை முடிவதன்முன் ஈந்தான்' என்றார்.  சிவபிரானுக்கு நீறு,
தரிக்கப்படும் பொருள்; ஏறு, வாகனம்.                        (211)

8.-பின்பு பூதம்அசுவத்தாமனுக்குத் தோற்றல்.

பாதிமெய்நீலமாகியபவளப்பருப்பதம்விருப்புடனளித்த
ஏதிபெற்றுவகையுடனிமைப்பளவினிருந்தவவ்வீரருந்தானும்
வீதிகொள்பாடிவீடுறப்பூதமீளவந்தடர்த்திவன்கரத்தில்
ஆதிநல்கியவெம்படையினாலஞ்சியாவிகொண்டோடியதன்றே.