பின்பு, விதியைவெறுத்தனன் - (எல்லாவற்றுக்கும் முக்கியகாரணமான தனது) ஊழ்வினையைத்தானே வெறுத்துக்கொண்டான்; கண்ணனையுங்குந்தியையும் வெறுத்தது, இவ்வுறவுமுறைமையை அவர்கள் முன்னமே அறிந்திருந்தும் தங்களுக்கு வெளிப்படுத்தாமையால், கண்ணனை வெறுத்த விதத்தைக் கீழ்ச்சருக்கத்தில் "பேயுரைத்துத் தாலாட்ட முலைப்பாலோ டுயிருண்டபித்தா ஈண்டை, நீயுரைத்தபிறகறிந்தோ மெம்முனையின் றெமைக்கொண்டே நேர் செய்தாயே" என்றது முதலியனகொண்டும், தாயை வெறுத்த விதத்தை 'கன்னியிளம் பருவத்திலரியமாவெனுங்கடவுள் காதல் கூர, மன்னிய மந்திர மெமக்கு மின்றளவுமுரைத்திலையால் மறந்தாய் கொல்லோ, பின்னிய செஞ்சடைக்குழலா யீதென்னபேரறிவுபெற்றதாயின், அன்னியம் நன்றாயிருந்தது இப்படியேபிழைப்பிப்பதறிந்திலோமே" என்றது முதலியனகொண்டும் அறிக. 'மாயைவெறுத்திட விளைத்தமாயோன்' என்றதனால், கண்ணன் தனதுபஞ்சப்பிராணன்களுக்குச் சமானரான பஞ்ச பாண்டவர்க்கும் இவ்வுண்மையைக்கூறாமல் பூமிபாரநிவிருத்தியாகிய தனது அவதார காரியத்தையேமுக்கியமாகக்கொண்டு இதனை அதிரகசியமாக மறைத்துவைத்த தந்திரம்விளங்கும். 'வன்மனத்தியான யாய்' - எப்படிப்பட்ட இரகசியத்தையும்ஒளித்துவைத்தற்கு உரியரல்லாத தன் அருமைமக்களுக்கும் இதனைக் கூறாமல்மனத்திலேயே அடக்கி வைத்து அதனால் கர்ணனுக்கு அழிவும்பாண்டவர்க்குப் பழியும் விளையப் பார்த்திருந்த கல்நெஞ்சினள் என்றவாறு:இப்படி அவள் மறைத்துவைத்ததன் காரணம், கண்ணபிரான் தூதுவந்தபொழுதுசொன்ன சூழ்ச்சியால் குந்தி கர்ணனைத் தன்மகனென்று அறிந்து அவனிடஞ்சென்று நாகாஸ்திரத்தை அருச்சுனன்மேல் இரண்டாம் முறை விடாதபடியும்,மற்றநால்வர் பாண்டவரையும் அவன் சொல்லாதபடியும் வரம்வேண்டிப்பெற்றபொழுது அவன் "உய்வருந்திறல் வெம்போர் முடிப்பளவும் உமக்கு நான்மகனெனுந்தன்மை, ஐவரும் அறியாவண்ணம் நீர்காப்பீர்" என்று எதிர்வரங்கேட்டதற்கு இவள் உடன்பட்டு வந்தமை. சாயைவெறுத்தது - சூரியபுத்திரனான கர்ணனிடம் தான் புத்திரவாற்சல்லியம்வைத்திருந்ததனா லென்றும், பூமிதேவி மிகவும் வெறுத்தது-தன்னை அரசாளுதற்கு இயல்பில்உரியவனான கர்ணன் கொல்லப்பட்டதனாலுமென்க. தைத்தியர்போர்சயித்தானென்ற விவரம்:- அருச்சுனன், வனவாசத்தொடக்கத்தில் கைலாசத்திற்சென்று தவமியற்றிப் பரமசிவனிடத்தில் பாசுபதம் முதலியன பெற்றபின்பு அங்குவந்து தன்னையழைத்துப்போன தந்தையாகிய இந்திரனுடனே தேவலோகஞ் சேர்ந்து அங்குத் தேவர்களது வேண்டுகோளின்படி அவர்கட்குப் பகைவராய்ப் பலநாளாகப் பெருந்துன்பமியற்றிவந்த (கடலிடையிலுள்ள தோயமாபுரவாசிகளான) நிவாதகவசரென்னும் அசுரர் மூன்று கோடிபேரையும், (அந்தரத்துள்ள இரணியபுரவாசிகளான) காலகேயரென்னும் அசுரர் அறுபதினாயிரவரையும் ஆங்காங்குச் சென்று போர்செய்து அழித்து ஒழித்தன னென்பதாம். |