மேல் -பகைவனான அந்த அசுவத்தாமன்மேல், எழுந்தான் - (போர் செய்யப்)புறப்பட்டான்; (எ - று.) - மற்று - வினைமாற்று.
இப்படிஒருசோழன் பதினெட்டுநாட்போரிலும் இறவாமல் பாண்டவர்க்குஉதவிசெய்த சிறப்பை "தாங்கள் பாரதமுடிப்பளவு நின்று தருமன் தன்கடற்படைதனக் குதவிசெய்த வவனும்" என்று கலிங்கத்துப்பரணியில்இராசபாரம்பரியத்துக் கூறியமைகொண்டும் உணர்க. இச்சோழன்அசுவத்தாமனை முன்பு வென்றிட்டதை இச்சருக்கத்தின் 95 - ஆங்கவியிற்காண்க. 'திரௌபதீயர்' என்றுசிலர். 'புரவியந்தாமா' அம் - சாரியையென்னலாம். (218) 15.-சோழன் பரிவாரத்தோடுஅசுவத்தாமனால் இறத்தல். பொன்னிநன்னதியுநேரியம்பொருப்பும்புகாரெனுநகரியும்படைத்த, சென்னியுமவன்றன்சேனையின்விதமுஞ்சேனைமண்டலீகருஞ்சேர, முன்னியசமரின்முனிமகனுடன்போய் மோதியவேதியான்மடிந்தார், பின்னியசடையோன்வழங்கியபடைமுன் பிழைத்தவர்யாவரே பிழைத்தார். |
(இ -ள்.) பொன்னி நல்நதியும் - சிறந்த காவேரி நதியையும், நேரி அம்பொருப்பும் - நேரியென்னும் அழகிய மலையையும், புகார் எனும் நகரியும்- காவிரிப்பூம்பட்டினமென்ற நகரத்தையும், படைத்த - தனக்கு உரியனவாகக்கொண்ட, சென்னியும் - சோழனும், அவன் தன் சேனையின் விதமும் -அவனுடைய சேனையின் வகைகளும், சேனை மண்டலீகரும் - அச்சேனையிலுள்ள மண்டலாதிபதிகளான அரசர்களும், சேர - ஒருசேர, முன்னிய சமரின் முனி மகனுடன் போய் - (யாவரும்) கருதிக் கொண்டாடுகிற போரில் துரோணாசாரியனது புத்திரனான அசுவத்தாமனோடு (போர்செய்யச்) சென்று, மோதிய ஏதியால் மடிந்தார் - அவன் தாக்கிய ஆயுதத்தினால் இறந்தார்கள்; பின்னிய சடையோன் வழங்கிய படைமுன் - திரித்துவிட்ட சடையையுடைய சிவபிரான் கொடுத்த அந்த ஆயுதத்திற்கு முன், பிழைத்தவர் யாவரே பிழைத்தார் - (முன்பு போரில்) உய்ந்த வீரருள் எவர்தாம் தப்பிப்பிழைத்தவர்? [எவருமிலர் என்றபடி]; (எ - று.) பதினெட்டுநாட்போர்களிலும் தமது திறமையாற் பகைவென்று தாம் இறவாது உயிர்வாழ்ந்தவீரர் யாவரும் அழித்தல்தொழிற்கடவுளான சிவபிரான் தந்த ஆயுதத்தால் இறந்தொழிந்தார்கள் என்ற பொதுப்பொருளைக்கொண்டு சோழனும் அவன் சேனையோரும் அசுவத்தாமனால் கொல்லப்பட்டார்களென்றசிறப்புப்பொருளைச்சாதித்தலால், வேற்றுப்பொருள்வைப்பணி. பொன்னைக்கொழித்துக் கொண்டு வருதலால், காவேரிக்குப் 'பொன்னி' என்று பெயர்.சென்னி - தலை; உத்தமாங்கமாகிய தலைபோல யாவரினுஞ் சிறப்பவனென்ற பொருளால், சோழனுக்குச் சென்னியென்று பெயர். சென்னியும், சேனையின்விதமும், மண்டலீகரும் மடிந்தார் - சிறப்பினாலும் மிகுதியாலும் உயர்திணைமுடிபை யேற்ற திணைவழுவமைதி; 'முன்னியசிலைக்கை' என்றும்பாடம். (219) |