நின்றுள்ளகிருபனையும் கிருதனையுங்கூட அழைத்துக்கொண்டு, தெள்ளிய குமரர் சென்னி ஐந்தினையும் - தெளிவுள்ள பாண்டவகுமாரர்களுடைய தலைகளைந்தையும், தேவரும் திகைத்திட தூக்கி - தேவர்களுங் கண்டு பிரமிக்கும்படி (கைகளால்) தூக்கிக்கொண்டு, வெள்ளி அம் குரு வந்து எழுமுனே - அழகிய (அசுர) குருவான சுக்கிரன் வந்து உதிக்கும் முன்னே [இரவில் நடுப்பொழுதிலேயே], குருவின் மிகு குலம் வேந்தை - குருவென்னும் அரசனது சிறப்பு மிக்க குலத்திலே பிறந்த துரியோதனராசனை, வந்து அடைந்தான் - வந்து சேர்ந்தான்; (எ - று.) அசுவத்தாமன் தான் பாண்டவர் தலைகளைக் கொய்திட்டதாகக் கருதிக்களிப்புறுந்தன்மை விளங்க, 'உள்ளியபடியே கடுஞ்சினங்கன்றியுள்ளவர் யாரையும் முருக்கித் துள்ளியவிடைபோற் செருக்கி' என்றார். வெண்ணிறமுடைமையால், சுக்கிரனுக்கு வெள்ளி யென்று பெயர். கிழக்கில் சுக்கிரனது தோற்றம் இரவின் இறுதிப்பாகத்திலே உளதாவது. (221) வேறு. 18.-அசுவத்தாமன் தனதுதிறமையைக் கூறுதல். வந்த னேனைய மாதவ னேவலான் முந்து பூத முதுகிட மாமுடி சிந்த யாரையுஞ் செற்றகன்பாசறை ஐந்து வீரர்தம் மாவியுங்கொண்டரோ. |
(இ -ள்.) ஐய - தலைவனே! மாதவன் ஏவலால் - கண்ணனுடைய கட்டளையால், முந்து - முற்பட்டுப் போருக்கு வந்த, பூதம் - பூதமானது, முதுகு இட - புறங்கொடுக்கும்படி (செய்து), அகல் பாசறை - பரந்தபடைவீட்டினுள்ளே, மா முடி சிந்த - பெரிய தலைகள் சிதறும்படி, யாரையும் செற்று - யாவரையுங் கொன்று, ஐந்து வீரர்தம் ஆவியும் கொண்டு -பஞ்சபாண்டவர்களது உயிர்களையுங் கவர்ந்து கொண்டு, வந்தனேன் - இதோவந்து சேர்ந்திட்டேன், (நான்); (எ - று.)-அரோ - ஈற்றசை; தேற்றமுமாம். இங்ஙனம் தான் துரியோதனன் முன்னிலையிற் சபதஞ் செய்தபடி அவனது தொன்றுதொட்ட பகைவர்களை வேரறத் தொலைத்து வந்த களிப்பைஅசுவத்தாமன் அவனெதிரிற் கூறி அவனுக்கு மகிழ்ச்சியை விளைப்பவனானான். வந்தனேன். அன் - சாரியை. இதுமுதற் பதின்மூன்று கவிகள் பெரும்பாலும் முதற்சீரொன்றுமாச்சீரும்,மற்றைமூன்றும் கூவிளச்சீர்களுமாகிய அளவடிநான்குகொண்டகலிவிருத்தங்கள். (222) 19.-அசுவத்தாமன்தான்கொணர்ந்த தலைகளைத் துரியோதனனுக்குக் காட்டல். சொன்ன சிங்கத் துவசனை யாதியா மன்ன ரைவரு மாண்டனர்மற்றவர் |
|