(இ -ள்.) இப்பால் - இந்தப்பக்கத்தில், இவர் - திருதராட்டிரனும் காந்தாரியும், இரங்க - விசனப்பட, எ பாலும் இருள் ஒளிப்ப - எவ்விடத்தும் இருள்விலகிச் செல்லும்படி, இரவி - சூரியனுடைய, பானு - கிரணங்கள், துப்பு ஆர் செம் கொடிகள் என உதயகிரிமிசைபடர்ந்து தோற்றம் செய்ய - பவழமயமாயமைந்த சிவந்த கொடிகள் போல உதயபருவதத்தின் மேல் பரவித்தோன்ற, - அப்பால் - அந்தப்பக்கத்தில், நிலமடந்தைதன் பாரம் தப்பாமல் அகற்றுவித்த சார்ங்கபாணி - பூமி தேவியின் பாரத்தைத் தவறாமல்தீர்த்திட்ட சார்ங்கமென்னும் வில்லையேந்திய கையையுடைய கண்ணபிரான், அபாண்டவர்கள் ஐவரொடும்புரிந்த செயல் - அப்பஞ்சபாண்டவர்களுடன்செய்த செய்கையை, அறைதும் - இனிக்கூறுவோம்; (எ - று.) - அம்மா -ஈற்றசை. மற்று - அசை. இச்செய்யுள் - கவிக்கூற்று. தப்பாமல் - பூமிதேவியின் வேண்டுகோளும், தேவர்களின் பிரார்த்தனையும், தனது சங்கல்பமும் தவறாமல்; பூமிபாரமாய் நின்ற கொடியவர்களுள் ஒருவரும் தப்பியுய்ந்திடாமல். சார்ங்கம் - திருமால் வில். முதலடியில் இரவியான் என்ற பாடத்துக்கு - இரவி யென்ற பொதுப் பெயரோடு'ஆன்' என்ற ஆண்பால் விகுதி சேர்ந்து அதனை உயர்திணையாக்கிற்று. பவழக்கொடி - சூரியகிரணத்துக்கு நிறத்தில் உவமம். படிமிசைப் படிந்தும்என்றும் பாடம். (242) 39.-வெளித்தங்கியபாண்டவர் படைவீடு சேர்ந்து செய்தியையறிதல். ஐந்துபெரும் பார்த்திவரோடாரணியம்புகுந்த பிரானரியகங்குல், சிந்துதினகரனுதயஞ்சேருமுனம்பாசறையிற்சென்றுநோக்க, இந்திரனேநிகர்நிருபர்முடித்தலைகள் வெவ்வேறாயிடையேசிந்த, மைந்தருடற்குறைதழுவியாகுலித்துமெலிந்தரற்றுமானைக்கண்டார். |
(இ -ள்.) அரிய கங்குல் - (தப்பிப்பிழைத்தற்கு) அரிய (அப்பதி னெட்டாநாள்) இரவிலே, ஐந்து பெரு பார்த்திவரோடு - பெருமையையுடைய பாண்டவர்களாகிய ஐந்து அரசர்களுடன், ஆரணியம் புகுந்தபிரான் - (அருகிலுள்ளதொரு) வனத்திற் சேர்ந்து தங்கிய கண்ணபிரான், சிந்து தினகரன்உதயம் சேருமுனம் - (கீழ்) கடலிற் சூரியன் உதித்தலையடையுமுன் [சூரியனுதிக்கு மளவிலே யென்றபடி], பாசறையில்சென்று நோக்க - (தமது) படைவீட்டிற்போய்ப்பார்க்க, (அங்கு), இந்திரனே நிகர் நிருபர் முடி தலைகள் -தேவேந்திரனையேபோன்ற சிறந்த அரசர்களுடைய கிரீடமணிந்த தலைகள்,வெவ்வேறு ஆய் இடையே சிந்த - தனித்தனி துணிபட்டு இடந்தோறுஞ்சிந்திக்கிடக்க, மைந்தர் உடல்குறைதழுவி - (தனது) புத்திரர் ஐவரது தலையற்ற உடல்களைத் தழுவிக்கொண்டு, ஆகுலித்து - அழுது, மெலிந்து - வருந்தி, அரற்றும் - கதறுகிற, மானை - மான் பார்வை போலுங்கண்பார்வையையுடைய திரௌபதியை, கண்டார் - (பாண்டவரும் கண்ணனும்)பார்த்தார்கள்; (எ - று.) பாண்டவர் கண்ணனுடன் அங்குச்சேருமுன்னமே திரௌபதி செய்தியறிந்து அங்குவந்து புலம்பலானாளென இதனால் விளங்கும். |