உபபாண்டவர்தலைகளை அசுவத்தாமன் கைக்கொண்டு சென்றதனால், அதில்லாத கவந்தங்களே அங்குக் கிடந்தன. அரியகங்குல் சிந்து தினகரன் என எடுத்து, அழித்தற்கரிய இரவினிருளைச் சிதறடிக்குந் தன்மையனான சூரியனெனினுமாம்; முந்தினபொருளில், ஸிந்து - வடமொழிப்பெயர்; இப்பொருளில், சிந்து - தமிழ்வினைப்பகுதி: சிந்து தினகரன் - வினைத்தொகை. ஆரணியம் - அரண்யமென்றதன் விகாரம். திநகரன் - பகலைச் செய்பவன். (243) 40 - சீற்றங்கொண்டவீமனையும் அருச்சுனனையும் கண்ணன் தடுத்தல். கண்டவுடன்மனமெலிவுற்றிவ்வண்ணமெவன்கொலெனக் கரியமேனிக், கொண்டலுரைத்தனன்றுரகதாமாவின்வினைகளெலாங் கூற்று முட்க, அண்டமுகடதிரவுருத்தருச்சுனனுமாருதியுமவன்றனாவி, உண்டலதுதவிரோமென்றுரைத்தோடமாறடுத்தேயுரைக்குமன்றே. |
(இ -ள்.) கண்ட உடன் - திரௌபதியின் (நிலைமையைப்) பார்த்தவுடனே, (பாண்டவர்கள்), மனம் மெலிவுற்று - மனந்தளரப்பெற்று, இவண்ணம் எவன்கொல் என - இவ்வாறு எதனாலாகியதென்று (கண்ணனை) வினாவ,-கரிய மேனி கொண்டல் - கருநிறமுடைய நீர்கொண்ட மேகம் போன்றகண்ணபிரான், துரகதாமாவின் வினைகள் எலாம் - அசுவத்தாமனது செயல்களையெல்லாம், உரைத்தனன் - கூறினான்; (அதுகேட்டு), அருச்சுனனும்-, மாருதியும் - வாயுகுமாரனான வீமனும், கூற்றும் உட்க - யமனும் அஞ்சும்படியாகவும், அண்டம் முகடு அதிர - அண்டகோளத்தின் மேல்முகடும் அதிர்ச்சியடையும்படியாகவும், உருத்து - கோபித்து, அவன் தன்ஆவி உண்டு அலது தவிரோம் என்று உரைத்து - 'அவ்வசுவத்தாமனது உயிரைக் கவர்ந்தன்றி விடோம்' என்று வீரவாதங்கூறி, ஓட - விரைந்து செல்ல,(அப்பொழுது), மால்தடுத்து உரைக்கும் - கண்ணபிரான் (அவர்களைத்) தடுத்துக் கூறுவான்; (எ - று.) -அன்று, ஏ -ஈற்றசை. (244) 41.-இதுமுதல் மூன்று கவிகள் -கண்ணன் சமாதானங் கூறல். பாரிடமொன்றினைப்புரத்திபாசறையையெனப்புகன்று பரிவிற் சென்றேம், வீரருக்குமுனைத்தாமன் சுயோதனற்குச் சூளுரைத்து மீண்டானைவர், ஆரமணிமுடிகொய்துதரணியெலாமுன்குடைக்கீ ழமைப் பனின்றே, காரிருக்குமலரளகக்காந்தாரிசுதவுள்ளங் களித்தியென்றே. |
இதுமுதல் ஐந்து கவிகள் - குளகம். (இ -ள்.) பாரிடம் ஒன்றினை - ஒரு பூதத்தை (நோக்கி), பாசறையை புரத்தி என புகன்று - 'படைவீட்டைப்பாதுகாப்பாய்' என்று சொல்லிவிட்டு, பரிவின் சென்றேம் - விருப்பத்தோடு (யாம் வேறிடத்திற்குப்) போனோம்; வீரருக்கு முனை தாமன் - போர்வீரர்களுக்கு முன்நிற்பவனான அசுவத்தாமன்,(துரியோதனனை நோக்கி), கார் இருக்கும் மலர் அளகம் காந்தாரி சுத -கருநிறந்தங்கியதும் பூக்களைச்சூடியதுமான கூந்தலையுடைய காந்தாரியின்குமாரனே! |