அதிசயித்து- ஆச்சரியப்பட்டு, - குத்திரம் ஆகிய வினைகள் திருஉளத்தில் ஒருகாலும் குடி புகாதான் - வஞ்சனையாகிய செயல்கள் தனது சிறந்த மனத்திலே ஒருபொழுதும் வந்துதங்கப்பெறாத தருமபுத்திரன்,-மாலை நோக்கி- கண்ணபிரானைப் பார்த்து, 'இ திறம் ஆகிய படையொடு - இப்படி வலிமையாகஅணிவகுக்கப்பட்ட பகைவர் சேனையுடன், நாம்-, சில படை கொண்டு -குறைவான (நமது) சேனையைக்கொண்டு, எதிர்ப்பது-எதிர்த்துப் போர்செய்யும்விதம், எப்படி - எவ்வாறு?' என்றான் - என்று வினாவினான்; (எ - று.) வ்யூஹமென்ற வடசொல், யூகமெனத் திரிந்தது; அதாவது - படைவகுப்பு: சேனை ஒருவடிவமைய ஒழுங்குபட நிறுத்தப்படுவது. சேனைகளை அணிவகுக்கிற உத்தேசம், கண்டபடி தனித்தனிப்பிரிந்து பரவியிருத்தலினும் ஒருவடிவமையத் திரண்டு நிற்கையில் வெல்லுதற்கரியதாய்ப்பகைவரை எளிதில் அழிக்கு மென்பது. இச்செய்யுளினால், சல்லியன் அன்றுஅணிவகுத்த சிறப்பு விளங்கும். சர்வதோபத்ரம் என்னும் வியூகம்வகுக்கப்பட்டதென்று முதனூல் கூறும். 'படைகொண்டு' என்பதில், கொண்டு -மூன்றாம்வேற்றுமைச்சொல்லுருபு, தருமன் கள்ளங்கபடமற்ற சுத்தசித்தமுடையவனென்பது, நான்காம் அடியில் வெளியாம். மால் - பெருமைஅன்பு மாயை என்பவற்றை யுடையவன். முதலடியில், அரும் என்றும்எடுக்கலாம். (15) 16.-தருமன் வினாவிற்குக் கண்ணன்ஏற்ற விடை கூறல். வீடுமனைச் சிலைக்குருவாம் வேதியனை நும்முனை முன் வீடு சேர்த்த, நீடுமணிப்பொலங் கழலோர் நின்னருகே நிற்கின்றார் நிகரிலாய்கேள், ஆடுதிரைக் கடனீந்தியேறினர்க்குக் கழி கடத்தலரியதொன்றோ, தோடவிழ்தார்ச்சல்லியனுக் கிளைப்பரோ வெனமொழிந்தான்றுளபமாலே. |
(இ -ள்.) நிகர் இலாய் - ஒப்பில்லாதவனே! கேள் - (யான் சொல்வதைக்) கேட்பாயாக:- வீடுமனை - பீஷ்மனையும், சிலை குரு ஆம் வேதியனை - வில் வித்தையில் ஆசிரியனான துரோணனையும், நும் முனை- உங்கள் தமையனான கர்ணனையும், முன் - முன்பு, வீடு சேர்த்த - அழிவடைவித்த, நீடு மணி பொலம் கழலோர் - நீண்டதும் இரத்தினங்கள் பதித்ததும் பொன்னினாலாகியதுமான வீரக் கழலையுடைய வீரர்கள், நின் அருகே நிற்கின்றார் - உன்பக்கத்திலே நிற்கிறார்கள்; (ஆதலால்),-ஆடு திரை கடல் நீந்தி ஏறினர்க்கு - எழுந்தசைகிற அலைகளையுடைய கடலை நீந்திக்கடந்து கரையேறினவர்களுக்கு, கழி கடத்தல் அரியது ஒன்றோ - (அதற்கு அப்பாலுள்ளதொரு) கழியைத் தாண்டுதல் அரியதொரு காரியமோ? (அவ்வாறே), தோடு அவிழ் தார் சல்லியனுக்கு இளைப்பரோ - (வீடுமன் முதலிய மகாவீரர்களை வென்றபின்பு) பூவிதழ்கள் மலர்ந்த மாலையையுடைய சல்லியனுக்காக மனஞ்சலிப்பவருண்டோ? என-என்று, துளபம் மால்- திருத்துழாய் மாலையையுடைய கண்ணன், மொழிந்தான் - கூறினான்; (எ - று.) |