பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்21

     'மகாபலபராக்கிரமசாலிகளாகப்பிரசித்திபெற்ற வீடுமனையுந்
துரோணனையுங் கர்ணனையும் போரில் முறையே ஒழித்திட்ட சிகண்டியும்
திட்டத்துய்மனும் அருச்சுனனும் ஆகிய வீரர்கள் உன் அருகில் நிற்கையில்
நீஅஞ்சுவானேன்? அத்துணைவல்லோரை வென்றபின் சல்லியனொருவனை
வெல்லுதல் எளிதன்றோ' என்று கண்ணன் தைரியங் கூறினான். அளவற்றதாய்
நிலை கொள்ளாததாய் அலைவீசி அச்சந்தருவதாயுள்ள கடலை நீந்திக்
கரையேறினார்க்குக் கழியைக் கடத்தல் அரியதன்றே யென்ற பொருளைத்தரும்
உபமான வாக்கியத்துக்கும், வீடுமன் முதலியோரை வென்றவர்க்குச்
சல்லியனைவெல்லுதல் அரியதன்றே யென்றபொருளைத்தரும் உபமேய
வாக்கியத்துக்கும்இடையில் உவமவுருபுகொடாமற் கூறியது,
எடுத்துக்காட்டுவமையணி.

   வீடுமன் - பீஷ்மனென்ற வடசொல்லின் திரிபு: இப்பெயர்க்கு -
பயங்கரனானவனென்று உற்பத்தியருத்தம்:  பயங்கரமானவிரத
முடையவனென்றுகருத்து.  இவன், தனது தந்தைக்கு யோசநகந்தியை
இரண்டாவது மணஞ்செய்வித்தற்கு அவளை வளர்த்ததந்தையான
செம்படவன் இசைதற்பொருட்டுமூத்தவனாய்ப் பட்டத்துக்குரிய தனது
இராச்சியத்தையும் மற்றையெல்லாச்செல்வங்களையும் தனக்குச் சிறியதாயாக
வருமவளுக்குப் பிறக்கும்பிள்ளைக்கே கொடுப்பதாகவும், தான்
மணஞ்செய்துகொள்வதில்லை யென்றும்,இங்ஙனம், ஒழித்தற்கரிய மண்ணாசை
பெண்ணாசை பொன்னாசை யென்னும்மூவகையாசையையும் இளமையிலே
யொழித்துக் கேட்போரஞ்சும் படியானசபதத்தைச் செய்ததனால், இவனுக்கு
இப்பெயர்;  தேவர்களுக்குமுன்னிலையில் இவ்விரதத்தை
ஏற்படுத்திக்கொண்டதனால் தேவவிரதனென்றும், சந்தநு மைந்தனாதலால்
சாந்தநவ னென்றும், கங்கைகுமாரனாதலால் காங்கேய னென்றும் இவனுக்குப்
பெயர்களுண்டு.

     குரு என்றசொல் - (அஜ்ஞாநமாகிற) மனவிருளை யொழிப்பவனென்று
காரணப்பொருள்படும்; வேதியன் - வேதங்களை ஓதுதலும் ஓதுவித்தலு
முடையவன்.  பொன் + கழல் = பொலங்கழல்;  இப்புணர்ச்சிக்கு விதி -
"பொன்னென்கிளவி யீறுகெட முறையின், முன்னர்த்தோன்றும் லகார மகாரம்,
செய்யுள் மருங்கிற் றொடரியலான" என்னுந் தொல்காப்பியச்சூத்திரம்.
பிற்காலத்தார், பொலம் என்றே பொன்னுக்கு ஒருபெயர் கூறுவர்.  கழல் -
வீரர்காலணி.  துளபம் - திருமாலுக்கும், அப்பெருமானது திருவவதார
மூர்த்திகளுக்கும் உரியது.                                                            (16)

17.-இதுமுதல் மூன்று கவிகள் -கண்ணன் தருமனை
நோக்கிக் கூறுவன.

வில்லியரில் வேலாளில் வாளெடுத்தோர் தம்மிலொரு
                                 வேந்தரொவ்வார்,
செல்லியல்வெம் பரியாளிற்கரியாளிற்றேராளிற்
                               சிலர்வேறொவ்வார்,
மல்லியல்பொற் றோள்வலிக்குந்தண்டுக்கு மெதிர்ந்து
                              பொரவல்லார்யாரே,
சல்லியனுக்கொப்பார்நின்றம்பியரிலிலரென்றுஞ்சாற்றினானே.