பக்கம் எண் :

32பாரதம்சல்லிய பருவம்

(ஒருவர்மே லொருவர்) பிரயோகித்தார்கள்; முந்த முந்த - ஒருவரினும்
ஒருவர்முற்பட, மற்று உள்ள ஆயுதங்களும் - (அம்பு தவிர) மற்றுமுள்ள
ஆயுதங்களையும், முடிமுதல் அடி அளவு ஆக - தலைமுதற் கால்வரையிலும்,
உந்த உந்த - மிகுதியாகத் தாக்கவும், (அதனால்) வெம்குருதிஉம் மூளைஉம்
உக உக - வெவ்விய இரத்தமும் மூளையும் மிகுதியாகச் சிந்தவும்,
உரவோர் - வலிமையுடைய அவ்விருவரும், உடற்றினார் - உபயோகித்துப்
போர்செய்தார்கள்; (எ - று.)

     இமையவர் - இமையில் (மூடாமையாகிய) விசேஷமுடையவர், முடி -
மயிர் முடியப்படுவதெனக் காரணப்பெயர்.                         (30)

31.- வீமன் கலங்கிக் கதையுடன் தேரினின்று இறங்கல்.

மத்திரப்பெயர்ச் சிங்கவேறனையவன் வன்கை வான்படைகளின்
                                              மயங்கிப்,
பத்திரப்பெயர்ப்பருத்தகைச்சிறுத்தகட்பாய்மதப்பரூஉப்பகடனையான்,
சித்திரக்கதிர்மணிமுடிப் பீடிகைத் திண்டிறற்றிகிரியந்தேர்நின்று,
அத்திரத்தைவிட் டொருதனிக்கதையுடனதிர்ந்து
                                     போயவனியிலானான்.

     (இ - ள்.) பத்திரம் பெயர் - பத்திரமென்ற பெயரையும், பருத்த கை -
பருத்த துதிக்கையையும், சிறுத்த கண் - சிறிய கண்களையும், பாய் மதம் -
மிக்குவழிகிற மதநீரையுமுடைய, பரூஉ பகடு - பருத்த ஆண்யானையை,
அனையான் - ஒத்தவனான வீமன், மத்திரன் பெயர் சிங்கம் ஏறு
அனையவன் - மத்திரராசனென்னும் பெயரையுடைய ஆண்சிங்கத்தைப்
போன்ற வீரனது, வல் கை - வலிய கையால்  வீசப்பட்ட, வான்படைகளின்
- சிறந்த ஆயுதங்களால், மயங்கி - சிறிது மனந்தடுமாறி,- அத்திரத்தை
விட்டு - அஸ்திரங்களைக்கொண்டு போர்செய்தலையொழிந்து, ஒரு
தனிகதையுடன் - ஒப்பற்ற தனது (சத்துருகாதிநியென்ற)
ஒருகதாயுதத்துடனே,- சித்திரம்-ஆச்சரியகரமான, கதிர் - ஒளியையுடைய,
மணி - இரத்தினங்களைப்பதித்த, முடி - சிகரத்தையும், பீடிகை -
அடிப்பீடத்தையும், திண் திறல் திகிரி - மிக்க வலிமையுடைய
சக்கரங்களையுமுடைய, அம் தேர்நின்று - அழகிய (தனது) தேரினின்று,
அதிர்ந்துபோய் அவனியில் ஆனான் - கர்ச்சித்துக்கொண்டு நிலத்தில்
இறங்கிச்சென்றான்; (எ - று.)

     சல்லியனோடு அம்புகளைக்கொண்டு போர்செய்து வெல்லமுடியாதென்று
வீமன் உடனே தனக்குஉரிய கதாயுதத்துடன் தேரினின்று தரையில்
இழிந்தனனென்பதாம்.  கீழ்ப்பதினேழாங் கவியிற் கூறியபடி மிக வலிய
வீமனினும் மேம்பட்டவன் சல்லியனென்பது இங்கு விளங்குதலால் வீமனுக்கு
யானையையும், சல்லியனுக்குச் சிங்கத்தையும் உவமைகூறினார். பத்திரம்
என்பது - மூவகையானையுள் முதலதாய்ச் சிறந்தது: இதன் இலக்கணம் -
தேனின் நிறம்போன்ற நிறமுள்ள தந்தமும், மிக்க வலிமையும், ஒத்த
அவயவமும், வட்டமான வடிவமும், அழகியமுகமும், அவயவச்சிறப்பும்,
ஏழுமுழம் உயரமும் எட்டுமுழ நீளமும், பத்துமுழ வயிற்றுச் சுற்றளவும்,
பசுமையான மதநீரும் உடையதாமென்று யானைநூல் கூறும். பரூஉப்பகடு =
பருப்பகடு; குற்றெழுத்தளபெடை.  சித்திரக்கதிர்மணியென்றது, பீடிகைக்கும்
அடைமொழி.  பீடிகை - ஆசனம்.                              (31)