32.-வீமன்கதைகொண்டுதாக்கச் சல்லியன் தோமரத்தால் மோதுதல். பகைவனேறிய தேர்விடும் வலவனுந் திகிரியும் பாய்பரி மாவும், புகையெழும்படி யிமைத்தகண் விழிக்குமுன் பொடியெழ விடியெனப் புடைப்ப, வகைகொடார்முடி மத்திரத் தலைவனு மாமறத்தோமரப்படையான், மிகைகொள் வன்றிறல்வீமனை நெற்றியி லெற்றினன்வெற்றி கூர்ந்திடவே. |
(இ -ள்.) பகைவன் ஏறிய - எதிரியான சல்லியன் ஏறியுள்ள, தேர் - தேரை, விடும் - செலுத்துகிற, வலவனும், - பாகனும், திகிரியும்-தேர்ச் சக்கரங்களும், பாய் பரிமாவும் - பாய்ந்துசெல்லும்தன்மையுள்ள தேர்க்குதிரைகளும், பொடி எழ - பொடியாய்ச் சிதறும்படி, (வீமன்), இமைத்த கண் விழிக்கும் முன் - ஒருமாத்திரைப்பொழுதினுள், இடி என - இடிபோல, புகை எழும்படி - புகை கிளம்பும்படி, புடைப்ப - (கதாயுதத்தால்) தாக்க,- வகை கொள் தார் முடி மத்திரம் தலைவனும் - அழகுகொண்ட போர்மாலையைச் சூடிய முடியையுடைய சல்லியனும், மா மறம் தோமரம் படையால் - மிக்கவலிமையையுடைய தோமரமென்னும் ஆயுதத்தால், மிகை கொள் வல் திறல் வீமனை - மிகுதியாகக்கொண்ட கொடிய வலிமையையுடைய வீமசேனனை, வெற்றி கூர்ந்திட - (தனக்குச்) சயம்மிகும்படி, நெற்றியில்எற்றினன் - நெற்றியில் தாக்கினான்; (எ - று.)
தோமரம் - இருப்புலக்கை; கைவேலுக்கும், பேரீட்டிக்கும் இப்பெயர் உண்டு. இமைத்தகண் விழிக்குமுன் - ஒருகால் மூடிய கண்ணைத் திறக்குமளவுக்குமுன். தார் - இங்கே, தும்பைப் பூமாலை. (32) வேறு. 33.-வீமன் வலியழிதலும்,இருசேனையும் பொருதலும். தோமரந் தன்னால் வாயு சுதனமரழிந்த போதில் ஏமரு வரிவிற் றானையிருபெருஞ் சேனை யோரும் மாமரு தடந்தேர் வாசிமத்தவா ரணங்க ளூர்ந்து தீமரு கான மென்னத்தனித்தனி செருச்செய் தாரே. |
(இ -ள்.) தோமரந்தன்னால் - (சல்லியனது) தோமராயுதத்தால், வாயுசுதன் - வாயுகுமாரனான வீமன், அமர் அழிந்த போதில் - போரில் வலிமையொழிந்த பொழுது, ஏ மரு வரிவில் தானை - அம்புகள் பொருந்திய கட்டமைந்த விற்படையையுடைய, இரு பெரு சேனையோரும் - இரண்டு பக்கத்துப் பெரிய சேனைவீரர்களும், மா மரு தடதேர் - குதிரைகள் பூண்ட பெரிய தேர்களையும், வாசி - குதிரைகளையும், மத்த வாரணங்கள் - மதயானைகளையும், ஊர்ந்து - செலுத்திக் கொண்டு, தீ மரு கானம் என்ன - நெருப்புப்பற்றிய காடென்னும்படி (உக்கிரமாக), தனி தனி செரு செய்தார் - தனித்தனியே (ஒருவரோடொருவர்) போர்செய்தார்கள்; (எ - று.) |