35.-சகுனியும்,அவன்மக்களிருவரும் நகுலனோடு பொருது தோற்றல். தசையுற வளர்ந்த பொற்றோட்சகுனியுந் தனயராகி இசையுடன் வளர்ந்தவீரரிருவரு மிரதமேலோர் நிசையுறு மதமாவந்துநெருப்பெதிர்பட்டதென்ன விசையன திளவலோடுசெருச்செய்து வெந்நிட்டாரே. |
(இ -ள்.) தசைஉறவளர்ந்த - சதை மிகுதியாக வளரப்பெற்ற பொன்தோள் - அழகிய தோள்களையுடைய, சகுனியும்-, தனயர் ஆகி - (அவனது) புத்திரர்களாய், இசையுடன் வளர்ந்த - புகழோடு வளர்ந்த, வீரர் இருவரும் - (உலூகன் சைந்தவன் என்ற) வீரர்களிரண்டுபேரும், இரதம் மேலோர் - தேரின் மேலேறியவர்களாய், நிசை உறு மதம் மா நெருப்பு எதிர்வந்து பட்டது என்ன - முகபடாம் பொருந்திய மதயானைகள் நெருப்பெதிரிலேவந்து ஒடுங்கினாற்போல, விசையனது இளவலோடு செரு செய்து வெந்இட்டார் - அருச்சுனனது தம்பியான நகுலனுடன் போர்செய்து முதுகிட்டார்கள்;( எ - று.) சகுனியின்மக்களை 'இசையுடன் வளர்ந்த வீரர்' என்றதனால், சகுனி பழிப்புடன் வளர்ந்த போர்வீரனென்பது தொனிக்கும். நகுலனது ஆற்றல் தோன்ற, 'விசையனது இளவல்' என்றார். விஜயன் என்ற பெயர் - விசேஷமான வெற்றியையுடையவனென்று பொருள்படும்; தன்னைச் சயிப்பவரெவருமில்லாதவ னென்று பொருள் கொள்ளுதலும் ஒன்று, என்ன- உவமவுருபு. (35) 36.-துரியோதனன்கேதுதரனென்ற வீரனைக்கொல்லுதல். புயங்கவெம்பதாகைநச்சுப்பொங்கழற் புயங்கம் போல்வான் தயங்கு வெங்கழற்காற்கேதுதரனெனுந்தனுவலலோனை வயங்குவெஞ்சிறகர்ப்புங்கவயங்கொள்கூர்வாளியொன்றால் இயங்குகவானினூடென்றிமையவனாக்கினானே. |
(இ -ள்.) புயங்கம் - பாம்பின் வடிவத்தையெழுதிய, வெம்- பயங்கரமான,பதாகை - கொடியையுடைய, நஞ்சு பொங்கு அழல் புயங்கம் போல்வான் -விஷத்தையும் சீறுகிற கோபத்தையுமுடைய பாம்பு போல்பவனானதுரியோதனன்,-தயங்கு - விளங்குகிற, வெம் - (பகைவர்க்கு) அச்சந்தருகிற,கழல் - வீரக்கழலையணிந்த, கால் - பாதத்தையுடைய, கேதுதரன் எனும் -கேதுதரனென்கிற, தனுவலோனை - வில்லில்வல்ல வீரனை,- வயங்கு -விளங்குகின்ற, வெம் - கொடிய, சிறகர் - இறகுள்ள, புங்கம்-சிறந்த, வயம்கொள் - வெற்றியைக் கொண்ட, கூர் - கூர்மையுள்ள, வாளி ஒன்றால்-ஓரம்பினால், வானினூடு இயங்குகஎன்று - சுவர்க்கலோகத்திற் செல்வாயென்றுசொல்லி, இமையவன் ஆக்கினான் - தேவனாக்கினான்;(எ-று.)
என்றது, போரிலிறந்து வீரசுவர்க்கமடையும்படி செய்தனனென்றபடி: கொன்றானென்ற பொருளை வேறுவகையாற் கூறியதனால், இதுவும் - பிறிதினவிற்சியணி. 'வானினூடு இயங்குக' என்றது தனது ஆற்றலாற் கூறிய வீரவாதம். |