பிரானதுதம்பியான சாத்தகியும், இவன் மேல் சென்றார் - சல்லியன் மேல் எதிர்த்துச்சென்றார்கள்; (எ - று.) 'தான்' இரண்டும் - அசை. நறைகெழு - தேன் நிறைந்த எனினுமாம். தும்பைமாலை, போர் செய்வார்க்கு உரியது. யதுகுலத்தரசர்களுள் வசுதேவனுக்கு உடன்பிறந்த முறையாகிறவனும் சிநியென்பவனது மகனுமாகிய சத்தியகனது குமாரனான சாத்யகி, பிராயத்தில் கண்ணனினும் இளையவ னாதலால், கண்ணனுக்குத் தம்பிமுறையாவான்: க்ருஷ்ணனிடத்து மிக்க அன்புடையவன். அன்றியும், இவன், அருச்சுனனிடம் வில்வித்தையைக் கற்றறிந்த மாணாக்க னாதலால், ஆசிரியனாகிய அருச்சுனனிடத்தும் அதுசம்பந்தமாக மற்றைப் பாண்டவரிடத்தும் நீதிமுறை வழுவாமல் அன்போடு ஒழுகுபவன். சிவபிரானாலெரிக்கப்பட்ட மன்மதனது அங்கம் [உடம்பு] விழுந்த இடம் ஆதலால் அங்கதேச மென்று பெயர். கீழ்ப் பதினேழாம் போர்நாளில் கர்ணனதுவிருப்பத்தின்படி துரியோதனன் வேண்டவே, சல்லியன் கர்ணனுக்குச்சாரதியாய் நின்று தேர் செலுத்தியதனால், 'அங்கர்கோன்பாகன்' எனப்பட்டான். (40) 41.-நகுலசகதேவரும்சாத்தகியும் சல்லியனொருவனோடு பொருதல். சென்று வெஞ்சிலைகள் கோலிச்சிலீமுகமுறுப்புத்தோறும் ஒன்றென வநேக மேவியொருமுகமாகப் போர்செய்து இன்றிவ னாவி கோறுமென்றுசல்லியன் மேற்றங்கள் வன்றிறல் யாவுங் காட்டிமாறில்போர் மலைந்திட்டாரே. |
(இ -ள்.) (கீழ்க்குறித்த மூன்றுபேரும்), 'சென்று - (சல்லியன் மேலெதிர்த்துச்) சென்று, வெம் சிலைகள் கோலி - கொடிய தங்கள் விற்களைவளைத்து, உறுப்புத் தோறும் - (இவனது) அவயவங்களிலெல்லாம், அநேகம் சிலீமுகம் - பல அம்புகளை, ஒன்று என ஏவி - ஒன்றுபோல இடைவிடாது செல்லும்படி தொடுத்து, ஒரு முகம் ஆக போர் செய்து - (நாமெல்லோரும் இவ்வொருவனுடன்) ஒரேமுகமாக நின்று யுத்தம்பண்ணி, இன்று-இப்பொழுது, இவன் ஆவி கோறும்-இவனுடைய உயிரை வாங்குவோம்',என்று-என்று நிச்சயித்து, தங்கள் வல் திறல் யாவும் காட்டி- தங்களுடையகொடிய வல்லமையெல்லாவற்றையும் உபயோகித்து, சல்லியன்மேல்-, மாறு இல்போர் மலைந்திட்டார் - ஒப்பில்லாத போரைச் செய்தார்கள்; நித்தியமாய் என்றுமழியாத இயல்புள்ள உயிரைக் கொல்லுதலாவது, உடம்பினின்று ஒழித்தல், கோறும் - கொல்வோம்: இவ்வினைமுற்றில், கொல்- பகுதி, முதல்நீண்டது: றும் - தன்மைப்பன்மை வினைமுற்றுவிகுதி. ஏகம்- ஒன்று, அதல்லாதது, அநேகம்: எனவே, பலவாம்; ந+ஏகம்=அநேகம்: ந- எதிர்மறை குறிப்பது. (41) |