42.- சல்லியன் மூவரையும்அம்பினால் துளைத்தல். மதம்படு வேழ மன்ன மத்திரராசன்றானும் விதம்படத் திரண்டுபோர்செய் வீரர்தம்மெய்க ளெல்லாஞ் சதம்படு பகழி யோரோர்தனுக்களி னுருவியோட விதம்பட வெய்து நக்கானேவினுக்கிராமன் போல்வான். |
(இ -ள்.) ஏவினுக்கு - அம்புதொடுக்குந்தொழிலில், இராமன் போல்வான்- ஸ்ரீராமன்போலச்சிறந்தவனாகிய, மதம் படு வேழம் அன்ன மத்திரராசன்தானும் - மதம்பிடித்தயானைபோன்ற சல்லியனும், திரண்டு விதம் பட போர்செய் வீரர்தம் மெய்கள் எல்லாம் - (தம்மில்) ஒருங்குகூடிப் பலவகையாகப்போர்செய்கிற மூன்றுவீரர்களுடைய உடம்புகளிலெல்லாம், சதம் படு பகழி -நூற்றுக்கணக்கான அம்புகளை, ஓர்ஓர் தனுக்களின் உருவி ஓட -ஒவ்வோருடம்பிலும் துளைத்துச்செல்லும்படி, இதம் பட எய்து - எளிமையாகப்பிரயோகித்து, நக்கான் - (அவர்கள் தளர்ச்சியை நோக்கி இகழ்ந்து) சிரித்தான்;(எ - று.) வேறுதுணையில்லாமல் ஒருவனேயாய்நின்று பலருடன் ஏக காலத்தில் அம்புதொடுத்துப் பொருது வெல்லுதல்பற்றி, சல்லியனுக்கு இராமபிரானை உவமை கூறினார்; இராமன் அங்ஙனம் விற்றொழிலில் மிகவல்லவனாய்த் தனியே அரக்கர்பலரை எளிதிலழித்தமை இராமாயணத்திற் பிரசித்தம். ஏவிற்கு - உருபுமயக்கம். ராமனென்ற திருநாமம் - தன்னிடத்தில் யாவரும் மனங்களித்திருக்கப்பெற்றவனென்று பொருள்படும்: சகலசற்குணங்களும் பொருந்தினவனென்பது கருத்து. (42) 43.-அதுகண்டு வீமன்சல்லியனது கொடி முதலியவற்றை யழித்தல். தம்பிமார் தளர்ச்சி கண்டுசமீரணன் புதல்வன் சீறித் தும்பைமா மாலை வேய்ந்துதொடுகணை வலிதின்வாங்கி வெம்புபோர் மத்திரேசன்வியன்கொடி பாகுவாசி செம்புணீர் சொரிகளத்திற் சிதறிட வறுத்து வீழ்த்தான். |
(இ -ள்.) தம்பிமார் தளர்ச்சி கண்டு - தனது தம்பியான நகுல சகதேவரும் கண்ணனது தம்பியான சாத்தகியும் என்னும் இவரது தளர்ச்சியைப்பார்த்து, சமீரணன் புதல்வன் - வாயுபுத்திரனான வீமன், சீறி - கோபித்து,தும்பை மா மாலை வேய்ந்து - (போருக்குரிய) சிறந்த தும்பைப் பூமாலையைத்தரித்து, தொடு கணை வலிதின் வாங்கி - தொடுத்தற்குரிய அம்புகளைவலிமையோடு பிரயோகித்து, வெம்பு போர் மத்திர ஈசன் - உக்கிரங்கொண்டபோரையுடைய மத்திரதேசத்தரசனான சல்லியனது, வியன்கொடி - பெரியதுவசத்தையும், பாகு - சாரதியையும், வாசி - தேர்க்குதிரைகளையும், செம் புண்நீர்சொரி களத்தில் சிதறிட - சிவந்த இரத்தம் பெருகுகிற போர்க்களத்திலேசிதறி விழும்படி, அறுத்து வீழ்த்தான்- துணித்துத் தள்ளினான்; |