ஆய் - சிவந்தகையையுடையமூன்று இராமர்களின் வடிவமாய், வான்நாடர் வந்து தொழ - விண்ணுலகத்தவரான தேவர்கள் வந்து வணங்க, மண்நாடர் யாவரையும் - நிலவுலகத்தார் பலரையும், மடிவிக்க - அழித்தற்கு, வந்த - தோன்றின, வடிவு ஆய் - (கண்ணனது) வடிவமாய், நானா விதம் கொள் - பலவகைப்பட்ட நடைவகைகளைக் கொண்ட, பரி - குதிரைவடிவங் கலந்த, ஆள் ஆகி - மனிதனது வடிவமாய், நின்று - திருவவதரித்து நின்று, அருளும்- (எல்லாவுயிர்களிடத்துங்) கருணைசெய்யும், நாராயணாய - ஸ்ரீமந்நாராயணமூர்த்திக்கு, நம - நமஸ்காரம்; (என்றவாறு). மத்ஸ்யம்கூர்மம் வராகம் நரசிம்மம் வாமநன் பரசுராமன் தசரதராமன் பலராமன் கிருஷ்ணன் கல்கி என்ற பத்துத்திருவவதாரங்களை உரியசமயங்களிற்செய்து நல்லோரைப் பாதுகாத்து அல்லோரையழிக்கிற திருமாலுக்கே நான் அடிமை, இங்ஙனங்கொடியவரைக்கொன்று அடியவரையளித்தருளுகிற ஆதிதேவன் விஷயமான வணக்கங் கூறியதனால், கவி தானெடுத்துக்கொண்ட காரியம் இடையூறின்றி இனிது முடியுமென்பது கருத்து. இப்பத்து அவதாரங்களுள் முதல் ஒன்பது அவதாரங்களும் முன்புநடந்தவையென்பதும், இறுதியவதாரம் இனி நடப்பதென்பதும் தோன்றும்பொருட்டு, மற்றையவதாரங்களுக்கு 'ஆகி', 'ஆய்' என இறந்த காலச்சொற்கொடுத்தவர், கற்கியவதாரத்துக்கு 'ஆகி நின்றருளும்' என எதிர்காலச்சொற்கொடுத்தனரென நுட்பமுணர்க.
1. முன்னொருகாலத்தில் பிரமதேவன் கண்துயில்கையில், சோமக னென்னும் அசுரன் வேதங்களையெல்லாங் கவர்ந்துகொண்டு கடலினுள் மறைந்துசெல்ல, பிரமன் முதலிய தேவர்களின் வேண்டுகோளால் திருமால் ஒருபெருமீனாகத் திருவவதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனைத் தேடிப் பிடித்துக்கொண்டு, அவன் கவர்ந்து சென்ற வேதங்களை மீட்டுக் கொணர்ந்து, அன்னவடிவமாய் அவற்றைப் பிரமனுக்கு உபதேசித்தருளினன். 2. துருவாசமுனிவரதுசாபத்தாற் கடலினுட்புக்கு ஒளித்த சுவர்க்கலோகத்துச் செல்வங்களையெல்லாம் மீளவும் பெறும் பொருட்டு இந்திரன் முதலிய தேவர்கள் திருமாலின் நியமனப்படி அசுரர்களுடன் கூடிச்சென்று மந்தர மலையை மத்தாகநாட்டி வாசுகியென்னும் பெரும்பாம்பைக்கடை கயிறாகப் பூட்டித் திருப்பாற்கடலைக் கடைந்தபொழுது, அம்மந்தரகிரிகடலினுள்ளே சென்று அழுந்திவிடாதபடி எம்பெருமான் மகாகூர்மரூபத்தைத்தரித்து அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தான். 3. ஒருகாலத்தில் பூமியைப்பாயாகச்சுருட்டி யெடுத்துக் கொண்டு கடலில் மூழ்கிப்போன இரணியாக்கனைத் திருமால் தேவர்முனிவர் முதலியோரது வேண்டுகோளால் மகாவராகரூபமாகத் திருவவதரித்துக் கொன்றுபூமியைக் கோட்டாற் குத்தியெடுத்துக் கொண்டுவந்து பழையபடி விரித்தருளினன். |