பக்கம் எண் :

46பாரதம்சல்லிய பருவம்

கோத்தவம்பினிற்பலபடைகளிலமர்கொளுத்துதலரிதென்று
பார்த்தன்முன்புநின்றமர்புரிந்திலன்கடற்பார்புகழ்பரித்தாமா.

     (இ -ள்.) பூத்த பைங்கொடி அனைய - நிறையமலர்பூக்கப்பெற்ற பசிய
பூங்கொடியை யொத்த, பூண் அணி மெய் - பல ஆபரணங்களை யணிந்த
உடம்பையுடைய, பொதுவியர் - கோபஸ்திரீகளுடைய, தனம் - கொங்கைகளில்,
தோயும் - கலக்கிற, தூர்த்தன் - விடனான கண்ணன், வெம் பரி தேர்விடும்
அளவும் - வெவ்விய குதிரைகள் பூண்ட தேரை (இவனுக்குச்) செலுத்து
மளவும், இ சுரபதி மகனோடும் - தேவராசனாகிய இந்திரனது குமாரனான
இவ்வருச்சுனனுடனே, கோத்த அம்பினில் - தொடுக்கும் அம்புகளாலும், பல
படைகளின் - மற்றும் பல ஆயுதங்களாலும், அமர்கொளுத்துதல் - போரை
மூண்டு செய்தல், அரிது - முடியாது, என்று - என்று நிச்சயித்து,- கடல் பார்
புகழ் பரித்தாமா - கடல்சூழ்ந்த நிலவுலகத்திலுள்ளார் யாவரும் புகழப்பெற்ற
அசுவத்தாமன், பார்த்தன் முன்பு நின்று அமர் புரிந்திலன் - அருச்சுனனெதிரில்நின்று போர்செய்யாதொழிந்தான்; (எ - று.)

    புறங்கொடுத்தன னென்பதாம்; அடுத்த கவியில் "மற்றவன் தனை
முதுகுகண்டு" என வருதல் காண்க.  பலபராக்கிரமங்களில் அதிபிரசித்தனான
அசுவத்தாமன் அருச்சுனன்முன் இங்ஙனமானது, அவனுக்கு உள்ள
கிருஷ்ணசகாயத்தினாலே யென்பது இதில் விளங்கும்.

    ஆயர்மகளிரது மெல்லியதாய் ஒல்கியொசியும் உடம்பு - கொடியையும்,
அதில் நிறைய அணிந்த சிறந்த ஆபரணங்கள் - கொடியிற் பூத்த
மலர்களையும் போலுதலால், 'பூத்தபைங்கொடியனையமெய்ப்பூணணி
பொதுவியர்'என்றார், பொதுவியர் - பொதுவ ரென்பதன் பெண்பால். 
தூர்த்தன் -வஞ்சகனான காமுகன்; கண்ணன்.  ஆயர் மங்கையர்பலரிடத்தும்
ஒருங்குகாதலுடையனாதலை கீழ் மூன்றாம் போர்ச்சருக்கத்திலும்
'விரவுகோவியர்தூர்த்தன்' என்றார்.

    தருமத்தை ஸ்தாபிக்க அவதரித்த எம்பெருமான் தருமவிரோதமாக
இங்ஙனஞ்செய்வது ஒக்குமோ? அப்பெண்களுக்கும் இதனால்
பாதகமுண்டாகாதோ? எனின்,- அவ்வெம்பெருமான் தன்னைச்
சேர்ந்தவர்களுடைய சகலபாவங்களையும் போக்கடிக்கும்படியான
பரிசுத்தமுடையவனாகையாலும், அம்மங்கையர் வேதாந்த நிர்ணயத்தின்படி
அன்புசெலுத்து மிடத்திலேயே அன்பைச் செலுத்தினார்க ளாகையாலும்,
அவர்களுக்குச் சகலபாவநிவிருத்தியேயல்லாது பாவமுண்டாவதில்லை;
எம்பெருமானுக்கோ, சீவாத்மாவுக்கு உண்டாவதுபோலே பாபபந்த
முண்டாகாது;ஏனெனில்,-பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்கிற
பஞ்சபூதங்கள்எப்படி எல்லாப்பிராணிகளிலும் வியாபித்திருக்குமோ,
அப்படியே, சுவாமிஅந்தப் பெண்களிலும் அவர்களுடைய பர்த்தாக்களிலும்
மற்றுமுள்ளஆத்மகோடிகளிலும் வியாபித்திருக்கும் பரமாத்துமாவாகையாலே,
அவனுக்குப்புதிதாக ஒருசம்பந்தம் வந்ததில்லையென்ப.  இன்னும்
பலவகையாகவும் ஏற்றசமாதானங் கூறப்பட்டு வழங்கும்.          (52)