பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்49

அழியச்செய்து, மெய் குலைந்திடும்படி - உடம்பு நடுங்கும்படி, மோதி -
தாக்கி,- மண்டு பாய்பரி நகுலனை - உக்கிரமான பாய்கிற குதிரையையுடைய
நகுலனை, அன்பு உடை மருகன் என்று எண்ணாமல் - அன்புக்குரிய
தன்மருகனென்று நினையாமல், கொண்டல்வாய் இடி நெருப்பு என -
மேகத்தினிடத்துத் தோன்றுகிற நெருப்புமயமான இடி போல, சிற் சில கூர
வாளியின் - கூர்மையையுடைய சிலசில அம்புகளால், எய்தான்-; (எ - று.)

    மாமனுக்கும் மருகனுக்கும் பரஸ்பரம் இயல்பான அன்புடைமை விளங்க
'அன்புடை மருகன்' என்றார்; "மாமனும் மருகனும்போலுமன்பின" என்ற
சிந்தாமணி இங்கு அறியத்தக்கது.  அன்புடை மருகனென்று எண்ணாமல் -
பட்சபாதஞ் செய்யாமல் என்றபடி.   கொண்டல் - நீர்கொண்ட மேகத்துக்குத்
தொழிலாகுபெயர்; இதில் கொள் - பகுதியும், தல் - தொழிற் பெயர்விகுதியும்,
ளகரதகரங்கள் முறையே ணகரடகரங்களானது சந்தியுமாம்.  கூர -
குறிப்புப்பெயரெச்சம்; கூர் - பகுதி.  கூர்வாளிகளெய்தான் என்றும்
பாடம்.                                                 (56)

57.-சல்லியன் சகதேவனைவென்று வீமனையும்
அருச்சுனனையும் தருமனையும்எதிர்த்தல்.

ஒருகொடுங்கணைதொடுத்தலும்வென்கொடுத்தோடினன்சாதேவன்
இருகொடுங்கணைக்கிலக்கமாயினன்மருத்தீன்றவனிருதோளும்
பொருகொடுங்கணைமூன்றினாலருச்சுனன்புயமுமார்பமும்புண்செய்து
அருகொடுங்குறநுதலின்மேலம்புநான்கறத்தின்மைந்தனையெய்தான்.

     (இ -ள்.) (சல்லியன்), ஒரு கொடு கணை - ஒரு கொடிய அம்பை,
தொடுத்தலும் - பிரயோகித்தவுடனே, சாதேவன் - சகதேவன், வென்
கொடுத்துஓடினன் - முதுகுகொடுத்துத் தோற்றோடினான்; மருத்து ஈன்றவன்
-வாயுபெற்ற பிள்ளையான வீமன், இரு கொடுகணைக்கு இருதோளும்
இலக்கம்ஆயினன் - (சல்லியனெய்த) இரண்டுகொடிய அம்புகளுக்குத்தனது
இரண்டுதோள்களும் லக்ஷ்யமாகப்பெற்றான்; (பின்பு சல்லியன்), பொருகொடு
கணைமூன்றினால் - போருக்குரிய கொடிய மூன்று அம்புகளால், அருச்சுனன்
புயமும் மார்பமும் புண்செய்து - அருச்சுனனது தோள்களிரண்டையும்
மார்பையும் புண்படுத்தி, அருகு - சமீபத்திலுள்ள, அறத்தின் மைந்தனை -
தருமபுத்திரனை, ஒடுங்குற - ஒடுங்கும்படி, நுதலின்மேல் - நெற்றியின்மேல்,
நான்கு அம்பு எய்தான் - நான்கு அம்புகளைத் தொடுத்தான்; (எ - று.)

    சல்லியன் ஓரம்பினால் சகதேவனை வென்று இரண்டு அம்புகளை
வீமனது தோளிரண்டிலுஞ் செலுத்தி மூன்று அம்புகளை அருச்சுனனது
இருதோள் மார்பு என்ற மூன்று உறுப்புக்களிலுந் தைக்குமாறு எய்து பின்பு,
தருமபுத்திரனது நெற்றியில் நான்கு அம்புகளைப் பிரயோகித்து அதனால்
அவனை ஒடுங்கச் செய்பவனாயினனென்பதாம். ஒன்று முதல் நான்குவரை
தொடர்ச்சிப்படக் கூறிய நயம்காண்க.  கொடுங்கணை என்றும், நாணத்தின்
என்றும் பாடம்.                                      (57)

சல்-7