58.- அதுகண்டு வீமன்சல்லியனை மகுடபங்கஞ் செய்தல். அறத்தின்மைந்தனதானனங்குருதியாலருக்கன்மண்டலம்போல நிறத்தவாறுகண்டருகுறக்கதைகொடுநின்றவாயுவின்மைந்தன் மறத்தடம்புயவரிசிலைச்சல்லியன்மணிமுடிகழன்றோடிப் புறத்துவீழ்தரவெறிந்தனனெறிந்தமைபுயங்ககேதனன்கண்டான். |
(இ -ள்.) அறத்தின் மைந்தனது - தருமபுத்திரனது, ஆனனம் - முகம், குருதியால் - இரத்தத்தினால், அருக்கன் மண்டலம் போல - சூரியமண்டலம்போல, நிறத்த - செந்நிறமடைந்த, ஆறு-விதத்தை, கண்டு - பார்த்து,- அருகு உற கதை கொடு நின்ற வாயுவின் மைந்தன் - (அவனது) சமீபத்திலே பொருந்தக் கதாயுதத்தைக் கையிலேந்திக்கொண்டுநின்ற வாயுகுமாரனான வீமன்,-மறம் தட புயம் - வலிமையையுடைய பெரிய தோள்களையும், வரி சிலை - கட்டமைந்த வில்லையுமுடைய, சல்லியன் - சல்லியனது, மணி முடி - இரத்தின கிரீடம், கழன்று ஓடி புறத்து வீழ்தர - கழன்றுசென்று பின்னே விழும்படி, எறிந்தனன் - (தனதுகதையினால்) தாக்கினான்; எறிந்தமை - அவ்வாறு தாக்கியதனை, புயங்க கேதனன் கண்டான்- பாம்புக்கொடியனான துரியோதனன் பார்த்தான்; (எ - று.)
சல்லியனெய்த நான்கு பாணங்களால் தருமனது முகம் புண்பட்டு இரத்தஞ்சொரிந்ததைப் பார்த்த வீமன் சல்லியனைக் கதைகொண்டு தாக்கி அவனது கீரிடம் கீழேவிழும்படி செய்திட்டதை அச்சல்லியனுக்குப் பாதுகாவலாக வந்துள்ள துரியோதனன் பார்த்தனனென்பதாம். (58) வேறு. 59.-வீமன்மேல் துரியோதனன்ஓரம்பு தொடுத்தல். தன்படைத் தலைவனைத் தண்டினாலெறி வன்புடைத் தடம்புயமருத்தின் மைந்தன்மேன் மின்படைத் தொளிர்கணைவிசையி னேவினான் புன்படைப் பினிலயன்படைத்த பூபனே. |
(இ -ள்.) தன் படை தலைவனை - தனது சேனைத்தலைவனான சல்லியனை, தண்டினால்எறி - கதாயுதத்தால்தாக்கின, வன்புஉடை தடபுயம்மருத்தின் மைந்தன்மேல் - வலிமையையுடைய பெரிய தோள்களையுடைய வாயுகுமாரனான வீமன்மேல்,-புன் படைப்பினில் அயன் படைத்த பூபன் - இழிவான சிருஷ்டிவருக்கத்திலே பிரமனால் சிருஷ்டிக்கப்பட்ட அரசனான துரியோதனன்,-மின் படைத்து ஒளிர் கணை - மின்னல்போன்ற ஒளியைப்பெற்று விளங்கும் ஓரம்பை, விசையின் ஏவினான் - வேகத்தோடு தொடுத்தான்; (எ - று.) அசுராம்சமாய்த் தோன்றித் தீக்குணந் தீச்செயல்களையுடையராய் உலகத்துக் கொடுமைவிளைத்துப் பூமிக்குப் பாரமாய் நின்ற பாதகர்களுள் துரியோதனன் ஒருவனாதலால், 'புன்படைப்பினில் அயன்படைத்த பூபன்' எனப்பட்டான். பூபன் - பூமியைக்காப்பவன். 'படைத்தொரு' என்றும் பாடம். |