(இ -ள்.) இரண வித்தகன் இவன் - போரில் வல்லவனான இவ்வீமன், எறிந்த - (மற்றும் துரியோதனன்மேல்) வீசின, வேலினால் - வேற்படையால், முரண் உடை சுயோதனன் - வலிமையையுடைய துரியோதனன், முதுகு தந்தபின் - தோற்றுப் புறங்கொடுத்தபின்பு,- அரண் உடை படைக்கு அரசு ஆன மத்திரன் - பாதுகாப்பையுடைய சேனைக்குத் தலைவனான மத்திர நாட்டரசனாகிய சல்லியன், மரணம் இப்பொழுது என வந்து மேவினான் - மரணம் இப்பொழுதேயென்னும்படி வந்து (போர்க்கு) நெருங்கினான்;(எ-று.)
'மரணம் இப்பொழுதென' என்பது, இவன்வருகிற யுத்தாவேசத்தைப் பார்த்தவர்கள் எதிரிக்கு இவனால் தப்பாமல் மரணம் நேரு மென்று கருதும்படியென்றவாறு. சுயோதனன் - சு - நல்ல, யோதநன் - போரையுடையவனென்றுபொருள்படும். (64) வேறு. 65.-பல வீரர்கள் வந்துசல்லியனுக்குத் துணையாதல். நேரி லாதகிரு பப்பெயர்விறற்குருவு நீடு சாலுவனு மற்புய மணிச்சிகர, வீர னானசகு னிப்பெயர்ப டைத்தவனும் வீறு சால்கிருத பற்பனுமெ னப்புகலும், ஆர மார்பினர்மு தற்படைஞ ரிற்றலைவ ரானவீரதுர கத்தினர் களிற்றினர்கள், ஊரு மூருமிர தத்தினரெ னைப்பலருமோத வாரியென மத்திரனொ டொத்தனரே. |
(இ -ள்.) நேர் இலாத - ஒப்பில்லாத, கிருபன் பெயர் - கிருபனென்னும்பெயரையுடைய, விறல் குருவும் - வெற்றியையுடைய ஆசாரியனும், நீடு -பெரிய, சாலுவனும் - சாலுவதேசத்தரசனும், மணி - அழகிய, சிகரம் -மலைபோன்ற, மல் புயம் - வலிமையையுடைய தோள்களையுடைய, வீரன்ஆன - வீரனாகிய, சகுனி பெயர் படைத்தவனும்- சகுனியென்றபெயரைக்கொண்டவனும், வீறு சால் - (வேறொருவர்க்கில்லாத) சிறப்பு மிக்க,கிருதபற்பனும் - கிருதவர்மாவும், என - என்று, புகலும் - சொல்லப்படுகிற,ஆரம் மார்பினர் - ஆரங்களையணிந்த மார்பையுடைய வீரர்கள், முதல் -முதலாக, படைஞரில் தலைவர் ஆன சேனை வீரர்களுட்சிறந்தவராகவுள்ள,வீரதுரகத்தினர் - வலியகுதிரைகளை யுடையவர்களும், களிற்றினர்கள் -யானையையுடையவர்களும், ஊரும் ஊரும் இரதத்தினர் - வேகமாகச்செல்லுந்தேரையுடையவர்களுமாகிய, எனை பலரும் - மற்றும் பலவீரர்களும், ஓதம்வாரி என - அலைகளையுடைய கடல்போல, மத்திரனொடு ஒத்தனர் -(கூட்டமாகத்திரண்டுவந்து) சல்லியனோடு சேர்ந்தார்கள்; (எ - று.)
மணிச்சிகரம் - இரத்தின மலையுமாம். கிருதவன்மாவை, 'கிருதபற்பன்' என்றது: கிருதவற்பன் என்றும்பாடம். ஊரும் ஊரும் - அடுக்கு, விரைவை விளக்கும்: வாரி-கடலுக்கு இலக்கணை. இதுமுதல் எட்டுக்கவிகள் - முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் தேமாச்சீர்களும் மற்றையாறும் கூவிளங்காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடிநான்குகொண்ட எண்சீராசிரியச் சந்த விருத்தங்கள். தான |