தானனனதத்தனன தத்தனன தான தானனன தத்தனன தத்தனன என்பது, இவற்றிற்குச்சந்தக்குழிப்பாம். (65) 66.-பல வீரர்கள் வந்துதருமனுக்குத் துணையாதல். வீமசேனனுமவற்கிளையபச்சைமயில்வேளின்வானவர்குலப்பகை தொலைத்தவனும், ஏமகூடநிகருத்தமவயப்புரவியேறுவீரனு மவற்கிளை யவித்தகனும், நாமமாயிரமுடைக்கடவுளுக்கிளைய ஞாயிறோடுவமைபெற்றொளிர் நிறத்தவனும், நேமிசூழ்தரணிபெற்றிட நினைத்தமர்செய்நீதிமானருகுசுற்றினர் துணைச்செயவே. |
(இ -ள்.) வீமசேனனும்-, அவற்கு இளைய-அவனுக்கு அடுத்த தம்பியான, பச்சை மயில் வேளின் வானவர் குலம் பகை தொலைத்தவனும் - பசுநிறமுள்ள மயிலைவாகனமாகவுடைய முருகக்கடவுள் போலத்தேவர்கள் கூட்டத்துக்குப் பகைவரான அசுரர்களை அழித்தவனாகிய அருச்சுனனும், ஏமகூடம் நிகர் - ஏமகூடமலையையொத்த, உத்தமம் வய புரவி - நல்லிலக்கணமமைந்த வலிய குதிரையின்மீது, ஏறு - ஏறுகிற, வீரனும் - வீரனான நகுலனும், அவற்கு இளைய வித்தகனும் - அவனுக்கு இளையவனானதத்துவஞானமுள்ள சகதேவனும், நாமம் ஆயிரம் உடை கடவுளுக்கு -ஆயிரந்திருநாமங்களையுடைய கிருஷ்ணபகவானுக்கு, இளைய- தம்பியான,ஞாயிறோடுஉவமை பெற்று ஒளிர்நிறத்தவனும்-சூரியனோடு ஒப்புமைபெற்றுவிளங்குகிற நிறத்தையுடைய சாத்தகியும்,-நேமி சூழ்தரணி பெற்றிடநினைத்து அமர் செய் நீதிமான் அருகு - கடல்சூழ்ந்த நிலவுலகத்தை(த்தன்னுடையதாக)ப் பெறுதற்கு எண்ணிப் போர்செய்கிற நீதியுள்ளவனானதருமனது சமீபத்தில், துணை செய சுற்றினர் - (அவனுக்கு) உதவிசெய்யும்பொருட்டு வந்துசூழ்ந்தார்கள்;(எ - று.)
வீமசேனன் - வலியசேனையையுடையானென்று பொருள். தேவர்கள் வேண்டுகோளின்படி சிவபிரானாற் பெறப்பட்ட குமாரக் கடவுள் தேவர்களை வென்றிட்டவர்களான சூரபதுமன் முதலிய மிகப்பல அசுரர்களை வென்று தேவர்களுக்கு உதவின னாதலால் அவனை, தேவர்களை வென்ற நிவாதகவசர்காலகேயர் முதலிய அசுரர்களைத் தனியே சென்று எதிர்த்துப் பொருதுஅழித்துத் தேவர்க்கு உதவிசெய்த அருச்சுனனுக்கு உவமை கூறினார்.ஹேமகூடம் - பொன்மயமான சிகரமுடையதென்று காரணப் பொருள்படும்:ஹேமம் - பொன், கூடம் - சிகரம். குலபர்வதங்களுள் ஒன்றாதலால்,இதனையெடுத்துக் கூறினார். சகதேவன் தத்துவஞானமுடையவனாதல்,பாரதத்திற் பலவிடங்களில் விளங்கும்: பழம் பொருந்து சருக்கம், கிருட்டிணன்தூதுசருக்கம், முகூர்த்தங்கேள் விச்சருக்கம் என்பவற்றிற் காணலாம்: மேல் 92- ஆங்கவியில் "மதி கொள் ஞானி" என இவன் கூறப்படுமாறும் உணர்க.நாமமாயிரம் - ஸஹஸ்ரநாமம். நேமி - சக்ரவாள மலையுமாம். முருகக்கடவுளால் வேல்கொண்டு பிளக்கப்பட்ட சூரபதுமனது உடம்பின் கூறுஇரண்டும் மயில்வடிவமும் கோழிவடிவமும் பெற்று அக்கடவுளருளால்அப்பிரானுக்கு வாகனமுங் கொடியுமா யமைந்த சிறப்பைக் கருதி, 'மாமயில்' என்றார். |