(இ -ள்.) ஆன போது - இவ்வாறாகிய அப்பொழுது, இரு தளத்தினும் -இரண்டுபக்கத்துச் சேனைகளிலும், மிகுந்த விறல் ஆண்மை வீரர் - மிக்கபலத்தையும் பராக்கிரமத்தையுமுடைய வீரர்கள், மெய் கவசம் மானமே எனநினைத்து - தங்களுடம்பைக் கவசம்போலப் பாதுகாப்பது மானமே யென்றுஎண்ணி, வரி பொன் சிலைஉம் - கட்டமைந்த அழகிய வில்லும், வாளும்-,வேலும்-, முதல் - முதலிய, திறம் - வலிமையுடைய, எ விதம் படையும் -எல்லாவகைப்பட்ட ஆயுதங்களும், மேனி யூடுஉருவ - (எதிரியின்) உடம்பில்ஊறு படுத்தும்படி, ஒருவர்க்கு ஒருவர்-, வெட்டிய - தாக்கிப் போர்செய்த,நிலைக்கு - நிலைமைக்கு, வேறு உவமை கூற - வேறுஒப்புமை சொல்ல, இலது- வகை இல்லை: தான வானவர்கள் - அசுரர்களும் தேவர்களும், எப்படிமலைத்தனர்கள் - தம்மில்மாறுபாடு கொண்டு எப்படிப்பொருதார்களோ,(அப்படியே பொருதார்கள்: அப்போது நடந்த), உயுத்தமும் - போரும்,அரக்கரொடு - இராக்கதர்களுடனே, மாசாகை மிருகம் - சிறந்தகுரங்குப்படைக்கு நேர்ந்த, யுத்தமும்-போரும், நிகர்த்தன - (இப்போருக்கு)ஒப்பாயின; (எ - று.) அப்பொழுது கௌரவபாண்டவசேனைகள் எதிர்த்துச்செய்த போர்க்குத் தேவாசுரயுத்தமும் ராமராவணயுத்தமுமே ஒப்பாகு மென்பதாம். மானம் - மனவுயர்வு. இதனையே பிரதானமாகக்கொண்டு என்பது, 'மெய்க்கவசம் மானமேயென நினைத்து' என்பதன்கருத்து. இருகளத்தினும்என்ற பாடம், இருதிறத்துப் போர்முனையிலும் என்றுபொருள்படும். 'தானவ வானவர்' என்பது, தானவானவரெனத் தொக்கது. மரக்கிளைகளிற் சஞ்சரிக்கும் விலங்காதலால், சாகாமிருகமென்று குரங்குக்குப் பெயர்; சாகா - கிளை. தேவாசுரயுத்தம், பாற்கடல்கடைந்து அமிருதமெடுத்த காலத்தும் மற்றும் பல சமயங்களிலும் நிகழ்ந்தது. இராவணனாற் சிறைகொள்ளப்பட்ட சீதையை மீட்டற்பொருட்டு ராமன் சுக்கிரீவனோடு நட்புக்கொண்டு அவனது எழுபதுவெள்ளம் சேனைகளுடனே சென்று பொருது அரக்கரை அழித்தமை பிரசித்தம். (68) 69.-தருமன் யாவரையும்விலக்கிச் சல்லியனைத் தான் எதிர்த்தல். வீமசேனனொடருச்சுனன்வயப்புரவி வீரமாநகுலனட்பின வனுக்கிளைய, தாமமீளியளிமொய்த்ததுளவப்புதிய தாரினானநுசன்விற்குருவை முற்பொருத, சோமகேசபதிமெய்ப்புதல்வன்மற்றுமுள சூரரானவரைமுற்றுற விலக்கியெதிர், மாமனாகியுமிகைத்துவருமத்திரனைவாவெனாவமர் தொடக்கினனு திட்டிரனே. |
(இ -ள்.) வீமசேனனொடு - வீமசேனனும், அருச்சுனன் - அருச்சுனனும், வய புரவி - வலிய குதிரைத்தொழிலில் வல்ல, வீர மா நகுலன்- வீரத்தன்மையையுடைய சிறந்தநகுலனும், அவனுக்கு இளைய - அந்நகுலனுக்குத்தம்பியான, நட்பின் - சிநேக தருமத்தையுடைய, தாமம் மீளி -போர்மாலையையுடைய பலசாலியான சகதேவனும், அளிமொய்த்த - வண்டுகள்மொய்க்கப்பெற்ற, துளவம் - |