72.-தருமன் வேறுதேரேறி வேலினாற் சல்லியனைக் கொல்லுதல் வீறுசாலருளறத்தின் மகனப்பொழுதுவேறொர்தேர்மிசை குதித்தி மயவெற்பினிடை, ஏறுகேசரியொடொத்துளநெருப்புமிழவீறிலார் புரமெரித்தவனிகர்க்குமென, மாறிலாததொருசத்தியை யெடுத்து நெடுவாயுவாகு மெனவிட்டனனிமைப் பொழுதில், ஆறுபாயருவிமுக்குவடிறுத்தசெயலானதான்முனைகொண்மத்திரன் முடித்தலையே. |
(இ-ள்.) வீறு சால் - (வேறொருவர்க்கில்லாத) சிறப்பு மிக்க, அருள்-கருணையையுடைய, அறத்தின் மகன் - தருமபுத்திரன், அப்பொழுது -, வேறு ஒர் தேர்மிசை குதித்து - வேறொரு தேரின்மேற் பாய்ந்து ஏறி, ஈறு இலார் புரம் எரித்தவன் நிகர்க்கும் என - அழிவற்றிருந்த அசுரர்களது முப்புரத்தையெரித்திட்ட சிவபிரான் (தனக்கு) ஒப்பாவனென்னும்படி, இமயம் வெற்பினிடை ஏறு கேசரியொடு ஒத்து - இமயமலையின்மேல் ஏறிய சிங்கத்தைப் போன்ற, உளம் நெருப்பு உமிழ - மனம் கோபாக்கினியை வெளியிட, மாறு இலாதது ஒரு சத்தியை எடுத்து - ஒப்பில்லாததொரு வேலாயுதத்தை யெடுத்து, நெடு வாயு ஆகும் என - பெரிய காற்றாகுமென்னும்படி, விட்டனன் - வேகமாகவீசினான்: (அதனால்) இமை பொழுதில் - ஒருமாத்திரைப்பொழுதிலே, முனை கொள்மத்திரன் முடிதலை-முதன்மைகொண்ட சல்லியனது கிரீடமணிந்த தலை, ஆறு பாய் அருவி முக்குவடு இறுத்த செயல் ஆனது - நதிகளாகப்பெருகுகிற அருவிகளையுடைய மேருமலையின் மூன்றுசிகரம் (வாயுவினால்) ஒடிக்கப்பட்ட விதம் போன்றது; (எ-று.)-ஆல் - ஈற்றசை. முக்குவடிறுத்த கதை: முன்னொரு காலத்தில் வாயுதேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் தமக்குள் யார் பலசாலியென்று விவாதமுண்டாக, அதனைப்பரீக்ஷித்தறியும்பொருட்டு வாயுதேவன் மேரு மலையின் சிவரத்தைப் பெயர்த்துத் தள்ளுவ தென்றும் ஆதிசேஷன் அதுபெயரவொட்டாமற் காத்துக்கொள்வதென்றும் ஏற்பாடு உண்டாகி, அங்ஙனமே இருவரும்தேவர் முதலியோரது முன்னிலையில் தத்தம் வலிமையைக் காட்டத்தொடங்கிய பொழுது, ஆதிசேஷன் தனது ஆயிரம்படங்களாலும் மேருமலையின் ஆயிரஞ்சிகரங்களையும் கவித்துக்கொண்டு பெயரவொட்டாமல் வெகுநேரங்காக்க, பின்பு வாயுதேவன் தன்வலிமையால் அம்மலைச் சிகரங்களில் மூன்றைப் பெயர்த்துக் கொண்டுபோய்த் தென்திசையில் தள்ளிவிட்டனன் என்பதாம். இமயம் - பனிமலை, இது மலையரசனாதலாலும், எல்லாமலைகளினும் உயர்ந்ததாதலாலும், இதனை யெடுத்துக்கூறினார். தேர்க்கு மலையும், தருமனுக்குச் சிங்கமும் உவமை. எளிதிற்பகையழித்தற்குச் சிவபிரானை உவமை கூறினார், மாறு - எதிருமாம். (72) |