வும்நிறுத்திக் கூறினதனால், வேற்றுப்பொருள்வைப்பணி. கஜரததுரகபதாதி- பன்மை விகுதிபெறாத அஃறிணையும்மைத்தொகை. சிலைகால்வாங்குதல் - வில்லைக்கோடிகள் வளையச்செய்தல். இனி, கால் - உபசர்க்கமுமாம். கறங்கு - சுழல்வது. (84) 85.-எஞ்சிநின்றதுரியோதனன்தம்பியரும் வீமனால் இறத்தல். பாண்டவரில் வீமன்கைப்படையான்முன்னம் பட்டொழிந்தோ ரொழிந்தோர்கள்பலருங்கூடிக், காண்டகைய கேசரிவெஞ்சாபமன்னார் கண்ணிலான்மதலையரக் களத்திலன்று, மூண்டுபெரும்பணித்துவச முன்னோன்காண முனைந்தமர் செய்தவனியின் மேன்முடிகள் வீழத், தீண்டரியதிருமேனி தேரில்வீழச்சேணடைந்தாரரம்பையர்கள் சிந்தைவீழ. |
(இ -ள்.) பாண்டவரில் - பாண்டவர்களுள், வீமன் - வீமசேனனது, கை- கையினாற் பிரயோகிக்கப்பட்ட, படையால் - ஆயுதத்தால், முன்னம் பட்டுஒழிந்தோர் - முன்புஇறந்தொழிந்தவர்கள், ஒழிந்தோர்கள் - நீங்கலாகவுள்ளவர்களான, காண்தகைய வெம் கேசரிசாபம் அன்னார் - காணுதற்குத் தகுதியுள்ள உக்கிரத்தன்மையுள்ள சிங்கக்குட்டிகளைப் போன்றவர்களான, கண்இலான் மதலையர் பலரும் . பிறவிக்குருடனான திருதராட்டிரனது புத்திரர்கள் [துரியோதனன் தம்பிமார்] பலபேரும், கூடி- ஒருங்குசேர்ந்து, அ களத்தில் - அந்தப் போர்க்களத்தில், அன்று - அப்பொழுது, மூண்டு பெரும் பணி துவசம் முன்னோன் காண - உக்கிரங்கொண்டு பெரிய பாம்புக்கொடியையுடைய தங்கள் தமையனான துரியோதனன் பார்க்க, முனைந்து அமர் செய்து - (வீமனோடு) முயன்று போர்செய்து, அவனியின்மேல் முடிகள் வீழ - தரையில் தங்கள் தலைகள் விழவும்,தீண்டரிய திருமேனி தேரில் வீழ - தொடுதற்கும் அருமையான [மிக்கவலிமையுள்ள] அழகிய தங்கள் உடம்பு தேர்களில் விழவும், அரம்பையர்கள் சிந்தைவீழ - தேவமாதர்களது மனம் தங்களை விரும்பவும், சேண் அடைந்தார் - வீரசுவர்க்கஞ்சேர்ந்தார்கள்; (எ - று.) போரிலிறந்து வீரசுவர்க்கஞ்சேர்பவரைத் தேவமாதர்மணத்தல் இயல்பாதலின், 'சேணடைந்தார் அரம்பையர்கள்சிந்தைவீழ' என்றார். வீழ்தல் என்பது - விரும்புதலென்னும் பொருளதாதலை "தாம்வீழ்வார் மென்றோட்டுயிலின்" என்ற திருக்குறளிலுங் காண்க. இனி, சிந்தை வீழ - மனம்தம்மிடத்துப் பதிந்தழுந்த என்னலுமாம். காண்டரிய என்றும் பாடம். தீண்டு-முதனிலைத் தொழிற்பெயர். சாபம் என்று குட்டிக்குப்பெயர்; இது - இளமைப்பெயராவதொருவடசொல் என்று அறியாது, வெம்சாபம் கேசரி அன்னார் என மொழிமாற்றி, கொடிய வில்லையுடைய சிங்கம் போன்றவர்கள் என்று நலிந்து பொருள் கொண்டு இடர்ப்படுவாருமுளர். சேண் - வானம்: சுவர்க்கத்துக்கு இடவாகுபெயர். (85) |