மலைச்சாரல்களிலுள்ள காடுகளில் சிலமரங்கள் உராய்தலால் உண்டாகும் நெருப்பிற் பட்டுத் தினைக்கொல்லை எளிதில் அழிதல் போல, வீமன் கைப்பட்டுப்பகைச்சேனை எளிதில் அழிந்த தென்பதாம். போதுசகுனிசேனை, நீள்கதாபாணி-வினைத்தொகைகள். கதாபாணி-வேற்றுமைத்தொகையன்மொழி. உருவகவணி. (90) 91.- சகுனி மீளவும்துரியோதனனுக்குத் துணிவுகூறல். அலகில்வேலைபோல்சேனையதிபனாவிபோமாறு பலருமாகிமேன்மோதுபடைஞர்சாயவேநாமும் இலகுவாளம்வேனேமியெவருமேவுவேமாக தலைவகேளெனாவீரசகுனிகூறினான் மீள. |
இதுவும், அடுத்த கவியும் - குளகம். (இ -ள்.) 'அலகு இல் - அளவில்லாத, வேலை போல் - கடல் போன்ற, சேனை - (நமது) சேனைக்கு, அதிபன்-தலைவனயிருந்த சல்லியனது, ஆவி - உயிர், போம் ஆறு-நீங்கும்படி, பலரும் ஆகி-பலரும் ஒருங்குதிரண்டு,மேல் மோது - மேலே தாக்கின, படைஞர் - (எதிர்ப்பக்கத்து) வீரர்கள், சாய -அழிந்திடும்படி, நாமும் எவரும்-நாமெல்லோரும் (ஒருங்குசேர்ந்து), இலகு-விளங்குகிற, வாளம்-வாளாயுதத்தையும், வேல் - வேலாயுதத்தையும், நேமி -சக்கரத்தையும், ஏவுவேம் ஆக - (அவர்கள்மேற்) செலுத்துவோமாக; தலைவ -தலைவனே! கேள் - (யான் சொன்னதைக்) கேட்பாய்;' எனா - என்று,(துரியோதனனைநோக்கி), வீரசகுனி-வீரனாகிய சகுனி, மீள கூறினான்-மீண்டும்உறுதி கூறினான்; (எ - று.) காலையிற் போர்தொடங்கியபொழுது நம்மினும்தொகையிற் குறை பட்டிருந்த எதிர்ப்பக்கத்தார் பின்பு ஒருங்கு சேர்ந்து பொருததனாலாகிய ஒற்றுமைவலியால் நம்மை வென்றிட்டார்க ளாதலால், இப்பொழுது தொகைகுறைந்துள்ள நாமும் அவ்வழியை அனுசரித்து ஒருங்குதிரண்டு பொருதால் அவர்களை வென்றிடலா மென்று, சகுனி, துரியோதனனுக்குத் தைரியங்கூறினானென்றவாறு. கூறினான்மூளஎன்றும் பாடம். (91) 92.- சகுனியை யெதிர்த்தசகதேவன்மேல் துரியோதனன் வேலேவுதல். விரகறாதசூதாடுவிடலைமீதுசாதேவன் இரதமேவியோர்வாளியெழில்கொண்மார்பிலேவாமுன் மருகனானபூபாலன்மதிகொண்ஞானிபூண்மார்பில் உருவவீசினான்மாமனுதவியாவொர்கூர்வேலே. |
(இ -ள்.) விரகு அறாத - வஞ்சனை நீங்காத, சூது ஆடு விடலை மீது -சூதாடுதலில் வீரனான சகுனியின்மேல், சாதேவன் - சகதேவன், இரதம் ஏவி -(தனது) தேரைச் செலுத்தி, எழில் கொள்மார்பில் - அழகுகொண்ட (அவனது)மார்பிலே, ஓர்வாளி ஏவாமுன் - ஓரம்புதொடுத்தற்குமுன்னே,- மருகன் ஆனபூபாலன் - |