முதுகில் ஓட- ஊடுருவி முதுகுவழியே யோடும்படி, வினைகொள் ஏழு வாளி - போர்த்தொழிலைக்கொண்ட ஏழு அம்புகளை, மேல் ஏவி - அவன்மேற் செலுத்தி, விதமது ஆகவே போர் செய் - பலவகையாக எதிர்த்துப்போர் செய்த, மனுகுல ஈசன் - மனுவின்குலத்துக்குத் தலைவனான சோழனது, நீள்- நீண்ட, சாபம் - வில்லினது, வலிமை-, கூற வாராது - (யார்க்கும்) சொல்லமுடியாது; (எ - று.) தநுர்வேதமாவது - பகைவெல்லுதற்குரியபடைக்கலங்களிற் பயிலும் வகையையும், அஸ்திரசஸ்திரங்களைப் பிரயோகிக்கும்வகை முதலியவற்றையும் அறிவிக்கும் நூல்; இங்கே, நூல் என்றது, மற்றைய வேதசாஸ்திரங்களை. சோழன் சூரியகுலத்து மனுசக்கரவர்த்தியின் மரபில் உதித்தவனாதலால், 'மனுகுலேசன்' எனப்பட்டான். பதினேழாம்போர்ச்சருக்கத்திலும் "மனுகுலசோழன்" என்றமைகாண்க. இங்ஙனம் ஒருசோழராசன் பாண்டவர்க்குத் துணைவந்து பதினெட்டாநாட்போரளவும் இறவாதிருந்து பகைவென்று உதவியமை "தாங்கள் பாரதமுடிப்பளவு நின்று தருமன்தன் கடற்படைதனக் குதவிசெய்தவவனும்" என்று கலிங்கத்துப்பரணியிலும் புகழப்பட்டவாறு உணர்க. (95) 96.-கிருபன் சோழனுக்குத்தோற்க, சகுனி போருக்கு மீளல். மருகன்வீழவேசாபமறைவலானுமார்மாலை விருதனோடுபோராடிவெரிநிடாவிடாதோட அருகுசூழுமாசூரரடையவோடவோடாது திருகினானராவேறுதிகழ்பதாகையான்மாமன். |
(இ -ள்.) மருகன் - (தனது) மருமகனாகிய அசுவத்தாமன், வீழ - (சோழனெய்த அம்புகளால் மூர்ச்சித்துக்) கீழேவிழுந்திட, (அதுகண்டு), சாபம் மறைவலானும் - வில்தொழிலிலும் வேதங்களிலும் வல்லவனான கிருபனும், ஆர் மாலை விருதனோடு போர் ஆடி - ஆத்திப்பூமாலையையுடைய வீரனானசோழனுடனே எதிர்த்துப்போர்செய்து, வெரிந் இடா விடாது ஓட - முதுகுகொடுத்து இடைவிடாது ஓடிச்செல்ல, (அதனால்), அருகு சூழும் மா சூரர்அடைய ஓட - அருகிற்சூழ்ந்துள்ள சிறந்த வீரர்களெல்லோரும் ஓடிச்செல்ல,(அப்பொழுது), அரா ஏறு திகழ் பதாகையான் மாமன் - பாம்பின் வடிவம்ஏறிவிளங்குகிற கொடியையுடைய துரியோதனனது மாமனாகிய சகுனி, ஓடாதுதிருகினான் - தான் ஓடாமல் (போருக்கு) மீண்டான்; (எ - று.)
மரத்தின் பெயர் - இங்கே, அதன் பூவுக்கு முதலாகுபெயர். சோழனுக்கு ஆத்திமாலை அடையாளப் பூமாலையாதலால் 'ஆர்மாலை விருதன்' என்றார்; விருது - அடையாளம். அருகு - அசுவத்தாமன், கிருபன் என்னும் இவர்களினருகில். சோழனுக்கு முன் எதிர்ப்பக்கத்து வீரர் பலரும் நிற்கமாட்டாமல் ஓடிப்போனதை மேல் 106-ஆங் கவியிலும் "மதவெங்கயப் போர்வளவற்கு முதுகு தந்த, விதமண்டலீகர் புலிகண்ட மிருகமொப்பார்" எனக்கூறுமாறு காண்க. () |