(இ -ள்.) (இங்ஙனம் ஆலோசித்து),-ஈண்டு இவ்விடத்தில் [குருக்ஷேத் திரத்தில்], சமரின் இறந்தோர்கள் எவரும் - போரில் இறந்த தன்பக்கத்தாரெல்லோரும், இன்றே - இன்றைத் தினத்திலேயே, மீண்டு உற்பவிக்க - மறுபடி பிழைத்தெழும்படி, விரகினோடும் விடுவித்து - தந்திரமாக(அவர்கள் மரணத்தை) நீக்கி, பாண்டுபயந்தோர்படையாவும் - பாண்டுமகாராசன் பெற்ற குமாரர்களான பாண்டவர்களது சேனைகளெல்லாம், மடிய - அழியும்படி, மோத - (தான் மீண்டும்) தாக்குவதாக, பூண்டு - நிச்சயம்செய்து கொண்டு, (துரியோதனன்), உத்தமம் ஆம் மறை கொண்டு - மிக மேலானதொரு மந்திரத்தை உதவியாகக்கொண்டு, அகல் பொய்கை புக்கான்-விசாலமானதொரு தடாகத்திற் பிரவேசித்தான்; (எ - று.) 'விரகு' என்றது, மந்திரபலத்தை, இறந்தவரைப் பிறப்பித்தலினும் மேம்பட்டது வேறு இல்லையாதலால், 'உத்தமமாம்மறை' எனப்பட்டது; 106 - ஆங் கவியில், 'உயர்மந்திரம்' என்றதுங் காண்க. பாண்டுப்பயந்தோர் - உயர்திணைப்பெயரின்முன் வலிமிக்கது, ஓசையின்பம்நோக்கி யென்க. (112) 113. | என்னைத்துருபன்மகனாதியர்கோறலெண்ணப் பின்னைக்குவாய்த்தோன்பிழைப்பித்தனன்யானும்வந்தேன் தன்னைக்குமூழ்கத்தடம்வாய்த்தமைதந்தையோடும் அன்னைக்குரைப்பேனெனப்போயினனந்தணாளன். |
(இ -ள்.) என்னை-, துருபன் மகன் ஆதியர் - துருபதராசன் மகனான திட்டத்துய்மன் முதலியோர், கோறல் எண்ண - கொல்லுதற்கு எண்ணங்கொள்ள, பின்னைக்கு வாய்த்தோன் பிழைப்பித்தனன் - நப்பின்னைப்பிராட்டிக்கு (ஏற்ற கொழுநனாக) வாய்த்த கண்ணபிரான் உயிர் தப்புவித்தான்; (அதனால்), யானும் வந்தேன் - நானும் பிழைத்துவந்தேன்; தன்ஐக்கு - தன் அரசனான துரியோதனனுக்கு, மூழ்க - முழுகும்படி, தடம் வாய்த்தமை - தடாகம்நேர்ந்தமையை, தந்தையோடும் அன்னைக்கு உரைப்பேன் - (அவனது) தந்தையான திருதராட்டிரனுக்கும் தாயான காந்தாரிக்கும் சொல்லுவேன், என - என்றுசொல்லி, அந்தணாளன் - முனிவனான சஞ்சயன், போயினன் - சென்றான்; (எ - று.) பின்னை - ஓர் இடையர்தலைவன் மகள்: இவள் கண்ணபிரானது திருவுள்ளத்துக்கு மிகவுகப்பாக இருந்தன ளாதலால், 'பின்னைக்கு வாய்த்தோன்' என்றார். பிழைப்பித்தனன் - ஒற்றரையும், முனிவரையும், போர்க்கு வாராதாரையுங் கொல்லலாகாதென்று நீதிகூறிப்பிழைப்பித்தான் என்க.'என்னை' என்பது கோறல், பிழைப்பித்தனன் என்ற இரண்டுக்கும் செயப்படுபொருள். தன் ஐ- தன் அரசன்: இனி, தன்னை - தாய்: இங்குத்தாய் போன்றவன்என்பாருமுளர். தனக்கும் திருதராஷ்டிரனுக்குங் காந்தாரிக்கும் துரியோதனனிடத்து உள்ள அருமை யன்பை விளக்குவான், சஞ்சயன் அவனை'தன்னை' என்றானென்ப. மூழ்கத்தடம் வாய்த்தமை - தடாகத்தில் வாய்ப்பாகமுழுகியமை. (113) |