பக்கம் எண் :

90பாரதம்சல்லிய பருவம்

பரிமளமுள்ளவளப்பமுடைய பூவிதழ்களிலெல்லாம், மது நுகர் -
தேனைக்குடிக்கிற, வண்டும் - வண்டுகளையும், காணார் -; (எ - று.)

    புள்ளியலரவம்காணார் - பறவை யொலியைக் கேளாரென்றபடி; ஒரு
புலனை மற்றொருபுலனாகக் கூறிய உபசாரவழக்கு.  ரவம் - ஒலி யுணர்த்தும்
வடசொல்;  அது முதலில் அகரம் பெற்றது.  அங்குக் காற்றெழாமையும்,
ஜலஸ்தம்பத்தின் காரியம்; அன்றி, கீழ் 104 - ஆங்கவியில் "வாயுவுந்
தம்பமாகக் கும்பித்து" என்றதன் குறிப்பால், வாயுஸ்தம்பநமுந்
துரியோதனனாற்செய்யப்பட்டதென்றலும் ஒன்று. தன்மைநவிற்சியணி. (115)

116.-அவ்விடத்து நிலைகண்டவர்கள் துரியோதனனைக்
கூப்பிடத் தொடங்கல்.

ஏறியபாதம்போலவிறங்கியபாதநோக்கிச்
சாறியலிரதமிஞ்சுந்தடம்புனலடங்கநோக்கி
மாறியல்வேந்தர்தம்மில்வாண்முகநோக்கிநோக்கிக்
கூறியவரசன்றன்னைக்கூவினரழைக்கலுற்றார்.

     (இ -ள்.) ஏறிய பாதம்போல - (நீரினின்று கரையின்மேல்) ஏறிய
அடிவைப்புக்கள்போல, இறங்கிய -(துரியோதனன் கால்களை
முன்பின்னாகமாறவைத்துக்கொண்டு நீரில்) இறங்கிய, பாதம் - அடி
வைப்புக்களை, நோக்கி - பார்த்தும், சாறு இயல் - கருப்பஞ்சாற்றையொத்த,
இரதம் - இனியநீர், மிஞ்சும் - மிகுதியாகப்பொருந்திய, தடம் -
அத்தடாகத்தின், புனல் - நீர், அடங்க - அடங்கியிருக்க, நோக்கி -
(அதனைப்) பார்த்தும், மாறு இயல் - மனம் மாறுபடுதல் பொருந்திய,
வேந்தர்- அரசர்கள்,-தம்மில் வாள் முகம் நோக்கி நோக்கி -
தங்களுக்குள்ளே ஒருவர்ஒருவருடைய ஒளியுள்ள முகத்தைப்
பார்த்துக்கொண்டு, (பின்பு), கூறிய அரசன்தன்னை கூவினர் அழைக்கல்
உற்றார் - கீழ்க்கூறப்பட்ட துரியோதனராசனைக்கூவியழைக்கத்
தொடங்கினார்கள்; (எ - று.)- அதனை, அடுத்த ஐந்துகவிகளிற் காண்க.

    அத்தடாகத்தில் சலம் அசையாமல் தம்பித்திருத்தலையும், அதில்
ஒற்றையடிவைப்புவரிசை நீரினின்று துரியோதனன் கரையேறிவெளியே
சென்றிட்டானென்று தோன்றும்படி முன்பின்னாக அமைந்திருத்தலையும்
கண்டுஅசுவத்தாமன் முதலிய சிறந்த வீரர்கள் பலவகையாகக் கவலை
கொண்டுஅக்கவலையால் ஒருவர் முகத்தை யொருவர் பார்த்துப் பின்பு
எல்லோருமாகக்கரையில் நின்று சில வார்த்தைகள் சொல்லி உரத்த
குரலோடு துரியோதனனைஅழைப்பவரானார்கள் என்பதாம்.  சாறியலிரதம்
என்பதற்கு -கருப்பஞ்சாற்றின் தன்மையைக்கொண்ட நீரென்றும் பதவுரை
கூறலாம்.'அடங்கனோக்கி' என்ற பாடமும் பொருந்தும்.  மாறியல்வேந்தர்
என்பதற்கு -துரியோதனனது பாதங்கள் ஏறுதலும் இறங்குதலுமாக
மாறுபட்டியலுதலைவஞ்சனைக்காகச் செய்ததென்று அறிந்துகொண்டவேந்தர் என்னலாம்.                                                (116)