117.-இதுமுதல் ஐந்துகவிகள் -அவர்கள் துரியோதனனை யழைத்தல். நின்கிளையாகிவந்தநிருபருந்துணைவர்யாரும் வன்களிறிவுளிபொற்றேர்வாண்முதற்படைகள்யாவும் புன்களமதனிற்சேரப்பொன்றினவிம்பரன்றோ என்கருதினைகொலையாவென்பெறற்கென்செய்தாயே. |
(இ -ள்.) இம்பர் - இவ்வுலகத்தில், நின் கிளை ஆகிவந்த - உனக்கு உறவினராய்ப் பொருந்திய, நிருபரும் - அரசர்களும், துணைவர் யாரும் - (உனது) நண்பர்களெல்லோரும், வல் - வலிய, களிறு - யானைகளும், இவுளி -குதிரைகளும், பொன் தேர் - அழகிய தேர்களும், வாள் முதல் படைகள்யாவும் - வாள் முதலிய எல்லா ஆயுதங்களும், புல் களமதனில் - துன்பத்துக்கிடமான போர்க்களத்தில், சேர் - ஒருசேர, பொன்றின அன்றோ- அழிந்திட்டனவன்றோ; ஐயா - ஐயனே! என் கருதினை கொல் - என்ன நினைந்தாயோ? என் பெறற்கு - யாது பெறுதற்கு, என்செய்தாய் - என்னகாரியஞ் செய்தாய்? (எ - று.)-ஈற்று ஏகாரம் - இரக்கம். இந்தமுதற்கவி, துரியோதனனது பந்துவர்க்கம் சிநேகிதவர்க்கம் சேனைவர்க்கம் ஆயுதவர்க்கம் என்றயாவும் அழிந்திட்டதைப் பற்றி இரங்கிக் கூறியவாறு. பகைவரான பாண்டவர்களைப்போரில் வென்றொழிக்குமாறு எண்ணிச்செய்த முயற்சியில் இப்படிப்பட்ட துன்பம் நேர்ந்ததனால், 'என் கருதினைகொல் ஐயா என்பெறற்கு என் செய்தாயே' என்றார்; அன்றி, உன்னைச்சேர்ந்தவர் யாவரும் உனக்காகப் போர்செய்துஇறந்துபோய்விட, நீ போரினின்று ஓடிவந்திட்டமை மிக்க அவமானந்தருவ தாதலால், யாது பெறும்பொருட்டு யாது நினைந்து இங்ஙனஞ்செய்தனையோ என்ற கருத்தாற் கூறினாருமாம். துணைவர்யாரும் என்பதற்கு - தம்பிமார்களெல்லாரும் என்றும் உரைக்கலாம். 'புன்களம்' என வெறுத்துக் கூறியவாறு. (117) 118.-இதுவும் அடுத்தகவியும் -அசுவத்தாமனொருவனது வார்த்தை. வீரியம்விளம்பல்போதாதாயினும்விளம்புகின்றேன் போரியலமரிலென்னேர்பொருசிலையெடுத்துநின்றால் தேரியல்விசயனோடுநால்வருஞ்சேரவென்கை மூரிவெங்கணைகளாலேமுடித்தலைதுணிவர்கண்டாய். |
(இ -ள்.) வீரியம் விளம்பல் போதாது - (தனது) பராக்கிரமத்தைத் தானே யெடுத்துச்சொல்லுதல் (யார்க்கும்) தகுதியன்று; ஆயினும் - ஆனாலும், விளம்புகின்றேன் - சொல்லுகின்றேன்: போர் இயல் அமரில் யுத்தம் பொருந்திய களத்தில், என் நேர் - எனது எதிரில், பொரு சிலை எடுத்து நின்றால் - போருக்கு உரிய வில்லையேந்தி நிற்பரானால், தேர் இயல் விசயனோடு - தேரிற் பொருந்திய |