பக்கம் எண் :

58பாரதம்உத்தியோக பருவம்

     (இ - ள்.) (நீ) குருகுலத்து அரசர்க்கு- குருவென்னும் அரசனது மரபிலே
பிறந்த மன்னர்களெல்லோருக்கும், உறும் தொழில் கூறும் (செய்யத்) தக்க
காரியங்களை (முன்னமே ஆராய்ந்து) சொல்லியருளுகின்ற, நல் குரு ஆதலால்
- சிறந்த ஆசிரியனாகையால், இரு குலத்தினும் உற்பவித்தவர் - (என் குலம்
என் தம்பியான பாண்டுவின் குலம் என்னும்) இரண்டு குலத்தினும் பிறந்த
குமாரர்யாவரும், என்றும் நின்சொல்மறுத்திடார் - எப்பொழுதும் உனது
வார்த்தையைத் தடுக்கமாட்டார்கள்; (ஆதலால், நீ பிரவேசித்து), உலை
பெருகுகனல் அன்ன பிள்ளைகள் பேசுகின்ற பிணக்கு அறுத்து - (கொல்லனது)
உலைக்களத்திலே வளர்ந்தெரிகின்ற அக்கினியைப் போன்ற
(உக்கிரத்தன்மையையுடைய) பாண்டவரும் துரியோதனாதியரும் ஆகிய
சிறுவர்கள் (தனித்தனிப்) பேசுகிற மாறுபாடான வார்த்தைகளை ஒழித்து, ஒரு
குலத்தவர் உததி சூழ் புவி ஆளும் ஆறு - (இவ்விருவகையாருள்) ஒரு
குலத்து இராசகுமாரர்கள் தாமே கடல் சூழ்ந்த நிலவுலகம் முழுவதையும்
அரசாளும்படி, இனி - இப்பொழுது, உள்கொளாய் - திருவுள்ளத்திற்
கொண்டருள்வாய்; (எ - று.)- இது, திருதராட்டிரன் சஞ்சயனை நோக்கிச்
சொல்வது.

    'நற்குரு' என்றது - தீமையையொழித்து எப்பொழுதும் நன்மையையே
செய்தருளும் ஆசாரியமூர்த்தி யென்றபடி.  கோபாக்கினியின் ஆவேசத்தால்
ஒருவரையொருவர் ஒழித்திடுதற்குச் சீறுகின்றன ரிவரென்பான் 'பெருகுலைக்
கனலன்ன பிள்ளைகள்' என்றான்.  பிள்ளை - இளைமைப்பெயர்; இது
உயர்திணையிளமைக்கு உரியதாதல், 'தவழ்பவைதாமுமவற்றோரன்ன' என்ற
தொல்காப்பியச் சூத்திரங்கொண்டு கொள்ளப்படும்.  உததி - நீர்
தங்குமிடமெனக் காரணப்பெயர்.  உலைக்கனலன்னபிணக்கு
எனஇயைத்தலுமாம்.  சஞ்சயன் நினைத்தமாத்திரத்திலே தனது கருத்துத்
தவறாமல் நிறைவேறிவிடுமென்ற கருத்தால், 'உட்கொளாய்' என்றான்.   (44)

4.

அறத்தின்மைந்தனுமிளைஞரும்புவியாசையற்றகலடவியின்
புறத்திருந்துதவஞ்செயும்படிபரிவுரைத்தருள்போயெனச்
செறுத்திடுந்திருதராட்டிரன்றனசிந்தையொப்பனசெப்பினான்
மறுத்திலன்பெருமுனியுமற்றவர்பாடிவீடுறமன்னினான்.

     (இ - ள்.) அறத்தின் மைந்தனும் -யமதருமராசனது குமாரனான
யுதிட்டிரனும், இளைஞரும் - அவன் தம்பிமாரான வீமன் முதலிய நால்வரும்,
புவி ஆசை அற்று - இராச்சிய பாகத்திலுள்ள ஆசை நீங்கி, அகல் அடவியின்
புறத்து இருந்து தவம் செயும்படி - விசாலமான காட்டுப் பக்கங்களிலே தங்கித்
தவத்தைச் செய்யுமாறு, போய் - (நீ அவர்களிடஞ்) சென்று, பரிவு உரைத்தருள்
- அன்புள்ள வார்த்தைகளை (அவர்களுக்கு)ச் சொல்லியருள்வாய், என -
என்று, செறுத்திடும் திருதராட்டிரன் - (பாண்டவர்களை) அழிக்குங் கருத்துள்ள
திருதராஷ்டிரமகாராசன், தன சிந்தை ஒப்பன செப்பினான் - தனது
எண்ணங்களுக்கு இசைந்தவையான வார்த்தைகளைச் சொன்னான்; (சொல்ல),
பெருமுனியும் - மகிமையுள்ள சஞ்சயமுனிவனும், மறுத்திலன் -
(அவ்வார்த்தைகளைத்) தடுக்காதவனாய், மற்று - பின்பு,