3. வாரணாவதச் சருக்கம்

துரியோதனன் கன்னனைத் துணைவனாகக் கொள்ளுதல்

ஆங்கு அவர் அம் முறை அயரும் ஆயிடை,
தீங்கு ஒரு வடிவமாம் திறல் சுயோதனன்,
'பாங்கு இவன், நமக்கு' எனப் பரிதி மைந்தனை
வாங்குபு, தழீஇயினன், வலிமை கூரவே.

1
உரை
   


பாண்டவ கௌரவர்கள் ஒருநாள் கங்கையில்
நீராடி, உணவு உண்டு உறங்குதல்

ஒரு பகல், நிலமகள் உய்ய, மங்குலின்
வரு பகீரதிநதி வாச நீர் படிந்து,
இரு திறப் புதல்வரும் இயைந்த கேண்மையால்,
கரை அடைந்தனர், இளங் கடவுளோர் அனார்.
2
உரை
   


தைவரும் நவமணிச் சயிலம் என்னவே
ஐவகை நிறங்களும் அமைத்து இயற்றிய
தெய்வ ஆடக மனை, செல்வப் போனகம்
கைவர நுகர்ந்த பின், கண்ணும் துஞ்சினார்.

3
உரை
   

கன்ன சௌபலர், துரியோதனனுடன் சூழ்ந்து, உறங்கும் வீமனைக் கொடிகளால் கட்டிக் கங்கையில் இடுதல்

கண்படைக் கங்குலில், கன்ன சௌபலர்,
எண் படைக் குமரனோடு எண்ணி, பாவகன்
நண்பன் மெய்ப் புதல்வனை, நார் கொள் வல்லியால்,
திண் பதத்தொடு புயம் சிக்க யாத்தபின்.
4
உரை
   

அரவினில் பிணித்து, எழும் அரவம் பொங்கிட,
உரனுடைப் பொருப்பை, அன்று, உம்பர் நாயகன்
பரவையில் செறித்தென, பயன் இல் செய்கையால்,
விரவும் அப் பெரு நதியூடு வீழ்த்தினார்.
5
உரை
   


கட்டு விடுத்து வீமன் கரை ஏறுதலும், துரியோதனன் அவன்மேல் பாம்புகளை ஏவுதலும்

வீழ்ந்தவன்,-அனந்தரம் நிமிர்ந்து, மெய் உறச்
சூழ்ந்த அப் பிணிகளைத் துணிகள் ஆக்கியே,
ஆழ்ந்திலன், ஏறி, மீண்டு, அவசத்தோடு அவண்
தாழ்ந்திலன்;-இராகவன் தம்பி போன்று உளான்.

6
உரை
   


வாள் இரவியை ஒளி மறைக்கும் வெஞ் சினக்
கோள் அரவினை அன கொடிய நெஞ்சினன்,
நீள் அரவுஇனங்களால், நித்திராலுவை
மீளவும் கொல்லுவான், வீரன் ஏவினான்.

7
உரை
   


கடித்த பாம்புகளைப் பிசைந்து அழித்து,
வீமன் துணைவரைச் சார்தல்

கடித்தன பன்னகம், நகம் கொள் கைகளால்,
துடித்திட, மற்குணத் தொகுதிபோல் பிசைந்து,
இடித்திடும் முகில் என எழுந்து, மா நகர்
வடித்த வேல் துணைவரோடு எய்தி, மன்னினான்.

8
உரை
   

வேறொரு நாள், துரியோதனன்நீர்க் கீழ்
அமைத்த கழுவில் விழாது, வீமன் தப்புதல்

வேறு ஒரு பகல், கழு நிரைத்து, வீமனோடு
ஆறு பாய்ந்து, இருவரும் ஆடும் வேலையில்,
தேறலான் வஞ்சகம் தேறி வண்டினால்,
ஏறினான் கடந்து, அரிஏறு போன்றுளான்.
9
உரை
   

பின் ஒருநாள், துரியோதனன் வீமனுக்கு விஷ உணவு
கொடுத்து மயங்கச் செய்து, கயிற்றால்
கட்டிக் கங்கையில் அமிழ்த்துதல்

பின்னரும் ஒரு பகல், பெற்றம் பெற்றவன்-
தன்னை, அம் மகீபதி தனயன், ஆதரித்து
இன் அமுது அருத்துவான் போல, யாவையும்
துன்னிய விடங்களால் துய்ப்பித்தான்அரோ.
10
உரை
   


விடத்திலே அழிந்து, அறிவு ஒழிந்த வீமனை,
வடத்திலே பிணித்தனன், கங்கை வாரியின்
இடத்திலே அமிழ்த்தினன்-இதயம் ஒத்தவர்
திடத்திலே முதிர்ந்த கிங்கரர் திறங்களால்.

11
உரை
   


பாதலம் புக்க வீமனை அரவு கடிக்க முன்னுள்ள விஷம் அகலுதல்

ஓத வான் கடலிடை ஒளித்த வெற்பு எனப்
பாதலம்தனில் விழு பவன சூனுவை,
வேதனைப்படுத்தினர், விடம் கொள் கூர் எயிற்று
ஆதவப் பண மணி அரவின் அம் சிறார்.
12
உரை
   


முற்படு கொடு விடம், முளை எயிற்று உகும்
பிற்படு விடத்தினால் பெயர்ந்து போதலின்,
மல் படு புயகிரி வடப் பிணிப்பும் அற்று,
அல் படும் இருள் புலர் அலரி ஆயினான்.

13
உரை
   

வாசுகி அளித்த அமுது உண்டு, வீமனது உடல் எழில் பெறுதல்

வாசுகிதனக்கு இவன் வரவு உணர்த்தலும்,
ஆசுகன் மதலை என்று அறிந்து, மற்று அவன்
தேசு உறு பொற்குடம் தெரிந்து, பத்தினால்,
ஏசு அறும் அமுது எலாம் இனிதின் ஊட்டினான்.
14
உரை
   

வெங் கனல் கொளுந்தலின் வெந்த வான் புலம்
மங்குல் பெய் மாரியால் வயங்குமாறுபோல்,
அங்கு எரி விடம் நுகர்ந்து அழிந்த பேர் உடல்,
இங்கு அமுது அருத்தலால், எழில் புரிந்ததே.
15
உரை
   


நாக ராசன் மாளிகையில் வீமன் எட்டு நாள் தங்கியிருத்தல்

ஆயிரம் பதின் மடங்கு அரசுஉவாக்களின்
மா இருந் திறல் வலி மலிந்த மேனியான்,
ஏய் இருந் தவப் பயன் என்ன, எண் பகல்
மேய் இருந்தனன், பணிவேந்தன் கோயிலே.

16
உரை
   


துரியோதனன் தனியாய் நகர்க்கு மீளுதல்

இவனை அந் நதியிடை இட்ட பாவியும்,
தவனனை உததியில் சாய்த்த மாலைபோல்,
அவனிபன் நகரியின் அரச வெள் வளைத்
துவனி செந் தழல் விளக்கு எடுப்பத் துன்னவே,
17
உரை
   


வீமனைக் காணாது குந்தியும் மக்களும் வருந்துதல்

கண்டிலள், உதிட்டிரன் கனிட்டற் கண் உற;
உண்டிலள்; தரித்திலள்; ஓர் இராவினும்
கொண்டிலள், துயில்; இளங் குமரர்தம்மொடும்
விண்டிலள் உரை;-உளம் விம்மு குந்தியே.
18
உரை
   

'வீடினன் ஆம்' எனத் துணைவர் வேறுவேறு
ஓடினர்; கான், நதி, ஓடை, எங்கணும்
தேடினர்; 'காண்கிலம்; செய்வது என்?' என,
நாடினர்; நடுங்கினர், நடுக்கு இல் சிந்தையார்.
19
உரை
   

'கூற்று அன சுயோதன குமரனே, இவன்
ஆற்றலின் வெரீஇ, அழுக்கற்ற சிந்தையான்;
ஏற்றதை உணர்கிலம்' என்று, தந்தையாம்
காற்றினும் அலமரும் கருத்தர் ஆயினார்.
20
உரை
   


குந்திக்கு வீடுமன் தேறுதல் கூறுதல்

ஊதை இல் பூதம் ஒத்து உள்ளம் வெம்பிய
தாதை இல் சிறுவரை, தாதைதாதைபால்,
கோதை இல் குழலினாள் கொண்டு சேறலும்,
'வாதை இன்று அவற்கு' என வருத்தம் மாற்றினான்.

21
உரை
   


பலரும் தேற்றத் தேறாது, குந்தி மனம் மறுகி இருத்தல்

தரும மன்னனும், நகர்ச் சனங்கள் யாவையும்,
தெருமரல் தேற்றவும், தெய்வம் கூறவும்,
பெருமித நிமித்தங்கள் பெற்றி பேசவும்,
'வரும், வரும்!' என மனம் மறுகி, வைகினாள்.

22
உரை
   


நாகங்கள் வீமனைக் கங்கைக் கரையில் கொண்டு சேர்த்தல்

இருந்து, இளைப்பு அகன்றபின், இவனை மற்றை நாள்,
அருந் திறல் போகிகள், அரசன் ஏவலால்,
வருந்தி உற்று எடுத்து, முன் வந்த நீர் வழிப்
பொரும் திரைக் கங்கையின் கரையில் போக்கவே.
23
உரை
   

பாழி அம் புய கிரிப் பாண்டவன் தனைச்
சூழ் இகல் பணிக் குலம் சுமக்க வல்லவோ?-
வாழி அக் குலங்களின் மன்னன் அல்லனோ,
ஏழ்-இரு புவனமும் இனிதின் ஏந்துவான்!
24
உரை
   

விதியினால் ஒளித்தலின் உயங்கி, மீளவும்
நதியினால் வருதலின் நலம் கொள் மேனியான்,
பதியினால் விளங்கும் மென் பங்கயங்களும்,
மதியினால் குளிர் நெடு வானும் ஆயினான்.
25
உரை
   


உற்றார்க்கு மகிழ்ச்சியும், துரியோதனாதியர்க்கு நடுக்கமும் வீமன் விளைத்தல்

வேதியர், குரவர், வில் விதுரன், வீடுமன்,
ஆதியர், துணைவர் அந் நகர் உளார்கள் என்று
ஓதிய சனங்களுக்கு உவகை நல்கினான்-
ஞாதியர் கிளைக்கு எலாம் நடுக்கம் நல்கியே.
26
உரை
   

குந்தியைத் தேற்றி, வீமன் அத்தினாபுரியில்
முன்பு போல வாழ்தல்

குந்தியை மகிழ் உரை கூறி, கற்பினால்
அந்திமீன் அனையவள் அருளின் வாழ்த்தவே,
செந் திருமகள் உறை செல்வ மா நகர்
வந்து, இவன் முன்புபோல் வளரும் நாளிலே,
27
உரை
   


கிருபன் குருகுல மைந்தர்க்குப் படைக்கலப்
பயிற்சி அளித்தல்

கோதமன் மகன் மகன், குனி வில் ஆதியாம்
மேதகு படைக்கலம் யாவும் வீறொடு அம்
மா தவன்வயின் பயில் வரதன், வன் திறல்
கேதம் இல் சிந்தையான், கிருபன் என்று உளான்.
28
உரை
   

மற்று இவன் சந்தனு மைந்தன் ஏவலால்,
கொற்றவர் அருள் குருகுல குமாரரை
வெற்றி கொள் சிலையும், வெவ் வேலும், வாளமும்,
பற்றலர் வெருவரும்படி பயிற்றினான்.
29
உரை
   

கிருபனிலும் சிறந்த ஒரு குருவை வீடுமன் தேடுதல்

பரிவுடன் இவன் படை பயிற்ற, பின்னரும்,
குருபதி வேறு ஒரு குருவைத் தேடினான்;-
இருள் அற மதி நிலவு எறித்ததாயினும்,
பரிதியை நயக்கும், இப் பரவை ஞாலமே.
30
உரை
   

துரோணன் வரலாறு

பரத நாத வேத பரத்துவாசன் என்பான்,
விரத வேள்விதன்னில், மேனகையால் ஆன
சுரத தாது வீழ்ந்த துரோணகும்பம்தன்னில்,
வரதன் ஒருவன் வந்தான், வசிட்ட முனியை ஒப்பான்.
31
உரை
   


ஈர்-ஏழ் விஞ்சைத் திறனும் ஈன்றோன்தன்பால் எய்தி,
நீர் ஏழ் என்ன யாவும் நிறைந்த கேள்வி நெஞ்சன்,
பார் ஏழ் எண்ணும் படைகள் பரசுராமன்தன்பால்
ஓர் ஏழ் பகலின், உலகுக்கு ஒருவன் என்ன, கற்றான்.

32
உரை
   

வீடுமன் தூதனுப்பித் துரோணனை
வரவழைத்து, எதிர்கொண்டு உபசரித்தல்

வெற்பின் வலிய திண் தோள் வேந்தன் ஏவும் தூதால்,
அற்பின் மிக்க சிந்தை அறம் சால் மொழி அவ் ஆசான்,
கற்பின் பன்னியோடும், கையின் மதலையோடும்,
பொற்பின் அமராவதியே போலும் நகரி புக்கான்.
33
உரை
   

வந்தான் வரதன் எனலும், மந்தாகினியாள் மைந்தன்,
பைந் தார் அசைய எதிர் போய், பணிந்து, பூசை பண்ணி,
சிந்தாசனத்தோடு ஒக்கும் சிங்காசனத்தின் ஏற்றி,
'எந்தாய்! வர நீ, அடியேன் என்ன தவத்தேன்!' என்றான்.
34
உரை
   

வீடுமனுக்குத் துரோணன் வாழ்த்துக்கூறி,
துருபதன் செய்தியை எடுத்துரைத்தல்

மூசி வண்டு மொய்க்கும் முருகு ஆர் செவ்வி மாலை,
வாசி வான் தேர், வெம் போர், மன்னர் மன்னன்தன்னை,
ஏசு இல் கடவுள் வாய்மை இருக்கால் எண் இல் கோடி
ஆசி அன்பால் ஓதி, அருள்செய்து, இருந்த பின்னர்,
35
உரை
   

வேத முனிவன், இருந்த வேத்து முனியை நோக்கி,
பூதம்தன்னில் நிகழ்ந்த புன்மை மொழி ஒன்று உரைப்பான்:
'ஏதம் மெய் பெற்றனைய யாகசேனன் என்பான்,
போதம் இல்லான், என்பால் பூட்டும் நண்பு பூண்டான்;
36
உரை
   

'யானும் அவனும், முறையால், இளையோம் ஆன எல்லை,
பானு நிகர் தொல் அங்கிவேசன் பாதம் பணிந்து,
வானும் மண்ணும் வியக்க, மற வெம் படைகள் கற்று,
தானும் வல்லன் ஆகி, தன்போல் என்னை வைத்தான்.
37
உரை
   

'பின்னை, இரவும் பகலும், பிரியேம் ஆகித் திரிய,
தன்னை அடைந்த நண்பின் தகவால் மிக ஆதரியா,
'என் ஐ வானம் எய்தி, யானே இறைவன்ஆனால்,
உன்னை ஆள வைப்பேன், உலகில் பாதி' என்றான்.
38
உரை
   

'நன்று, நன்று! உன் வாய்மை, நன்று ஆம் நண்புக்கு இனியாய்!'
என்று போந்து, நானும் இயன்ற தவத்தின் இருந்தேன்;
வென்று கொண்ட புவியை வேந்தன் மகவுக்கு அளித்து,
சென்று, வானம் புகுந்தான்; சிறுவன் தலைவன் ஆனான்.
39
உரை
   

'தனத்தில் ஆசை இன்றி, 'தவமே தனம்' என்று எண்ணி,
வனத்தில் உண்டி கொண்டே, மகிழ்வுற்று, ஒரு சார் வைகி,
சனத்தில் அருளால், இல் வாழ் தருமம் தவறாவண்ணம்
இனத்தில் மிக்க கிருபற்கு இளையாள் இவளை வேட்டேன்.
40
உரை
   

'கந்த மகவை ஈன்ற காளகண்டன் அருளால்,
வந்த மகவு இம் மகவும், வறுமை வளர, வளர்ந்தான்;
இந்த மகவும் ஐஆண்டு இளமை அறியாது; எனலால்,
தந்த மகவை நோக்கி, தாயும் பெருகத் தளர்ந்தாள்.
41
உரை
   

'மாவின் பாலே அன்றி, மரபுக்கு உரிய மைந்தன்,
ஆவின் பால் கண்டு அறியான்; அதனால் வருந்தி, அந்தக்
கோவின்பால் எய்துதலும், கோமான், 'யார் நீ?' என்ன,
நாவின்பாலால், நடுங்கி, 'நான் உன் நண்பன்' என்றேன்.
42
உரை
   


' 'மன்னன் யான்; நீ முனிவன்; மரபால் எனக்கும் உனக்கும்
என்ன நண்பு உண்டு?' என்ன ஏசி, நகைசெய்து, இகழ்ந்தான்;
அன்ன துருபன்தன்னை அவையில் அரசர் கேட்ப,
'சொன்ன வாய்மை நீயே சோர்ந்தாய்; யானோ சோரேன்;
43
உரை
   

' 'புகன்றபடி நீ ஆளும் புவியும் பாதி கொள்வேன்;
இகன்ற சமரில் உன்னை இரதத்துடனே கவர்வேன்;
அகன்ற மெய்ம்மை உடையாய்! அறிதி' என்றேன்' என்று,
சுகன்தன் ஞானம் பெற்ற துரோணன் சொல்லக் கேட்டான்.
44
உரை
   

கேட்ட வீடுமன், குருகுலக் குமரரைக் காட்டி,' நீ
இவர்க்குப் படைக்கலப் பயிற்சி அளித்து, உன்
வஞ்சினமும் முடி' என்று கூறி, துரோணனுக்கு
அரசர்க்கு உரிய வரிசைகள் அளித்தல்

கேட்ட அரசன் அழைக்க, கிருபனுடன் வந்து இறைஞ்சும்,
பூட்டு வரி வில் தடக் கைப் புதல்வர் புதல்வர்தம்மைக்
காட்டி, 'நீயே இவரைக் கடிதில் படைமைக் கல்வி
மூட்டி, நின் வஞ்சினமும் முடித்தி' என்று மொழிந்தான்.
45
உரை
   

'முனி நீ, ஐயா! இதற்கு முன்னம்; இன்று முதலா,
இனி, இவ் உலகுக்கு அரசாய், எம்மில் ஒருவன் ஆகி,
குனி வில் வலியால் அமரும் கோடி' என்று கொடுத்தான்-
பனி வெண் குடையும், நிருபற்கு உரிய வரிசை பலவும்.
46
உரை
   

துரோணனிடம் குமாரர்கள் படைக்கலப் பயிற்சி பெறுதல்

அன்று முதலாக வரி வெஞ் சிலை முதல் படைகள் ஆனவை
                                               அனைத்தும், அடைவே,
தொன்று படு நூல் முறையின், மறையினொடு, உதிட்டிர சுயோதனர்கள்
                                               ஆதி எவரும்,
ஒன்றிய துரோணன் அருளாலும், வலியாலும், முயல் உணர்வு
                                               உடைமையாலும், முதலே
நின்ற குறையாலும், ஒருவர்க்கு ஒருவர் கல்வியின் நிரம்பினர்-
                                               வரம்பு இல் நிதியோர்.
47
உரை
   

விசயன் வித்தையில் சிறந்து, குருவின் அன்பிற்கு உரியவனாதல்

'வெஞ் சிலையினால் இவன் இராகவனை ஒக்கும்' என விசயன்
                                               விசயத்தின் மிகவே,
எஞ்சிய குமாரர்கள் பொறாமையின் மிகுத்தனர்கள், இரவி எதிர்
                                               மின்மினிகள்போல்;
அம் சொல் முனிதானும், இவன்மேல், எவரினும் பெருக
                                               அன்புடையன் ஆகி, அகலான்;-
நெஞ்சு உற அருங் கலைகள் கற்குமவர்தம் அளவில் நேயம்
                                               நிகழாதவர்கள் யார்?
48
உரை
   

வில் வித்தையில் அருச்சுனனை ஒத்த ஏகலைவன் துரோணனுக்குத் தக்கிணை வழங்கிய வரலாறு

ஏகலைவன் என்று ஒரு கிராதன், முனியைத் தனி இறைஞ்சி, இவன்
                                               ஏவலின் வழான்-
ஆகலை அடைந்து, மிகு பத்தியொடு, நாள்தொறும் அருச்சுனனை
                                               ஒத்து வருவான்,
மேகலை நெடுங் கடல் வளைந்த தரணிக்கண் ஒரு வில்லி என
                                               வின்மை உடையான்,
மா கலை நிறைந்து, குரு தக்கிணை வலக்கையினில் வல் விரல்
                                               வழங்கியுளனால்.
49
உரை
   

விசயனின் வில் திறம்

அங்குலிகம் ஒன்று புனல் ஆழ்தரு கிணற்றில் விழ, அந்த முனி,
                                               'தேடுமின்' என,
புங்கமொடு புங்கம் உற எய்து, இவன் எடுத்தமை புகன்று, அருகு
                                               நின்றவரை, 'நீர்
இங்கு இதன் இலைத் தொகைகள் யாவும் உருவப் பகழி ஏவுமின்'
                                               எனாமுன், விசயன்,
துங்க வில் வளைத்து, ஒரு கணத்தினில் வடத்து இலை துளைத்தனன்,
                                               இலக்கு இல் தொடையால்.
50
உரை
   

அவனுக்குச் சிறந்த அம்பு அளித்தலும்

'முத்தி முனி தாள் இணையை, நீர் படி தடந் துறையில்,
                                               முதலை கவர்வுற்றது' எனலும்,
சித்திர வில் வீரர் பலரும் தம வெறுங் கையொடு சென்று,
                                               அருகு நின்று விடவே,
பத்தியின் விரைந்து, பொதுவே இபம் அழைக்க ஒரு பறவைமிசை
                                               வந்த நெடுமால்
கைத் திகிரிபோல் கணையின், விசயன், அதனைப் பழைய கார்
                                               முதலையின் துணிசெய்தான்.

51
உரை
   

ஒரு தனுவினால், இதயம் மகிழ் குருவினுக்கு இவனும் உயிர்
                                               வரி சிலைக்
குருவும், இவனுக்கு நிலையாலும் மறையாலும் வலி கூர் பகழி
                                               ஒன்று உதவினான்;
இருவரும் நயந்து, அருளும் விநயமும் மிகுந்தனர்கள், இன் உயிரும்
                                               மனமும் என;-மேல்
மருவி வரு நல்வினை வயத்தின் வழி வந்த பயன் மற்று
                                               ஒருவருக்கு வருமோ?
52
உரை
   


துரோணன் குமரரின் கல்வித்திறத்தை
அனைவர்க்கும் காட்டுதல்

சிலைக் குரு, 'விறல் குருகுலக் குமரருக்கு வரு சிரம நிலை காண்மின்'
                                               எனவே,
அலைத் தலை நிலா எழு சரித் புதல்வனுக்கும் நல் அறக்
                                               கடவுளுக்கும் உரையா,
நிலைப்படு விசால மணி அணி திகழ் அரங்கின்மிசை நிகழ் பலி
                                               கொடுத்து, அரியுடன்
கலைப்புரவி ஊர் திருவையும் தொழுது, புக்கனன் -அகத்து உணர்வு
                                               மிக்க கலையோன்.
53
உரை
   

புரியில் அறிவோர், சனபதத்தில் அறிவோர், புவி புரக்குமவர்தம்மில்
                                               அறிவோர்,
வரி பட வயங்கு கொடி மஞ்ச விதம் எங்கணும் வனப்பு உற இருந்த
                                               பொழுதில்,
தெரிவுறு விமானமனைதோறும் உறை தேவர் பலர், சித்தர், முதலோர்,
                                               பரனொடும்
கரிய நெடுமால், பிரமன், இந்திரன், முதல் பலர் கலந்த அகல்
                                               வான் நிகருமே.
54
உரை
   

ஆற்றின் வழுவா மனுமுறைத் தருமன் மைந்தன் முதல் ஆகிய
                                               குமாரர் அடைவே,
போற்றி அடல் ஆசிரியர் இருவரையும், அன்பின் உயர் பூசை பல
                                               செய்து, புரி நாண்
ஏற்றிய சராசனம் வணக்கி, வடி வாளியின் இலக்கம்அவை
                                               நாலு வகையால்,
மாற்றினர், பிளந்து-பெரு வண்மை, சிறு நுண்மை, சலம், நிச்சலம்,
                                               எனச் சொல் வகையே.
55
உரை
   

ஆயுதம் அநேக விதம் ஆனவை எனைப் பலவும் அழகுற
                                               இயற்றியும், மதம்
பாயும் இபம், மா இரதம், வாசி, ஒருவர்க்கு ஒருவர் பல கதி
                                               வரக் கடவியும்,
சேய் உயரும் மாட நிலை தெற்றியின் இருந்தவர் தெளிந்து உளம்
                                               மகிழ்ந்து, 'நவை தீர்
வாயு கதி அல்லது மனித்தர் கதி அல்ல!' என வல்லன
                                               புரிந்தனர் அரோ.
56
உரை
   

துரியோதனனும் வீமனும் உட்பகை கொண்டு கதைப்போர்
புரிய, அசுவத்தாமன் விலக்குதல்

ஒத்த வலியோர் வலியும், ஒத்த திறலோர் திறலும், ஒத்த வினையோர்
                                               வினையும், வன்
சித்தம் அனல் மூள முக அம்புயம் மலர்ந்து, அரசன் மகனும்,
                                               அனிலன் சிறுவனும்,
கைத்தலம் அமர்ந்த கதை கொண்டு எதிர் நடந்தனர்-களிப்புடன்,
                                               இரண்டு தறுகண்
மத்த கயம், வேரொடு மராமரம் எடுத்து, அமர் மலைந்தனைய
                                               கோல மறவோர்.
57
உரை
   


தண்டின் முனை ஒன்றினுடன் ஒன்று உரும் எறிந்தனைய
                                               தன்மையொடு உடற்ற, விலகு
மண்டல விதங்களும் வியப்புற நடந்தபின், மறத்தொடு செயிர்த்து,
                                               வயிரம்
கொண்டு, இருவரும் பொருதல் உன்னுபொழுதத்து, அவர் குறிப்பினை
                                               இமைப்பு அளவையில்
கண்டு, குருவின் சிறுவன், வன்பொடு விலக்கினன், மெய் கல்வி
                                               கரை கண்ட பெரியோன்.

58
உரை
   

மன்னவர் மதிக்கும்வகை விசயன்
வில்-திறமையைக் காட்டுதல்

மீளி மகவான் மதலை ஆயுதபுரோகிதன் விலோசனம் உணர்ந்து,
                                               அவன் மலர்த்
தாளில் முடி வைத்து, எதிர் தரித்தனன், இடங்கை வரி சாப
                                               கவசத்தினன், இபம்,
யாளி, அரவம், கருடன், வன்னி, சலிலம், திமிரம், இரவி,
                                               இவையே கடவுளாம்
வாளியின் வினோதம் உற எய்தனன், இருந்த முடி மன்னவர்
                                               மதிக்கும் வகையே.
59
உரை
   

அப்பொழுது, கன்னன் சிங்கநாதத்துடன் எழுந்து,
தன் வில் திறம் காட்டுதல்

மங்குல் சூழ் விமான முன்றில் மஞ்ச கோடி திகழவே,
அம் கண் வான மீனம் என்ன, அவை இருந்த அரசர்முன்,
சிங்கம் என்னுமாறு எழுந்து, சிங்கநாதமும் செய்தான்-
பங்கசாத பரிமளம் கொள் பானுராச சூனுவே.
60
உரை
   


சிந்தை அன்புடன் பணிந்து, தேசிகேசன் அருளினால்
வந்து, வெஞ் சராசனம் வணக்கி, வீர வாளியால்,
இந்திரன் குமாரன் முன் யாது யாது இயற்றினான்,
அந்த அந்த நிலையும் ஏவும் அவனின் விஞ்சல் ஆயினான்.

61
உரை
   

அது கண்டு யாவரும் வியக்க, விசயன் நாணுதல்

கணைகள் போய் இலக்கு அடைந்த உறுதி கண்டு, கண் களித்து,
'இணை இல் வீரன்' என்றது, அன்று இருந்த ராச மண்டலம்;
பிணையல் மாலை விசயன் அண்ணல் பெற்றி பற்றி நாணினான்,
துணைவரோடு வரி கழல் சுயோதனன் களிக்கவே.
62
உரை
   

கன்னன் விசயனைப் போருக்கு அழைத்தலும்,
துரியோதனன் கன்னனைத் தழுவிப் பாராட்டுதலும்

மருவ நின்று அருக்கன் மைந்தன், வானநாடன் மகனை, 'நாம்
இருவரும் தனுக் கொள் போர் இயற்ற வம்மின்' என்றலும்,
குருகுலம் தழைக்க வந்த குமரன், அன்பு கூரவே
உருகி, 'நன்று!' எனத் தழீஇ, உகந்து, உளம் தருக்கினான்.
63
உரை
   

விசயனும் கன்னனும் வெகுண்டு பேசுதல்

அனந்தரம், 'பொரற்கு நீகொல் அந்தரம் எனக்கு?' எனா,
தனஞ்சயன் செயிர்த்தல் கண்டு, தபனன் மைந்தன் மீளவும்,
'முனைந்த போரின் முடி துணித்து, உன் முக சரோருகத்தினால்,
சினம் தணிந்து, அரங்க பூசை செய்வன்' என்று சீறினான்.
64
உரை
   

'சூதன் மகனான கன்னன் வெகுண்டு உரைத்தது
தக்கது அன்று' என்று கிருபன் கூற, துரியோதனன்,
'சாதிபேதம் கருதுதல் தகாது' எனல்

அதிருகின்ற எழிலிபோல் அருச்சுனன்தனைக் குறித்து
எதிருகின்ற வன்மை கண்டு, யாவரும் திகைக்கவே,
முதிருகின்ற மெய்யன் ஆகி முன் இருந்த கௌதமன்,
உதிருகின்ற அமுத விந்து ஒக்கும் என்ன, உரைசெய்வான்:
65
உரை
   

'சூதன் மைந்தன் வேலை ஏழும் சூழும் மேதினிக்கு எலாம்
நாதன் மைந்தனுடன் வெகுண்டு நவிலுதற்கு நண்ணுமோ?
ஏதம் உண்டு சால' என்ன, ராசராசன் இகலி, அக்
கோதமன்தனக்கு உளம் கொதிக்குமாறு கூறுவான்:
66
உரை
   

'கற்றவர்க்கும், நலம் நிறைந்த கன்னியர்க்கும், வண்மை கை
உற்றவர்க்கும், வீரர் என்று உயர்ந்தவர்க்கும், வாழ்வுடைக்
கொற்றவர்க்கும், உண்மையான கோது இல் ஞான சரிதராம்
நற்றவர்க்கும், ஒன்று சாதி; நன்மை தீமை இல்லையால்.
67
உரை
   

'அரி பிறந்தது, அன்று, தூணில்; அரனும் வேயில் ஆயினான்;
பரவை உண்ட முனியும், இப் பரத்துவாசன் மைந்தனும்,
ஒருவயின்கண், முன் பிறந்தது; ஒண் சரத்தின் அல்லவோ,
அரிய வென்றி முருகவேளும் அடிகளும் பிறந்ததே?'
68
உரை
   

துரியோதனன் கன்னனை அங்கதேசத்துக்கு அரசனாக்கி, தன்
ஆசனத்தில் அவனையும் ஒருங்கு இருக்கச் செய்தல்

என்று நல்ல உரை எடுத்து இயம்பி, ஏனை இழிவினோடு
ஒன்றி நின்ற ஆடகத்தை ஓட வைக்குமாறுபோல்,
அன்று சூதன் மதலைதன்னை அங்க ராசன் ஆக்கினான்,
மின் தயங்கு முடி கவித்து, வேந்து எலாம் வியக்கவே.
69
உரை
   

தான் இருந்த அரிமுகம் செய் தாள் சுமந்த தவிசின்மேல்,
ஊன் இருந்த படையினானை உடன் இருத்தி, வண்டு சூழ்
தேன் இருந்த மாலை வாகு சிகரம்மீது, தெண் திரைக்
கான் இருந்த மண்டலம், கருத்தினால், இருத்தினான்.
70
உரை
   


தவனன் மைந்தனும் சுயோதனனும் இசைந்து, தனதனும்
சிவனும் என்ன நண்பு கொண்டு, திறலுடன் சிறந்துளார்;
பவனன், உம்பர் நாயகன், பயந்த வீரர் அஞ்சவே,
'அவனி எங்கும் நமது' எனக் கொள் பெருமிதத்தர் ஆயினார்.

71
உரை
   

துரோணன் குருகுலக் குமரரின் திறம் கண்டு மகிழ்ந்து,
தன் பகைவன் யாகசேனனை வென்று வருதலே
தனக்குத் தரும் குருதக்கிணை எனல்

ஆன காலை, 'எண்ணுகின்ற ஆயுதங்கள் யாவையும்,
யானை, வாசி, இரதம், ஆன யானம் உள்ள யாவையும்,
சேனையோடு தெவ்வரைச் செகுக்க வல்ல வீரமும்,
மான வீரர் வல்லர்' என்று, மறைவலாளன் மகிழ்வுறா,
72
உரை
   


'வம்மின், ஆதி குருகுலம் தழைக்க வந்த மைந்தர்காள்!
தம்மின் நாளையே, எமக்கு அளிக்க நின்ற தக்கிணை;
எம் இனான் ஒருத்தன், வேறு, யாகசேனன் என்று உளான்;
நும்மின் நாடி, அவனை இம்பர் நோதல் செய்து, கொணர்மினே.'

73
உரை
   

குருவின் விருப்பத்தை நிறைவேற்ற, குமரர்கள் பாஞ்சால நாடு
சென்று முற்றுகையிடுதல்

என்று தம் சிலைப் புரோகிதன் கனன்று இயம்பவே,
அன்று அவன் பதம் பணிந்து, அளித்த சொல் தலைக்கொளா,
வென்றி நீடு படைகளோடும், விரவும் அங்கம் நாலொடும்,
சென்று, தங்கள் நாடு அகன்று, தெவ்வு நாடு குறுகினார்.
74
உரை
   

ஆளி மொய்ம்பர் அம் முனைக்கண் ஆன போது, அனீகினித்
தூளி கண் புதைத்த, சென்று; செவி புதைத்த, துவனி போய்;
ஒளி கொண்ட செம் பொன் வெற்பின் உடல் புதைத்த எழிலிபோல்,
வாளி கொண்ட விருதர், மா மதில் புறம் புதைக்கவே.
75
உரை
   

போரில் துரியோதனாதியர் பின்னிட, விசயன்
துருபதனை அகப்படுத்தி, தனது தேரிலே கட்டி,
குருவின் முன்னர்க் கொண்டுவருதல்

வளைத்த சேனை, யானை, வாசி, வாயில் நின்று குமுறவே,
உளைத்து எழுந்து முழையை விட்டு உடன்ற சிங்க ஏறுபோல்,
திளைத்த தன் பதாதியோடு மோக யாகசேனனும்,
இளைத்த நெஞ்சன் அன்றி, நீடு புரிசை வாயில் எய்தினான்.
76
உரை
   

சோமகர்க்கும், முடுகு சேனை சூழ வந்த குருகுலக்
கோமகர்க்கும், வெஞ் சமர் விளைந்தது, ஆண்மை கூரவே;
பூமகற்கும் மிக்க மா முனிக்கு வாய்மை பொய்த்த அம்
மா மகற்கும், விசயனுக்கும், மன்னு போர் வயங்கவே,
77
உரை
   

தூறு கொண்டு கணை பொழிந்து சோமகேசர் பொருதலால்,
நூறு கொண்ட குமரர் தங்கள் நகரி மீள நோக்கினார்;
மாறு கொண்டு விசயன் வீசு வண்ண வாளி வலையினால்,
வீறு கொண்டு எதிர்ந்த மன் விலங்கர் ஈடுபட்டதே.
78
உரை
   

தகப் படும் சராசனத் தனஞ்சயன் கை வாள் வெரீஇ,
அகப்படும் தராதிபன்தன் அற்ற வில்லின் நாணினால்,
மிகப் படும் தடங் கொள் தேர்மிசைப் பிணித்து, விசையுடன்,
நகப்படும் செயற்கை செய்து, குருவின் முன்னர் நணுகினான்.
79
உரை
   

யாகசேனனைத் துரோணன் எள்ளி உரையாடி,
அவனுக்கு உயிர் வாழ்வும் பாதி அரசும் உதவுதல்

முறுவல் கொண்டு, கண்ட சாப முனியும், 'நாண, எம்மை, நீ
உறுவது ஒன்றும் உணர்கலாது, உரைத்த புன் சொல் அறிதியே?
மறு இல் அந்தணாளன் யானும்; மன்னன் நீயும்; வாசவன்
சிறுவன் வென்று உனைப் பிணித்த சிறுமை என்ன பெருமையோ?
80
உரை
   


'அன்று எனக்கு நீ இசைந்த அவனி பாதி அமையும்; மற்று
இன்று, உனக்கு நின்ற பாதி யான் வரைந்து தருகுவன்;
குன்று எனக் குவிந்து இலங்கு கொற்ற வாகு வீரனே!
உன்தனக்கு வேண்டும்' என்ன, உயிரும் வாழ்வும் உதவினான்.

81
உரை
   

யாகசேனன் அவமானத்தோடு ஊருக்குத் திரும்புதல்

புயங்கம் பருகி உமிழ் மதியம் போல்வான், மீண்டு, பூசுரன்தன்
வயங்கும் சுருதி வாய்மையினால் மன்னும் குருக்கள் பதி நீங்கி,
தயங்கும் சிலைக் கை வாள் விசயன் சயமும், பிறர் முன் தான்
                                               அகப்பட்டு
உயங்கும் செயலும், நினைந்து நினைந்து, உள்ளம் சுடப் போய்
                                               ஊர் சேர்ந்தான்.
82
உரை
   


துரோணனைக் கொல்ல ஒரு மகனையும், விசயனை
மணக்க ஒரு மகளையும், பெறவேண்டி, யாகசேனன்
முனிவரரை வேண்டுதல்

மறுகில் பணிலம் தவழ் பழன வள நாடு உடையான், எதிர் வணங்கி,
முறுகிப் புரி வெங் கலைக்கோட்டுமுனியே போலும் முனிவரரை,
தறுகண் குருவின் தலை துணிக்கத் தக ஓர் மகவும்,
                                               தனஞ்சயன் தோள்
உறுகைக்கு ஒரு பூங் கன்னியையும், பெறுவான் வேண்டி
                                               உற்று இரந்தான்.
83
உரை
   

உபயாசனும், யாசனும் துருபதனுக்காகச் செய்த வேள்வியில்
முதலில் திட்டத்துய்மன் தோன்றுதல்

ஆறுமுகனைப் பயந்த நதி அலையால் குளிர்வது ஒரு கானில்,
ஈறு இல் தவத்தோர் உபயாசன், யாசன், எனும் பேர் இருவோரும்,
கூறும் முறையில் சடங்கு இயற்றி, கோவின் வழக்கப் பெரு வேள்வி,
நூறுமகத்தோன் நிகர் அரசை நோன்மைக்கு இசைய, புரிவித்தார்.
84
உரை
   

புரிந்த மகப்பேற்று அழல் வேள்விப் பொன்றா ஓமப்
                                               பொருள் மிச்சில்,
பரிந்து, விபுதர் அமுது ஏய்ப்பப் பைம் பொற் கலத்தில்
                                               நிறைத்து, ஆங்குத்
தெரிந்த மணிப் பூணவன் தேவிக்கு அளிக்க, தீண்டாள் ஆகியபின்,
சொரிந்து கனலின், உபயாசன், இமைப்பில் சுதனைத் தோற்றுவித்தான்.
85
5முதற் பாகம்502வாரணாதச் சருக்கம்
உரை
   

வலையம் பிறழ, முடி தயங்க, மணிக் குண்டலம் பேர் அழகு எறிப்ப,
சிலையும் கையும், மெய்யும் வயம் திகழ் போர் வயிரக் கவசமுமாய்,
கொலை வெஞ் சிங்கக் குருளை பொலங் குன்றின்புறத்துக்
                                               குதிப்பதுபோல்,
தலைவன் களிக்க, தடந் தேர்மேல் தனயன் ஒருவன்
                                               தலைப்பட்டான்.
86
உரை
   

தேரோடு அருக்கன் அருண மணிச் சிமயத்து உதிப்ப, செவ்வியுடன்
நீர் ஓடையில் செந்தாமரைகள் நிறம் பெற்று அலர்ந்து
                                               நின்றனபோல்,
வீரோதயன் வந்து உதிப்பளவில், மேன்மேல் மகிழ்ந்து,
                                               மெய் சிலிர்த்து,
பாரோர் கண்கள் களித்தனவால், பார்க்கும்தோறும் பரிவுற்றே.
87
உரை
   

சங்கச் சங்கம் மிக முழங்க, சாந்தும் புழுகும் எறிந்து ஆர்த்து,
துங்கக் கொடியும் தோரணமும் தொடையும் பரப்பி, சோமகன் நாடு
அம் கண் சயந்தன் அவதரித்த அமராவதிபோல் ஆர்வம் எழ,
திங்கட் குழவி உற்பவித்த திசை போன்றன, எண் திசை எல்லாம்.
88
உரை
   

பின்னர், திரௌபதி தீயில் தோன்றுதல்

பின்னும், கடவுள் உபயாசன் பெருந் தீப்புறத்து, சுருவையினால்,
மன்னும் கடல் ஆர் அமுது என்ன வழங்கு சுருதி அவி நலத்தால்,
மின்னும் கொடியும் நிகர் மருங்குல், வேய்த்தோள், முல்லை
                                               வெண் முறுவல்
பொன்னும் பிறந்தாள், கோகனகப் பூமீது எழுந்த பொன்
                                               போல்வாள்.
89
உரை
   

வேள்விக் களத்தில் எழுந்த அசரீரி வாக்கு்

'மண்மேல் ஒருத்தி அரக்கர் குலம் மாளப் பிறந்தாள்;
                                               வாமன் நுதல்
கண்மேல், இன்றும் இவள் பிறந்தாள், கழல் காவலர்தம்
                                               குலம் முடிப்பான்;
எண் மேல் என்கொல் இனி?' என்று, ஆங்கு எவரும் கேட்ப,
                                               ஒரு வார்த்தை
விண்மேல் எழுந்தது, அவன் புரிந்த வேள்விக் களத்தினிடை
                                               அம்மா!
90
உரை
   


மகப் பெற்ற துருபதனின் பெரு மகிழ்ச்சி

முன் தோன்றிய தன் குல முதலால் முரண் போர் முனிக்கு
                                               முடிவும், அவன்
பின் தோன்றிய அக் கன்னிகையால் விசயன் தனக்குப்
                                               பெரு நலமும்,
உற்று ஓர்ந்து, உள்ளம் மிகத் தருக்கி, உவந்து ஆங்கு
                                               அமைந்தான்;-உயர் மகத்தால்
பெற்றோன் பெற்ற பேறு, மகப் பெற்றார் தம்மில் பெற்றார் யார்?
91
உரை
   

திட்டத்துய்மன் துரோணரிடம் வில் வித்தை பெறுதல்

கரணம் மறு அற்று இலங்கு திறல் கலைசொல்பவன்பால்,
                                               கனல் பயந்தோன்,
சரண மலர் தன் தலைக் கொண்டு, 'தனுநூல் எனக்குத் தருக!'
                                               என்றான்;
'மரணம், இவனால் தனக்கு' என்பது உணர்ந்தும், குருவும் மறாது,                                                அளித்தான்;-
அரணியிடத்தில் செறிந்து அன்றோ அதனைச் செகுப்பது அழல்
                                               அம்மா!
92
உரை
   


திருதராட்டிரன் முதலியோர் தருமனை நன்கு மதித்தல்

இவ்வாறு அமைந்து, ஆங்கு ஐவருடன் ஈர்-ஐம்பதின்மர் நனி வளர,
மை வான் மீனின் பல் கோடி மன் வந்து இறைஞ்சிப் புடை சூழ,
தெவ் ஆறிய வெம் பெருஞ் சேனைத் திருதராட்டிரனும்,                                                தம்பியும், 'மற்று
ஒவ்வார் இவற்கு' என்று, உதிட்டிரனை ஒழுக்கத்து அழகால்
                                               உட்கொண்டார்.
93
உரை
   

பூதி நலம் திகழ் பூரு குலத்திற்கு
ஆதிபன் ஆகி, அநங்கனை வென்றோன்,
'நீதியினாலும் நிறைந்தனன், நுண் நூல்
ஓதிய கேள்வி உதிட்டிரன்' என்னா,
94
உரை
   

வீடுமன் தருமனுக்கு இளவரசு முடி சூட்டுதல்

மைந்தருடன் செயல் வழு அற எண்ணி,
குந்தி பயந்தருள் குரிசிலை, 'இவனே
இந்த நிலக்கு இனி இளவரசு' என்று, ஆங்கு
அம் தண் மதிக்குடை முடியொடு அளித்தான்.
95
உரை
   

சந்தனுவின் திரு மரபு தயங்க,
செந் திரு மேவரு சிறுவனும், அப்போது,
இந்துவொடு ஆதபன் இருவரும் அன்பால்
வந்து தழீஇ, மெய் வயங்கினன் ஒத்தான்.
96
உரை
   

துரியோதனன் பொறாமை கொண்டு, தந்தையோடு உரையாடுதல்

துன்மதியான சுயோதனன்-மாழ்கி,
தன் மதியால், அருள் தந்தையை எய்தி,
புன் மதி ஆம் உரை சிற்சில் புகன்றான்-
மன் மதி யாதும் மதித்தல் இலாதான்.
97
உரை
   

'உன் பதம் யாவும் உதிட்டிரனுக்கே
மன்பதையோடு வழங்கினை, எந்தாய்!
அன்புஅது இலா அவன் அனுசர் மதத்தால்,
என் பதம் அம்ம இறந்ததை இன்றே!'
98
உரை
   

என்றலும், மைந்தனை, 'இந்து குலத்தோய்!
நின்றிலையால், மனு நீதியில், ஐயா!
பொன்றிய எம்பி பதம் புதல்வர்க்கே
அன்றி, நுமக்கு அரசு ஆளுதல் ஆமோ?
99
உரை
   

'நீதி இலா நெறி எண்ணினை, நீ; இங்கு
ஓதிய வாய்மையின் உறு பொருள் இன்றால்;
ஆதிபர் ஆயவர் ஐவரும் நீரும்
மேதினி ஆளுதல் வேத்து இயல்பு' என்றான்.
100
உரை
   


'இகல் மிகு கன்னனும், என் இளையோரும்,
சகுனியும், உண்டு, தகும் துணை; நெஞ்சில்
உகவை இலாரொடு உறேன் இனி' என்றே,
முகம் முகுரம் புரை முதலொடு சொன்னான்.

101
உரை
   

மைந்தன் உரையால் மனம் மாறுபட்ட திருதராட்டிரன், விதுரனுக்கும் வீடுமனுக்கும் தன் புதல்வர்களின் போக்கைக் கூறுதல்

பாதகன் அன்று பகர்ந்த மொழிக்கே
பேதகன் ஆன பிதா மருள் எய்தா,
மேதக வாழ்வுறு வில் விதுரற்கும்,
நா தகு நல் உரை நதிமகனுக்கும்,
102
உரை
   


நிகழ்ந்தது உணர்ந்து, குந்தி அழுது அரற்றுதல்

'ஈண்டு இனி என் செய்வது? எண்ணுமின்!-இங்ஙன்
பாண்டவரோடு பயின்று உறையாது,
தூண்டு பரித் துரியோதனன் முதலோர்
பூண்டனர் வெம் பகை, வாழ்வு பொறாதார்.
103
உரை
   

'ஒரு திறன் இந் நகர் உறைதரின் ஒன்றாது,
இரு திறன் மைந்தரும் இகலுவர், மேன்மேல்;
அருகு அணுகாவகை அகல இருந்தால்,
மறுவுறும் நண்பு வளர்ந்திடும்' என்றே,
104
உரை
   

விதுர வீடுமர்களின் மறுமொழி

இம் மொழி கூறலும், இருவரும் எண்ணி,
'தெம் முறை ஆயினர், சிறு பருவத்தே;
எம் உரை கொள்கலர்; இனி அவர் மதி ஏது,
அம் மதியே மதி ஆகுவது' என்றார்.
105
உரை
   

திருதராட்டிரனும் துரியோதனனும் புரோசனன் என்னும் மந்திரியுடன் தனி இடத்திலிருந்து, ஐவரையும் கொல்லும் வழி நாடுதல்

விதுரனும், வார் கழல் வீடுமனும், தம்
இதயம் நிகழ்ந்தது இயம்பிய பின்னர்,
பொதுமை இலாத புரோசனன் என்னும்
மதியுடை மந்திரி, 'வருக!' என வந்தான்.
106
உரை
   

வந்த அமைச்சனும், மைந்தனும், மற்று அத்
தந்தையும், அங்கு ஒரு தனிவயின் எய்தி,
சிந்தனை செய்தனர், தீமை மனத்தோர்-
குந்தி மகார் உயிர் கோடல் புரிந்தே.
107
உரை
   

வாரணாவத நகரத்திற்குப் பாண்டவரை அனுப்புமாறு தந்தையைத் துரியோதனன் வேண்டுதல்

'ஆரணாதிபர் ஆரும் புகழ்வது,
நாரணாதியர் நண்ணும் சிறப்பது,
தோரணாதி துலங்கு பொன் கோபுர
வாரணாவத மா நகர்; அங்கணே,
108
உரை
   

'சென்று இருக்கத் திருவாய் மலர்க!' என,
ஒன்றுபட்டு, மகன் தொழுது ஓதினான்;
அன்றுதொட்டு உயிர் அன்ன அமைச்சனால்,
நன்று பட்டது, அந் நல் நகர் எங்குமே.
109
உரை
   

அமைச்சன் புரோசனன் வாரணாவதத்தை அலங்கரித்தல்

சிற்ப நூலில் திருந்திய மாக்களால்,
பொற்பு அமைந்து பொலிந்தது, அப் பொன் நகர் -
கற்பகாடவி அல்லது, கண்டவர்,
'அற்பம்' என்ன, அமராவதியையே.
110
உரை
   


திருதராட்டிரன் பாண்டவரை வாரணாவதம் சென்று
வாழப் பணித்து, புரோசனனையும் அவனுக்கு
மந்திரியாக உடன் அனுப்புதல்


அறத்தின் மைந்தனுக்கு, ஆங்கு ஒரு நாள், அவைப்
புறத்து இருந்து, புகன்றனன், காவலன்-
'திறத்து நின் இளையோரொடும் சென்று, தோள்
மறத்தினால், தனி வாழுதி' என்னவே.
111
உரை
   

கண்ணன் முதலியோர் குந்தியைக் கண்டு, பூமியை ஆளும் முறையையும் கருதுதல்

புகன்ற கேள்விப் புரோசனன்தன்னை, 'இம்
மகன்தனக்கு நீ மந்திரி ஆகியே,
இகன்றவர்ச் செற்று, இனியோர்க்கு இனிமை செய்து,
அகன்ற ஞாலம் இவன் வழி ஆக்குவாய்.'
112
உரை
   


புரோசனன் பாண்டவர்களை வாரணாவதத்திற்கு
அழைத்துப் போதல்

என்ன, ஆங்கண் இறைஞ்சி, அனந்தரம்
சொன்ன சொற்படி, சூழ் படை வேண்டுவ
என்னவும் கொண்டு, இளவரசோடும் அப்
பொன் நகர்க் கொடு போயினன் என்பவே.
113
உரை
   

வாரணாவதத்தில் சிவதரிசனம் செய்து, பாண்டவர் தம்
மாளிகை புகுதல்

ஆர மார்புடை ஐவரும், குந்தியும்,
பூர ஞான புரோசன நாமனும்,
சேர வெண் பிறைச் செஞ் சடை வானவன்
வாரணாவதம் சென்று வணங்கினார்.
114
உரை
   

அங்கு அவன்தன் அருள் பெற்று, அமைச்சன் அங்கு
இங்கிதத்தொடு இயற்றிய நீள் கொடி
மங்குல் தோய் மணி மாளிகை எய்தினார்-
சங்கம் விம்ம, முரசம் தழங்கவே.
115
உரை
   

பாண்டவர் அங்கு அரசாளுதல்

ஆவி அன்ன அமைச்சன் மொழிப்படி
மேவி, அத் திசை வேந்தர் குழாம் தொழ,
கோவின் ஆணை நடத்தி, குவலயத்
தேவி மெய் களிக்க, சிறந்தார்அரோ.
116
உரை
   

ஐவரும் அரக்கு மாளிகையைக் கவனித்து, புரோசனன்
மீது ஐயுறவு கொள்ளுதல்

மன்னர் ஐவரும் வாரணாவதம்தனில் மருவி,
துன்னலார் தொழத் தொல் நிலம் புரந்திடும் நாளில்,
பின்ன நெஞ்சுடைப் புரோசனன் பேது உறு மதியால்,
முன்னமே இனிது அமைத்திடும் மனைச் செயல் முன்னா.
117
உரை
   

'மெழுகினால் நமக்கு ஆலயம் வகுத்ததும் விரகே;
ஒழுகுகின்ற தன் ஒழுக்கமும் வஞ்சனை ஒழுக்கே;
எழு கடல் படை யாவையும் இவன் வழியனவே;
தொழுத கையுளும் படை உள; சூழ்ச்சியும் பெரிதால்.
118
உரை
   

'சங்கை உண்டு; இனி, உண்டியும், சாந்தமும், பூணும்,
பொங்கு நுண் இழைத் துகிலும், அம் தாமமும், பூவும்,
இங்கு இவன் பரிந்து இயற்றிய கோடலம்' என்றார்-
கங்கை நீர் தவழ் கழனி சூழ் பழன நாடு உடையார்.
119
உரை
   

சிற்பி ஒருவன் வீமனிடம் வந்து, மாளிகையின்
நிலவறை பற்றிக் கூறி, 'தீங்கு நிகழ்ந்தபோது
அதன்வழித் தப்புக!' என்றல்

ஐயம் உற்று இவர் இருப்புழி, மயனினும் அதிகன்,
சையம் ஒத்த தோள் வலனுடைத் தபதியன் ஒருவன்,
வையம் முற்றுடை வீமனை ஒரு தனி வணங்கி,
'ஐய! பட்டதை அறிந்தருள், ஆம் முறை!' என்றான்.
120
உரை
   


'நுந்தை ஏவலின், கம்மியர் நூதனமாக
இந்த மா நகர்த் திருமனை இயற்றிடு நாளின்,
வந்த மந்திரி வஞ்சனை அறிந்து, அறன் வடிவாம்
தந்தை என்னையும் ஏவினன், தன்மையின் உணர்ந்தே.

121
உரை
   

'அடியனேனும், மற்றவருடன், அரக்கு மாளிகை இப்
படியினால் இயற்றிய தொழில் பயன் எலாம் குறித்து,
நெடிய கானகத்து அளவும் நீள் நிலவறை நெறி போய்
முடியுமாறு, ஒரு மண்டபம் கோட்டினேன், முழைபோல்.
122
உரை
   


'வேறு ஒருத்தரும் அறிவுறா விரகினால், ஒரு தூண்,
மாறுபட்டு நீ பறிக்கலாம்வகை வழி வகுத்தேன்;
தேறுதற்கு இது தகும் எனத் திருவுளத்து அடக்கி,
ஊறு பட்டபோது எழுந்தருள்க!' எனப் பணிந்து உரைத்தான்.

123
உரை
   

வீமன் சிற்பிக்குப் பரிசு அளித்து, விழிப்புடன் வாழ்ந்து வருதல்

தச்சரில் பெருந் தலைவனுக்கு, உரிமையின், தனங்கள்
பிச்சரின் கொடுத்து, அவன் விடைகொண்டதன் பின்னர்,
அச்சம் அற்று, 'இவன் நம் மனைக்கு அம்மனை வழங்கும்;
நிச்சம்; இன்றுகொல், என்றுகொல்?' என நினைந்து இருந்தான்.
124
உரை
   

பாண்டவர் பகலில் வேட்டையாடி, இரவில் துயில் இன்றி வாழ்தல்

விடவி வன் சினை நெடுங் கொடி தழுவலின் மிடைந்த
அடவி எங்கணும், வேட்டையால், தங்கள் பேர் ஆண்மை
நடவி, நன் பகல் இரவு கண் துயிலலர், நடந்தார்-
புடவி தங்கள் வெண்குடை நிழல் குளிருமா புரப்போர்.
125
உரை
   

புரோசனனுடன் நெருங்கிப் பழகிய பாண்டவர், ஒரு நாள் இரவில், அவனையும் தம் மாளிகையில் துயிலச்செய்தல்

பாந்தளோடு ஒரு மனைவயின் பயில்பவர் போல,
வேந்தர் ஐவரும், மந்திர வலியினால் மிக்கோர்,
காந்து நெஞ்சுடை அமைச்சனைக் கைவிடார் அணுகி,
தாம் தம் மெய் என உயிர் எனத் தனித்தனி சார்ந்தார்.
126
உரை
   

ஆங்கு ஓர் கங்குலின் அழைத்து, நீடு அரசியல் உசாவி,
'ஈங்கு, நீ துயில் வைகுதி, எம்முடன்' என்ன,
பாங்கர் மெல் அணைப் பள்ளியும் பரிவு உற வழங்கி,
தாங்களும் பொலஞ் சேக்கையில் தங்கினர் அன்றே.
127
உரை
   

அரக்குமாளிகைக்கு வீமன் தீ வைத்து, தாயுடனும் சகோதரர்களுடனும் தப்பி, வனம் செல்லுதல்

உணர்வு அறத் துயில் உற்ற போது, அற்றம் அங்கு உணரா,
துணைவரை, 'திருத் தாய் பதம் தொழுக!' எனச் சொல்லி,
அணி கொள் கோயிலைத் தாதை நண்பனுக்கு இரை அளித்தான்-
இணை இலா அமுது உரகர் கோனிடை நுகர்ந்து இருந்தான்.
128
உரை
   

முடியுடைத் தடங் கிரியினை முளி கழைதொறும் உற்று,
அடிநிலத்து உறச் சூழ்வருமாறுபோல், அழலோன்,
கொடி நிரைத்த பொன் கோபுரப் புரிசை சூழ் கோயில்
இடி இடித்தென வெடிபடச் சிரித்து எழுந்து, எரித்தான்.
129
உரை
   

அக் கணத்திடை, அன்னையில் அணுகி, ஆங்கு அவரை,
தொக்க சித்திரத் தூண் அடித் துவாரமே வழியா,
பொக்கெனக் கொடு போய், அகல் வனத்திடைப் புகுந்தான்-
முக் கண் அற்புதன் முனிந்த ஊர் மூவரோடு ஒப்பான்.
130
உரை
   


'குந்தியும் பாண்டவரும் எரிந்து வீழ்ந்தனர்' என்று காலையில் மாளிகையைக் கண்டோர் கூறுதல

புரிந்த தீயினைக் கண்ணின் நீர் அவித்திடப் புகுந்து,
பரிந்த நெஞ்சினை மீண்டும் அப் பாவகன் சுடவே,
கரிந்த கோயிலில் கார் இருள் புலர்ந்த பின் கண்டோர்,
'எரிந்து வீழ்ந்தனர், ஐவரும் யாயும், ஈண்டு' என்றார்.
131
உரை
   

செய்தி அறிந்து, அரசரும் முனிவர் முதலாயினாரும் வருந்துதல்

விருந்தராய், விடம் இடச் செல் ஐவேடரும், தாயும்,
இருந்த தீ மதி அமைச்சனோடு இறந்தமை உணரார்,
திருந்து மா மதிப் பாண்டவர் செயலும் மற்று அறியார்,
வருந்தினார், தமது உயிர் இழந்தென-புவி மன்னர்.
132
உரை
   


'போது பட்டு, இருள் புகுந்து, ஒளி போன வானகம்போல்,
மாது பட்ட பார்மடந்தைதன் மதிமுகம் மழுங்க,
தீது பட்டது, குருகுலச் செல்வம்!' என்று இரங்கி,
ஏது பட்டன, முனிவரர் முதலினோர் இதயம்!

133
உரை
   

செய்தி தெரிந்த துரியோதனனாதியரின் நிலை

கொட்பு அனல் சுட இறந்தமை கேட்டலும், குருக்கள்
துட்பதத்துடன் அழுதிடும் சுயோதனன் முதலோர்,-
உள் பனித்து, மேல் வெயில் உற வெதும்பு நீர் ஒத்தார்-
பெட்பு உறப் புவி முழுவதும் பெறும் கருத்து உடையோர்.
134
உரை
   

பொன் நலம் கொள, மெழுகினால் ஆலயம் புனைந்து,
துன்னு வெங் கதைப் படை மருச் சுதனையே சுடுவான்,
என்ன ஆண்மைகொல் எண்ணினான்? எண்ணினும், சுடுமோ,
வன்னி தன் பெயர் மருச்சகன் என்பது மறந்தே?
135
உரை