6. இந்திரப்பிரத்தச் சருக்கம்

திருதராட்டிரன் தருமபுத்திரனுக்கு முடி சூட்டுவித்தல்

அத்தினபுரியில் ஐ-இரு பதின்மர் ஐவர், என்று இரண்டு அற, தம்மில்
ஒத்தனர் மருவ, தெவ்வர் மெய் வெருவ, உளம் மகிழ் நாளில்,
                                 மற்று ஒரு நாள்,
மைத்துனன் முதலாம் தமரையும், தக்க மந்திரத்தவரையும், கூட்டி,
                                எண்ணினான், இகலோன்.

1
உரை
   


'செழு முரசு உயர்த்த வேந்தனுக்கு இன்று திரு அபிடேக நாள்' என்று,
முழு முரசு அறைந்து, நகரி கோடித்து, முடி புனை கடி கொள்
                                 மண்டபத்தின்
எழு முரசு அதிர, பகீரதி முதலாம் எத் துறைப் புனல்களும் இயற்றி,
தொழு முரசுடன் வெள் வலம்புரி முழங்க, சுருதி மா முனிவரும்
                                 தொக்கார்.

2
உரை
   


அத்தியின் பலகை நவமணி அழுத்தி, ஆடகத்து அமைத்து,
                                 அரி முகத்தால்
பத்தி கொள் பீடத்து அழகுற இருத்தி, பசும் பொனின்
                                 தசும்புகள் நிறைந்த
சுத்த நீர் வியாதன் தௌமியன் முதலோர் சொரிந்தனர்-சோமன்
                                 வந்து உதித்து,
சித்திர கிரியின் நெடு நிலா வெள்ளம் சீருடன் வழிய,
                                 வார்த்தெனவே.

3
உரை
   

உதய மால் வரையில் உதய ராகத்தோடு உதித்த தேர்
                                 உதயன் என்று உரைப்ப,
துதை அளி ததைந்த மாலையான் சென்னிச் சோதி மா மகுடமும் சூட்டி,
பத யுகம் அரசர் முடிகளால் சிவப்ப, பகர் விதி முடித்தபின், பலரும்
இதயம் ஒத்து அமிர்த மொழியவர் அடைவே இரு கை
                                 நீராசனம் எடுத்தார்.
4
உரை
   

தம்பியர் சூழ, யானைமீது தருமன் நகர் வலம் வருதல்

ஒற்றையோடு இரட்டை வலம்புரி மிழற்ற, ஒரு குடை
                                 மதி என நிழற்ற,
கொற்றவர் முன் பின் போதர, மடவார் குழுப் பொரி சிந்தி
                                 வாழ்த்து எடுப்ப,
இற்றை நாள், எவரும், வாய்த்தவா! என்ன, ஏழ் உயர்
                                 இராச குஞ்சரமேல்,
மற்றை நால்வரும் தன் சூழ்வர, தருமன்-மைந்தன்
                                 மா நகர் வலம் வந்தான்.
5
உரை
   


திருதராட்டிரன் ஏவலால் தருமன் முதலியோர்
கண்ணனுடன் காண்டவப்பிரத்தம் சேர்தல்

மா நகர் வலமாய் வந்து, தன் குரவர் மலர்ப் பதம்
                                 முறைமையால் வணங்கி,
கோ நகர் இருக்கை அடைந்தனன்; ஒரு நாள், கொற்றவன்
                                 ஏவல் கைக்கொண்டு,
பேய் நகர் எனுமாறு யாவரும் வழங்காப் பிறங்கு நீள்
                                 கானிடை அழிந்த
தூ நகர் முன்னோர் இருந்தது ஒன்று, அந்தத் தொல் நகர்
                                 வைகுமா துணிந்தான்.
6
உரை
   


அம் கண் மா ஞாலம் முழுவதும் கொடுத்தற்கு ஆயர்தம்
                                 பதியின் அங்குரித்த
செங் கண் மால் முதலாம் கிளைஞரும், வயிரத் தேர்மிசைச்
                                 சேனையும், தாமும்,
வெங் கண் மாசுணத்தோன் எண்ணம் எத் திசையும் வெளிப்பட,
                                 வேந்தர் ஐவரும் போய்,
தங்கள் மா தவத்தால் காண்டவப் பிரத்தம் என்னும்
                                 அத் தழல் வனம் அடைந்தார்.

7
உரை
   


கண்ணன் இந்திரனோடு விச்சுவகன்மாவையும் வருவிக்க,
இந்திரன் ஒரு நகரம் அமைக்குமாறு விச்சுவகன்மாவை ஏவுதல்

போய் அவண் புகுந்த பொழுது, பைங் கடலும், பூவையும்,
                                 புயலும், நேர்வடிவின்
மாயவற்கு, 'எவ்வாறு, இவ்வுழி இவர்கள் வாழ்வது?'
                                 என்று, ஒரு நினைவு எய்தி,
நாயகக் கடவுள்தன்னை முன்னுதலும், நாக நாயகனொடும் நடுங்கி,
மேய கட்புலன்கள் களித்திட, திருமுன் நின்றனன்,
                                 விச்சுவகன்மா.

8
உரை
   

நுண்ணிதின் உணர்ந்தோர் உணர்தரும் சிற்ப நூல் அறி
                                 புலவனை நோக்கி,
திண்ணிதின் அமரர் சேகரன் மொழிந்தான்: 'தேவரும்
                                 மனிதரும் வியப்ப,
மண்ணினும், புயங்கர் பாதலம் முதலாம் மற்று உள
                                 உலகினும், நமதாம்
விண்ணினும், உவமை இலதென, கடிது ஓர் வியல் நகர்
                                 விதித்தி, நீ' எனவே,
9
உரை
   

விச்சுவகன்மா சிறந்த நகரை அமைக்க,
அது கண்டு யாவரும் வியத்தல்

தேவினும், தேவ யோனியில் பிறந்த திரளினும், சிறந்த யாவர்க்கும்,
பூவினும், எவ் எவ் உலகினும், முன்னம் புந்தியால்
                                இயற்றிய புரங்கள்
யாவினும், அழகும் பெருமையும் திருவும் இன்பமும்
                                 எழு மடங்கு ஆக,
நாவினும் புகல, கருத்தினும் நினைக்க, அரியது ஓர் நலம்
                                 பெறச் சமைத்தான்.
10
உரை
   


'மரகதம், கோமேதகம், துகிர், தரளம், வைரம், வைதூரியம், நீலம்,
எரி மணி, புருடராகம், என்று இவற்றிற்கு ஆகரம் இந்த
                                 மா நகர்' என்று,
அரி முதல் இமையோர் அனைவரும் புகழ்ந்தார்; 'ஆடகப்
                                 பொருப்பினை அழித்து,
தரணியில் நகர் ஒன்று அமைத்தவா!' என்று, தபதியர்
                                 யாவரும் வியந்தார்.

11
உரை
   


'என் பதி அழகு குலைந்தது' என்று எண்ணி, இந்திரன்
                                 வெறுக்கவும், இயக்கர்
மன், 'பதி பொலிவு சிதைந்தது' என்றிடவும், மற்றுள வானவர், 'பதிகள்
புன் பதி ஆகிப் போயின' எனவும், 'புரை அறு புந்தியால், புவிமேல்
நன் பதி இது ஒன்று இயற்றினான்' என்று, நாரணாதிகள் துதித்திடவும்.

12
உரை
   


கண்ணன் அந்த நகரத்துக்கு இந்திரப்பிரத்தம்
என்று பெயரிடுதல்

சந்திராதபமும் தினகராதபமும் இரு பொழுதினும் எழச் சமைத்த
மந்திராதிகளும், மஞ்சமும், மதிலும், மகர தோரண மணி மறுகும்,
கொந்து இராநின்ற சோலையும், தடமும், கொற்றவன்
                                 கோயிலும், நோக்கி,
இந்திராபதி, அவ் இந்திரன் பெயரால், 'இந்திரப்பிரத்தம்'
                                 என்று இட்டான்.
13
உரை
   

இந்திரப்பிரத்த நகரின் மாண்பு

'இமையவர் பதியில் உள்ளன யாவும் இங்கு உள; இங்கு மற்று உள்ள
அமைவுறு பொருள்கள் அங்கு இல' எனுமாறு, அமைத்த வான்
                                 தொல் பதி அழகைச்
சமைவுற விரித்துப் புகழ்வதற்கு உன்னில், சதுர் முகத்தவனும்
                                 மெய் தளரும்;
நமர்களால் நவில முடியுமே? முடியாது; ஆயினும், வல்லவா நவில்வாம்:
14
உரை
   

விதி மறை முறையில் சாந்தி செய் கடவுள் வேதியர்
                                 ஆரவம் ஒரு சார்;
மதி முறை தவறா அமைச்சர் சொல் விழையும் மன்னவர்
                                 ஆரவம் ஒரு சார்;
நிதி கெழு செல்வத்து அளகையோர் நெருக்கால் நிறைந்த பேர்
                                 ஆரவம் ஒரு சார்;
பதிதொறும் உழவர் விளை பயன் எடுக்கும் பறை கறங்கு
                                 ஆரவம் ஒரு சார்;
15
உரை
   


தோரண மஞ்சத் தலம்தொறும் நடிக்கும் தோகையர்
                                 நாடகம் ஒரு சார்;
பூரண பைம் பொன் கும்பமும், ஒளி கூர் புரி மணித்
                                 தீபமும் ஒரு சார்;
வாரணம், இவுளி, தேர், முதல் நிரைத்த வாகமும்
                                 சேனையும் ஒரு சார்;
நாரணன் வனச பத யுகம் பிரியா நலம் பெறும்
                                 மா தவர் ஒரு சார்;

16
உரை
   


சிற்ப வல்லபத்தில் மயன்முதல் உள்ள தெய்வ வான்
                                 தபதியர் ஒரு சார்;
வெற்புஅகம் மருவி வீற்று வீற்று இருக்கும் விஞ்சையர்
                                 கின்னரர்ஒரு சார்;
அற்புத வடிவின் உருப்பசி முதலாம் அழகுடை
                                 அரம்பையர் ஒரு சார்;
பொற்புடை அமரர் புரியும் மெய்ம் மகிழ்ந்து பொழிதரு
                                 பொன் மலர் ஒரு சார்.

17
உரை
   


வரை எலாம், அகிலும், சந்தனத் தருவும், மான்மத நாவியின் குலமும்;
திரை எலாம், முத்தும், பவள வண் கொடியும், செம் மணிகளும்,
                                 மரகதமும்;
கரை எலாம், புன்னைக் கானமும், கண்டல் அடவியும்,
                                 கைதை அம் காடும்;
தரை எலாம், பொன்னும், வெள்ளியும், பழன வேலி சூழ்
                                 சாலியும், கரும்பும்.

18
உரை
   

ஆலையில் கரும்பின் கண்களில் தெறித்த ஆரம், அவ் வயல்
                                 புறத்து அடுத்த
சோலையில் பயிலும் குயிலையும், சுருதிச் சுரும்பையும், நிரை
                                 நிரை துரப்ப;
வேலையில் குதித்த வாளைஏறு உம்பர் வியன் நதி கலக்கி,
                                 வெண் திங்கள்
மாலையில் பயிலும் வானமீன் கொடிபோல், வாவியில்
                                 குளிக்கும்-மா மருதம்.
19
உரை
   

புரிசையின் குடுமிதொறும் நிரை தொடுத்த பொற் கொடி
                                 ஆடையின் நிழலைக்
கிரிமிசைப் பறக்கும் அன்னம் என்று எண்ணி, கிடங்கில் வாழ்
                                 ஓதிமக் கிளைகள்,
விரி சிறைப் பறவின் கடுமையால் எய்தி, மீது எழும்
                                 மஞ்சு எனக் கலங்கி,
பரிசயப்படு தண் சததளப் பொகுட்டுப் பார்ப்பு உறை
                                 பள்ளிவிட்டு அகலா;
20
உரை
   


கயல் தடஞ் செங் கண் கன்னியர்க்கு இந்து- காந்த வார்
                                 சிலையினால் உயரச்
செயல்படு பொருப்பின் சாரலில், கங்குல் தெள் நிலா
                                 எறித்தலின் உருகி,
வியப்பொடு குதிக்கும் தாரை கொள் அருவி விழைவுடன்
                                 படிவன சகோரம்,
நயப்புடை அன்னச் சேவல், பேடு என்று நண்ணலால்
                                 உளம் மிக நாணும்.

21
உரை
   


அரி மணிச் சிலையின் சலாகையால் வட்டம் ஆகவே
                                 அமைத்த சாலகம்தோறு,
எரி மணிக் குழையார் வதன மண்டலத்தில் எழிலுடன் மிளிரும்
                                 மைத் தடங் கண்-
விரி மணிக் கதிரோன் அளிக்க முன் களிந்த வெற்பிடை
                                 வீழும் மா நதியின்
புரி மணிச் சுழியில் துணையொடும் உலாவிப் பொருவன
                                 கயல்களே போலும்!

22
உரை
   


'இனத்தினால் உயர்ந்த இந்திரபுரியும், இந்திரப்பிரத்தமும்,
                                 இரண்டும்,
தனத்தினால், உணர்வால், கேள்வியால், அழகால், தக்கது
                           ஒன்று யாது?' எனத் துலைகொள்
மனத்தினால் நிறுக்க, உயர்ந்தது ஒன்று; ஒன்று மண்மிசை
                                 இருந்தது; மிகவும்
கனத்தினால் அன்றித் தாழுமோ? யாரும் கண்டது கேட்டது
                                 அன்று இதுவே.

23
உரை
   

நிறக்க வல் இரும்பைச் செம்பொன் ஆம்வண்ணம்
                                இரதமே நிகழ்த்திய நிகர்ப்ப,
பிறக்கமும் வனமும் ஒழித்து, அவண் அமைத்த பெரும்
                         பதிக்கு உவமையும் பெறாமல்,
மறக் கடுங் களிற்றுக் குபேரன் வாழ் அளகை வடக்கு
                                 இருந்தது; நெடு வானில்
துறக்கமும் ஒளித்தது; இலங்கையும் வெருவித் தொடு
                                கடல் சுழிப் புகுந்ததுவே.
24
உரை
   

வாவியும், புறவும், சோலையும், மலர்ந்த மலர்களும்,
                                 மணிகளின் குழாமும்,
மேவி எங்கு எங்கும் மயங்கலின் தம்தம் வேரியும்
                                 வாசமும் தூதா,
பூஇனம் சுரும்பை அழைக்கும் வண் பழனப் புது வளம்
                               சுரக்கும் நாடு அனைத்தும்
ஓவியம் குறித்துப் பூமகள் வடிவை ஒப்பனை செய்தவாறு
                                 ஒக்கும்.
25
உரை
   


பாண்டவர் இந்திரப்பிரத்த நகரில் குடி புகுதல்

பரிமள, மதுபம் முரல், பசுந் தொடையல் பாண்டவர் ஐவரும், கடவுள்
எரி வலம் புரிந்து, முறை முறை வேட்ட இன் எழில்
                                 இள மயில் அன்றி,
வரிசையின் அணுகி உரிமையால் அவனி மயிலையும்
                                 மன்றல் எய்தினர்போல்,
புரி வளை தரளம் சொரி புனல் அகழிப் புரிசை
                                 சூழ் புரம் குடி புகுந்தார்.

26
உரை
   

விச்சுவகன்மா காட்ட, பாண்டவர் கோபுரத்தின்
மேலிருந்து அந் நகரின் சிறப்பைக் காணுதல்

உரம் குடி புகுந்த திண் தோள் உதிட்டிரன் முதலியோர் அப்
புரம் குடி புகுந்து, தங்கள் பொன் எயில் கோயில் எய்த,
திரம் குடி புகுந்த கல்விச் சிற்ப வித்தகன், தன் நெஞ்சால்
கரம் குடி புகாமல் செய்த கடி நகர் காட்டலுற்றான்.
27
உரை
   


நா புரப்பதற்கே ஏற்ற நவிர் அறு வாய்மை வேந்தர்,
கோபுரத்து உம்பர், மஞ்ச கோடியில் நின்று, தங்கள்
மா புரத்து உள்ள எல்லை வள மனை யாவும், மாதர்
நூபுரத்து அரவ வீதி அகலமும், நோக்கினாரே.

28
உரை
   


நகரின் சிறப்பைப் பாண்டவர் பலவாறு வியந்து கூறுதல்

'அரவின் வெஞ் சுடிகை கொண்ட அவிர் மணிச் சோதி மேன்மேல்
விரவி வந்து எறிப்ப, பச்சை மெய் சிவப்பு ஏறிற்று ஆக,
இரவிதன் இரதம் பூண்ட எழு பெயர்ப் பவன வேகப்
புரவியை ஐயுற்றேகொல், புரி வலம் புரிவது?' என்பார்.
29
உரை
   

அருளுடை அறத்தின் வாழ்வாம் அந் நகர் இல்லம் எங்கும்
இருளுடை இந்த்ரநீலத்து இயன்ற சாளரங்கள் நோக்கி,
'உருளுடை ஒற்றை நேமி உறு பரித் தேரோன் சீற,
தெருளுடைத் திமிரம் போன சில் நெறி போலும்!' என்பார்.
30
உரை
   


சமர் முகப் பொறிகள் மிக்க தட மதில் குடுமிதோறும்
குமர் உறப் பிணித்த பைம் பொன் கொடித் துகில் அசைவு நோக்கி,
'நமர் புரக் கிழத்தி, உம்பர் நாயகன் புரத்தினோடும்
அமர் பொரப் பற் பல் கையால் அழைப்பதுபோலும்!' என்பார்.

31
உரை
   

தசும்பு உறும் அகிலின் தூபம், சாறு அடு கரும்பின் தூபம்,
அசும்பு அறா மடையின் தூபம், அவி பெறும் அழலின் தூபம்,
விசும்புற நான்கு திக்கும் மிசை மிசை எழுதல் நோக்கி,
'பசும் புயல் ஏழு அன்று; இன்னும் பல உளவாகும்' என்பார்.
32
உரை
   


'அடுக்குற நிலம் செய் மாடத்து அணி உறு பெரும் பதாகை,
மிடுக்கினால் அனிலன் எற்றி, விசையுடன் எடுத்து மோத,
உடுக்களும் நாளும் கோளும், உள்ளமும் உடலும் சேர
நடுக்கு உறுகின்ற, இந்த நகர் வழி போக' என்பார்.

33
உரை
   

துதை அளி முரலும் வாசச் சோலையின் பொங்கர்தோறும்,
விதம் உற எழுந்து, காள மேகங்கள் படிதல் நோக்கி,
'கதிர் மணி அகழி மா மேகலையுடை நகர மாதின்
புகை நறு மலர் மென் கூந்தல் போலுமா காண்மின்!'என்பார்.
34
உரை
   

ஈட்டிய மணியும் பொன்னும் எழில் பெற, புடைகள்தோறும்
பூட்டிய சிகரி சாலப் புரிசையின் புதுமை நோக்கி,
'கோட்டிய நகரி என்னும் குலக் கொடி மன்றல் எய்த,
சூட்டிய சூட்டுப் போலத் துலங்குமா காண்மின்!' என்பார்.
35
உரை
   

'பணைஇனம் பலவும் ஆர்ப்ப, பைங் கொடி நிரைத்த செல்வத்
துணை மணி மாடம் மன்னும் தோரண வீதி யாவும்,
புணை வனம் நெருங்க நீடி, பொழி புயல் கிழிக்கும் சாரல்
இணை வரை நடுவண் போதும் யாறு போல் இலங்கும்!' என்பார்.
36
உரை
   

தருமன் விச்சுவகன்மாவுக்கு விடை கொடுத்து அனுப்புதல்

கண்ணுறு பொருள்கள் யாவும் கண்டு கண்டு உவகை கூர,
எண் உறு கிளைஞரோடும், யாதவ குமரரோடும்,
பண் உறு வேத வாழ்நர் பலரொடும், வைகி, ஆங்கண்,
விண் உறு தபதிக்கு அம்ம, விடை கொடுத்தருளினானே.
37
உரை
   

கண்ணன், இந்திரன் முதலியோர் தம்தம் பதிக்கு
மீளுதலும், தருமன் சிறப்புற அரசாளுதலும்

கேசவன் முதலா உள்ள கிளைஞரும், கேண்மை தப்பா
வாசவன் முதலினோரும், மன்னு தம் பதிகள் புக்கார்;
ஓச வன் திகிரி ஓச்சி, உதய பானுவுக்கும் மேலாம்
தேசவன்தானும், வையம் திசை முறை திருத்தி ஆண்டான்.
38
உரை
   

ஒருநாள் நாரதமுனிவன் அங்கு வருதலும்,
பாண்டவர் அம் முனிவனை உபசரித்தலும்


யாய் மொழி தலைமேல் கொண்டும், இளையவர் மொழிகள் கேட்டும்,
வேய் மொழி வேய்த் தோள் வல்லி மென் மொழி விரும்பலுற்றும்,
வாய்மொழி அறத்தின் மைந்தன் மா நகர் வாழும் நாளில்,
ஆய் மொழிப் பாடல் யாழ் ஓர் அந்தணன் ஆங்கண் வந்தான்.
39
உரை
   

இந்த நாரதனைப் போற்றி, இரு பதம் விளக்கி, வாசச்
சந்தனாகருவின் தூபம் தவழ் மணித் தவிசின் ஏற்றி,
வந்தனா விதியில் சற்றும் வழு அற வழிபாடு எய்தி,
அந்த நால்வரும் அவ் வேந்தும், ஆதி வாசவர்கள் ஆனார்.
40
உரை
   


வரம் மிகு கற்பினாளும் மாமியும் வணங்கி நிற்ப,
சரிகமபதநிப் பாடல் தண்டு தைவரு செங் கையோன்,
இரு செவி படைவீடு ஆக, எம்பிரான் அளிக்கப் பெற்ற
பெரு முனி, அவர்க்கு ஓர் வார்த்தை பெட்புறப் பேசுவானே:

41
உரை
   


நாரதன் சுந்தோபசுந்தர் வரலாறு கூறி, திரௌபதி
நிமித்தமாகப் பாண்டவர்க்கு ஒரு நியமம் உரைத்தல்

'முராரியை, முராரி நாபி முளரி வாழ் முனியை, முக் கண்
புராரியை, நோக்கி, முன் நாள், புரி பெருந் தவத்தின் மிக்கார்
சுராரிகள்தம்மில் சுந்தோபசுந்தர் என்று இருவர், தங்கள்
திராரி ஏவலினால் வந்த திலோத்தமைதன்னைக் கண்டார்.
42
உரை
   


'காண்டலும், அவள்மேல் வைத்த காதலால் உழந்து, நெஞ்சில்
ஈண்டிய துயரத்தோடும் இருவரும் நயந்த போழ்து, அப்
பூண் தகு பொலிவினாள்தன்பொருட்டு அமர் தம்மில் பூண்டு
மாண்டனர் என்னும் வார்த்தை மா நிலம் அறியும் அன்றே?
43
உரை
   

'நீவிரும் விதியால் வேட்ட நேயம் உண்டேனும், மன்றல்
ஓவியம் அனையாள்தன்னை ஓர் ஒர் ஆண்டு ஒருவர் ஆக
மேவினிர் புரியும்; அங்ஙன் மேவும் நாள், ஏனையோர் இக்
காவி அம் கண்ணினாளைக் கண்ணுறல் கடன்அது அன்றே.
44
உரை
   

'எண் உறக் காணில், ஓர் ஆறு இருதுவும் வேடம் மாறி,
புண்ணியப் புனல்கள் ஆடப் போவதே, உறுதி' என்று,
வண்ண வில் திறலினார்க்கு வாய் மலர்ந்து அருளி, மீண்டு,
பண்ணுடைக் கீத நாத பண்டிதன் விசும்பில் போனான்.
45
உரை
   

நாரதன் உரைத்தபடி ஐவரும் மனைவியுடன் வாழ்தல்

சொன்ன நாள் தொடங்கி, ஐந்து சூரரும், தேவர் நாளுக்கு
இன்ன நாள் அவதி என்றே எண்ணி, ஆங்கு, இரதி கேள்வன்
அன்ன நாள் மலர்ப் பைந் தாமத்து அறன் மகன் ஆதி ஆக,
மின்னனாள்தன்னை வேட்ட முறையினால் மேவினாரே.
46
உரை