12. அருச்சுனன் தவநிலைச் சருக்கம்

தருமன் துணைவருடன் முனிவர் சூழ, காமிய வனம் புகுதல்

பெருமித வலியும் பாரும் பேணலார் கவர, இன் சொல்
தருமனும் தம்பிமாரும், தழல் எழு தையலாளும்,
அரு மக முனிவர் முந் நான்கு ஆயிரர் சூழ்ந்து போத,
கரு முகில் படியும் சாரல் காமிய வனம் புக்காரே.

1
உரை
   


பாண்டவர் வருகையால் காமிய வனம் கவினுறுதல்

ஆரமும் அகிலும் நாறும் அருவியும், சுனையும், மத்த
வாரணம் பிடிகளோடு வாரி தோய் கானியாறும்,
ஈரமும் நிழலும், காயும் கனிகளும், யாவும், ஈண்டி,
கார்இனம் பொழியும் அந்தக் கானகத்து அழகு கண்டார்.

2
உரை
   


அங்கு இவர் புகுந்த பின்னர், அங்கியின் புகையும் மாறி,
பொங்கிய ஓமத் தீயின் புகையினால் முகில் உண்டாக,
சிங்கமும் துதிக்கை மாவும் சேர்ந்து உடன் திரிய, சூழல்
எங்கணும் அழகு பெற்றது, இமகிரிச் சாரல் போன்றே.

3
உரை
   


துருபதன் முதலியோரும் கண்ணனும்
பாண்டவரை வந்து காணுதல்

துருபனும், திட்டத்துய்மனும், சோமக
நிருபர் ஆனவர் யாவரும், நேர்ந்து உடன்
விரவு தானை விராடனும், சுற்றமும்,
மருவினார்-அவ் வனத்து இருந்தோரையே.

4
உரை
   

மற்றும் மற்றும், மகீபரில் அன்பினால்
உற்ற உற்ற உறவுடை யோர்களும்,
கற்ற கற்ற கலைவித மாக்களும்,
சுற்றும் மொய்த்தனர், தோம் அறு கேண்மையார்.
5
உரை
   


மா தவத்தின் பயன் என, மாதவன்,
யாதவக் குலத்து ஏறு, இமையோர் பதி,
ஆதபத்துக்கு அரு நிழல்போல் அருள்
வேத வித்தக வீரனும், மேவினான்.

6
உரை
   


வந்தோர் அன்பினால் பல பல உரை பகர்தல்

பார் இழந்த இப் பாதகச் சூது கேட்டு,
ஈரும் நெஞ்சினர், ஏமுறு நோக்கினர்,
பேர் அறன் தரு பிள்ளையைப் பார்த்து, அருள்
கூர, அன்பொடு இவை இவை கூறுவார்:

7
உரை
   


'மரபின் வல்லியை மன்அவை ஏற்றிய
குருகுலேசனை, கொற்ற வெஞ் சேனையோடு
இரிய, எற்றுதும் இப்பொழுதே!' என,
உரமும் சீற்றமும் தோற்ற, உரைசெய்வார்.

8
உரை
   

தம்பிமாரைத் தனித்தனியே உயிர்
வெம்பி வீழ, விரைந்து வில் வாங்கி, இன்று
உம்பர் காண உயிர் அழிப்போம்!' என,
தும்பை சூடக் கருதினர் சொல்லுவார்.
9
உரை
   

'வஞ்சகச் சுபலன் தரு மைந்தனை
வெஞ் சமத்தினில் வீழ, கணத்திடைச்
செஞ் சரத்தின்வழி உயிர் செல்லவே,
எஞ்சுவிக்க எழும்!' என்று இயம்புவார்.
10
உரை
   


சீத வெண்குடை வேந்தர்தம் தேர் விடும்
சூதன் மைந்தன், சுயோதனன் தோழனை,
மாதிரங்களில் வானவர் காண, இப்
போது உடற்றுவம்!' என்னப் புகலுவார்.

11
உரை
   


உந்த உந்த ஒருவர்க்கு ஒருவர் வாய்
முந்த முந்த, முடுகு சினத்தர் ஆய்,
அந்த அந்த அவனிபர் யாவரும்,
இந்த இந்த உரைகள் இயம்பவே.

12
உரை
   


கண்ணன் வேந்தர்களின் சினத்தைத் தணித்தல்

கேட்டு இருந்தருள் கேசவன், வாசவன்
காட்டு இருந்தனன் என்னக் கவின்பெறும்,
தோட்டு இருந்து அளி தேன் நுகர் சோலையின்-
மாட்டு இருந்த, மகீபர்க்கு உரைசெய்வான்:

13
உரை
   


விடுக இந்த வெகுளியை; பின்புற
அடுக, நும் திறல் ஆண்மைகள் தோன்றவே;
"வடு மனம்கொடு வஞ்சகம் செய்பவர்
கெடுவர்" என்பது கேட்டு அறியீர்கொலோ?

14
உரை
   

'இயைந்து உரைத்த இயைபின்படி, இனி
வியந்து இருக்கும் விபினம்தொறும் இருந்து,
உயர்ந்த பின் செய் வினையை இன்று உன்னுதல்,
அயர்ந்து உரைத்தல் அலாது, இலை, ஆவதே.
15
உரை
   


'அன்னை, புதல்வர், முதலியோரை உறவினர் இருப்பிடங்கட்கு
அனுப்பிவிட்டு, நீவிர் மட்டும் கானின் உறைதல்
நன்று' எனக் கண்ணன் தருமனுக்கு உரைத்தல்

'கேட்டி நீ, முரசகேது! கிளைஞர்தம் இருக்கைதோறும்
ஈட்டிய புதல்வர் உள்ளோர் யாரையும் இருத்தல் செய்து,
காட்டிடை நீவிர் வைகி, கடவ நாள் கழித்து, மீண்டு,
நாட்டிடை வந்தால் காண்டி, நலன் உளோர்
                               நலன்கள் எல்லாம்.

16
உரை
   


'அன்னையைச் சுபலன் பாவை அருகுற இருத்தி, உங்கள்
தன்னையர்தம்மை யாகசேனன் ஊர்தன்னில் வைத்து,
பின்னையும் வேண்டுவோரைப் பிரிவுற நெறியில் போக்கி,
நல் நயத்தொடு நீர் கானம் வைகுதல் நன்மை' என்றான்.

17
உரை
   


கண்ணன் உரைப்படியே யாவரையும் அனுப்பி,
தருமன் கானில் வாழ்தல்

அச்சுதன் உரைத்த மாற்றம், அறன் சுதன் மகிழ்ந்து, கேட்டு,
மெய்ச் சுதர் முதலா மற்றும் விளம்பிய கிளையை எல்லாம்
இச்சையின்படியே, ஆங்கு ஆங்கு எய்துவித்து,
                                ஈர்-ஆறு ஆண்டும்
அச்சுறு கானில் வைகும் ஆர்வமே ஆர்வம் ஆனான்.

18
உரை
   


கண்ணன் முதலிய வேந்தரும் தத்தம்
இருப்பிடத்திற்கு மீளுதல்

சோனை மா முகிலின் மேனித் தோன்றலும் துவரை புக்கான்;
ஏனையோர் தாமும் தம்தம் எயிலுடை நகரி புக்கார்;
ஞான யோகிகளும் ஒவ்வா நரேசனும், தம்பிமாரும்,
கானமே தாங்கள் ஆளும் காசினி ஆகக் கொண்டார்.

19
உரை
   


வியாத முனிவன் வருகையும், பாண்டவரது முறையீடும்

அவ் வனம்தன்னில் வந்த அரசு எலாம் அகன்ற பின்னர்,
வெவ் வனம் விடாது மேவித் தவம் புரி வியாதன் என்னும்
செவ்வன முனைவன் வந்து, அச் சேயவன் சேய்கள் ஆன
இவ் வன சரிதர்தம்மை இனைவுடன் எய்தினானே.

20
உரை
   


கண்டு எதிர் சென்று போற்றி, கண்ணினும் சென்னிமீதும்
கொண்டனர் அவன்தன் பாதம்; குளிர்ந்தனர்,
                          உயிரும் மெய்யும்;
புண்டர நுதலினானைப் பூசனை செய்த பின்னர்,
வண்டு அணி தாரான் செய்த வஞ்சனை
                          அனைத்தும் சொன்னார்.

21
உரை
   


வியாதன் பாண்டவரைத் தேற்றி, 'பகை முடிக்கப் பார்த்தன்
பாசுபதம் பெறல் வேண்டும்' என்றல்

செறிந்தவர்க்கு ஊற்றங்கோல் ஆம் செய் தவ
                          முனியும், 'முன்னே
குறிந்தன நிகழ்ந்த எல்லாம் கூறுதல் கொடிது; பாவம்;
"பிறிந்தன தாயம்தன்னில் பெரும் பகை இனிது" என்று அன்றோ,
அறிந்தவர் உரைத்தார்? ஐய! அவாவினுக்கு அவதி உண்டோ?

22
உரை
   


'துன்றினர் இன்னல் எய்த, துன்னலர் ஆகி, தம்மில்
ஒன்றினர் செறினும், உள்ளது உண்டு என உணரத் தேற்றி,
கன்றினர் கவலை தீர்த்தான், கண்ணுடைக் கருணை மூர்த்தி;-
குன்றினது உயர்ச்சி அந்தக் குன்றினுக்கு அறிய உண்டோ?

23
உரை
   


'நீவிரே அல்லிர்; முன்னாள் நிலம் முழுது ஆண்ட நேமி
நா விரி கீர்த்தியாளன், நளன் எனும் நாம வேந்தன்,
காவிரி என்னத் தப்பாக் கருணையான், சூதில் தோற்று,
தீ விரி கானம் சென்ற காதை நும் செவிப் படாதோ?'

24
உரை
   

தோத்திரம்  ஆன  தெய்வச்  சுருதிகள்
              யாவும் நான்காக்
கோத்தவன் பின்னும் சொல்வான்: 'குன்ற
              வில்லவன்பால் இன்று
பார்த்தனே  சென்று,  பாசுபதக்  கணை
              வாங்கின் அல்லால்,
ஆர்த்த பைங் கழலாய்! எய்தாது, அரும் பகை
              முடித்தல்' என்றான்.
25
உரை
   


முனிவன் மொழிப்படி பாசுபதம் பெறுமாறு தருமன் கூற,
அருச்சுனன் விடை பெற்று ஏகுதல்

பரிவுடன் முனிவன் மாற்றம் பணிந்து, தன்
              தலைமேல் கொண்டு,
வரி சிலைக்கு உலகம் எண்ணும் மகபதி மகனை நோக்கி,
'கிரிசனை உன்னி, வெள்ளிக் கிரிப் புறம் எய்தி, யார்க்கும்
அரிய நல் தவம் செய்தேனும், அவன் அருள் பெறுதி, ஐயா!'

26
உரை
   


என விடை கொடுப்ப, மண்ணில் இணை இலா வியாதன் பாதம்
மனன் உற இறைஞ்சி, ஆங்கு, ஓர் மந்திரம் முறையின் பெற்று,
நனி மிகு திதியும் நாளும் நல்லது ஓர் முகூர்த்தம்தன்னில்,
தனி வதி இயக்கர் காட்ட, தனஞ்சயன் சேறலுற்றான்.

27
உரை
   


'அஞ்சலிர்' என்று கூறி, முனியும் மீண்டு போதல்

'வெஞ் சல மனத்தர் ஆனோர் விரகினால் கூட்டம் கூட்டி,
நஞ்சு அலது உவமை இல்லா நவை புரிந்தனர்களேனும்,
சஞ்சலம், உம்மைப் போலும் தரணிபர், உறுதல் செய்யார்;
அஞ்சலிர்!' என்று, மீள ஆரண முனியும் போனான்.

28
உரை
   


அருச்சுனன் தவ வேடம் கொண்டு, வடதிசை
முடிவைக் காணுதல்

மரவுரி உடையன், சென்னி வகுத்த செஞ் சடையன், தூணிச்
சரமுடன் அங்கி ஈந்த தனுவினன், தவத்தின் மேலே
புரிதரு மனத்தன், எல்லாப் புண்ணியங்களுக்கும் தானே
உரை பெறு தசரதன்தன் மகன் அலாது உவமை இல்லான்.

29
உரை
   


நெறி இரு புறத்தும், ஊசி நுழை ஒணா நெருக்கம் மிக்க
செறி தரு வனமும், சிங்கம், சிந்துரம், செருச் செய் சாரல்
பொறைகளும், வெம் பிசாச பூதமோடு இயக்கர் யாரும்
உறைதரு குவடும், நீங்கி, உத்தர முடிவு கண்டான்.

30
உரை
   


இமகிரியில் முனிவரை வணங்கி, அருச்சுனன் மகிழ்தல்

அத் திசை இமயம் என்னும் அரச வெற்பு அடைந்து, மிக்க
பத்தியோடு, அம்மைதன்னைப் பயந்த குன்று என்று போற்றி,
சத்தியவிரதன் தம்பி, தபோவனம்தோறும் தங்கள்
முத் தழல் வளர்ப்போர் பாத முளரிகள்
                                      முடிமேல் கொண்டான்.

31
உரை
   


சாரணர், இயக்கர், விச்சாதரர், முதல் பலரும் செஞ் சொல்
ஆரணப்படியே, சூழ்ந்த அடவிகள்தோறும் வைகி,
நாரணன், மலரோன், உம்பர்நாயகன், பதங்கள் நச்சி,
காரணத் தவம் செய்வோரைக் கண்டு, கண்டு,
                                      உவகை கூர்ந்தான்.

32
உரை
   


கைலை மலையை எய்தி, அருச்சுனன் தவம் புரிதல்

அரியும் வெங் கரியும் தம்மில் அமர் புரி
              முழக்கம் கேட்டும்,
கிரியினின் முழக்கம் கேட்டும், கிராதர் போர்
              முழக்கம் கேட்டும்,
எரி கிளர் முழக்கம் கேட்டும், எம்பிரான்,
              இமவான் தந்த
புரிகுழலோடும் வைகும் புண்ணியப்
              பொருப்பைச் சேர்ந்தான்.

33
உரை
   


கைம்மலை உரிவையோடு கட்செவிக் கச்சும் சாத்தும்
செம்மலை, விழியின் காணான், சிந்தையால் கண்டு போற்றி,
அம் மலைச் சாரல்தோறும் அருந் தவம் புரிநர் கூற,
விம்மலை நீங்கி, ஆங்கண் மெய்த் தவ விரதன் ஆனான்.

34
உரை
   

எயில் ஒரு மூன்றும் செற்றோன், ஏந்திழையுடனே வைகும்
கயிலையின் பெருமைதன்னைக் கட்டுரை செய்வது எங்ஙன்?
வெயிலவன் முதலோர் நாளும் மேம்பட வலம் செய்வார்கள்;
அயிலும் நல் அமுதோர் சூழ்வந்து அன்புடன் போற்றுவாரே!
35
உரை
   


உருகிய வெள்ளி போல உயர் முழைதோறும் வீழும்
அருவி நீர், புனிதன் வேணி அமரும் மா நதியின் தோன்ற,
உருகிய பனி வான் குன்றில் ஒண் பனிக் கடவுள் வந்து
மருவியது என்ன, தோன்றும் வருண மால் வரையின் தென்பால்.

36
உரை
   


ஆசில் நான் மறைப்படியும், எண் இல் கோடி ஆகமத்தின்
              படியும், எழுத்து ஐந்தும் கூறி,
பூசினான் வடிவம் எலாம் விபூதியால்; அப் பூதியினைப் புரிந்த
              சடைப் புறத்தே சேர்த்தான்;
'தேசினால், அப் பொருப்பின் சிகரம் மேவும் சிவன் இவனே
              போலும்!' எனத் தேவர் எல்லாம்
பேசினார்; வரி சிலைக் கை விசயன் பூண்ட பெருந் தவத்தின்
              நிலை சிலர்க்குப் பேசலாமோ?

37
உரை
   


ஒரு தாளின்மிசை நின்று, நின்ற தாளின் ஊருவின்மேல் ஒரு
              தாளை ஊன்றி, ஒன்றும்
கருதாமல், மனம் அடக்கி, விசும்பின் ஓடும் கதிரவனைக் கவர்
              வான்போல் கரங்கள் நீட்டி,
இரு தாரை நெடுந் தடங் கண் இமையாது, ஓர் ஆயிரம் கதிரும்
              தாமரைப் போது என்ன நோக்கி,
நிருதாதியரில், மனுவாய்த் தவம் செய்வாரில், நிகர் இவனுக்கு
              ஆர்கொல்?' என, நிலைபெற்றானே.

38
உரை
   


'தோற்றியது எம் இடத்தே இத் தோன்றல் மாலை சூட்டிய
              பொன்-தொடி' என்றோ, 'துரங்கம், பொன்-தேர்,
கூற்று இயல் வெஞ் சிலை, பாணம், தூணி, நாணி, குரக்கு நெடுங்
              கொடி முன்னம் கொடுத்தேம்' என்றோ,
'காற்றினுடன் விரைவுறச் சென்று அருந்துமாறு, காண்டவம் நம்
              பசிக்கு அளித்த காளை' என்றோ,
நால்-திசையும் வளர்த்த தழல் கடவுள், அந்த நரன் உடலம்
              குளிர்விக்கும் நாரம் போன்றான்.

39
உரை
   


வலப் பாகம் செழும் பவளச் சோதி என்ன, வாள் நீலச் சோதி
       என்ன மற்றைப் பாகம்,
கலப்பான திருமேனி அணிந்த நீற்றால் கதிர் முத்தின் சோதி
       என, மேனை ஈன்ற
குலப் பாவையுடன் கயிலைக் குன்றில் வாழ்
      விற்குன்றுடையோன் திருக்கோலம் குறிப்பால் உன்னி,
புலப்பாடு புறம் பொசிய, மார்பும் தோளும் பூரித்தான்; உடல்
       புளகம் பாரித்தானே.

40
உரை
   


கருந் துறுகல் எனக் கருதி, பிடியும், கன்றும், களிற்றினமும்,
              உடன் உரிஞ்ச, கறையான் ஏறிப்
பொருந்தும் முழைப் புற்று அது எனப் புயங்கம் ஊர, ங்
              கொடிகள் மரன் என்று பாங்கே சுற்ற,
பரிந்து, வெயில் நாள், மழை நாள், பனி நாள், என்று பாராமல்
              நெடுங்காலம் பயின்றான்; மண்ணில்
அருந் தவம் முன் புரிந்தோரில் இவனைப்போல் மற்று ஆர்
              புரிந்தார், சிவசிவ என்று? அரியவாறே!

41
உரை
   


பகிரதனே முதலான எண் இல் கோடி பார்த்திவரும் தவம்
              புரிந்தார்; பைம் பொன் மேனி
இகல் அவுணர் முதலான ககனவாணர் எத்தனைபேர் தவம்
              புரிந்தார்? இமையோர் ஏத்தும்
மகபதிதன் மதலை இவன் எழுத ஒணாத வனப்பினுக்கு வரி
              சிலைக் கைம் மதவேள் ஒவ்வான்;
சகல கலைகளுக்கும் இவன்தானே; இங்ஙன் தவம் புரிய
              நினைப்பதே? சார்ந்த பாவம்!

42
உரை
   


பண்ணுக்கு வாம் பரித் தேர் ஆதபனும், பணிந்து
              பசுபதியை நோக்கி
மண்ணுக்குத் தவம் புரியும் தனஞ்சயற்குக் கோடையினும்,
              மதியம் போன்றான்;
எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண் ஆவான்
              இவனே அன்றோ?
'கண்ணுக்குப் புனை மணிப் பூண் கண்ணோட்டம்' என்பது
              எல்லாம் கருணை அன்றோ?

43
உரை
   


அங்கியால் அங்கியை வெதுப்பி, வெம்மையைப்
பொங்கிய வாயுவால் போக்கி, மெய்ச் சிரம்
தங்கிய அமுதினால் தண்ணெனும்படி
இங்கிதத்து ஒடுக்கினன், இதயம்தன்னையே.

44
உரை
   

ஈண்டு தன் கருத்தினோடு இயைந்த மா தவம்
பூண்டு, இள மதி முடிப் புண்ணியன்தனை
வேண்டியவாறு எலாம் விருப்பொடு உன்னினான்-
பாண்டியன் உயர் குலப் பாவை கேள்வனே.
45
உரை
   


அருச்சுனன் தவநிலை தெரிய, இந்திரன்
குருவுடன் ஆலோசித்தல்

நிரந்தரம் அநேக நாள், நினைவு வேறு அற,
உரம் தரு புலன்களை ஒடுக்கி, ஆயுதம்
இரந்தனன் வரையிடை இயற்று நல் தவம்
புரந்தரன் அறிந்து, மெய் புளகம் ஏறவே,

46
உரை
   


குருவுடன் விரகுறக் கூறி, ஈசனை,
மருவுறு கொன்றை நாள் மாலை மௌலியை,
கருமயில் பாகனை, காண்டல் வேண்டிய
திருமகன் தவ நிலை தெரிய, உன்னினான்.

47
உரை
   


'அரும் பகை வலிமையால், அவுணர் ஊர் சுடும்
பெரும் பிறை அணி சடைப் பிஞ்ஞகன்தனது
இரும் பகழிகள் பெற எண்ணியேகொலாம்,
விரும்பியது இத் தவம், வில்வலான் அரோ!

48
உரை
   


'நல்-தவத்து உறுதியும், நரன் கருத்தும், நாம்
முற்று அறிகுவம்' என முன்னும் சிந்தையான்,
கற்றைஅம் சடையவன் கயிலை அம் கிரி
உற்று, அறிவு உறுவதற்கு உபாயம் உன்னினான்.

49
உரை
   


அருச்சுனன் தவவுறுதியை அறிய இந்திரன் அனுப்பிய தேவமாதரின் வருகை

'தூ நகை உருப்பசி, அரம்பை, தொண்டை வாய்
மேனகை, திலோத்தமை, என்று, வேலையில்
மான் என, மயில் என, வந்த மாதரீர்!
ஆனவாறு அறிதிர் போய், அவன்தன் எண்மே.'

50
உரை
   


என்று கொண்டு, இந்திரன் இயம்ப, மற்று அவன்
துன்றிய பேர் அவைத் தோற்றம் மிக்கவர்,
குன்று இரண்டு எடுப்பது ஓர் கொடி மருங்குலார்,-
சென்றனர், அவ்வுழி,-செய்ய வாயினார்.

51
உரை
   


மாதருக்கு உதவியாக மன்மதனும் உடன் வருதல்

காமனை நினைந்தனர்; காமராசனும்
மா மலர் வாளியும், மதுர சாபமும்,
தேமரு மலர்க் கையில் சேர்த்தி, சேனையோடு
ஆம்முறை புகுந்தனன், அரனும் அஞ்சவே.

52
உரை
   


செந்தமிழ் வரை தரு தேரன், செக்கர் வான்
அந்தி யானையன், மதி ஆதபத்திரன்,
சிந்து வெம் முரசினன், செவ்வி கூரவே
வந்தனன், காலமும் வசந்தம் ஆக்கியே.

53
உரை
   


கந்தனை அளித்த கன்னி ஓர் பாகம் கலந்த மெய்க்
                                  கண்ணுதற்கு எதிராய்,
செந்தமிழ் உரைத்த குறுமுனி இருந்த தெய்வ மால்
                                  வரையிடைத் தோன்றி,
இந்துவும் அரவும் உறவு செய் முடிமேல் இருந்த
                                  மந்தாகினி அருவி
வந்து இழி புனலும், சந்தனம் கமழ,
                                  வந்தது-மந்தமாருதமே.

54
உரை
   

வம்பு அறா மதுரப் பல்லவம் கோதி, மா மகரந்த
                                  மா கந்தக்
கொம்பு எலாம் இருந்து, குயில்இனம் கூவ, கொற்ற
                          வெஞ் சிலையினால், முன்னம்,
சம்பராசுரனை வென்ற வீரனைப் பைந் தாம மா மணி
                                  முடி சூட்டி,
'எம்பிரான் முனிவுக்கு அஞ்சல்!' என்பதுபோல்
                          இயைந்தது-வசந்த காலமுமே.
55
உரை
   


அழல் நடுவண் தவம் செய்யும் அருச்சுனனைத்
தேவமாதர் காணுதல்

பூதம் ஐந்தினையும் புலத்துடன் ஒடுக்கி, புரிசடையுடன்
                                  புருகூதன்
காதல் அம் புதல்வன் அருந் தவம் புரிதல் கண்டு,
                                  பாவிப்பன போல,
மாதிரம்தொறும் செம் பல்லவச் செந் தீ வளர்த்து,
                                  வான்மணியினை நோக்கி,
பாதம் ஒன்றினில் நின்று உயர்ந்தன, ஒளி கூர்
                           பணையுடைப் பாதபங்களுமே.

56
உரை
   


உள் உறக் கலக்கம் அறத் தெளிந்து, அசலத்து உயர் தலை
                                  முழையில்நின்று, அருவி
வெள்ளம் ஒத்து அமுதம் கரை அறப் பொழிய, வெம்மை
                           அற்று, அளியுடன் குளிர்ந்து,
புள்ளுடைக் கொடியோர் இருவரும் காணாப் புண்ணியன்
                           பொருப்பிடைத் தவம் செய்
வள்ளல் ஒத்தன, அச் சாரலைச் சூழ்ந்து வயங்கு நீள்
                                  வாவியும், சுனையும்.

57
உரை
   


நீறு பட்டு இலங்கும் மெய்ந் நிலவு ஒளியால் நெஞ்சினில்
                                  இருளினை அகற்றி,
மாறுபட்டிடும் ஐம் புலன்களும் ஒடுக்கும் மா தவன் வளர்த்த
                                  செந் தழலால்,
கூறுபட்டு உமையோடு ஒரு வடிவானோன் குன்று சூழ் அறை
                                  பொறை அனைத்தும்
ஆறுபட்டு உருகிப் பெருகி ஓடினவால், அம் மலை
                                  வெள்ளி ஆதலினால்!

58
உரை
   


அலைத் தடங் கடலில் அமுதொடு உற்பவித்து ஆங்கு அமரர்
                                  வாழ் பதி குடி புகுந்தோர்,
'குலைத்தும்!' என்று எண்ணி, ஒருவருக்கு ஒருவர் கொடி இடை
                                  நுடங்க வந்து, அந்த
மலைத் தடம் நெருங்கப் புகுந்தனர்; குயிலும் மயூரமும்
                                  மானுமே அனையார்,
நிலைத் தவம் புரிவோன் ஐவகை நெருப்பின் நடுவு உற
                                  நின்றவா, கண்டார்.

59
உரை
   


தவத்தைக் கலைக்கத் தேவமாதர் புரிந்த பல
இங்கிதச் செயல்கள்

அந்தரத்து அமரர் துந்துபி முழங்க, அநங்க துந்துபி
                                  எதிர் முழங்க,
வந்து, பொற் சிலம்பும், மேகலை விதமும், மலர்க் கை வெள்
                                  வளைகளும், முழங்க,
பந்து அடித்திடுவார், அம்மனை எறிவார், பயில் கழங்கு
                                  ஆடுவார், நெற்றிச்
சிந்துரத் திலகம் தீட்டுவார், ஆகி, தனித்தனி,
                                  திசைதொறும் சூழ்ந்தார்.

60
உரை
   


குயிலொடு கூவி, கிஞ்சுகம் மலர்ந்து, கொஞ்சு பைங்
                                  கிளிகளை அழைப்பார்;
மயில்இனம் நடிக்க, தாமும் வண் கலாப மணி அணி ஒளி
                                  எழ நடிப்பார்,
வெயில் விடு பரிதி மதியுடன் வலம் செய் விடர்அகம்
                                  முழுவதும் ஒலிப்ப;
'கயிலை அம்கிரியின் சாரலோ? எம் ஊர்க் கடவுள் ஆலயம்!'
                                  எனக் களிப்பார்.

61
உரை
   


கூந்தல் மா முகிலைக் குலைத்து உடன் முடிப்பார்; குங்குமம்
                                  கொங்கைமேல் அணிவார்;
ஏந்து பேர் அல்குல் கலை நெகிழ்த்து உடுப்பார்; இட்ட
                                  உத்தரியம் மாற்றிடுவார்;
பூந் துகில் நனைய நறுஞ் சுனை படிவார்; புழுகு, சந்தனம், நறும்
                                  பனி நீர்,
காந்திகொடு எறிவார்; காம வேதத்தைக் கருங் கடைக்
                                  கண்களால் மொழிவார்.

62
உரை
   


பண்ணுடை எழாலின் இன் இசை வழியே பாடுவார்; பைங்
                                  குழல் குறிப்பார்;
பெண்ணுடை மடம் நாண் அகன்ற, பேர் அமளிப் பேச்சு
                        எலாம் பேசி வந்து அடுப்பார்;
விண்ணுடை அமிர்தம் பருகுவார்; உகிரால், மென் மலர்
                                  கொய்து, மேல் எறிவார்;
எண்ணுடை மடவார் புரிந்தன, இவ்வாறு இங்கிதம்
                                  எத்தனை கோடி!

63
உரை
   


அருச்சுனன் மேல் ஐங்கணை எய்தும் அவன்
சலியாமையால், மன்மதன் இளைத்து மீளுதல்

காவும், வண் புறவும், கயங்களும், அரும்ப, கவர்ந்த வெங்
                                  கணைகளாம் ஐந்து
பூவும் வந்து, உள்ளம் உற உறப் பட்டுப் புதையவும்,
                                  புலன்வழி அன்றி,
மேவுதன் கருத்தின் வழியிலே நின்ற விசயனை,
                                  அங்கிபால் வில்லும்
ஏவும் முன் பெற்ற இறைவனை, எய்து எய்து, இளைத்தனன்,
                                  இரதி கேள்வனுமே.

64
உரை
   

கூற்றினை உதைத்த பாதமும், உடுத்த குஞ்சரத்து உரிவையும்,
அணிந்த நீற்று ஒளி பரந்து நிலவு எழு வடிவும், நிலா, வெயில்,
                                  அனல், உமிழ் விழியும்,
ஆற்று அறல் பரந்த கொன்றை வார் சடையும், அல்லதை
                                  யாவையும் கருதான்;
மாற்றம்  ஒன்று  இன்றி  நின்றனன்,  வரைபோல்
                                  வச்சிராயுதன் திருமகனும்.
65
உரை
   


'அன்று அரன் இருந்த யோகினை அகற்றி, அறிவு இலாது
                                  அநங்கனா வெந்த
குன்று இது; தடங் கண் ஆயிரம் உடையோன் கூறிய
                                  கூற்றினைத் தேறி,
இன்று, அவன் மதலை புரி தவம் குலைத்தால், என்
                                விளைந்திடும்?' என அஞ்சி
நின்றிலன், மதனன்;-நிற்குமோ, நெற்றி நெருப்பினால்
                                  நீறுபட்டுள்ளோன்?

66
உரை
   


தெய்வ மகளிர் முதலியோர் பயன் இன்றித்
திரும்பிச் செல்லுதல்

வானவர் பெருமான் ஏவலால் வந்த வானவர்
                                  மகளிரும், தம்மால்
ஆன அக் கிரீடை யாவையும் புரிந்தும் ஒரு பயன்
                                  பெற்றிலர், அகன்றார்;
கானகம் முழுதும் பரிமளம் பரப்பி, கான வண்டு
                                  இமிர்தரப் புகுந்த
வேனிலும் அகன்றது; அருக்கனும் குடபால் வெண் திரை
                            வேலைவாய் வீழ்ந்தான்.

67
உரை
   


இந்திரன் முனிவனாய் வந்து அருச்சுனன்
மனநிலை அறிய உரையாடுதல்

'இந்திரன் சுதன்தன் எண்ணம் யாவது?' என்று
                                  இனிதின் எண்ணி,
இந்திரசாலமாக ஏவினார் எவரும் எய்தி,
இந்திரநீலந்தன்னில் இறைவனுக்கு உரைத்தார்; அந்த
இந்திரன்தானும் மைந்தன் தவம் புரி இருக்கை சேர்ந்தான்.

68
உரை
   


விருத்த மா முனிவன் ஆகி, விசயனை நோக்கி, 'யாது
கருத்து? நீ தவம் செய்கின்ற காரணம் என்னை?' என்ன,
திருத்தகு சிந்தையோடும் செந் தழலிடை நின்றோனும்,
மருத்துவன் உருவம் மாறி வந்தவாறு உணர்கிலாதான்,

69
உரை
   


'மாசு அறு மதியம் அன்ன வாள் முக மங்கை பாகத்து
ஈசன் வந்து எய்துகாறும், இத் தவம் புரிவேன்' என்ன,
'ஆசு அறு கடவுளோர்க்கும், அரு மறைதனக்கும், எட்டாத்
தேசவன் வருமோ?' என்று சிரித்தனன், தேவர் கோமான்.

70
உரை
   

'சிரித்தது ஏன்?' என்ன, மீண்டும் திருமகன்தன்னை
                          நோக்கி,
'வருத்தமே அன்றி, இந்த மா தவம் பயன் இன்று'
                          என்றான்;
உருத்து இவன் அவனை நோக்கி, 'உயிர் இறும்
                          அளவும், இந்தக்
கருத்து நான் வீடேன்' என்றான், கடுங் கனல் ஊடு
                          நின்றான்.
71
உரை
   


அருச்சுனனது மனவுறுதி கண்டு மகிழ்ந்து, இந்திரன்
தன் உண்மை வடிவுடன் அருள் புரிதல்

மைந்தன் இம் மாற்றம் கூற, மனன் உற மகிழ்ந்து,
                        தெய்வத்
தந்தையும், விருத்த வேடம்தனை ஒரு கணத்தில் மாற்றி,
இந்திரன் ஆகி, முன் நின்று, 'இப் பெருந் தவத்தால்
                         வந்து,
பைந்தொடி பாகன் பாசுபதம் உனக்கு உதவும்' என்றான்.

72
உரை
   


சேடியரால் அருச்சுனன் தவநிலை அறிந்த உமை,
சிவபெருமானுக்கு அதனை அருளிச் செய்தல்

என்று உரைத்து, அமரர் கோமான் ஏகிய பின்னர்,
                             வெள்ளிக்
குன்றுடைப் புனிதன் பாதம் குறிப்புறு மனத்தன் ஆகி
நின்று, நல் தவம் செய்கின்ற நெடுந்தகை நீர்மை
                             எல்லாம்
சென்று, உமைக்கு உரியர் ஆன சேடியர் செப்பினாரே.

73
உரை
   


மேனை முன் பெற்ற கிள்ளை, வேலையும் சேலினோடு
மானையும் பொருத செங் கண் மரகதவல்லி, கேட்டு,
தானையும், கரிய பேர் உத்தரியமும், ஆகச் சாத்த
ஆனை அன்று உரித்த நக்கற்கு அடி பணிந்து,
                           அருளிச்செய்தாள்.

74
உரை
   


ஆலம் உண்டு அமுதம் பொழிதரு நெடுங் கண் அம்பிகை
                           அருள் மொழி கேட்டு,
நீலம் உண்டு இருண்ட கண்டனும், இரங்கி, 'நிரை வளைச்
                           செங் கையாய்! நெடிது
காலம் உண்டு; அருள் கூர் அறத்தின் மைந்தனுக்கும்
               காற்றின் மைந்தனுக்கும் நேர் இளையான்;
ஞாலம் உண்டவனுக்கு உயிர் எனச் சிறந்தோன்; "நரன்"
                         எனும் நாமமும் படைத்தோன்;

75
உரை
   


'ஆடியானனன்தன் மதலையர் விரகால் ஆடிய சூதினுக்கு
                                  அழிந்து,
காடு தாம் உறையும் கடனினர் அவரில் கடவுள் நாயகன்
                                  தரு காளை;
நீடு பேர் அமரில் பகைவரைச் செகுக்கும் நினைவினால்,
                                  நெருப் பிடை, நம்மை
நாடியே, அரிய தவம் புரிகின்றான்; நாம் இது முன்னமே
                                  அறிவோம்;

76
உரை
   


'பருகு நீர் துறந்து, காற்றும் வெவ் வெயிலும்
                           பாதபங்களின் சினை உதிர்ந்த
சருகுமே ஒழிய, காய் கனி கிழங்கும் தான் இனிது
                                  அருந்துதல் தவிர்ந்தான்
உருகு மா மனத்தை நாம் உவந்து இருத்தற்கு உறைபதி
                                  ஆக்கி, நம்மிடத்தே
செருகினான், உணர்வை; யாவரே, இவன்போல் செய் தவம்
                                  சிறந்தவர்?' என்றான்.

77
உரை
   


மூகாசுரனை வதைத்து, அருச்சுனனுக்கு அருள்புரிய, சிவனும்
உமையும் வேடவடிவம் கொண்டு கணங்களுடன் வருதல்

போகமாய் விரிந்தும், போகியாய்ப் பரந்தும்,
                         புலன்களின்வழி மனம் செலுத்தா
யோகியாய் இருந்தும், யோகிகள் முதலா உரைப்ப அரும்
                                  பல பொருளாயும்,
ஏகமாய் நின்றும், தத்துவ மறைக்கும் எட்டுதற்கு அரிய
                                  தன் வடிவில்
பாகமாய் விளங்கும், பைந்தொடியுடனே பரிவுடன் சில்
                                  மொழி பகர்வான்;

78
உரை
   


'கேட்டி நீ, செவ் வாய்க் கிளி நிகர் மொழியாய்! கிரீடியைத்
                                  துணைவர்களுடனே
காட்டிலே ஒதுக்கி, இளைஞரும் தானும் கடிய
                                வஞ்சனையினால் கவர்ந்த
நாட்டிலே வாழ்வோன் ஏவலால், மூக நாம தானவன்
                                  இவன் தன்னைக்
கோட்டிலே கொலை செய் ஏனமாய் வந்து, இக் குன்றிடை
                                  இன்று புக்கனனால்.

79
உரை
   


'மற்று அவன் விரைவினுடன் அமர் மலைந்து, வாசவன்
                                     மதலையை வதைத்து,
நல் தவம் அகற்றும் முன்னமே விரைந்து, நாம் உயிர்
                                     கவருதல் வேண்டும்;
கொற்றவன் மதலை கேட்டன வரங்கள் கொடுத்தலும்
                                     வேண்டும்' என்று எழுந்தான்-
கல் தவர் வளைத்துத் திரிபுரம் எரித்தோன், கற்றவர்
                                     கருத்தினால் காண்போன்.

80
உரை
   


நனை மலர் சிதறித் தொழுது, முன் நின்ற நந்திமேல்
                                  நயனம் வைத்தருளி,
'வினை படு கேழல் வேட்டை, நாம் இன்றே, வேடராய்
                                  ஆடுதல் வேண்டும்;
நினைவு உற எமது கணத்தொடு, இக்கணத்தே, நீயும் அவ் உருக்
                                  கொளுக' என்று,
மனைவியும் தானும் கிராதர்தம் குலத்து மகிழ்நனும்
                                  வனிதையும் ஆனார்.

81
உரை
   


என்ற பொழுதினில், நந்தி முந்தி, முதல் கூற்று உதைத்த இரு
                                  தாள் போற்றி,
வென்றி புனை கண நாதர்க்கு உரைசெய்தான்; அவர்களும்
                             அவ் வேடம் கொண்டார்;
கொன்றை கமழ் முடியோனும் வேணியினைப் பின்னல் படு
                                  குஞ்சி ஆக்கி,
துன்றும் மயில் பீலி நெடுங் கண்ணி திரு நெற்றி
                                  உறச் சுற்றினானே.

82
உரை
   


நீல மணித் திருக்கண்டம் நிலவு எழவே பலகறைப் பூண்
                                  நிறையக் கட்டி,
கோல மணிக் குழைகளினும் குழையாகப் பிணையல் மலர்
                                  கொண்டு சாத்தி,
சேலை எனப் புலி அதளும் திரு மருங்கில் உறச் சேர்த்தி,
                                  செய்ய பைம் பொன்
கால் இணையில் செருப்பு அணிந்து, செய்ய திருவடிவு மிகக்
                                  கரியன் ஆனான்.

83
உரை
   


இடக் கைம் மலர் வரி சிலையும், வலக் கைம் மலர்ப்
                         பாணமும், வெந்நிடையே பாணம்
அடக்கிய வெங் கொடு வரித் தோல் ஆவ நாழிகையும்,
                                  மிக அழகு கூர,
கடக் களிறு அன்று உரித்த பிரான், கண்டவர்கள் வெருவர
                                  முன் கொண்ட கோலம்
தொடக்கி, உரைசெய நினைக்கில், ஆயிரம் நா
                         உடையோற்கும் சொல்லல்ஆமோ?

84
உரை
   


குறைந்த சந்திர கிரணமும், பீலியும், கொன்றை அம்
                                   திருத் தாரும்
புறம் தயங்கிட விழுந்த செந் தனிச் சடைப் பொலிவை
                                  யார் புகல்கிற்பார்?-
சிறந்த பைம் பொலங் கிரி முடி அடி உற, தேவர்கோன் திருச்
                                  செங் கை
நிறம் தரும் சிலை வளைவு அற, அழகு உற, நிமிர்ந்து
                                  நின்றது போலும்!

85
உரை
   


வரை அரசன் திரு மடந்தை வன முலைமேல் மணிக்
                                 குன்றிவடமும், செங் கை
நிரை வளையும், புலிப் பல்லால் நிறம் திகழ் மங்கலப்
                                 பூணும், நீல மேனி
விரை அகிலின் நறுஞ் சாந்தும், விரித்த தழைப்
                                 பூந் துகிலும், வேடமாதர்
நிரைநிரையே தனைச் சூழ நின்ற வடிவு அழகினுக்கு
                                 நிகர் வேறு உண்டோ?

86
உரை
   


கணங்களோடு இறைவன் வந்து, ஏனத்தின் சுவடு நோக்குதல்

ஓர் ஏனம் தனைத் தேட, ஒளித்தருளும் இரு பாதத்து
               ஒருவன், அந்தப்
போர் ஏனம்தனைத் தேடி, கணங்களுடன் புறப்பட்டான்;
               புனங்கள் எல்லாம்
சீர் ஏனல் விளை கிரிக்குத் தேவதை ஆம் குழவியையும் செங்
               கை ஏந்தி,
பார், ஏனை உலகு, அனைத்தும் பரிவுடனே ஈன்றாள் தன் பதி
               பின் வந்தாள்!

87
உரை
   


அனந்த வேதமும் இறைவன் ஏவலினால், ஞாளிகளாய்
               அருகு சூழ,
அனந்த கோடியின் கோடி கணநாதர் வேட்டுவராய்
               அருகு போத,
'அனந்தனால் இனித் தரிக்க அரிது அரிது, இப் பூதலம்!' என்று
               அமரர் கூற,
அனந்த மா முகம் ஆகி, அடிச் சுவடு நோக்கினான்,
               அடவி எல்லாம்.

88
உரை
   


எதிர்ந்த பன்றிமேல் அருச்சுனனும் சிவபெருமானும்
அம்பு எய்தல்

'மூக தானவன் இவன்மேல் முந்தி உயிர் கவரும்' எனும்
               சிந்தையான், அப்
பாகசாதனி தவம் செய் பாக்கிய பூமியை நோக்கி, பரிவினோடும்
ஏக சாபமும் வணக்கி, ஏகினான்; ஏகுதலும், இலங்கு
               வெண்ணீற்று
ஆகனால் நோக்கப்பட்டு, அணுகியதால், அருந் தவன்மேல்
               அந்த ஏனம்.

89
உரை
   


அதிர்ந்து வரு கேழலைக் கண்டு, 'அருந் தவத்தை அழிக்கும்'
               என அஞ்சி, நாளும்
உதிர்ந்த சருகு உணவு ஒழிய உணவு இலான், விரைவினில் தன்
               ஒரு வில் வாங்கி,
முதிர்ந்த சினத்துடன் எய்தான், முகம் புதைய; அக் கணைக்கு
               முன்னே, அண்டம்
பிதிர்ந்திட, வில் நாண் எறிந்து, வேடன் அதன் அபராங்கம்
               பிளக்க எய்தான்.

90
உரை
   


வேடர்கள் அருச்சுனனோடு பூசலிட, அவன்
சிவபெருமானோடு பேசுதல்

இருவரும் ஏவிய வாளி உடனே பட்டு, உடல் உருவி,
               ஏனம் வீழ,
வெருவருமாறு, அடவி, எலாம் தடவி வரு வெஞ்சிலைக் கை
               வேடன் சேனை,
'ஒருவன் முதல் எய்திருக்க, அவ் இலக்கை நீ எய்தது
               உரனோ?' என்று'
பொரு அரு மா தவம் புரியும் புருகூதன் மதலையுடன்
               பூசலிட்டார்.

91
உரை
   


புராதனாகம, வேத, கீத, புராண ரூபம் ஒழித்து, வெங்
கிராதனாகிய வடிவுகொண்ட கிரீசனோடு உரைசெய்குவான்-
விராதன் ஆதி நிசாசரேசரை வென்று, முச்சிகரத்தின்மேல்
இராதவாறு, அடல் அமர் புரிந்த, இராமனே நிகர் ஏவினான்:

92
உரை
   


'முன்பு விட்ட என் வாளி கேழல் முகம் பிளந்து
               பின் உருவ, நீ
பின்பு விட்ட சரம் சிரத்திடை உருவுமாறு பிளந்ததால்;
வன்பொடு இப்படி புகலுகின்றது வன்மையோ? திறல்
               வின்மையோ?
என் பெயர்ப் பொறி ஏவு பார்; இதன் உடலில் நீ விடும் ஏவு பார்.

93
உரை
   


'எனக்கு அருந் தவம் முயறலால், உதிர் சருகு அலால்
               உணவு இல்லையால்;
உனக்கும், உன் படை வேடருக்கும், நல் உண்டி ஆம்; இது
               கொண்டு போ;
வனக் குறும் பொறை நாட! உன் படை வலிமை கொண்டு,
               வழக்கு அறச்
சினக்கில், வெங் கணை விடுவன் யான், உயர் திசைதொறும்
               தலை சிந்தவே.'

94
உரை
   


'தவம் புரியும் நீ பன்றியைக் கொன்றது தகுமோ?'
என வேடன் உரைத்து, அருச்சுனனது
தவ நோக்கத்தை வினாவுதல்

என்ற மொழி செவிப் படலும், எயினர்க்கு எல்லாம் இறைவன்
               ஆகிய எயினன் இவனை நோக்கி,
'பன்றி பெரு மோகரத்தோடு இன்று உன் ஆவி பருகியிடும் என
               மிகவும் பயப்பட்டாயோ?
நின்று பெருந் தவ முயல்வோர் தாங்கள் கொண்ட நினைவு
               ஒழியப் புறத்து ஒன்று நினைவரோ, சொல்,
பொன்றிடினும், நீ அறிய? பசுத்தோல் போர்த்துப் புலிப்
               பாய்ச்சல் பாய்வரோ?-புரிவிலாதாய்!

95
உரை
   


'மறையவனோ? ஒரு குடைக்கீழ் வையம் காக்கும் மன்னவனோ?
               வைசியனோ? வடிவம் மாறிப்
பொறையுடனே தவம் புரியும் அவுணர் மாக்கள், புத்தேளிர்,
               நிருதரில், ஓர் புறத்து உளானோ?
நிறையுடன் மெய்ப் பிறை போல வடிவம் தேய்ந்து, நெருப்பிடை
               நீ நிற்கின்றாய், நெடு நாள் உண்டு;
குறை உனக்கு யாது? உரை!' என்றான். என்ற போது, அக் குருகுல
               நாதனும், தன்னைக் கூறினானே.

96
உரை
   


அருச்சுனன் என்று அறிந்த வேடன், பழம் பகை கூறி,
அவனைப் போருக்கு அழைத்தல்

கூறிய சொல் கொண்டு அறிந்து, வேடன், மீண்டும்,
               'குருகுலத்தோர் ஐவருளும் குனி வில் கற்று,
சீறி வரு துருபதனைத் தேரில் கட்டி, சென்று, குருதக்கிணை
               செய் சிறுவன் நீயோ?
வீறிய எம் குலத்தில் ஒரு வேடன்தன்னை வின்மை பொறாது
               அவன் தடக் கை விரலும் கொண்டாய்!
பேறு அற, அன்று, ஒரு முனிவன் வார்த்தை கேட்டு, பிளந்தனை,
               பல் வேடுவரை, பிறை வாய் அம்பால்.

97
உரை
   


'கன்றிவரு கனல்-கடவுள் கையில் தேரும், காண்டீவக் கார்
               முகமும், கணையும், வாங்கி,
ஒன்றுபடக் காண்டவக் கான் எரித்த நாளில், "ஓர் உயிர்போல்
               பல யோனி உயிரும் மாட்டி,
குன்றுதொறும் குன்றுதொறும் இருந்த வேடக் குழாம்
               அனைத்தும் நீறுபடக் கொன்றாய்" என்பர்;
இன்றும் எனை முகம் நோக்கி, வன்மை, வின்மை,
               இரண்டுக்கும் மன்னவ! நீ இகழ்ந்திட்டாயே!

98
உரை
   


'மல்லுக்கும், புய வலிக்கும், கலக்குறாத மன வலிக்கும்
       மறையுடன் போர் வாளி ஏவும்
வில்லுக்கும், உனின் மிகுத்தார் மண்மேல் உண்டோ? விசயன்
       எனும் பெயர்க்கு உரிய விசயத்தாலே,
சொல்லுக்கு விடேன்; இன்று, நீயும் நானும், தோள் வலியும்
       சிலை வலியும் காண்டல் வேண்டும்;
கல்லுக்கு நிகர் மனத்தாய்!' என்றான்; அந்தக் காளையும்
       வில் வளைத்து, ஒரு வெங் கணை மேல் விட்டான்.

99
உரை
   


இருவரும் போரிடுதல்

விட்ட கொடுங் கணையை, ஒரு கணையால் வேடன் விலக்கி, வரி
            சிலைக்கு உரிய விசயன்தன்மேல்
தொட்டனன், ஓர் இரண்டு கணை; அவை போய் மார்பும்,
           தோளும், உடன் துளைத்தனவால்; துளைத்த போது,
கட்டு அழலின் இடை நின்ற காளை மீளக் கடுங் கணைகள்
           ஒரு மூன்று கடிதின் வாங்கி,
வட்ட நெடும் பீலி அணி முடியும், மார்பும், வாகுவுமே,
           இலக்காக வலியொடு எய்தான்.

100
உரை
   


எய்த கணை திருமேனி எய்தும் முன்னர், இறகு துணிந்து, ஒன்று
                இரண்டாய், இலக்கு உறாமல்,
வெய்தின் வலியுடன் எய்தான், மூன்று வாளி; விண்ணவர்கோன்
                மகன், மேலும், வேறொன்று எய்தான்;
'ஐதின் இவன் வினோதம் உறத் தொடுத்தான்!' என்பது
                அறியாமல் எயினன் முடி அணிந்த பீலி
கொய்து, நதி அறல் சிதற, பிறையும் மானும் குலைய, ஒரு கணை,
                குரக்குக் கொடியோன் எய்தான்.

101
உரை
   


அல் போலச் சூழ்கின்ற கிராதர் எல்லாம் அவன் முடிமேல்
                இவன் எய்தது அறிந்து, தீயின்
நிற்போன்மேல் எழுதலும், அங்கு அவரை எல்லாம், 'நில்லும்'
                எனக் கை அமைத்து, 'நீ இன்று எய்த,
விற்போர் கண்டனம்; அடடா! வில் பிடிக்கும் விரகு அறியோம்!
                உன்னிடத்தே வேத விற்போர்
கற்போம்!' என்று ஒரு கணை மற்று அவன்மேல் விட்டான்,
                கனக மலைச் சிலை வளைத்த கையினானே.

102
உரை
   


பீலி முடியோன் விடு பிறைக் கணையை வேறு ஒரு பிறைக்
                கணையினால் விலகி, வில்
கோலி, வடி வாளி மழை சிந்தினன், மழைக் கரிய கொண்டல்
                என நின்ற குமரன்;
மூலி வடிவாம் எயினன்மேல் அவை படாமல், முனை மண்மிசை
                குளிக்க, முரண் ஆர்
வேலி இடுமாறு என, விழுந்தன; விழுந்ததனை விசயன், நனி
                கண்டு, வெகுளா,

103
உரை
   


வேணிமுடி வேடன்மிசை வேறும் ஒரு சாயகம் விடுத்தனன்;
                விடுத்த கணை, வில்
நாணி அற, முன்பினொடு பின்பு தொடுகின்ற கணை நடுவண்
                அற, வெட்டுதலுமே;
கோணிய இளம்பிறை முடித்தவன் வெகுண்டு, பல கோல்கள்
                விட, இந்த்ரகுமரன்
பாணியுடனே தொடை நடுங்கி, அயல் நின்றது ஒரு பாதவ
                மருங்கு அணுகினான்.

104
உரை
   


கொண்ட தவமே தனம் எனப் புரியும் வில்லி, மெய் குலைந்து,
                அயருகின்ற நிலையைக்
கண்டு, அருகு நின்ற இமவான் மகள் உரைக்க, மிகு கருணையொடு
                இரங்கி, அவனை,
பண்டு தவமே புரி இளைப்பு அற, மனத்தின் மிகு பரிவுடையன்
                ஆகி, வெகுளா,
எண் திசையும் வென்று, அனல் அளித்த சிலை நாணி அற,
                எயினர் பதி எய்தனன் அரோ!

105
உரை
   


விசயனது வில்லால் வேடன் அடியுண்ண, எல்லாப்
பொருள்களும் அந்த அடியை ஏற்றல்

உழுந்து உருளும் எல்லைதனில் வில்லின் நெடு நாண் அற,
                உரத்தொடு எதிர் ஓடி, வரி வில்
கழுந்து கொடு மா முடியின் மோதுமுன், இழந்தது உயர் கண்ணி
                படு பீலி; மதியின்
கொழுந்து அமுது சோர, விட நாகர் சுடிகைத் தலை குலைந்து
                மணி சிந்த, நதியாள்
எழுந்து தடுமாறி அகல் வானில் உற, வேடனும் இளைத்து,
                அவசம் உற்றனன்அரோ.

106
உரை
   


விண்ணில் உறை வானவரில் யார் அடி படாதவர், விரிஞ்சன்
                முதலோர்? உததி சூழ்
மண்ணில் உறை மானவரில் யார் அடி படாதவர், மனுக்கள்
                முதலோர்கள்? அதலக்
கண்ணில் உறை நாகர்களில் யார் அடி படாதவர்கள், கட்செவி
                மகீபன் முதலோர்?
எண் இல் பல யோனியிலும் யா அடி படாதன, இருந்துழி
                இருந்துழி அரோ?

107
உரை
   


வேதம் அடியுண்டன, விரிந்த பல ஆகமவிதங்கள் அடியுண்டன;
                ஓர் ஐம்
பூதம் அடியுண்டன; விநாழிகை முதல் புகல் செய் பொழுதொடு,
                சலிப்பு இல் பொருளின்
பேதம் அடியுண்டன;-பிறப்பு இலி, இறப்பு இலி, பிறங்கல்
                அரசன்தன் மகளார்
நாதன், அமலன், சமர வேட வடிவம் கொடு நரன் கை
                அடியுண்ட பொழுதே.

108
உரை
   


விசயனுக்கும் சிவ வேடனுக்கும் மற்போர் நிகழ்தல்

என்பொடு, கொழுந் தசை, நிணம், குருதி, என்னும் அவை
                ஈர்-இரண்டானும் வயிரா,
வன்பொடு வளர்ந்த மிருகாதிபதி காரி எனும் வடிவழகு
                பெற்ற மறவோன்,
அன்பினொடு பேர் அறம் வளர்த்தருள் எயிற்றி மிக அஞ்ச,
                அபிராம எயினன்
பொன்புரையும் மேனியில் அடித்தமை பொறாது, மற் போர்
                புரியுமாறு கருதா,

109
உரை
   


உள் அடி, விரல்-தலைகள், புற அடி, பரட்டினுடன், உயர்
                கணைக்கால், முழந்தாள்,
தள்ள அரிய ஊரு, உயர் தாள் வரைகள் ஒத்த கடிதடம், உதரம்,
                மார்பு, திணி தோள்,
துள்ளி வரு செங் கையொடு, முன்கை, பிடர், நெற்றியொடு, சூடம்,
                என எண்ணுபடையால்,
வள்ளல், எனை ஆளுடைய மாதவனும், மா தவனும் மல்
                அமர் தொடங்கியுறவே,

110
உரை
   


வேடன் விசயனை விண்ணில் வீச, அவன்
மீண்டு வந்து போர் புரிய எண்ணுதல்

மல் அமர் தொடங்கி, இவர் இருவரும் வெகுண்டு பொர,
                மாதிரமும் மாநிலமும், மேல்
எல்லையும், அதிர்ந்து, சுழல்கின்றபொழுதத்து, இமைய இன்ப
                மயில் கேள்வன் வெகுளா,
நல் இசை புனைந்த மணி நூபுர விசால ஒளி நண்ணு
                பத நாள்மலரினால்,
வில்லியரில் எண்ணு திறல் வில்லுடைய காளைதனை விண்ணில்
                உற வீசினன்அரோ.

111
உரை
   


விண்ணவர்தம் ஊர் புகுத, விண்ணவர் பிரான் மதலை
               விசையுடன் எழுந்து, முகில் போல்
மண்ணினிடை வீழ்தரும் முன், மார்பு அகலம் அல்லதை
                வயங்கு புறம் என்றுதெரியான்,-
எண் அரிய ஞான ஒளி ஆகி, வெளிஆகி, வரும் எயினர் பதி
                ஆன கருணைப்
புண்ணியன் மகிழ்ந்து உருக,-நின்று, ஒலியுடன் பழைய பூசல்
                பொர எண்ணி எதிர்வான்.

112
உரை
   


அப்பொழுது கணநாதர் முதலியோர் சூழ,
சிவபெருமான் காட்சி தருதல்

வெய்ய கண நாதர், கண தேவர், விபுதாதியர், விரிஞ்சி,
                சிவயோகியர், அருஞ்
செய்ய சுடரோன், அளகைஆதிபதி, கின்னரர்கள், சித்தர், பல
                சாரணர், மணிப்
பை அரவின் ஆடி, புருகூதன், இவர் சூழ்தர, ஓர் பச்சை
                மயில் பாதியுடனே
துய்ய விடைமீது ஒரு செழுஞ்சுடர் எழுந்தது; தொழும்தகையது
                ஆகும் அளவோ!

113
உரை
   


கை விலுடனே எயினர் கோடி பலர் சூழ வர, கன்னி மயில்
                பின்னர் வரவே,
தெய்வ மறை ஞாளிகள் தொடர்ந்து வர, வந்து பொரு செய்ய
                சிவவேடன் முடிமேல்,
சைவ முறையே இறைவர் தண் மலரினோடு அறுகு சாத்தி, ஒளிர்
                நாள்மலர் எலாம்
மெய் வடிவு கொண்டனைய கரிய தவ வேடன், இணை விழி மலர்
                பரப்பி, மகிழா,

114
உரை
   


தும்பை வகை மாலை, செறி வில்லமொடு, கொன்றை மலர், சூதம்,
                அறுகே, கமழ்தரும்
செம் பவள வேணிமிசை திங்கள், நதி, சூடியருள், செம் பொன்
                வட மேரு அனையான்,
உம்பர் மணி யாழினொடு, தும்புருவும் நாரதனும், உருகி இசை பாட,
                அருள் கூர்
அம்பையுடனே விடையின்மீது ஒளிர நின்றதனை, அஞ்சலி செய்து,
                அன்பொடு தொழா,

115
உரை
   


அருச்சுனன் சிவனது திருக்கோலம் கண்டு,
ஆடிப் பாடிப் பரவுதல்

ஆடினன், களித்தனன், அயர்ந்து நின்றனன்;
ஓடினன், குதித்தனன், உருகி மாழ்கினன்;
பாடினன், பதைத்தனன்; பவள மேனியை
நாடினன், நடுங்கினன்;-நயந்த சிந்தையான். .

116
உரை
   


'விழுந்து, அரு வினையினின் மெலிந்து, நாயினும்
அழுந்திய பிறவியின், அயருவேன் முனம்,
செழுஞ் சுடர் மணிப் பணித் திங்கள் மௌலியாய்!
எழுந்தருளிய இஃது என்ன மாயமோ?

117
உரை
   


'ஆதியே! அண்டமும் அனைத்துமாய் ஒளிர்
சோதியே! கொன்றைஅம் தொங்கல் மௌலியாய்!
வாதியே! மரகத வல்லியாள் ஒரு
பாதியே! பவளமாம் பரம ரூபியே!

118
உரை
   


'பை அரா அணி மணிப் பவள மேனியாய்!
செய்ய வாய் மரகதச் செல்வி பாகனே!
ஐயனே! சேவடி அடைந்தவர்க்கு எலாம்
மெய்யனே! எங்குமாய் விளங்கும் சோதியே!

119
உரை
   

'முக்கணும், நிலவு எழ முகிழ்த்த மூரலும்,
சக்கர வதனமும், தயங்கு வேணியும்,
மைக் கயல் மரகத வல்லி வாழ்வுறு
செக்கர் மெய் வடிவமும், சிறந்து வாழியே!

120
உரை
   

'அன்பு உறு தருமனுக்கு அநுசன் ஆயினேன்!
நன் பரம்பொருளுக்கு நண்பும் ஆயினேன்!
பொன் புரை மேனியாய்! போற்றினேன் உனை;
என் பெருந் தவப் பயன் யார் பெற்றார்களே!'

121
உரை
   

சிவபெருமான் அருச்சுனனைத் தழுவி,
அருள் மொழி கூறித் தேற்றுதல்

என்று கொண்டு, இம் முறை இவன் இயம்பவே,
மன்றல் அம் கொன்றை அம் மாலை மௌலியான்,
ஒன்றிய தவம் புரி உம்பர் தம்பிரான்-
தன் திரு மதலையைத் தழுவினான்அரோ.

122
உரை
   

தழுவினன் பெருந் துயர் அகற்றி, தண்ணளி
பொழிதரு கண்ணினன், புரக்கும் சிந்தையன்,
அழிவு அற, ஒழிவு அற, அமர்ந்த சோதியன்,
பழுது அறு மொழி சில பகர்ந்து, தேற்றினான்:

123
உரை
   


'சூதினில் யாவையும் தோற்று, கானிடை
ஏதிலர் போல நீர் இளைத்து, வாடினீர்!
வாது செய் புலன்களை அடக்கி, மண்ணின்மேல்
நீ தவம் புரிந்தமை நினையல் ஆகுமோ?

124
உரை
   


'மூகன் என்று உரைக்கும் அம் மூக தானவன்,
வேகமோடு, ஏனமாய், விரைவில் வந்தனன்-
நாக வெங் கொடியவன் நவின்ற வாய்மையால்,
யோகு செய் உனது உயிர் உண்ண எண்ணியே.

125
உரை
   


'வந்து, அவன் முந்தும் முன், மங்கைதன்னுடன்
இந்த வெற்பு உறைதரும் எயின வேடமாய்,
சுந்தர மரகதச் சோதி வீரனே!
அந்த வல் அசுரனை அம்பின் வீழ்த்தினேன்.

126
உரை
   


'நின்னுடன் அமர் செய்து, நின் வில் நாண் அறுத்து,
அந் நெடு வில்லினால் அடியும் உண்டனன்;
உன் அரு மல்லினால் உதையும் உண்டனன்;
என், இனி உன் கருத்து?' என்று கூறினான்.

127
உரை
   


அருச்சுனன் பாசுபதம் வேண்ட, சிவபெருமான்
அளித்து, கயிலைக்கு மீளுதல்

அந்த வில் விசயனும், அவன் பதம் பணிந்து,
'எந்தை! பாரத அமர்க்கு இசைந்த வீரர் மெய்
சிந்த, நின் பேர் பெறு தெய்வ வாளியைத்
தந்தருள்' என்றனன்-தவத்தின்மேல் நின்றான்.

128
உரை
   


ஐயனும், அம்மையோடு அருள் புரிந்து, பின்,
வெய்ய பொன் தூணியும், வில்லும், மந்த்ரமும்,
துய்ய பாசுபத மெய்த் தொடையும், முட்டியும்,
ஒய்யென நிலையுடன் உதவினான்அரோ.

129
உரை
   


பெற்றனன் விசயனும்; பேயும், பூதமும்,
சுற்றிய கணங்களும், சுருதி ஓசையும்,
வெற்றி கொள் பெற்றமும் விழைந்து சூழவே,
கற்றை அம் சடையவன் கயிலை ஏகினான்.

130
உரை
   


பின்னர், இந்திரன் வந்து, விசயனைத் தழுவி
வானுலகிற்கு அழைத்துச் செல்லுதல்

ஏகிய பின்னர், ஆயிரம் கண் நாதனும்,
மோகர துந்துபி முழங்க, தேரின்மேல்
நாகரும் முனிவரும் நண்ணி வாழ்த்தவே,
வாகை கொள் விசயனை, வந்து, புல்லியே.

131
உரை
   


'நீ புரி தவப் பயன் நீடு வாழியே!
சாபமும், தூணியும், சரமும், வாழியே!
தீப மெய் ஒளியுடன் சேர்ந்து, போர் செயும்
மா பெரு நீல மெய் வாழி, வாழியே!'

132
உரை
   


என்று கொண்டு, இணை அடி இறைஞ்சும் மைந்தனை,
தன் திருத் தேரின்மேல், தாழ்ந்த கைகளால்,
ஒன்றிய உவகையோடு ஏற்றி, உம்பர் கோன்
சென்றனன், தன் பெருந் தெய்வ வானமே.

133
உரை
   


ஒரு பெரு மாதலி ஊரும் தேரின்மேல்,
இரு மரகத கிரி இருந்த என்னவே,
மரு வரு கற்பக மாலை மௌலியும்,
விரி புகழ் மைந்தனும், விளங்கினார்அரோ.

134
உரை
   


ஆயிரம் பொலங் கிரி அழித்து, வானின்மேல்,
மா இரும் ஒரு புரம் வகுத்தது என்னவே,
பாயிர மறை புகழ் பரமன் தேசு என,
சேய் இரும் பொன் நகர் திகழ்ந்து தோன்றுமால்.

135
உரை
   


விண்ணவர் முனிவர் உள் விளங்கி வாழ்தலால்,
நண்ணிய முடிப்பெயர் நாகம் பூணலால்,
எண்ண அரு மகபதி இருந்த மா நகர்,
புண்ணியன் வடிவு எனப் பொலிந்து இலங்குமால்.

136
உரை
   


மாவலி சிறைப்பட வைத்த தாள்மலர்
தாவிய விண்ணிடைத் தயங்கு பொன் நகர்,
தேவரும் தொழு கழல் தேவன் உந்திஅம்
பூ இருந்தது என, பொலிந்து தோன்றுமால்.

137
உரை
   


தேவ மண்டபத்தில் இந்திரன் விசயனோடு
ஓர் ஆசனத்தில் இருத்தல்

பொலிவுறும் அந் நகர் புகுந்து, தாதையும்,
சிலை கணை பெறு திறல் தெய்வ மைந்தனும்,
மெலிவுறு மின் இடை நுடங்க, மீனினும்
பலர் அர மாதரார் பரிவு கூரவே,

138
உரை
   


பரு மணி வெயில் எழ, பணில மா நிரை
தரும் மணி நிலவு எழ, தமனியப் பெருங்
குரு மணிச் சிலம்பு ஒலி கூறும் மண்டபத்து,
ஒரு மணி ஆசனத்து ஓங்கி வைகினார்.

139
உரை
   


இந்திராணி வர, அவளை விசயன் வணங்குதலும்,
அவள் அவனை வாழ்த்திச் செல்லுதலும்

முருகு அவிழ் பரிமளம் மொய்த்த தண் துழாய்
மரகத கிரி திரு மைத்துனன்தனை,
பெருமித அபிமனைப் பெற்ற காளையை,
அருள் பெறும் உவகையோடு, அன்னை எய்தினாள்.

140
உரை
   


அன்னையை, மின் இடை அரிய பாவையை,
கன்னலை அமுதொடு கலந்த சொல்லியை,
உன்ன அருந் தவப் பயன் உற்ற மைந்தனும்,
சென்னியை அவள் பதம் சேர்த்து நின்றனன்.

141
உரை
   


நின்ற அக் குமரனைத் தழுவி, நேயமோடு
ஒன்றிய உவகையள், உரை வழுத்தினாள்-
'வென்றி கொள் ஐய! நீ விபுதர் தம் பிரான்-
தன் திருச் செல்வமும் தாங்குவாய்' எனா,

142
உரை
   


ஆயிரம் பதின் மடங்கு ஆக, அன்னையும்,
மா இரும் புதல்வனை வாழ்த்தி, வாழ்த்தியே,
தூய செம் பரு மணி சுடரும் மாளிகை
ஏயினள், இந்திரன் இதயம் போன்று உளாள்.

143
உரை
   


துந்துபி முதலியன முழங்க, இந்திரனுடன்
விசயன் வீற்றிருந்த சிறப்பு

அந்தர துந்துபி அதிரும் பேர் ஒலி,
முந்திய மறை ஒலி, முழங்கும் சங்கு ஒலி,
சிந்துர மத கரி சீறும் நீடு ஒலி,
சுந்தர முகில் ஒலி தூங்க, தூங்குமால்.

144
உரை
   


பத்தி கொள் நவ மணி பயின்று, செந் துகிர்க்
கொத்து ஒளிர் தளிருடன் குலவு கற்பகம்,
சித்திர விசய வில் விசயன் சென்னிமேல்
வைத்தது, முருகு அவிழ் வாச மாலையே.

145
உரை
   


கிளர் இசைத் தும்புரு, கிளரும் கற்பகத்
தளை அவிழ் நாள் மலர் சாத்தும் நாரதன்,-
அளி பயில் அமுதம் உண்டு, அகம் மகிழ்ந்து, உளக்
களியொடு,-கின்னரர், கானம் பாடவே.

146
உரை
   


செம்மணி வெயில் விரி சிலம்பு கொஞ்சவே,
கைம் மணி வரி வளை கலந்து பொங்கவே,
பெய்ம் மணி மேகலை பிறங்கி ஆர்க்கவே,
துய்ம் மணி ஒளி அரமாதர் சூழவே.

147
உரை
   


இவ்வாறு இவர் இருவோர்களும், இணை மாமுகில் எனவே,
செவ் வாள் அரி கிளர்கின்றது ஓர் செம் பொன் தவிசிடையே,
மைவ் வானகம் முழுதும் செழு மறை ஓசை விளைக்கும்
அவ்வானவர் புடை சூழ்தர, அழகு எய்தி இருந்தார்.

148
உரை
   


ஊர்வசி நடனம் ஆட, விசயன் கண்டு
களித்துப் புகழ்தல்

இருந்தார் இவர், குளிர் சாமரை இரு பாலும் இரட்ட,
பெருந் தாரகை மதி ஒத்து ஒளி பெறுகின்ற குடைக் கீழ்;
முருந்து ஆர் நகை அரமாதரின் முதன்மைப் பெயர் புனையும்
செருத்து ஆர் குழலுடையாள், அரி திரு ஊருவின் வந்தாள்.

149
உரை
   


மானே தரு விழியாள், திரு மாதே நிகர் எழிலாள்,
தேனே திகழ் மொழியாள், பொரு சிலையே தரு நுதலாள்,
தானே தனை நிகர்வாள், பெயர்தரு நாடகம் எல்லாம்
கானே செறி தொடையார் இரு கண் கண்டு களித்தார்.

150
உரை
   


'இந் நாடக விதம் யாவையும் யாரே தனி புரிவார்,
மின் ஆர் இடை, மின் நேர் இழை, மென் கொம்பை அலாதார்?'
என்னா, விழி களியா, மனம் உருகா, இசை எழுதும்
பொன்னாடு உடையவன் மைந்தன் வியப்போடு புகழ்ந்தான்.

151
உரை
   


இந்திரன் வானோர் முதலிய யாவர்க்கும்
விடை கொடுத்து அனுப்புதல்

திகழ்கின்றன உரை தந்தை செவிப் போது உற, மகிழா,
இகல் கொண்டு உயர் தோளாய்! புதிது, இந் நாடகம்!' என்னா,
மகவான் பெருமித வாழ்வு உரை வானோர் முதல் யாரும்
மிகு குங்கும முலையாருடன் விடை கொண்டிட, விட்டான்.

152
உரை
   


இந்திரனும் விசயனும் அமுது உண்டு, இனிது இருத்தல்

மகனும், புகழ் புனை தந்தையும், மந்தாகினி ஆடி,
சிகரம் பயில் வரைபோல் உயர் திரு மண்டபமிசையே,
அகில் துன்றிய குழலார் பலர் அர மாதர் அளிக்கும்
நிகரம் பயில் அமுது உண்டவர், நிறைவு எய்தி இருந்தார்.

153
உரை
   


இந்திரன் ஆணைப்படி விசயன் தனி மாளிகையில் சென்று
தங்க, சூரியன் மறைதலும் சந்திரன் தோன்றுதலும்

தருக்கும் களி அமுது உண்டு, அவர் தனி வாழ்வுறும் எல்லை,
சுருக்கும் கண மணி நீள் வெயில் சுடர் மாளிகை வேறு ஒன்று
இருக்கும்படி, விசயன் பெற ஈந்தான் விடை; அது கண்டு,
அருக்கன் குட கடல் மாளிகை அணி தேரொடு அடைந்தான்.

154
உரை
   


மேலைத் திசை காலைச் சுடர் வீழ்தந்திடும் முன்னம்,
மாலைச் சுடர் காலைத் திசை வாழ்வு உற்றிட வந்தான்-
சோலைத் தரு அருள் வாரிதி சூழ் வான் முகடு ஏறி,
பாலைப் பொழிவதுபோல், நிலவு ஒளி கொண்டு பரப்பா,

155
உரை
   


உருப்பசி அருச்சுனனிடத்திற்கு வர, அவள் பாதங்களை
வணங்கி, வந்த காரியத்தை வினாவுதல்

அந்தச் சிலை மகவான் மகன் அம்மாளிகையிடையே,
முந்து உற்றது ஓர் தவிசில், கரு முகில் போல இருந்தான்;
கந்தர்ப்பன் வெகுண்டு ஏவிய கணை பட்டு, உளம் உருகா,
நொந்துற்று, முன் நடனம் புரி நுண் நேரிழை அங்கண்,

156
உரை
   


அக் கங்குலினிடையே, மலர் அரிசந்தன வாசம்,
மைக் கங்குல் நிகர்க்கும் செறி மலர் நீலம், அணிந்தாள்,
உய்க்கும் பரு மணி நீலித உடை ஆடை உடுத்தாள்,
மெய்க்கும் தவ வய வாளி கொள் விசயன்னுழை வந்தாள்.

157
உரை
   


ஓர் ஆயிரம் அகல் வான்மணி ஒக்கும் தவிசிடையே,
ஈர் ஆயிரம் தீபங்கள் எறிக்கும் சுடர் எழவே,
வார் ஆயிர முகமா நுகர் மஞ்சு ஊர்தரு நயனப்
பேர் ஆயிரம் உடையான் மகன் எதிர் கொண்டு, இவை பேசும்:

158
உரை
   


'எந்தைப் பெயர் புனை ஆயு எனும் பேர் முடி இறைவன்
தந்தைக்கு உயிர் நிகர் ஆகிய தளவத் திரு நகையாய்!
கொந்து உற்று எழு குழலாய்! குழல் நிகர் ஆகிய மொழியாய்!
வந்து உற்றது என்?' என, அன்னை மலர்த்
                          தாள்களில் வீழ்ந்தான்.

159
உரை
   


உருப்பசி சினமொழி புகன்று, விசயனைப்
பேடியாகச் சபித்துச் செல்லுதல்

இவ்வாறு இவன் அவள் தாள்கள் இறைஞ்சி, புறம் நின்றான்;
மெய் வாய்மையின் உயரும் தவ விபுதாதிபர் மகளும்,
செவ் வாய் இதழ் மடியா, விழி சிவவா, மதி கருகா,
வெவ் வாள் அரவு உமிழும் கடு விடம் நேர் மொழி பகர்வாள்:

160
உரை
   


'இந்தத் தனி இரவின்கண் நின் இரு தோள் தழுவுறவே,
வந்துற்ற எனைத் தாயர்தம் வகையில் புகல் செய்யா,
நிந்தித்தனை; நீ செய் தவ நெறியின் பயன் எல்லாம்
வெந்துற்று, அரு நீறாய் எழ, விடுவேன்' என வெகுளா.

161
உரை
   

'நின் போல் மரபு உடையார் இரு நில மன்னரில் உண்டோ?
அன்போடு அழல் வரு பாவையை அடைவு உன்னி அளித்தாய்;
பொன்போல் இரவிடை ஆடவர் புகலா மொழி புகல்வாய்;
வன்போ? அருள் நலமோ? பெருமிதமோ? வளர் புகழோ?'

162
உரை
   


என, மன்னனை, 'நீ பேடியர் இயல்பு ஆக!' என விதியா,
நனை மென் குழல் மலர் மங்கையும் நாணும் நலம் உடையாள்,
தனி கங்குலினிடை சென்று உயர் தன் கோயில் புகுந்தாள்;
அனலன் தரு சிலை வீரனும், அஃது எய்தினன், அந்தோ!

163
உரை
   


சாபத்தால் பேடியான விசயன், உளம் நொந்து,
ஆடையால் மூடித் துயிலுதல்

ஆடித் திருமுக மன்னவன் அநுசன் தரு விசயன்,-
'பேடிப் பெயர் நாமோ பெறுவோம்!' என்று எழில் வடிவம்
வாடி, பெரிது உளம் நொந்து, அணி மாசு அற்றது ஓர் சால்,
மூடித் துயில் கொண்டான்-மணி முடி மன்னவர் திலகன்.

164
உரை
   


காலையில் இந்திரன் முப்பத்து மூவர் சூழச்
சபா மண்டபத்தை அடைதல்

அக் காலையில், விசயன்தனது இடர் ஆர் இருள் அகல,
செக் காவியும் அரவிந்தமும் வரி வண்டொடு திகழ,
மைக் கார் இருள் வெள்ளம் பில வள்ளத்திடை வடிய,
தொக்கான், உயர் குண திக்கினில்-அகிலம் தொழு சூரன்.

165
உரை
   


கதிர் உதித்த அக் காலையில், மா மறை
முதல்வர் முப்பத்து மூவரும் சூழ்வர,
புதல்வன் உற்றது உணரான், புரந்தரன்,
வித மணிப் பணி மண்டபம் மேவினான்.

166
உரை
   


விசயனை அழைத்துவர இந்திரன் ஒரு கந்தருவனை
ஏவ, அவன் விசயன்பால் உற்று, நிகழ்ந்தது
தெரிந்து வந்து கூறுதல்

கண் பரப்பி, ஒர் கந்தருவன்தனை,
விண் புரக்கும் அவ் வேந்தன் இருந்தபின்,
'மண் புரக்கும் வரி சிலை வீரனை
எண் பெறக் கொணர்வாய்!' என ஏவினான்.

167
உரை
   


மற்று அவன் திருத் தாள் மலர் போற்றி, அக்
கொற்றவன் திரு முன்னர்க் குறுகி, ஆங்கு
உற்ற யாவும் உணர்ந்தனன்; மீண்டு போய்ச்
சொற்றனன், சுரர் கோ முன் தொழுதுஅரோ.

168
உரை
   


தேவர் சூழ இந்திரன் விசயனை அணுகி,
'சாபம் தணியும்' என்று தேற்றுதல்

சொன்ன வாசகம் கேட்ட சுரபதி
கன்னம் வெந்து, கண் ஆயிரமும் புனல்
துன்ன, வானவர் சூழ்வர, தானும் போய்,
அந் நராதிபன்தன்னை அணுகினான்.

169
உரை
   


அணுகி மைந்தனை அன்பொடு உறத் தழீஇ,
'கணிகை இட்ட கடுங் கொடுஞ் சாபம் நீ
தணிதி! அஞ்சல்!' என்றான்-ஒரு தையலால்
பிணி உழந்து, முன் பேர் பெறும் பெற்றியான்.

170
உரை
   


இந்திரன் தேவருடன் உருப்பசியின் இடத்திற்குச் செல்ல,
அவள் அஞ்சி வணங்குதல்

அன்ன மென் நடை ஆயிழைதன்னுழைத்
துன்னினன், சுரரோடும் சுரேசன் போய்;
மின்னின் நுண் இடையாளும் வெருவுறா,
மன்னவன் பதம் வந்து, வணங்கினாள்.

171
உரை
   


தேவர்கள் விசயனுக்குச் சாபவிடை அருளுமாறு
அவளைத் துதித்து வேண்டுதல்

வணங்கும் முன்னம், மட நடை ஓதிமக்
கணம்கொல் என்னக் கவின் பெறு கோதையை,
சுணங்கு அறா முலைத் தோகையை, வார் குழல்
அணங்கை, அண்டர் அனைவரும் போற்றியே,

172
உரை
   


'அன்னை நீ அவற்கு ஆயினும், ஆசையின்
இன்னல் தீர்ப்பது எவர்க்கும் இயல்புஅரோ;
மன்னன் ஆயினும், வான் பிழை செய்தனன்'
என்ன, நாகர் அவட்கு இதம் கூறியே,

173
உரை
   


'காமம் மிக்க உன் கட்டுரைச் சாப நோய்
பூமி பொய்ப்பினும், பொய்ப்பது அன்றால்அரோ!
வேய் மலர்த் தொடையான் நெஞ்சில் வேண்டும் நாள்
ஆம், அவற்கு இவ் உரு; அருள் செய்தி நீ.'

174
உரை
   


தேவர் உரைப்படி விசயன் வேண்டும் காலத்துப் பேடி உரு
எய்துமாறு அவள் சாப நீக்கம் அருளுதலும், விசயன்
முன்னை வடிவு பெறுதலும்

என்று வானவர் யாவரும் ஏத்தவே,
அன்று அவற்கு அவ் வரம் கொடுத்தாள், அவள்;
வென்றி வார் சிலை மீளியும், தன் பெருந்
துன்று கோலம் சிறந்திடத் தோன்றினான்.

175
உரை