13. நிவாத கவசர் காலகேயர் வதைச் சருக்கம்

சுதன்மையில் சிங்காதனத்தில் விசயனுடன் இந்திரன்
வீற்றிருந்த போது, தேவர்களுக்கு அவனது
சிறப்பைத் தெரிவித்தல்

அவ் வரம் தனக்கு நல்கும் அன்னை தாள்
              வணங்கும் வென்றிக்
கை வரு சிலையினானைக் கடவுளர்க்கு இறைவன் கொண்டு,
மொய் வரு சுரர்கள் சூழ, முதன்மை சேர் சுதன்மை எய்தி,
வெவ் அரி முகத்த பீடம் விளங்க, வீற்றிருந்த காலை,

1
உரை
   


'தூண் தகு தோளின் மொய்ம்பால் நம் வலி தொலைத்து,
               மேல்மேல்
மூண்டு எழும் அவுணர் தம்மை இவன் அன்றி முடிப்பார்
               யார்?' என்று
ஆண் தகை அமரர்க்கு எல்லாம் அவன் செயல்
               அடைவே சொல்லி,
'காண்டவம் எரித்த வீரன் இவன்!' எனக் காட்டினானே.

2
உரை
   


தேவர்களும் இந்திரனும் விசயனுக்குச் சிறப்புச் செய்தல்

அவ் உரை கேட்ட தேவர் அகம் மகிழ்ந்து,
               அவனுக்கு அன்பால்
திவ்விய மறையின் மிக்க தெக்கிணை பலவும் செய்தார்;
செவ்விய தாதைதானும் சேண் நதித் தூ நீர் ஆட்டி,
விவ் விரவாத வாசத் தாமமும் விழைந்து சூட்டி,

3
உரை
   

ஆயிரம் கதிரும், திங்கள் அனந்தமும், அடங்க, மேல்மேல்
காய் கதிர் விரிவது, யார்க்கும் கருத்து உறக் காண ஒண்ணாச்
சேயொளி தவழ்வது ஆகி, திசைமுகன் தனக்கு நல்கும்
மா இருங் கிரண ரத்ந மவுலியும் கவித்தான், அன்றே.
4
உரை
   

ஆடையும், கலனும், தெவ்வை அடும் திறல் படையும் நல்கி,
ஏடு அவிழ் அலங்கலான் ஓர் ஆசனத்து இருத்தி, என்றும்
தேடுதற்கு அரிய தூய அமுது, செம் பொற் கலத்தில்,
கூட உண்டு, அமரர்க்கு எல்லாம் குரிசில் ஆம்
               சிறப்பும் செய்தான்.
5
உரை
   


இந்திராணி விசயனை மானுடன் என்று இகழ, இந்திரன் தகாது
என்பதை ஏதுக் காட்டி உணர்த்துதல்

அன்னது நிகழ்ந்த காலை, அவன் திருத் தேவி கண்டு,
துன்னிய கோபச் செந் தீ விழி உக, சில சொல் சொன்னாள்-
'மன்னிய புவியில் வைகும் மானுட மன்னன் வந்து, உன்-
தன்னுடன் ஒக்க உண்ணத் தக்கதோ? உரைத்தி!' என்றே.

6
உரை
   


என்றலும், கடவுள் வேந்தன், இரு புயம் துளங்க நக்கு,
'மன்றல் அம் துளப மாயோன் மைத்துனன்; எனக்கு மைந்தன்;
கொன்றை அம் சடையானோடும் அமர் புரி குரிசில்தன்னை,
'நன்றி இல் மனிதன்' என்று இங்கு இகழ்வதோ
               நங்கை?' என்றான்.

7
உரை
   


'இவன் வந்தது தக்க செயல் புரிதற்கே' என்று தேவர்கள் கூறுதல்

ஆங்கு அது கேட்ட தேவர் அடி பணிந்து, 'அரிய வேந்தே!
பூங்கொடி தருவோடு அன்று புவியினில் கவர்ந்த வீரற்கு
ஓங்கு மைத்துனனே ஆகில், இதனின் மற்று உறுதி உண்டோ?
ஈங்கு இவன் புகுந்த சூழ்ச்சிக்கு ஏது உண்டாகும்' என்றார்.

8
உரை
   


'விசயன் தனக்குச் செய்த சிறப்புத் தகாது' என்ன, இந்திரன்
அவனது பெருமை கூறி, ஒரு வரம் வேண்டுதல்

தேவர்தம் உரையும், தேவி செப்பிய உரையும், கேட்டு,
தா வரும் புரவித் திண் தேர்த் தனஞ்சயன்
               தொழுது சொன்னான்-
'யாவரும் பரவும் உன்தன்னுடன் ஒர் ஆசனத்து இருந்து,
மேவரு முடியும் சூடப் பொறுக்குமோ, விமல?' என்றே.

9
உரை
   

அவன் உரை மகிழ்ந்து கேட்டு, ஆங்கு, அமரருக்கு
               அதிபன் சொல்வான்;
'புவனம் மூன்றினுக்கும் உன்னைப்போல் ஒரு
               வீரன் உண்டோ?
சிவன் அருள் படையும் பெற்றாய்! செந் தழல்
               அளித்த தெய்வக்
கவன வாம் பரியும், தேரும், கணையும், கார்முகமும்,
               பெற்றாய்!
10
உரை
   


'பிரமனே முதலா எண்ணும் பேர் பெறும் தேவர் ஈந்த
வரம் மிகும் மறையும், கொற்ற வான் பெரும்
               படையும், பெற்றாய்!
அரு மறை முறையே பார்க்கின், அமரர் மற்று
               உன்னின் உண்டோ?
திரு வரும் வின்மை வீர! செப்புவது ஒன்று கேளாய்:

11
உரை
   


"கற்றவர், கலைகள் யாவும் கசடு அறக் கற்பித்தோர்கள்
பெற்றிடக் கொடுக்கும் செல்வம் உண்டு" என்று
               பெரியோர் சொல்வர்;
கொற்றவ! உனக்கு நானும் கூறும் நல் குருவே ஆகும்;
உற்றவாறு எனக்கு நீயும் ஒரு வரம் தருக!' என்றான்.

12
உரை
   


'யான் செய்ய வேண்டுவது யாது?' என்ற விசயனுக்கு, இந்திரன்,
நிவாதகவசரை வென்று அழிக்குமாறு கூறுதல

தந்தை சொல் மகிழ்ந்து கேட்டு, தனுவினுக்கு ஒருவன் ஆன
மைந்தனும், 'தேவர்க்கு, ஐய! மானுடர் செய்வது உண்டோ?
சிந்தையில் நிகழ்ந்தது ஒன்று செப்புக!' என்று அவனும் செப்ப,
இந்திரன்தானும், மீண்டும் இன்னன பகரலுற்றான்:

13
உரை
   

'ஆழி நீர் அழுவத்து என்றும் உறைபவர்; ஆழியானும்,
ஊழியின் நாதன்தானும், உருப்பினும், உலப்பு இலாதோர்;
ஏழ்-இரு புவனத்து உள்ளோர் யாரையும் முதுகு காண்போர்;
கோழியான்தனக்கும் தோலா அவுணர்;-முக் கோடி உண்டால்.
14
உரை
   

'தவாத போர் வலியின் மிக்க தவத்தினர்; சாபம் வல்லோர்;
சுவாதமே வீசி, எல்லா உலகையும் துளக்குகிற்போர்;
விவாதமே விளைக்கும் சொல்லர்; வெகுளியே
               விளையும் நெஞ்சர்;-
நிவாத கவசத்தர் என்னும் பெயருடையக் கொடிய நீசர்.
15
உரை
   


'மற்று அவர் எனக்கு நாளும் வழிப்பகை
               ஆகி நிற்போர்;
கல் தவர் வணக்கினாற்கும் கடக்க அரும்
               வலியின் மிக்கோர்;
செற்றிட, நின்னை அன்றி, செகத்தினில் சிலர்
               வேறு உண்டோ?17
வெற்றி வெஞ் சிலை கொள் வீர! இவ் வரம்
               வேண்டிற்று' என்றான்.

16
உரை
   


விசயன் ஒருப்பட, இந்திரன் தேர் முதலியன அளித்து,
அவனுக்கு விடை கொடுத்தவன்

'செரு' என்ற மாற்றம் கேட்டு, சிந்தையில் உவகை பொங்க,
மரு ஒன்றும் அலங்கல் மார்பும், வாகு பூதரமும், பூரித்து,
உரு ஒன்றும் மதனை ஒப்பான், ஒருப்பட்டான்;
               உரைப்பது என்னோ?
திரு ஒன்றும் வண்மை வீரன் மறுக்குமோ, தேவர் கேட்டால்?

17
உரை
   


காற்று எனக் கடிய, வேகக் கனல் எனக் கொடிய, என்றும்
மேல் திசை எல்லை எல்லாம் வீதிபோய் ஒல்லை மீள்வ,
கூற்றமும் முகிலும் உட்கக் குமுறும் வெங்
               குரலும், மேன்மேல்
சீற்றமும் திறலும் மிக்க, தீக் கதி செலாத, தூய,

18
உரை
   


ஆயிரம் பத்து வெம் போர் அடல் பரி பூண்ட தேரும்,
மா இருங் கலையின் மிக்க மாதலிதனையும் நல்கி,
காய் இருங் கிரணச் செம் பொற் கவசமும்
               கொடுத்து, பின்னர்,
வேய் இருந் தெரியலாற்குச் சுரபதி விடையும் ஈந்தான்.

19
உரை
   


விசயன் போர்க்கோலம் பூண்டு, மாதலி தேரில் செல்லும்போது,
அவ் அசுரர் இயல்பைச் சாரதியிடம் கேட்டு அறிதல்

'விடை' என, தொழுது போந்து, வெஞ் சிலை
               வினோத வீரன்,
சுடு சரத் தூணி கொற்றப் புயத்தினில் துதையத் தூக்கி,
இடு மணிக் கவசம் மெய்யில் எழில் உறப்
               புனைந்து, தன்னை,
திடமுடைச் சிங்கம் அன்னான், செருத் தொழில்
               கோலம் செய்தான்.

20
உரை
   


மோது போர் தனக்கு வேண்டும் முரண் படை
               பலவும் கொள்ளா,
கோதை வில் தடக் கை வீரன் கொடி மணித்
               தேர்மேல் கொண்டு,
'மாதலிப் பெயராய்! அந்த வஞ்சர் எத் திசையர்?'
               என்றான்;
சூதனும், அவனுக்கு, அன்னோர் இயல்பு எலாம்
               தோன்றச் சொல்வான்:

21
உரை
   


'தோயமாபுரம் என்று உண்டு, தொடு கடல் அழுவத்து ஒன்று;
மாய மா புரமே ஒக்கும்; அப் புரம் அதனில் வாழ்வோர்
தீயவர்' என்று செப்பி, சித்திரசேனன்தன்னை,
'தூய நல் நெறி காட்டு' என்று, சூதன் தேர் தூண்டும் எல்லை,

22
உரை
   


தேவ மகளிரின் நகைப்பும், வானவரின் வாழ்த்தும்

'மொய் திறல் கடவுளோர் முப்பத்து முக்கோடியாலும்
செய்து அமர் தொலைக்க ஒண்ணாத் தெயித்தியர்
               சேனைதன்னை,
எய்து ஒரு மனிதன் வெல்வது ஏழைமைத்து!' என்று நக்கார்-
மை தவழ் கருங் கண், செவ் வாய், வானவர்
               மகளிர் எல்லாம்.

23
உரை
   

மங்கையர் வாய்மை கேட்டு, மணிக் குறு முறுவல் செய்து,
கங்கைஅம் பழன நாடன் கடி மதில் வாயில் செல்ல,
அங்கு அவன் தன்னைக் கண்ட அணி கழல்
               அமரர் எல்லாம்,
'மங்குல் வாகனன்!' என்று எண்ணி, கதுமென
               வந்து, தொக்கார்.
24
உரை
   

கார்க் கோல மேனியானைக் கண்ட பின், ஐயம் நீங்கி,
'போர்க்கோலம் இவனுக்கு எவ்வாறு இசைந்தது? புகறி' என்று,
தேர்க்கோலம் செய்வான்தன்னைச் செப்பினர்;
               அவனும், போற்றி,
'வார்க் கோல புரத்து வைகும் அவுணரை
               வதைத்தற்கு' என்றான்.
25
உரை
   


என்று, அவன் உரைத்த மாற்றம் இன்புறக் கேட்டு, நெஞ்சில்
துன்றிய உவகை தூண்ட, சுருதியால் ஆசி சொல்லி,
'வென்று மீள்க!' என்று வாழ்த்தி, விரைவினில் வீரன்தன்னை,
'சென்றிடுக!' என்று, தேவர் தத்தமில் சிறப்பும் ஈந்தார்.

26
உரை
   


'சம்புவன், சம்புமாலி, எனும் பெயர்த் தனுசர்தம்மை
உம்பர்கோன் வதைத்த அந்நாள் ஊர்ந்தது, எவ்
               உலகும் ஏத்தும்
தும்பைஅம் சடையான் வெற்பைத் துளக்கிய சூரன் மாள,
விம்ப வார் சிலை இராமன் வென்ற நாள் ஊர்ந்தது, இத் தேர்.

27
உரை
   


'ஆதலால் இத் தேர்மேல் கொண்டு, அடல்
               புனை அவுணருக்குப்
பேதியாக் கவசம் பெற்று, பிறங்கு பொன்
               முடியும் பெற்றாய்;
கோதிலாய்! எங்கள் நெஞ்சில் குறை எலாம்
               தீர்த்தி!' என்றார்-
போதில் வாழ் அயனும் ஒவ்வா வாய்மொழிப்
               புலவர் எல்லாம்.

28
உரை
   


விசயன் உவகையுடன் சென்று கடலை அடுத்தபோது, அந்த
அவுணரின் இயல்பை வினவ, மாதலி விளங்க உரைத்தல்

வீரனும் உவகை தூண்ட, விண்ணவர் மலர்த்தாள் போற்றி,
சாரதி தடந் தேர் தூண்ட, தபனனில் விசும்பில் சென்றான்-
கார் நிறக் குன்றம் ஒன்றைக் கனக வான் குன்று
               ஒன்று ஏந்தி,
சீர் உறப் பறந்து, வானில் திசை உறச் செல்வது ஒத்தே.

29
உரை
   


திரை கொழித்திடும் சிந்துவின் சூழலில்,
குரகதத் தடந் தேர் போய்க் குறுகலும்,
மரகதக் கொண்டல், மாதலிக்கு அன்பினால்,
விரகுறச் சில மாற்றம் விளம்பினான்:

30
உரை
   


'இப் புரத்தில் அவுணர் இயல்பு எலாம்
செப்பு, எனக்குத் தெரிதர' என்றலும்,
அப் புரத்தவர் ஆண்மையும், தோற்றமும்,
செப்பலுற்றனன், திண் திறல் தேர்வலான்:

31
உரை
   


'தெழித்த சொல்லினர்; சீற்ற வெந் தீ உக
விழித்த கண்ணினர்; விண் முகிலைக் கவின்
அழித்த மேனியர்; ஆழ் வெம் பிலத்தையும்
பழித்து அகன்ற பெரும் பகு வாயினார்;

32
உரை
   


'மண்ணும், நீரும், அனலும், மருத்துடன்,
விண்ணும், வேண்டின், விரைவின் முருக்குவார்;
எண்ணெய் ஊட்டி, இருள்-குழம்பால் எழில்
பண்ணி, யாக்கை வகுத்தன்ன பான்மையார்;

33
உரை
   

'மல் புயாசலத்தின் வலியால், இகல்
சற்ப ராசன் தலைச்சுமை மாற்றுவார்;
அற்ப வாழ்வுடை அம்போருகத்தர்தம்
கற்ப கோடி கடையுறக் காண்குவார்;
34
உரை
   

'பாழி ஆடக வெற்பில், படர் சிரம்
கீழது ஆக, கிளர் மூச்சு அடக்கி, நின்று,
ஊழி நாளும் தவம் முயன்று, ஓங்குவார்;
ஆழி நீரும் அளவிடும் தாளினார்;
35
உரை
   


'ஏதி, சூலம், எழு, மழு, ஈட்டியின்
சாதி, சக்கரம், தாங்கும் தடக் கையார்;
மோது போர் எனின், மொய்ம்புடன் முந்துவோர்;
ஓதம் ஏழும் உடன் உண்டு, உமிழுவோர்;

36
உரை
   


'கூரும் நல் உரை கூறினும், கூற்றுடன்
கார்தொறும் இடி சேர்ந்தன்ன காட்சியார்;
தேர்தொறும் செருச் செய்யும் அத் தேவரைப்
போர்தொறும் புறங்கண்டு அன்றிப் போகலார்;

37
உரை
   


'மூன்று கோடி அசுரர்; முகில் எனத்
தோன்றும் மேனியர்; தோம் அறும் ஆற்றலர்;
ஏன்று போர் பொரின், எவ் எவ் உலகையும்
கீன்று, சேரக் கிழிக்கும் எயிற்றினார்;

38
உரை
   


'செப்பு உரத்தினில், செஞ் சடை வானவன்
முப்புரத்தை முனிந்த அந் நாளினும்,
தப்பு உரத்தர்; சதமகன்தன்னை வென்று,
இப் புரத்தை இவர் கவர்ந்தார்' எனா,

39
உரை
   


சித்திரசேனனை நிவாதகவசரிடம் தூது போக்கி, மண்ணின்மீது தேரை நடத்துதல்

தீது இலாத் திறல் சித்திரசேனனைக்
'கோது இலாத குனி சிலை வீரற்கு
மோது போர் தர, மொய்ம்புடை வஞ்சர்பால்
தூது போக!' எனப் போக்கி, தொலைவு இலான்,

40
உரை
   


விண்ணின்மீது விரைவுறும் தேரினை
மண்ணின்மீது நடத்தினன், மாதலி;
அண்ணலும், தன் அருஞ் சிலை நாணியின்
துண்ணென் ஓதை தொடரத் துரத்தினான்.

41
உரை
   


அருச்சுனன் நாண் ஒலி முதலியன கேட்டு, 'இந்திரன் பொர
வந்தான்!' என அவுணர் சினத்தல்

தேரின் ஆர்ப்பு ஒலியும், சிறு நாண் எனும்,
காரின் ஆர்ப்பு ஒலியும், கலந்து, எங்கணும்,
பாரும், மேல் திசையும், பகிர் அண்டமும்,
சேரும் நால்-திசையும், செவிடு ஆக்கவே,

42
உரை
   


அந்த ஓசை அவுணர் செவிப் புக,
முந்த ஓடி முடுகி, முறுவலித்து,
'இந்திரன் பொர வந்தனன்' என்று, தம்
சிந்தை கன்றி, விழியும் சிவந்திட்டார்.

43
உரை
   


தூதன் உரைத்த செய்தி கேட்டு, அவுணர் இகழ்ந்து கூறி,
சினங்கொள்ளுதல்

போய தூதனும், செம் பொன் புரிசை சூழ்
தோயமாபுரம்தன்னில் துதைந்த அம்
மாய வஞ்சர் மறுக, வெம் புண்ணின்மேல்
தீயை ஒப்பன சில் உரை சொல்லுவான்:

44
உரை
   

'ஒரு குலத்தினில் வேந்தும் ஒவ்வாது உயர்
குருகுலத்தில் குனி சிலை வீரற்குத்
தருக யுத்தம்; திறலுடைத் தானவர்
வருக, மற்றும் வரூதினிதன்னொடும்.'
45
உரை
   


என்று தூதன் இசைத்தது கேட்டலும்,
'நன்று!' எனக் கை புடைத்து, நகைத்திடா,
கன்று நெஞ்சினர், கண்கள் செந் தீ உக,
துன்று கோபத்துடன், அவர் சொல்லுவார்:

46
உரை
   


'பூசை ஒன்று புலியின் குழாத்துடன்
ஆசை கொண்டு, பொர வந்து, அழைப்பதே!
வாசவன் பெரு வாழ்வுக்கு எலாம் ஒரு
நாசம் வந்து புகுந்தது!' எனா, நகா,

47
உரை
   


'வரை உளானும், மலரின் உளானும், வெண்
திரை உளானும், செகுப்ப அரு நம்முடன்
தரை உளான் வந்து போர் பொரத் தக்கதோ!
'உரை உளார்' என்று உரையீர், உணரவே.

48
உரை
   


'தனுசர் தானைதனை மதியாது, ஒரு
மனுசன் வந்து, மலைய மதிப்பதோ!
அனுசரும், கொலை ஆடல் அவுணரும்,
குனி செயும், சிலை!' என்று கொதித்திட்டார்.

49
உரை
   


'செங் கண் நாகக் கொடியவன், செல்வமும்
தங்கள் நாடும் கவர, தரிப்பு அற,
பொங்கு கானில் புகும் சிலை வீரனோ,
எங்களோடும் எதிர்க்க வந்து, எய்தினான்!'

50
உரை
   


அசுரர் ஆயுதங்களுடன் திரண்டு வந்து, அருச்சுனன் தேரை வளைத்தல்

என்று கூறி, இகல் அசுராதிபர்,
துன்று சேனைக் குழாம் புடை சூழ்வர,
சென்று, உகாந்தத் திரைக் கடல் ஆர்ப்பபோல்,
ஒன்ற, யாரும் ஒருங்கு சென்று உற்றனர்.

51
உரை
   


ஆனை, தேர், பரி, ஆள், எனும் நால்வகைத்
தானையோடும் எழுந்தனர், தானவர்;
வானும், மண்ணும், திசையும், மற்று எண் பெறும்
ஏனை லோகமும், எங்கும் நடுங்கவே,

52
உரை
   


சங்கும், பேரியும், தாரையும், சின்னமும்,
துங்க மா முழவும், துடி ஈட்டமும்,
அம் கண் மா முரசும், உக அந்தத்தில்
பொங்கும் வேலை ஒலியின் புலம்பவே.

53
உரை
   


சூலம், நேமி, எழு, மழு, தோமரம்,
கோலும் வார் சிலை, குந்தம், கொடுங் கணை,
நாலு தானை நடுவும் சுடர் அயில்,
வேலும், வாளின் விதமும், மிடையவே,

54
உரை
   

முந்து கோப அசுரர் முடுகு தேர்,
உந்து வீரன் ஒரு தனித் தேரினை
வந்து சூழ, வளைத்தார்-மது மலர்க்
கொந்து சூழ் வரி வண்டின் குழாத்தினே.
55
உரை
   


அவுணர் சுடுசரம் தூவ, அருச்சுனன் தானும் கணைகள் எய்து, வஞ்சினம் கூறுதல்

நீல மால் வரை ஒன்றின் நெருக்கி, வீழ்
கால மா முகில் என்ன, கடியவர்,
கோலும் வார் சிலைக் கொண்டல் அன்னான்மிசைச்
சூலம், நேமி, சுடு சரம், தூவினார்.

56
உரை
   


அக் கார்முக வீரனும், அங்கு அவர்தம்
மைக் கார் முகில் என்ன வழங்கிய திண்
மெய்க் காய் கணை சாபம் விசித்து, விடா,
நக்கான், இவை, நின்று, நவின்றனனே:

57
உரை
   


'திக்கு ஓடிய நும் திறலும், புகழும்,
தொக்கு ஓடி உடற்று படைத் தொகையும்,
கைக் கோடிய வெஞ் சிலையின் கணையால்,
முக் கோடியும், இன்று, முருக்குவனால்!

58
உரை
   


'முன் போர்தொறும் வந்து, முனைந்து, வெரீஇ,
வென் போகிய விண் உறை வீரர் அலேன்;
பொன் போலும் நும் மேனி பொடிச் செய்திடா,
பின் போகுவன்!' என்று இவை பேசலுமே,

59
உரை
   


அசுரர், அருச்சுனனை இகழ, அவன் கணை பல தூவி வெகுள,
அவர்கள் அஞ்சுதல்

'தழல் வந்தருள் பாவை தடந் துகிலும்,
குழலும், கவர்தந்து, அடல் கூரும் உமக்கு
அழல் துன்றிய கானம் அளித்தவரை,
கழல் வெஞ் சிலை வீர! கடிந்திலையே!'

60
உரை
   


என்னா, அசுரேசர் இசைத்தலுமே,
மன் ஆகவ வீரனும், வார் சிலை நாண்
தன் ஆகம் உறத் தழுவ, தழல் வாய்
மின் ஆர் கணை வி, வெகுண்டனனே.

61
உரை
   


பொய்த் தானவர், போர் அரி அன்னவன்மேல்
மொய்த்தார், முகில் செங் கதிர் மூடுவபோல்;
வைத்தாரை வடிக் கணை, வாள், மழு, வேல்,
உய்த்தார், வரைமேல் உருமேறு எனவே.

62
உரை
   


'என்முன்; அவன் என்முன்' எனா, எவரும்
முன்முன் வர, முந்த முருக்கினனால்-
தன்முன் ஒரு வீரர் தராதலமேல்
வில் முன்னின் நிலா விறல் வில் விசயன்.

63
உரை
   


ஒரு தேர்கொடு வீரன், உடன்றவர்தம்
கரி, தேர், பரி, ஆள், அணி கையற, முன்
நிருதேசரை வென்றவன் நேர் என, மேல்
வரு தேர் அணிதோறும் மலைந்திடவே,

64
உரை
   

வீரன் சரம் வஞ்சகர் மெய்ம் முழுதும்
கூரும்படி சென்று, குளித்திடலால்,
ஆரும் பொர, அஞ்சினர்; அப்பொழுதில்
தேர் உந்தினர், எண்ணில் தெயித்தியரே.
65
உரை
   


அஞ்சிய அசுரரை நோக்கி, அஞ்சாதவர் கூறிய வீர உரை

'என்னே, ஒரு மானுடனுக்கு எவரும்
கொன்னே அடல் ஆண்மை கொடுக்கும்அதோ!
இன்னே, இவன் ஆவி அழித்து, இமையோர்
முன்னே வய வாகையும் முற்றுவமால்!'

66
உரை
   


அசுரருடன் கடும்போர் செய்து, விசயன்
பிரமாத்திரம் தொடுத்தல்

காளப் புயல் என்ன நிறம் கரியார்,
மீளப் படைகொண்டு, விரைந்து, வெகுண்டு,
ஆளித் திறல் மொய்ம்பனை, அங்கு அடலால்,
வாளக் கிரி என்ன, வளைந்து, எவரும்,

67
உரை
   


ஆர்த்தார்; அகல் வானமும் ஆழ்கடலும்
தூர்த்தார், சுடர் வெம் படைகொண்டு, எவரும்
தேர்த் தானவர்; வான் உறை தேவரும் மெய்
வேர்த்தார், 'இனிமேல் விளைவு ஏது!' எனவே.

68
உரை
   


கூற்று ஒப்பன பல் படை கொண்டு, அவன்மேல்
சீற்றத்தொடு எறிந்தனர், தீயவரும்;
ஆற்றல் சிலை வீரனும், அவ் அவ் எலாம்
மாற்றி, சர மாரி வழங்கினனால்.

69
உரை
   


அவன் விட்ட சரங்கள் அறுத்து, அணி தேர்
கவனப் பரி பாகு கலக்கம் உற,
பவனத்துடன் அங்கி பரந்ததுபோல்,
துவனித்து, அவர் வெம் படை தூவுதலும்,

70
உரை
   


கட்டு ஆர் முது கார்முக வீரனும், முன்
கிட்டா, உலகோர் புகழ் கேழ் கிளர் சீர்
முள் தாமரைமேல் முனிவன் படையைத்
தொட்டான், அசுரேசர் தொலைந்து உகவே.

71
உரை
   


பிரமாத்திரத்தினால் அசுரர் பட்ட பாடு

காற்றாய், மிக மண்டு கடுங் கனலாய்,
கூற்றாய், அவர் ஆவி குடித்து, உகு செஞ்
சேற்றால், ஒரு பாதி சிவந்தது, பார்,
ஏற்றான் ஒரு பங்கு என, எங்கணுமே.

72
உரை
   


நூறாயிர தேர் அணி நூறியும், மேல்
ஆறாத சினத்துடன், அக் கணை போய்,
மாறாய், அவர் மார்பமும், வாள் முகமும்
சீறா, எதிர் சென்று, செறிந்ததுவே.

73
உரை
   


ஒரு கோடி அசுரர் பட, இரு கோடி அசுரர் திரண்டு பொருதலும்,
பல படை ஏவி அருச்சுனன்

குருகோடு இயையும் குருதிக் கடல்வாய்,
ஒரு கோடி தயித்தியர் ஆர் உயிர் உண்டு,
அருகு ஓடிய வாளி அடர்ப்பது கண்டு,
இரு கோடியும் உற்றன, மற்று-இவன்மேல்.

74
உரை
   

இருண்டது, மண்ணும் விண்ணும்; எல்லை எண்
               திசையும், எங்கும்,
புரண்டது, குருதி வெள்ளம், ஊழி வெங்
               கடலின் பொங்கி;
முரண் தகு தேரோன்தன்னை மொய்த்த வெம்
               பனிபோல் மூடித்
திரண்டது, திருகி மீண்டும், திறலுடைத்
               தகுவர் சேனை.
75
உரை
   


'எங்கு, எங்கே, எங்கே, வல் வில் மனிதன்?' என்று,
               எதிர்ந்தோர் யார்க்கும்,
அங்கு, அங்கே அங்கே ஆகி, அவரொடும் அடு
               போர் செய்தான்-
சங்கு அங்கு ஏய் செங் கை நல்லார் விடுத்தன
               சுரும்பின் சாலம்,
'கொங்கு எங்கே, எங்கே?' என்று தனித்தனி
               குடையும் தாரான்.

76
உரை
   


கார்முகக் கொண்டல் அன்னான்மிசைக் கடுங்
               கணைகள் ஏவி,
தேர்முகத்து இயக்கம் மாற்றி, திதி மைந்தர் வெம்
               போர் செய்ய,
போர்முகத்து ஒருவர் ஒவ்வாப் புரி சிலை
               வீரன்தானும்,
கூர் முகப் பகு வாய், மாயோன், கொடுங் கடும்
               பகழி கோத்தான்.

77
உரை
   


விண்ணிடத்து அசனி நாகர்மேல் வெகுண்டிடுவது என்ன,
எண்ணுடைச் சேனை வெள்ளம் எங்கணும் தானே ஆகி,
வண்ண வில் படை இராமன் வாரிதி வெள்ளம் வீத்த
பண் எனப் படுத்தது-அந்தப் பைந் துழாய்ப் பரமன் வாளி.

78
உரை
   


தசையும் வெம் பிணமும் துன்ற, தனித்தனி பெருகி, எல்லாத்
திசைதொறும் குருதி நீத்தம் திரைக் கடல் சென்று மண்ட,
அசைவு இலா அவுணர் மீண்டும் அந்தரத்து ஒளித்து நின்று,
விசைய வில் விசயன்தன்மேல் வெகுண்டு, வெம்
               படைகள் விட்டார்.

79
உரை
   


விட்ட வெம் படைகள் எல்லாம் விண்ணிடைச்
               சுண்ணம் ஆக,
கட்டழகு உடைய வீரன், மகேந்திரக் கணையால் வீக்க,
எள்-துணைப் பொழுதில் வஞ்சகர் எழிலியின் படை மேல் வீச,
வட்ட வார் சிலையினானும், மண்டு அழற் படையால் மாற்ற,

80
உரை
   


மண்டி மேல் எழுந்து, இங்கு எல்லா உலகையும்
               மடிக்கும் மாயச்
சண்ட வாயுவின் பேர் வாளி, தானவர் அவன்மேல் ஏவ,
அண்டமும் துளங்க, ஓங்கும் அரு வரைப் பகழி விட்டான்-
எண் திசை முழுதும் தன் பேர் எழுது போர்
               விசயன் என்பான்.

81
உரை
   


காற்றும் வெங் கனலும், காரும் இடியும்,
               கல்மழையும், எங்கும்
தோற்றிய இருளும் மின்னும், திசைதொறும்
               சூழ்ந்து பொங்க,
கூற்றும் வாய் குழறி அஞ்ச, கொடிய மா மாய வாளி
ஆற்றல் சால் அரி அன்னான்மேல் எறிந்து,
                அடல் அவுணர் ஆர்த்தார்.

82
உரை
   


கல்மழை சொரிந்து, வேகக் கனல்மழை வீசி, எங்கும்
மின் மழை சிந்தி, மிக்க அசனியின் மழைகள் வீழ்த்தி,
செல் மழை சிதறி, எல்லாத் திசைதொறும் பரந்து, கொற்ற
வில் மழை பொழிவான்தன்னை வளைந்தது, வெய்ய மாயை.

83
உரை
   


கோது இலா இரதம் ண்ட குரகதக் குழாமும் உட்கி,
சூதனும் தடந் தேர் ஊரும் தொழில் மறந்து, உயங்கி வீழ,
தாது அவிழ் அலங்கலானும் மற்று அவன்தன்னைத் தேற்றி,
தீது இலா அமோக பாணம், சிந்தையால் தொழுது, விட்டான்.

84
உரை
   

மாய வல் இருளை எல்லாம், வான் கதிர்ச் செல்வன் என்ன,
சேய அப் பகுவாய் வாளி திசைதொறும் கடிந்த எல்லை,
ஆய அம் முறைமை தப்பா அறம், பொருள், இன்பம், முற்றும்
தூயவர் இதயம் என்னத் தொலைந்தது, சூழ்ந்த மாயை.
85
உரை
   


வஞ்ச வாள் அவுணர் வெம் போர் மறந்து,
               மெய்ம் மயங்கி, மீண்டும்
நெஞ்சினில் அறிவு தூண்ட, நிரை நிரை தடந் தேர் தூண்டி,
செஞ் சரம், சூலம், விட்டேறு, எழு, மழு, திகிரி, வாளம்,
அஞ்சனக் குன்று அன்னான்மேல் எறிந்து, உடன்
               ஆர்த்த காலை,

86
உரை
   


கடுஞ் சிலை விரைவும், வீரன் கைத்தொழில்
               விரைவும், மேன்மேல்
விடும் கணை விரைவும், எண்ணில், விபுதர்க்கும்
               காண ஒணாதால்;
கொடுந் தொழில் அசுரர் மெய்யில் குளித்த செஞ் சரமும்,
               அன்னோர்
படும் படும் துயரும், எங்கும் காணலாம், பார்
               உளோர்க்கும்.

87
உரை
   


ஆய்ந்த நூல் அறிஞர்க்கு ஈந்த அரும் பொருள் என்ன,
               மேன்மேல்
வேந்தர் கோன் பகழி ஒன்று கோடியாய் விளைந்தது, எங்கும்,
மாந்தர் கைக் கொடாத புல்லர் வனப்பு இலாச்
               செல்வம் போல,
தேய்ந்தது, வஞ்ச நெஞ்சத் திறலுடைத் தனுசர் சேனை.

88
உரை
   


படாது ஒழி அவுணர், 'மீண்டும் பரிபவப் படுத்தாய், எம்மை;
அடா! இனி உன்னை இன்னே ஆர் உயிர் குடித்தும்' என்னா;
கடாமலை வயவன்மீது கடும் படை பலவும் விட்டார்;
தொடா, நெடும் பகழிதன்னால் சூரனும் துணித்து வீழ்த்தி,

89
உரை
   


உரங்களும், தோளும், கண்ணும், உதரமும், அதரத்தோடு
சிரங்களும், தாளும், நாளும், செய் தவம் முயன்று பெற்ற
வரங்களும், மறையும், மேன்மேல் வான் படைக்
               கலங்கள் வீசும்
கரங்களும், சரங்கள் கொண்டு, கணத்திடைக்
               கண்டம் கண்டான்.

90
உரை
   


விசயன் கை சலித்து நின்ற போது, அசரீரி அந்த
அசுரர்களை வெல்லும் உபாயத்தைக் கூறுதல்

அற்றன குறைகள் எல்லாம், அவயவம் பொருந்தி, மீண்டும்
உற்றன; மூன்று கோடி சேனையும், உருத்து எழுந்த;
வெற்றி வேல் குமரன் அன்ன விசயனும் கை சலித்து,
'மற்று இதற்கு என் செய்வேன்?' என்று,
               இனைவுடன் மதிக்கும் ஏல்வை,

91
உரை
   


'வென்றி கொள் வீர வாகை வேக வில் விசய! கேளாய்:
தென் திசை மறலிபால் இத் தீய வஞ்சகர் முன் பெற்ற
வன் திறல் படையும், மிக்க வரமும், மெய்
               வலியும், உண்டால்'
என்று, அசரீரி பின்னும் இன்னவை உரைத்தது அம்மா:

92
உரை
   


'வெய்ய வெம் படைகட்கு எல்லாம் விளிகிலர்;
               மெய்ந் நூறு ஆகக்
கொய்யினும், உருவம் மீண்டும் கூடுவர்; குறிப்பின் நின்று
கையில் நாவுடன் வாய் சென்று கலந்திடும்
               கணத்தின், அம்பால்
எய்திடுக!' என்று, வீரற்கு உறுதியும் இசைத்தது அன்றே.

93
உரை
   


விசயன் தன் தேரைத் திருப்பி, கணப்பொழுதில்
பாசுபதக் கணை விட, அசுரர் பொடியாதல்

வானிடத்து அரூபி சொன்ன வாசகம் மனத்தில் கொள்ளா,
தேனுடைத் தெரியல் வீரன் தேரினைத் திரிய ஓட்டி,
கானிடைக் கடவுள் வேடன் தரும் கணை கரத்தில் கொண்டு,
தானுடைத் தனுவில் பூட்டி, அநுப்படச் சமைந்தது ஓரார்,

94
உரை
   

'தானவர் சமுகத்தோடு சமர் புரிந்து, ஆற்றாது, அஞ்சி,
மானவன் முதுகு தந்தான்!' என்று, வாள் அசுரர் எல்லாம்
வேனில் வேள் அனையான்தன்மேல் வெகுண்டு,
                          வெங் கடலின் பொங்கி,
ஆன தம் கை வாய் சேர்த்தி, ஆவலம் கொட்டி, ஆர்த்தார்.
95
உரை
   


உரம்பட்ட வஞ்சர் சேனை ஒருப்பட்ட உறுதி நோக்கி,
திரம் பட்ட சிலைக் கை வீரன் சிலீமுகம் தெறித்தபோது, அச்
சரம் பட்ட தனுசர் அங்கம், சங்கரன் செங் கை அம்பால்
புரம் பட்ட பரிசு பட்டு, பொடிந்தன, பொடியாய் மன்னோ!

96
உரை
   


உருத்தது, மிகவும்; அண்டம் உடைந்திட, உடன்று பொங்கிச்
சிரித்தது; தனுசர் மெய்யும் சிந்தையும் சேரப் பற்றி,
எரித்தது; தூ நீர் ஆடி இவனிடம் தன்னில் வந்து,
தரித்தது, மீண்டும்;-அந்தச் சங்கரன் செங் கை வாளி.

97
உரை
   


அசுரர் வீர சுவர்க்கம் அடைய, அருச்சுனன் வெற்றிப்
பெருமிதத்துடன் நிற்றல்

துவசத்தொடு தேர் களம் வீழ, சுடர் நிவாத
கவசத்தொடு மெய் கடல் வீழ, கடுகி, அற்றைத்
திவசத்து, இவறா, அர மங்கையர் வீழச் சென்றார்-
அவசத்துடன், அந்தகன் ஊரில், அசுரர் எல்லாம்.

98
உரை
   


ஆர்த்தார்; அணி கூர் அலர் மா மழையால் விசும்பைத்
தூர்த்தார்; துதித்தார்; மதித்தார்; நனி துள்ளுகின்றார்;-
'போர்த் தானவர்தம் செருக்கால் படு புன்மை எல்லாம்
தீர்த்தான் இவன்' என்று, அகல் வான் உறை
               தேவர் எல்லாம்.

99
உரை
   


கூரும் படையும், குடையும், கொடியும், கொழித்து,
தேரும், கரியும், பரியும், திரைதோறும் உந்தி,
ஊரும் குருதிக் கடல் பொங்கி, உவர்க் கடல்மேல்
போரும் பொரப் போய், அணியோடு புகுவ போலும்.

100
உரை
   


தத்திக் குருதிக் கடல் பொங்க, தனித்தனி நின்று,
எத் திக்கினும் வெம் பிணக் குன்றம் எழிலொடு ஓங்க,
பத்திப்பட, மேல் பருந்தின் குலம் பந்தர் செய்ய,
கொத்துற்ற தண் தார்த் திறல் கோதண்ட வீரன் நின்றான்.

101
உரை
   


அசுரமாதர் அரற்றும் ஓசையால், அருச்சுனன்
சினம் தீர்ந்து, தேரை வானுலகிற்கு மீண்டு
செலுத்துமாறு மாதலிக்குக் கூறுதல்

மின்போல் நுடங்க இடை, வேல்விழி நீர் ததும்ப,
பொன்போல் உருவம் கருகும்படி பூழி போர்ப்ப,
அன்போடு, அவுணர் மட மாதர் அரற்றும் ஓதை,
'என் போலும்?'' என்னின், இடிபோல் வந்து
               இசைத்தது, எங்கும்.

102
உரை
   


இவ்வாறு அவுணர் மட மாதர் இரங்கி, ஏங்க,
மை வாள் விழியின்வழி அஞ்சன வாரி பாய,
தெவ் ஆறிய பின்னரும், தீர்ந்தில,-தீர்ந்த அன்றே,
கை வார் சிலையான் கடுங் கோபமும், கண் சிவப்பும்.

103
உரை
   


அன்னார் நகரத்து அழகும், தொல் அரணும், நோக்கி,
மின் ஆரும் வேலான் விறல் மாதலிதன்னை, 'மீண்டும்
நல் நாகர் ஊரில் தடந் தேரை நடாத்துக!' என்னச்
சொன்னான்; அவனும், துனை தேர் நனி தூண்டும் எல்லை,

104
உரை
   


தேரில் மீளும் விசயன், அந்தரத்தில் ஓர் ஊரைக்
கண்டு, மாதலியை வினவ, அவன் அங்கு வாழும்
காலகேயரைப் பற்றி உரைத்தல

செம் பொற் புரிசை திகழ் கோபுரச் செம்பொன் மாடத்து
அம் பொற் கொடி சேர் நகர், அந்தரத்து, ஒன்று காணா,
வம்பின் பொலி தார்த் தடந் தேர் விடும் மாட்சியானை,
விம்பத் திறல் வார் சிலை வீரன் வினவ, அன்னான்,

105
உரை
   


'மன்னும் தனுச குல மாதரில் வஞ்ச நெஞ்சக்
கன்னங் கரிய குழல் காலகை, காமர் சோதிப்
பொன் அம் கொடிபோல் எழில் கூர் நுண் இடைப் புலோமை,
என்னும் பெயரார் இருவோர் உளர்; என்றும் உள்ளார்;

106
உரை
   


'அம் மாதர் தந்தைதனை நோக்கி, அனந்த காலம்
செம் மால் வரையில் தவம் செய்தனர்; செய்த நாளில்,
மைம் மான் விழியார்தமக்கு அந்த வனச வாணன்
எம்மால் இசைத்தற்கு இசையாத வரங்கள் ஈந்தான்;

107
உரை
   


'தம் மக்கள் ஆய அசுரேசர், அதிதி தந்த
அம் மக்கள்தம்மால் அழியாமையும், ஆடகத்தால்
மும்மைப் புரம்போல் விசும்பு ஊர்தரும்
               மொய்ம்பின் இந்தச்
செம்மைப் புரமும், கொடுத்தான், அத் திசை முகத்தோன்.

108
உரை
   


'பொன் காலும் மெய்யர், பொறி கால் பொலங் குண்டலத்தர்,
முன் காலனையும் சமர் மோதி முருக்கும் மொய்ம்பர்,
மின் கால் படையர், விடம் காலும் விழியர், வெம் போர்
வன் காலகேயர் எனும் பேர் திசை வைத்த வீரர்,

109
உரை
   


'வரு முப்பொழுதும் மறை அந்தணர் அம் கை வாரி,
உருமுப் புயல்போல், கவர்வோர்; முன் உகாந்த நாதன்
பொரு முப்புரத்தில் உறை தானவர்போலும் வீரர்;
இரு-முப்பதினாயிரம் வஞ்சகர் இங்கும் உண்டால்.'

110
உரை
   


'இவரையும் முடித்த பின்பே அமராவதி செல்வேன்; தேரை
அங்குச் செலுத்து'என விசயன் கூற, அவனும்
அவ்வாறே செய்தல்

தன் தேர் வலவன் மொழி கேட்டு, தயங்கும் நீலக்
குன்றே அனையான், கொடும் போர் வஞ்சினங்கள் கூறி,
'இன்றே இவர் ஆவியும் தென்புலத்து ஏற்றி, பின்னர்
அன்றே, இனி நான் அமராவதி செல்வது!' என்றான்.

111
உரை
   


'இந்தப் புரத்தின் மிசைத் தேரினை ஏவுக!' என்னாக்
கந்தற்கு உவமை தகு திண் திறல் காளை கூற,
சிந்தைக்கும் முந்தும் தடந் தேரைத் தனுசர் வைகும்
அந்தப் புரத்தில் விடுத்தான், மற்று அவனும் மாதோ.

112
உரை
   


தேர் ஒலியும் நாண் ஒலியும் கேட்டு, காலகேயர் திடுக்கிட்டு,
சினமுற்றுப் போருக்கு எழுதல்

தேர் ஆரவாரத்துடனே, திண் சிலை வலான்தன்
போர் ஆரவாரச் சிலை நாண் ஒலி மீது போக,
ஆர் ஆரவாரத்து இடி கேட்ட அரவம் ஒத்தார்-
கார் ஆரவாரம் எனப் பொங்கும் அக் காலகேயர்.

113
உரை
   


'இந்த ஓதை, எழிலி ஏழும் ஊழி நாள் இடித்து எழும்
அந்த ஓதையோ? அது அன்றி, ஆழி பொங்கும் ஓதையோ?
கந்தன் வானின்மீது தேர் கடாவுகின்ற ஓதையோ?
எந்த ஓதை?' என்று அயிர்த்து, உயிர்த்து, வஞ்சர் யாவரும்,

114
உரை
   


தெழித்து, உரப்பி, எயிறு தின்று, வைது, செய்ய கண்கள் தீ
விழித்து, மீசை நுனி முறுக்கி, வெய்ய வீர வாள் உறை
கழித்து, எழுந்து பொங்குகின்ற காளகூடம் என்னவே,
கொழித்து, அழன்று, 'மண்ணும் விண்ணும் இன்று கோறும்,
                          நாம்' எனா,

115
உரை
   


ஓடுவாரும், அந்த ஓதை எதிர் உடன்று உறுக்கி மேல்
நாடுவாரும், 'நமர்கள் ஆண்மை நன்று, நன்று!' எனா நகைத்து,
ஆடுவாரும், அமரர் வாழ்வு பாழ்படுத்தும் ஆயுதம்
தேடுவாரும், எண் இறந்த தேர்கள் ஏறுவாருமே,

116
உரை
   


கூளி கோடி உய்ப்ப, குஞ்சரங்கள் கோடி உய்ப்ப, பேர்
ஆளி கோடி உய்ப்ப, வாயு கதிகொடு அந்தரத்தின்மேல்
வாளி போதும் வாசி கோடி கோடி உய்ப்ப, வாவு தேர்
ஓளியாக வானின் எல்லை மறைய உந்தி, முந்தினார்.

117
உரை
   


அருச்சுனனை, 'இவன் யார்?' என அசுரர் ஐயுறுதலும்,
அவன் அவ் அசுரரின் அழகு கண்டு
நொந்து கூறுதலும்

'அந்தகன் பொரற்கு நம்மை வல்லன் அல்லன்;
               அபயம் முன்
தந்த இந்திரன் தனக்கும் ஒக்கும் அன்ன தன்மைதான்;
கந்தன் என்னில், ஆறு-இரண்டு கண்கள் கைகள்
               இல்லை; மேல்
எந்த வீரன், நம்மொடு, இன்று, எதிர்க்கும் இந்த வீரனே?'

118
உரை
   


எண் தயங்கும் எயிறு வெண் நிலா எறிப்ப, வெயில் மணிக்
குண்டலங்கள் அழகு எறிப்ப, மகுட கோடி குலவி மேல்
மண்டி எங்கும் வெயில் எறிப்ப, வஞ்சர்தம் வனப்பு எலாம்
கண்டு கண்டு, அருச்சுனன் கருத்து நொந்து கூறுவான்:

119
உரை
   


'கன்னல் வேளை வென்ற இக் கவின் படைத்த காட்சியும்,
மின்னு பூண் விளங்கு மார்பும், விபுதருக்கும் இல்லையால்;
என்ன பாவம், இவரை ஆவி ஈடு அழிப்பது!' என்று போர்
மன்னர் மன்னன் முன் உரைத்த வாய்மையும் குறிப்புறா,

120
உரை
   


காலகேயர் விசயன்மீது பகழி தூவி இகழ்ந்து பேச, அவன்,
'உங்கள் உயிர்க்கு இறுதி வந்தது' என்று மொழிதல்

வில் வளைத்து நின்ற நீல வெற்பர் ஒன்றை விண்ணிடைச்
செல் வளைத்தது என்ன வந்து, தீய வஞ்சர் யாவரும்,
மல் வளைத்த சிகர வாகு கிரியின்மீதும், மார்பினும்,
கொல் வளைத்த பகழி தூவி, இன்ன நின்று கூறுவார்:

121
உரை
   


'உழுவை கண்ட உழைகள் போல, ஓடி ஓடி, மேருவின்
முழைதொறும் புகுந்த தேவர் ஏவல்கொண்டு, மொய்ம்புடன்,
இழிவு இல் சந்தனம் கடாவி, இங்கு வந்தது என் அடா?-
புழுவில் ஒன்றும் ஒன்று பூதலத்து உளான் ஒருத்தன் நீ!'

122
உரை
   


என்று, காலகேயர் நின்று, இசைத்த சொல் செவிக்கொளா,
'நன்று! காலகேயர் சொன்ன வாய்மை நன்று!' எனா நகைத்து,
'ஒன்று காலம் வந்தது, இங்கு உருத்து, நான் உடன்று, உமைக்
கொன்று, காலன் ஊரில் உங்கள் ஆவியும் கொடுக்கவே.'

123
உரை
   


அருச்சுனன் மொழியால் அழன்று காலகேயர் படைகள் விட,
அவனும் பல அம்புகளால் அவற்றை விலக்குதல்

காலகேயர், விசயன் நின்று கட்டுரைத்த உறுதி கேட்டு,
ஆலகாலம் என உருத்து, அழன்று, பொங்கி, அயில் முனைச்
சூலம், நேமி, பாலம், வெய்ய சுடு சரம், துரத்தினார்-
நீல மேனி செம்புண் நீரினால் நிறம் சிவக்கவே.

124
உரை
   


விண் சுழன்று, திசை சுழன்று, வேலையும் சுழன்று, சூழ்
மண் சுழன்று, வரை சுழன்று, வானில் நின்ற வானுளோர்
கண் சுழன்று, யாதினும் கலங்குறாத கலைவலோர்
எண் சுழன்று, மற்றும் உள்ள யாவையும் சுழன்றவே!

125
உரை
   


அவர் விடுத்த படைகள் யாவும் அழிய, வானுடைக் கணைக்
கவர் தொடுத்து, விலகி, மீள அவர்கள் காயம் எங்கணும்
துவர் நிறத்த குருதி சோர்தர, சரம் துரத்தினான்-
'தவரினுக்கு இராகவன்கொல்!' என வரும் தனஞ்சயன்.

126
உரை
   


அவுணர் மாயத்தால் மறைந்து பொர, அருச்சுனன்
அம்பு மழை பொழிதல

பார்த்தன் எய்த வாளி மெய் படப் படப் பதைத்து, மீது
ஆர்த்து எழுந்து, நகரினோடும் அந்தரத்தின் எல்லை போய்,
வார்த் தரங்க வேலையூடும் மண்ணினூடும் மறைய, அத்
தூர்த்தர் செய்த வஞ்ச மாயை சொல்லல் ஆகும் அளவதோ?

127
உரை
   


அண்ணல் தேரின் முன்னது ஆகும்; அளவு இறந்த தேரொடும்
விண்ணின்மீது திசை அளக்கும்; வெற்பின்மீது
               பொலியும்; எக்
கண்ணும் ஆகும்; அக் கணத்தில் மீளவும் கரந்திடும்;-
எண்ணல் ஆவது அன்று, அது அன்று இயற்றும்
               இந்த்ரசாலமே.

128
உரை
   


அந்த வஞ்சர் புரியும் மாயை வகை அறிந்து, அருச்சுனன்
சிந்தை கன்றி, விழி சிவந்து, தெய்வ வாகை வில்லையும்
மைந்துடன் குனித்து, வாளி வாயு வேகமுடன் விடுத்து,
எந்த எந்த உலகும் அப்பு மாரியால் இயற்றினான்.

129
உரை
   

அருச்சுனன் வில் திறம் கண்டு வியந்து, அவுணர்
மேலும் கடுகிப் பொருதல்

'தனித மேகம் அன்ன தேரும் ஒன்று; தா இல் குன்றுபோல்
குனிதரும் கடுப்பின் மிக்க கொடிய வில்லும் ஒன்று: மேல்
கனிவுறும் சரக் குழாம் விசும்பின் எல்லை காட்டும்; ஓர்
மனிதன் வின்மை நன்று, நன்று!' எனா மதித்து, வஞ்சரே,

130
உரை
   

புருவ வில் வளைவுற, விழி கனல் பொதுள,
கரு முகில் அனையவர் கடுகினர் முடுகி,
சர மழை, இடி மழை, தழல் மழை, சொரியா,
பெரு மழை என நனி பிளிறினர் எவரும்.

131
உரை
   


'இவர் உயிர் கவர்தர, இடம் இது' எனவே,
நவை அறு திறலுடை நகு சரம் உகையா,
அவரவர் அகலமும், அணி கிளர் கரமும்,
தவருடன் விழ விழ, ஒரு தனி பொருதான்.

132
உரை
   


அவன் விடும் அடு கணை அடையவும், நொடியில்
பவனனது எதிர் சருகு என நனி பறிய,
கவனமொடு எழு பரி ரத கதி குலைய,
துவனியொடு எறி படை எதிர் எதிர் தொடவே,

133
உரை
   


வரி சிலை விறலுடை மகபதி மகனும்,
எரி விழி அவுணரும், முறை முறை இகலி,
பொருதனர்-ரகுபதி புதல்வனும் அடு போர்
நிருதரும் எதிர் பொரும் அமர் நிகர் எனவே.

134
உரை
   


அருச்சுனன் பாசுபதக்கணையால், காலகேயர்களை அழித்தல்

'இப் படைகளின் உயிர் அழிகிலர், இவர்' என்று,
அப் படைகளை ஒழிதர, அடல் அடையார்
மெய்ப் புகும் விறலது, விடையவன் அருளும்
கைப் பகழியை மனன் உற நனி கருதா,

135
உரை
   


முச் சிரம் உடையது, மூ-இரு திரள் தோள்
அச்சிரமுடன் எதிர் அழல் பொழி தறுகண்
நச்சு அரவு அனையது, நகம் இறும் முனைவாய்
வச்சிரம் அனையது, வருதலும் மகிழா,

136
உரை
   


பசுபதி அருளிய பகழி முன் வரலும்,
விசயனும் நறை விரி மலர்கொடு பரவி,
திசைதொறும் அமர் புரி திறலுடை வடி வேல்
அசுரர்தம் உடல் உக, அடலுடன் விடவே,

137
உரை
   

அக் கணை விசையுடன் அகல் வெளிமிசை போய்,
நக்கது, பிறை எயிறு இள நிலவு எழவே;
முக்கணும் அழல் உக, முரணொடு முடுகிப்
புக்கது, தனுசர்தம் உடல் பொடிபடவே.

138
உரை
   

மாருதம், விசையுடன் வடவனல் கொளுவி,
கார்தொறும் நிரை நிரை கடிகுவது அதுபோல்,
தேர்தொறும் அமர் புரி அவுணர்கள் தேகத்து,
ஓர் ஒரு கணை, ஒரு நொடியினில், உறவே,

139
உரை
   


அவுணர் பட்ட களத்தின் தோற்றம்

மகபதி அரி சிறை வரை நிகர் எனவே,
திகைதொறும் அவுணர்கள் சிரம் நனி சிதறி,
புகையொடு தெறு கனல் அகல் வெளி பொதுள,
கக படலமும் முறை கஞலின, களமே.

140
உரை
   


ஆடின அறுகுறை, அலகைகளுடன் நின்று;
ஓடின திசைதொறும், உகு குருதியின் நீர்;
நீடின பிணமலை, நிரை நிரை; நெறி போய்த்
தேடின, கதிர்களும், மிசை வழி செலவே.

141
உரை
   


மாதலி விசயனது அடி தொழுதலும், தேவர் முதலியோர்
பகை நீங்கியமை கண்டு மகிழ்தலும்

மா தவம் மிகு திறல் அசுரரை மறலிக்கு
ஓதனம் இடும் அவன் ஒரு சிலை வலி கண்டு,
ஆதபன் அருணனின் அணி கிளர் உயர் தேர்ச்
சூதனும், விசயனது இணை அடி தொழுதான்.

142
உரை
   


தள்ளினர், தம துயர்; 'சலம் இனி இலது' என்று,
உள்ளினர், விசயனது உறுதியும் உரனும்;
அள்ளினர் அமுது என அகம் நனி மகிழா,
துள்ளினர், இமையவர், சுரபதி, முதலோர்.

143
உரை
   


காலகேயரின் இரணியபுரமும் மறைதல்

தேன் அமர் கமலத்து ஓங்கும் திசைமுகன் வரத்தினாலோ,
மானவன் விசயன் உய்த்த வடி நெடுஞ் சரத்தினாலோ,
தானவர் தானை எல்லாம் மடிந்த அத் தளர்வினாலோ,-
போனது, கரந்து, வஞ்சர் இரணியபுரமும் மன்னோ!

144
உரை
   


அருச்சுனன் இளைப்பாறி, தேர்மேல் வானுலகு
செல்ல, சித்திரசேனன் முன்னே சென்று, இந்திரனுக்கு
வெற்றிச் செய்தி தெரிவித்தல்

வாள் நகை தளவம் வாங்கும் அவுணர்தம் மகளிர் தெய்வப்
பூணொடு குழைகள் வாங்க, புனை வய வாகை வாங்கும்
நாண் உயர் தனுவின் வாங்கி, நயந்து இளைப்பாறி நின்றான்-
தூணொடு பறம்பு வாங்கும் சுடர் மணிக் கடகத் தோளான்.

145
உரை
   


பார் கொண்டது, அசுரர் மெய்யில் பரந்த செங்
               குருதி வெள்ளம்;
கார் கொண்ட விசும்பு கொண்டது, அவர் பிணக்
               காயம்; வானோர்
ஊர் கொண்டது, உரிமையோடும் அவர் உயிர்,
               மீண்டும்; என்றால்,
தார்கொண்ட அமரர்க்கு எவ்வாறு இவன் பகை
               தடிந்தது அம்மா!

146
உரை
   


இவ் வகை அசுர சேனை யாவையும் இரிய நூறி,
கொய் வரும் வரி வில் வீரன் குரகதத் தேர்மேல்
               கொண்டான்;
வை வரும் முனைவேல் சித்ரசேனன், வாசவனுக்கு ஓடி,
நைவரு துயரம் நீங்க, நவின்றனன், புரிந்த எல்லாம்.

147
உரை
   


செய்தி அறிந்த இந்திரன் நகரை அலங்கரித்து, விசயனை
எதிர்கொள்ளுதல்

சித்திரசேனன் மாற்றம் செவிக்கு அமுதாகக் கேட்டு,
பத்தி கொள் விமானச் சோதிப் பைம் பொன் மா
               நகரி கோடித்து,
எத் திசையவரும், ஏனை இமையவர் குழாமும், சூழ,
வித்தக விசயன்தன்னை விபுதர்கோன் எதிர்கொண்டானே.

148
உரை
   


கின்னரமிதுனம் இன் சொல் கீதங்கள் இனிது பாட,
துன்னி எங்கு எங்கும் சேரத் துந்துபிக் குழாம்
               நின்று ஆர்ப்ப,
பன்னஅரும் மறைகள் தெய்வ முனிவரர் பகர்ந்து வாழ்த்த,
மன்னவர் மன்னன்தன்னை வாசவன் தழுவிக் கொள்ளா,

149
உரை
   


யானைமேல் விசயனை நகர் வலம் செய்விக்க,
அது தகாது என்ற விஞ்சையனுக்கு இந்திரன்
அவனது உயர்வு எடுத்து உரைத்தல்

கையுடைக் கயிலை அன்ன கட கரிப் பிடரின் வைத்து,
மையுடைக் கொண்டல்வாகன், நகர் வலம் செய்த போதில்,
மெய்யுடைக் கலைகள் வல்லான் விஞ்சையன்
               ஒருவன் கண்டு,
'பொய்யுடைத் தலத்தோர்க்கு இன்ன பொறுக்குமோ?
               புனித!' என்றான்.

150
உரை
   


விஞ்சையன் உரைத்த மாற்றம் விபுதர்கோன்
               செவியில் சென்று,
நஞ்சு எனப் புகுதலோடும், நயனங்கள் செந் தீக் கால,
'நெஞ்சினில் அறிவு இலாதாய்! நீ இது கேட்டி!' என்னா,
மஞ்சு எனக் கரிய மெய்யான் மனம் கனன்று,
               இனைய சொல்வான்:

151
உரை
   


'ஆதி நாயகன், மா மாயன், அமரர்தம் துயரும் ஏனைப்
தல மடந்தைக்கு உற்ற புன்மையும் தீர்ப்பான் எண்ணி,
சீதைதன் கொழுநன் ஆன திண் திறல் இராமன் போல,
ஓத நீர் உலகில், மீண்டும் அருச்சுனன்
               உருவம் கொண்டான்.

152
உரை
   


'ஆதலால், 'மனிதன்' என்று, இவ் அருச்சுனன்தன்னை,
               இன்னே,
நீதியால், அமரர் யாரும் நெஞ்சினில் இகழல்' என்று,
மாதர்கள் வீதிதோறும் மலர் மழை சொரிந்து வாழ்த்த,
கோதிலா அமரர் கோமான், கொண்டு, தன்
               கோயில் சேர்ந்தான்.

153
உரை
   


இந்திரன் தனது சபையில் அருச்சுனனைப் பீடத்து அமர்த்தி,
அவன் போர் வன்மையைக் கூறுமாறு மாதலியிடம் வினவுதல்

அரிமுகக் கனக பீடத்து, அண்ணலை இருத்தி, அண்டர்
இரு புடை மருங்கும் நிற்ப, இந்திரன் இருந்த பின்னர்,
மருவு பொன் தடந் தேர் ஊரும் மாதலிதன்னை நோக்கி,
'புரி சிலை விசயற்கு உற்ற போர்த் தொழில் புகல்,
               நீ!' என்றான்.

154
உரை
   


மாதலி விசயனது போர் வன்மையைப் புகழ்தல்

மற்று அவன் தொழுது போற்றி, 'வானவர் குழுவுக்கு எல்லாம்
கொற்றவ! என்னால் இன்று கூறலாம் தகைமைத்து அன்றால்;
உற்று எதிர் மூன்று கோடி அசுரரும், உடனே, சேர
இற்றது கண்டேன்; பின்னர், வில்லின் நாண்
               இடியும் கேட்டேன்!

155
உரை
   


'ஆயது நிகழ்ந்த பின்னர், அயன் அருள் வரத்தினாலே
ஏய வாள் வலியின் மிக்க இரணியபுரத்துளோரைத்
தீய வெம் பகழி ஒன்றால் செற்றனன், இமைப்பில், முற்றும்;
மாயமோ? மனிதன் வில்லின் வன்மையோ? தெரிந்தது இல்லை!'

156
உரை
   


தேவர்கள் விசயனுக்குப் பல படைகள் வழங்குதல

என்றுகொண்டு, உயர் தேர்ப் பாகன் இசைத்தன
               யாவும் கேட்டு,
வன் திறல் அமரர் கோமான் மனம் மகிழ்ந்து இருந்தபோதில்,
துன்றிய அமரர் யாரும், தனித்தனி, சுருதியோடும்
வென்றிடு படையும், மற்றும் வேண்டுவ பலவும், ஈந்தார்.

157
உரை
   


அருச்சுனன் தருமனிடம் செல்ல விடை கேட்க, இந்திரன் சில
நாள் தங்குமாறு கூறி, தனி மாளிகை முதலியன அளித்தல்

தேவர்பால் வரமும், எல்லாச் சிறப்பும், இன்
               அருளும், பெற்ற
காவலன், கடவுள் வேந்தன் கழல் இணை பணிந்து, போற்றி,
'தா வரும் புரவித் தானைத் தருமன் மா மதலை பொன்-தாள்
மேவர வேண்டும்; இன்னே விடை எனக்கு அருளுக!' என்றான்.

158
உரை
   


மைந்தன் அங்கு உரைத்த மாற்றம் மனன் உற
               மகிழ்ந்து கேட்டு,
தந்தையும், 'இன்னம் சில் நாள் தங்குக, இங்கு' என்று ஏத்தி,
செந் திரு அனைய தோற்றத் தெய்வ மென் போக மாதர்
ஐந்தொடு ஆயிரரும், வேறோர் அம் பொன்
               மாளிகையும் ஈந்தான்.

159
உரை
   


விசயனது வெற்றியைத் தருமனுக்கு உரைக்குமாறு உரோமச
முனிக்கு இந்திரன் சொல்ல, முனிவன் போதல்

வரோதயம் ஆன தெய்வ வான் படை மறைகள் பின்னும்
புரோசனப் பகைவற்கு ஈந்து, புரந்தரன் இருந்த பின்னர்,
சரோருகர் அண்டம் விண்டால், ஒரு மயிர் சலிக்கும் முன்கை
உரோமச முனியை நோக்கி, உரைத்தனன், உற்ற எல்லாம்;

160
உரை
   

'வரி சிலை விசயன் வந்து, வான் தவம் புரிந்தவாறும்,
அரிவை ஓர் பாகன் அன்பால் அவற்கு அருள் புரிந்தவாறும்,
இரிய என் பகையை எல்லாம் இவன் தனி தடிந்தவாறும்,
தருமனுக்கு உரைத்தி' என்ன, தபோதன முனியும் போனான்.
161
உரை