18. பழம் பொருந்து சருக்கம்

அமித்திர முனிவனுக்காக அமைந்த நெல்லிக்கனியை
விரும்பி, திரௌபதி விசயனை வேண்டுதல்

அந் நெடு வனத்தில் சில் நாள் அகன்றபின், அமித்திரன் பேர்
என்னு மா முனிவற்கு என்றே, யாவரும் அருகு செல்லா,
நல் நலம் மிகுத்த நெல்லி நறுங் கனி ஒன்று கண்டாள்-
கன்னலும் புளிக்கும் இன் சொல் கயிரவம் கருகும் வாயாள்.

1
உரை
   


"இக் கனி எனக்கு நீ நல்கு!'என்று, வில் எடுத்துக்கொண்ட,
மைக் கனிக் களவு மானும் வடிவுடை, விசயனோடு
மெய்க் கனிவு உடைமை தோன்ற, விளம்பினாள்-வீசு தென்றல்
முக் கனி கமழும் சோலை முகில் தவழ் நாடன் பாவை.

2
உரை
   


விசயன் கனியை வீழ்த்த, அது கண்டோர், 'முனிவன்
காணில், இவன் என்படும்!' என்றல

சோமகர்க்கு அரசன் பாவை சொல்லுமுன், வில்லு வாங்கி,
மா முனிக்கு உணவாய் நின்ற மதுர ஆமலகம் தன்னை
ஏ முறை தொடுத்து வீழ்த்தி ஈதலும், ஆங்கண், கண்டோர்,
'ஏமுறக் காணில், இப்போது என்படும், இறுத்தோன்!' என்றார்.

3
உரை
   


தருமன் முன் சென்று விசயன் தன் செயலைக்
கூற, அவன் நொந்து கூறுதல்

கண்ட அம் முனிவர் சொல்ல, கடவுளர் கோமான் மைந்தன்,
கொண்ட அக் கனியை மூத்த கொற்றவன் திருமுன் வைத்து,
'மண்டு அழற் பாவை சொல்லால் மதியிலேன் எய்தேன்! என்றான்-
திண் திறல் தேவர்க்காகத் திதி மைந்தர் ஆவி கொண்டான்.

4
உரை
   


'காடு உறை வாழ்க்கை எய்தி, காய், கனி, மூலம், தின்று,
நீடுறு காலம் போக்கி, நீங்கலாது இருக்கும் நம்மை,
நாள்தொறும் இடையூறு அன்றி நண்ணுவது இல்லைஆயின்,
ஏடுறு தாராய்! செய்வது என்கொல்?' என்று இயம்பினானே.

5
உரை
   


முனிவன் சினவாமைக்கு வீமன் உபாயம் உரைக்க,
விசயன், 'என்னை யன்றி யாரையும் முனிவன் சபியான்
ஆதலின், நீவிர் அஞ்ச வேண்டா' எனல்

அவ் உரை வீமன் கேட்டு, 'ஆங்கு அமித்திரன் வந்த போதே,
இவ் உரை கேட்கின், நம்மை எரி எழச் சபித்தல் திண்ணம்;
வெவ் உரை உரையாமுன்னம் மெய்ம் முனிதன்னைப் போற்றி,
செவ் உரை கூறின், நம்மைச் சீறுமோ? சீறல் செய்யான்;

6
உரை
   


'பொறுத்திடும், மேல் இடா ஐம் புலத்தினன்ஆதலாலே;
மறுத்திடான், ஐய! நின்தன் மாசு இலா வாய்மை!' என்ன;
நிறுத்திடும் துலையோடு ஒப்பான், நினைவினுக்கு இசைய; தெவ்வைச்
செறுத்திடு விசயன், மீளச் செப்பினன், செப்பம் ஆக:

7
உரை
   


'செய் தவன் இனிது மாந்தத் தேவர் நாள் ஒன்றுக்கு ஒன்றுஆம்
கைதவம் இல்லா நெல்லிக் கனியினைக் கருதுறாமல்,
எய்த என்தன்னை அன்றி, யாரையும் இடான், வெஞ் சாபம்;
மெய் தவறாத சொல்லாய்! வெருவுதல் என்கொல்?' என்றான்.

8
உரை
   


'உனக்கு இடர் வர, யாம் உன்னை நீங்கிப் போய்ப்
பிழைப்போமோ?' எனத் தருமன்

வேந்தன் அம் மாற்றம் கேட்டு, வில்வலான்தன்னை நோக்கி,
'ஏந்திழை சொல்ல, ஓராது, இனிய இக் கனி, இன்று ஈர்ந்தாய்;
மாந்தரில் மடங்கல் ஒப்பாய்! வருத்தம் நீ உழக்க, யாமோ,
பேர்ந்து போய்ப் பிழைப்போம்?' என்றான், பிதாவினும்
                           கருணை மிக்கான்.

9
உரை
   


நகுல சகாதேவர் தத்தம் கருத்தை உரைத்தல

'அம் முனி வந்த ஆபத்துஅதனினும் கொடிது, இக் கானத்து
இம் முனி உணவு கொண்டது!' என வெரீஇ, நகுலன்தானும்,
'வெம் முனிவு அகற்றி, நாமும் மேம்பட வேண்டின், இன்னம்
தெவ் முனி திகிரியானைச் சிந்தனை செய்தி' என்றான்.

10
உரை
   


'விளை தவ முனிவன் கண்டு, வெகுளும்முன், அவன் தாள் போற்றி,
கிளைபடு நெல்லி வாசக் கேழ் உறு கனி முன் வைத்தால்,
உளைவுற முனியான், நம்மை; உறுதி மற்று இதுவே' என்னா,
இளையவன்தானும் தம்முன் நினைவினுக்கு ஏற்பச் சொன்னான்.

11
உரை
   


திரௌபதி துன்பத்திற்குத் தான் காரணமானது
குறித்து வருந்துதல்

' "பெண்மொழி கேளார் என்றும் பெரியவர்" எனக் கொண்டு, இந்த
மண்மொழி வார்த்தை பொய்யோ? வருத்தம் நீர் உற்ற எல்லாம்
எண் மிக எண்ணின், முன்னம் என்பொருட்டு அன்றோ?' என்று,
கண்மலர் அருவி சோர, கனற்பிறந்தாளும் சொன்னாள்.

12
உரை
   


நகுலன் சொன்னபடி தருமன் கண்ணனைச் சிந்திக்க,
அவன் வந்து உபாயம் உரைத்தல்

தம்பியர்தாமும், வேள்வித் தையலும், உரைத்த மாற்றம்
கிம்புரி நெடுங் கோட்டு அம் பொன் கிரி வல்லோன்
                           கேட்ட பின்னர்,
'வெம் பரி நகுலன் சொல்லே விதி' எனக் கருதி, அப்போது
எம் பெருமானை உன்ன, இவன் எதிர் அவனும் வந்தான்.

13
உரை
   

கண்டு இரு கண்ணும், இதயமும், களிப்ப, கட்செவிப்
                           பேர் அணை மறந்து,
வண் துவரையில் வாழ் தண் துழாய் மாலை மாதவன்
                           வருதலும், எதிர்கொண்டு,
அண்டரும் இறைஞ்சற்கு அரிய தாள் இறைஞ்சி, ஆங்கு உறும்
                           இடரினை அவற்குத்
திண் திறல் அறத்தின் திருமகன் உரைப்ப, திருச் செவி
                           சாத்தினான், செப்பும்:
14
உரை
   


'திண்மையால் உயர்ந்த நீவிர் ஐவிரும், இத் தீயிடைப்
                           பிறந்த சேயிழையும்,
உண்மையா நெஞ்சில் நிகழ்ந்த பட்டாங்கு ஈண்டு உரைத்திட,
                           கோட்டில் மீண்டு ஒன்றும்;
வண்மையால் உயர்ந்தீர்!' என்று செம் பவள வாய்
                           மலர்ந்தருளினான், மாயோன்.
தண்மை ஆர் கருணைத் தராபதி முதலோர் சாற்றுவார்,
                           தம் மனத்து இயல்பே:

15
உரை
   


கண்ணன் உரைத்தபடி, தருமன் முதலியோர்
தத்தமது உள்ளக் கருத்தை உரைத்தல்

'வெல்லுக, அறமும், மெய்ம்மையும், பொறையும், மேக
                           மேனியனும்; வெல்லாமல்
செல்லுக, பாவம், பொய்ம்மொழி, கோபம், தெயித்தியர்
                           குலம்' எனத் தெளிவுற்று,
அல்லும், வெம் பகலும், என் மனம் நிகழும்; அலகையாம்
                           அன்னையை முன்னம்
கொல்லுதல் புரிந்தோய்!'

16
உரை
   


'பிறர் மனையவரைப் பெற்ற தாய் எனவும், பிறர்
                           பொருள் எட்டியே எனவும்,
பிறர் வசை உரைத்தல் பெருமை அன்று எனவும், பிறர்
                           துயர் என் துயர் எனவும்,
இறுதியே வரினும், என் மனக் கிடக்கை, எம்பிரான்! இவை'
                           என உரைத்தான்-
மறலியும் மடியுமாறு மல் இயற்கை வலிமை கூர்
                           வாயுவின் மைந்தன்.

17
உரை
   

'ஊனமே ஆன ஊனிடை இருக்கும் உயிரினைத் துறந்தும்,
                           ஒண் பூண் ஆம்
மானமே புரப்பது, அவனிமேல் எவர்க்கும் வரிசையும்,
                           தோற்றமும், மரபும்,-
ஞானமே ஆன திருவடிவு உடையாய்!-ஞாலம் உள்ளளவும்
                           நிற்றலினால்,
ஈனமே உயிருக்கு இயற்கை ஆதலினால்,' என்றனன்-வீமனுக்கு
                           இளையோன்.
18
உரை
   

'குலம் மிக உடையர், எழில் மிக உடையர், குறைவு இல்
                          
செல்வமும் மிக உடையர்,
நலம் மிக உடையர், என்னினும், கல்வி ஞானம் அற்பமும்
                          
இலாதவரை,
வலம் மிகு திகிரிச் செங் கையாய்! முருக்கின் மணம் இலா மலர்
                          
என மதிப்பேன்,
சலம் மிகு புவியில்' என்றனன்-வாகைத் தார் புனை தாரை
                          
மா வல்லான்.
19
உரை
   

'ஒரு மொழி அன்னை, வரம்பு இலா ஞானம் உற்பவ
                           காரணன், என்றும்
தருமமே துணைவன், கருணையே தோழன், சாந்தமே
                           நலன் உறு தாரம்,
அரிய திண் பொறையே மைந்தன், மற்று இந்த அறுவரும்
                       அல்லது, ஆர் உறவு?' என்று
இருவரில் இளையோன், மொழிந்தனன், தன் பேர் இதய
                        மா மலர்க் கிடை எடுத்தே.
20
உரை
   


'ஐம் புலன்களும்போல் ஐவரும் பதிகள் ஆகவும்,
                           இன்னம் வேறு ஒருவன்
எம் பெருங் கொழுநன் ஆவதற்கு உருகும், இறைவனே!
                           எனது பேர் இதயம்;
அம் புவிதனில் பெண் பிறந்தவர் எவர்க்கும் ஆடவர்
                           இலாமையின் அல்லால்,
நம்புதற்கு உளரோ?' என்றனள்-வசிட்டன் நல் அற
                           மனைவியே அனையாள்.

21
உரை
   


அறுவரும் உண்மை உரைக்கவே, நெல்லிக்கனி
பண்டு போலப் பொருந்திற்று

அறுவரும் இவ்வாறு உண்மையே உரைத்தார்; ஆதலால்,
                           நிரை நிரைப்படியே,-
மறு அணி துளப மார்பனும் கேட்டான்;-மா முனிக்கு
                           ஓதனம் ஆன
நிறை சுவை அமுத நெல்லியின் கனியும் நின்ற கொம்பு
                           அணைந்ததால்;-என்றும்
பெறு முறை பெறுமே, உள்ளவாறு உரைத்தால், பெரியவர்
                           பேசும் வாசகமே!

22
உரை
   


கண்ணன் துவாரகை செல்ல, பாண்டவர்
அவ்வனத்தில் வாழ்ந்திருத்தல்

முளைத்து எழு கமலத்து அரும்பு என அரும்பும் முகிழ்
                     முலைப் பொதுவியர் மலர்க்கை
வளைத் தழும்பு அகலா மரகத மலைபோல் வடிவு அழகு
                           உடைய எம் மாயோன்,
உளைத்து எழு தரங்கப் பாற்கடல் மறந்தே, உறையும் வண்
                           துவரையை நோக்கி,
இளைத்தவர் இன்னல் ஒழித்து, மீண்டு, அகன்றான்; இவரும்,
                     மீண்டு இறைஞ்சி, ஆங்கு இருந்தார்.

23
உரை