20. மற்போர்ச் சருக்கம்

வாசவன் என்ற மற்போர் வீரன் பல மல்லர் சூழ விராடன்
அவை சார்ந்து, தன் பெருமை கூறுதல்

அல்லினுக்கு இந்து என்ன ஆங்கு அவர் உறையும் நாளில்,
'வில்லினுக்கு இராமன் என்ன, வேலினுக்கு இளையோன் என்ன,
சொல்லினுக்கு உததி தோய் கைத் தொல் முனி என்ன, வன் போர்
மல்லினுக்கு ஒருவன் யானே; வாசவன்' என்று வந்தான்;-

1
உரை
   


அண்ட மா முகடோடு ஒத்த சென்னியன்; அவனி முற்றும்
கொண்ட மா மேரு ஒத்த குங்குமக் கடகத் தோளான்;
சண்டமாருதத்தோடு ஒத்த வலியினன்; தந்தி எட்டின்
கண்டம் ஆர் முகத்தின் நீண்ட கை எனத் திரண்ட காலான்;-

2
உரை
   


ஆயிரம் மல்லர் தன்னை அணி நிழல் என்னச் சூழ,
'பாய் இரும் புரவித் திண் தேர்மிசை வரும் பரிதி போல,
மா இரு ஞாலம்தன்னில் மற்று இவற்கு எதிர் இன்று!' என்ன,
சேய் இருந் தடக் கை வேந்தன் திருந்து அவைஅதனைச்
                                     சேர்ந்தான்.

3
உரை
   


விராடன் வாசவனுக்கு உரிய சிறப்புச் செய்து,
தனது மல்லர்களை நோக்க, அவர்கள் தனித்தனி
அவனுடன் மற்போர் செய்தல்

மன்னனை வணங்கி நின்று, 'வலியுடை மல்லின் போருக்கு
என் அலது இல்லை, இந்த எழு கடல் வட்டத்து!' என்றான்;
கொல் நவில் வேலினானும், கொடுப்பன கொடுத்து, முன்னம்
தன்னுழை வைகும் மல்லர்தங்களை நோக்கினானே.

4
உரை
   


அந்த மல் தொழிலின் மிக்கோர் அநேகர், நீடு அசனி ஒப்பார்,
வந்த மல் தலைவன் தன்னை, 'வருதி நீ, எம்மொடு!' என்று,
முந்த மற் கலை நூல் சொன்ன முறைமையின், அரசன் காண,
சந்த மற் சமரம் செய்தார், தனித்தனி ஒருவராக.

5
உரை
   


எல்லோரையும் வென்ற வாசவனுக்கு விராடன்
எல்லாச் சிறப்புக்களும் செய்தல்

தத்தியும், தோளும் தோளும் தாக்கியும், சென்னி கொண்டு
மொத்தியும், பற்பல் சாரி முடுகியும், வயிரக் கையால்
குத்தியும், காலும் காலும் கோத்தும், மற் கூறு தோன்ற
ஒத்தியும், பாறை என்ன உரனுடன் உரங்கள் சேர்த்தும்,

6
உரை
   


ஓர் ஒரு மல்லர் ஆக ஒரு தனி மல்லன்தன்னோடு
ஆர் அமர் உடற்றி, மல்லர் அனைவரும் அழிந்த பின்னர்,
வீரரில் வீரன் ஆன வென்றி வேல் விராடன் மெச்சி,
தேரின்மேல் வந்த மல்லன்தனக்கு எலாச் சிறப்பும் செய்தான்.

7
உரை
   


மறுநாள் தருமன் விராடனிடம், 'வாசவனை வெல்லுதற்குத்
தக்கான் நின் மடையர் தலைவன் பலாயனன்' என்ன, அரசன்
அவனை அழைத்து வரச் செய்தல்

அன்று போய் மற்றை நாளின் அரசனோடு அறத்தின் மைந்தன்,
'வென்ற மா மல்லன்தன்னை வெல்லுதற்கு உரிய மல்லன்,
இன்று நின் மடையர்தம்மில் பலாயனன் என்போன்தன்னை
அன்றி, வேறு இல்லை' என்றான்; அரசனும், 'அழைமின்' என்றான்.

8
உரை
   


வீமன் வாசவனுடன் மற்போர் பொருது, வெற்றி பெறுதல்

பைம் பொன் மா மேரு வெற்பின் பராரையைச் சோதி நேமி
விம்பமாய் வளைந்தது என்ன, விளங்கு பொன் கச்சை வீக்கி,
தம்பம் ஆம் என்னத் தக்க தண்டொடு, தரணி வீழா
உம்பர் ஆர் அமுதம் உண்ட உரவினான், விரைவின் வந்தான்.

9
உரை
   


கதையுடைக் காளை வந்து, கடுந் திறல் மல்லன்தன்னோடு,
உதயமோடு அத்தம் என்னும் ஓங்கல் ஓர் இரண்டு சேர்ந்து
துதைவுறப் பொருவதேபோல், தோள் புடைத்து, உருமின் ஆர்த்து,
பதயுகத்தாலும், தம்தம் பாணிகளாலும், சேர்ந்தார்.

10
உரை
   


உதைத்தனர், வீசி வன்போடு; உரம்கொடு கரங்கள் எற்றிப்
புதைத்தனர், விரல்கள் மெய்யில்; புருவமும், மூக்கும், வாயும்,
சிதைத்தனர்; புயங்கள் என்னும் சிலம்புகள் தாக்கத் தாக்கப்
பதைத்தனர்; ஓடி ஓடிப் பற்றினர், மீள மீள.

11
உரை
   


கற்றன காயம் எல்லாம் கண்டு, கண் களிக்கக் காட்டி,
உற்றனர் நின்ற போதில், ஊதையின் புதல்வன்-ஊரு
மற்றவன் மருங்கு பற்ற, வன் கரம் மிடறு பற்ற,
செற்றனன்,-இடிம்பன்தன்னைச் செற்ற வெங் கொற்றத் தோளான்.

12
உரை
   


வென்ற பலாயனன் என்னும் வீமனுக்கு விராடன் பல
வரிசைகள் அளித்துப் பாராட்டுதல்

தேர்மிசை வந்த மல்லன் சிதைந்த பேர் உறுப்பினோடும்
பார்மிசைக் கிடக்க, நின்று, பணைப் புயம் கொட்டி ஆர்த்தான்;
சீர் மிகு மல்லன்தன்னைச் சிறப்புறத் தழுவி, 'எல்லாப்
போர்முகங்களுக்கும் நின்னைப் போல்பவர் இல்லை!' என்றான்.

13
உரை
   


மன்னவர் களிக்கத்தக்க வரிசைகள் அனைத்தும் நல்கி,
முன்னவன் ஆகி வைகும் முனி மனம் களிக்குமாறு,
தன் அருகு அணுக வைத்து, 'தலத்து எதிர் இல்லை, இந்த
இன் அமுது அடுவோற்கு!' என்றான், இயல் திறல் விராடன்தானே.

14
உரை