22. நிரை மீட்சிச் சருக்கம்

கடவுள் வாழ்த்து

தொழுவார்தம் வினை தீர, முன் கோலம் ஆய், வேலை
                               சூழ் பார் எயிற்று
உழுவானை, நல் நாமம் ஒன்றாயினும் கற்று,
                               ஒர் உரு ஓதினார்
வழுவாத சுரர் ஆக, நரர் ஆக, புள் ஆக,
                               மா ஆக, புன்
புழு ஆக, ஒன்றில் பிறந்தாலும், நரகில் புகார் காணுமே.

1
உரை
   


துரியோதனன் பாண்டவரை நாட ஒற்றர்களை ஏவ, அவர்கள்
எங்கும் தேடிக் காணாமையைத் தெரிவித்தல்

மூது ஆர் அழற் பாலை வனமும், தடஞ் சாரல்
                               முது குன்றமும்,
சூது ஆடி, அழிவுற்று, அடைந்தோர்கள் சரிதங்கள்
                               சொன்னோம்; இனி,
பாதாரவிந்தத்து மருவார் விழக் கொண்டு பார்
                               ஆளும் வெங்
கோது ஆர் மனத்தோன், விராடன்தன் நிரை கொண்ட
                               கோள் கூறுவாம்:

2
உரை
   


'ஈர்-ஆறும் ஒன்றும் சுரர்க்கு உள்ள நாள் சென்ற;
                               இனி, நம்முடன்
பார் ஆள வரும் முன்னர், அடல் ஐவர் உறை நாடு
                               பார்மின்கள்!' என்று,
ஓர் ஆயிரம் கோடி ஒற்றாள் விடுத்தான்; அவ்
                               ஒற்றாள்களும்,
வார் ஆழி சூழ் எல்லை உற ஓடி, விரைவின்கண்
                               வந்தார்களே.

3
உரை
   


'காடு என்று, மலை என்று, நதி என்று, கடல் என்று,
                               கடல் ஆடைசூழ்
நாடு என்று, நகர் என்று, நாடாத திசை இல்லை,
                               நாள்தோறும், யாம்;-
தோடு என்று தாது என்று தெரியாது மது மாரி
                               சொரி மாலையாய்!-
நீடு என்று வலம் மேவும் அவனிக்குள் அவர் இல்லை;
                               நின் பாதமே!'

4
உரை
   


வீடுமன் பாண்டவர் வசிக்கும் நாட்டின்
நிலை எடுத்துரைத்தல்

முன், ஒற்றை, இரு சங்கம், உடன் ஊத, எதிர் சென்று,
                               முனை வெல்லும் மா
மன் ஒற்றர் இது கூற, மந்தாகினீமைந்தன் மகன்
                               மைந்தனுக்கு,
'உன் ஒற்றர் உணர்தற்கு வருமோ, அறன் காளை
                               உறை நாடு? கார்
மின் ஒற்று மழை உண்டு; விளைவு உண்டு' எனத்
                               தேடும் விரகு ஓதினான்,

5
உரை
   


ஒற்றாள்களில் ஒருவன் விராடனது நாட்டின் வாழ்வும்,
கீசகன் ஒரு வண்ண மகள் காரணத்தால்
மாண்ட செய்தியும் கூறுதல்

ஒற்றாளில் ஒருவன் பணிந்து, 'என்றும், எவ் வாழ்வும்
                               உண்டாகியே,
வில்-தானை வெம் போர் விராடன்தன் வள நாடு
                               மேம்பட்டதால்;
"மல் தாழ் புயக் கீசகன்தானும் ஒரு வண்ண மகள் காரணத்து
இற்றான்" எனும் சொல்லும் உண்டு' என்று, நிருபற்கு
                               எடுத்து ஓதினான்.

6
உரை
   


கன்னன் உரைத்த உபாயப்படி, துரியோதனன் ஏவலால்,
திரிகர்த்தன் விராடனது ஆநிரைகளைக் கவர்தல்

'வண் தார் விராடன்தன் வள நாடு தண்டால்
                               மலைந்தே, தொறுக்
கொண்டால், அவன் சூழலில் சூழும் வினயம்
                               குறிப்போர் இருப்பு
உண்டாகின், நிரை மீளும்; இன்று ஆகின், மீளாது; என்
                               உட்கோள் இது' என்று,
எண் தாழும் இதயத்து நிருபற்கு உரைத்தான்-இரவி
                               மைந்தனே.

7
உரை
   


தக்கோர் தகும் சொற்கள் கேளாத துரியோதனன்
                               சொல்லினால்,
மிக்கோர் மிலைச்சும் செழுந் தாம விறல் வெட்சி
                               மிலை தோளினான்
திக்கு ஓதை எழ விம்ம முரசங்கள், அரசு ஆன
                               திரிகத்தர் கோன்
அக்ரோணி படையோடு போய், ஆன் அடித்தான்,
                               அவன் சார்பிலே,

8
உரை
   


நிரை காவலர் பகைவர் நிரை கொண்டமையை விராடனுக்கு
உணர்த்த, அவன் சேனைகளுடன் திரிகர்த்தனை
நெருங்கித் தடுத்தல்

கரை காண அரிதான கடல் ஒத்த வெஞ் சேனை
                                 கை சூழவும்,
தரை காவல் பெறு தோளின் ஆண்மைப் பெருங் கேளிர்
                                 தற் சூழவும்,
விரை காலும் மலர் ஓடை எனுமாறு இருக்கும்
                                 விராடற்கு, நல்
நிரை காவல் நின்றோர் பணிந்து, ஓதினார், தெவ்வர்
                                 நிரை கொண்டதே.

9
உரை
   


'செரு மிக்க படையோடு சதியாக, மதியாது,
                               திரிகத்தர் கோன்,
நிருமிக்க ஒட்டாத என் பூமிதனில் வந்து நிரை கொள்வதே!
பருமித்த மதயானை, தேர், வாசி, ஆள், இன்ன பண்
                               செய்யும்' என்று
உரும் மிக்க முகில்போல் உரைத்தான்-ஒர் அக்ரோணி
                               உள தானையான்.

10
உரை
   


ஒண் தூளி வானம் புதைக்க, பல் இயசாலம் ஒலிபட்டிட,
திண் தூசி அணியாக, நிரை கொண்ட வெஞ் சேனை
                               சென்று எய்தினான்,
ஞெண்டு ஊரும் வயல்தோறும், வளை நித்திலம் சிந்தி,
                               நிலவு ஊரவே
வண்டு ஊத மலரும் தடம் பொய்கை சூழ் மச்ச வள நாடனே.

11
உரை
   


விசயனை ஒழிந்தோர் நால்வரும் போர் நலம் காண உடன்
செல்ல, போரில் திரிகர்த்தன் சேனை பின்னிடுதல்

உள் பேடியாய் வைகும் விற் காளை அல்லாத
                               ஒரு நால்வரும்,
நட்பு ஏறு பூபாலனுடன் ஏகினார், போர் நலம் காணவே;
கொட்பு ஏறி நிரை கொண்ட வெஞ் சேனையும், செல்
                               கொடுஞ் சேனையும்,
பெட்பு ஏறி, அமர் செய்ய, முன்னிட்ட குரு சேனை பின்னிட்டதே.

12
உரை
   


திரிகர்த்தன் போரில் அம்பு எய்து, விராடன் சேனை
பின்னிடுமாறு செய்து, அவனைத் தன் தேரில் பிணித்தல்

மெய்க் கொண்ட புண்ணோடு தன் சேனை நில்லாமல்
                               வென்னிட்டபின்
கைக் கொண்ட நிரையைக் கடத்தி, பொலம்
                               பொன்-கழல் காலினான்,
செய்க்கொண்ட கழுநீர் அலங்கல் கரந்தைத் திருத்தாமன்மேல்
மைக் கொண்டல் என வில் வளைத்து, ஆறு-பத்து அம்பு
                               மழை சிந்தினான்.

13
உரை
   


மா மச்ச உடல் புன் புலால் மாறி, வண் காவி
                               மணம் நாறும் அக்
கோ மச்ச வள நாடனும், கொற்ற வரி வில் குனித்து,
                               ஐந்து செந்
தாமச் சரம் கொண்டு, தேர், பாகு, கொடி, வாசி
                               தனுவும், துணித்து,
ஆம் அச்சம் உற, மற்று அவன் கோல மார்பத்தும்,
                               அம்பு ஏவினான்.

14
உரை
   


தனைத் தேர் அழித்தோனை, நிரை கொண்டு போகின்ற
                               தனு வீரனும்,
துனைத் தேரும் வேறு ஒன்று மேல் கொண்டு, நால்-ஐந்து
                               தொடை ஏவியே,
வினைத் தேரும், வய மாவும், வெம் பாகும், விழ எய்து,
                               வில் நாணினால்,
முனைத் தேர் முகத்தில் பிணித்தான், அவன் சேனை
                               முகம் மாறவே.

15
உரை
   


கங்கனது தூண்டுதலால் பலாயனன் பொருது, விராடனை மீட்டு,
திரிகர்த்தனையும் அவ் விராடனது தேரில் கட்ட, பகைவர்
சேனை அழிந்து ஓடுதல்

திண் திறல் சிலை விராடனைத் தேரொடும் பிணித்து,
கொண்டு போதலும், குருகுலக் கோமக முனிவன்
கண்டு, தன் திருத் தம்பியைக் கடைக்கணித்தருள,
மண்டு தீ என எழுந்தனன், மடைத்தொழில் வல்லான்.

16
உரை
   


உகத்தின் ஈறுதோறு, ஓதையோடு ஊதையாம் தாதை,
நகத்தினால் உயர் நகங்களை நருக்குமா போல,
திகத்த பூபதி தேரினை வேறு ஒரு தேரால்
தகர்த்து, வில்லொடும் அகப்படுத்தினன், அவன்தனையும்.

17
உரை
   


வீரியம் தனக்கு ஒருவனாம் விராடனை, ஒரு பொன்-
தேரில், 'ஏறுக!' என்று ஏற்றி, அத் தேரினில், திகத்தன்
சோரி பாய் தடந் தோள்களை வடத்தினால் துவக்கி,
மூரி ஏறு என மீண்டனன்; முறிந்தது, அச் சேனை.

18
உரை
   


விராடன் பலாயனனுக்கு நன்றி கூறுதல்

பொரு முகத்தினில் பகைவனைப் புயம் உறப் பிணித்து
வெரு முகத்தினில் வீடு கொள் வீமனை, விராடன்,
'செருமுகத்தினில் எனக்கு நீ செய்த பேர் உதவிக்கு
ஒருமுகத்தினும் இல்லை, கைம்மாறு!' என உரைத்தான்.

19
உரை
   


தாமக்கிரந்தி பகைவர் குதிரைகளைக் கவர, தந்திரிபாலன் ஆநிரைகளை மீட்டல்

சேவலான் என, தயித்தியன் அனைய அத் திகத்தர்
காவலானை, அக் கால்மகன் பிணித்தமை கண்டு,
மா வலான் வய மாப் பதினாயிரம் வௌவ,
கோ வலான், அவன் கொண்ட கோ, மீளவும் கொண்டான்.

20
உரை
   


சூரியன் மறைந்த காட்சி

துன்னலன்தனைத் தோள் உறத் துவக்கி முன் தந்த,
பன்னு நூல் மடைப் பலாயனற் கண்டு பாவித்தாங்கு,
அன்னகாலையில் அருக்கனைத் தேரொடும் அணைத்து,
மன்னு தன் திசை வன் சிறைப் படுத்தினன், வருணன்.

21
உரை
   


கங்கன் சொற்படி, திரிகர்த்தனைத் தளை நீக்கி, அவனைத்
தேரில் செல்ல விடுத்து, வேறு பகைப் படைகளின்
வரவு கருதி, விராடன் அங்கு இருத்தல்

கங்கன் என்று தன் அருகு இருந்தருளிய கடவுள்-
துங்க மா முனி சொற்படி, தோள் வடம் நெகிழ்த்து,
சிங்கம் அன்ன அத் திகத்தனை, 'செல்க!' என விடுத்தான்,
அங்க மா மதில் அயோத்திமன், தேரும் ஒன்று அளித்தே.

22
உரை
   


போர் அணிப் படையொடும் அவன் போனபின், தனது,
தேர் அணிப் பெருஞ் சேனையை ரவி குல திலகன்
பேர் அணிப்பட வகுத்து, மற்று யாரினும் பெரியோன்
ஈர்-அணிப்படை வரும் எனக் கங்குல் அங்கு இருந்தான்.

23
உரை
   


திரிகர்த்தன் படைகள் சிதறி ஓடியமையைத் துரியோதனன்
கேட்டு, வட திசையில் பெருஞ் சேனையுடன் வந்து
ஆநிரை கவர்தல்

கெட்ட வெம் படை கெட்டமை சுயோதனன் கேளா,
முட்ட எண் திசா முகங்களும் பேரிகை முழங்க,
தொட்ட பைங் கடல் சூரியன் தோன்றும்முன் தோன்றி,
வட்ட மா மதில் விராடன் ஊர் வட திசை வளைந்தான்.

24
உரை
   


வளைய, நாடு எலாம் மன்னவன் வரூதினி பரப்பி,
விளையும் நன் பெரு விளைவு எலாம் வெங் கனல் கொளுத்தி,
அளையும் மா மணி ஆ நிரை கவர்தலும், ஆயர்
உளைய ஓடி வந்து, ஊர் புகுந்து, உத்தரற்கு உரைப்பார்:

25
உரை
   


ஆயர் விராடன் மகன் உத்தரனிடம் ஓடி வந்து, செய்தி தெரிவித்தல்

'குடம் நிறைப்பன குவி முலைக் கோ நிரை மீட்பான்
திடனுடைப் புய மன்னவன் தென் திசைச் சென்றான்;
வட திசைப் புலம் முழுவதும் மாசுணக் கொடியோன்
அடல் வயப் படை ஆழியின் பரந்ததை அன்றே.

26
உரை
   


'நாட்டில் உள்ளன பலன்களும் கவர்ந்தனர்; நறுந் தண்
காட்டில் உள்ளன சுரபியின் கணங்களும் கவர்ந்தார்;
கூட்டில் உள் உறை கலுழனின் குஞ்சுபோல், இனி நீ
வீட்டில் உள் உறைகின்றது என்?-வேந்தன் மா மதலாய்!'

27
உரை
   


'நகர் காமின்!' என்று மகளிரைச் சுதேட்டிணை சொல்ல,
உத்தரன் தாயை வணங்கி, 'சாரதி இருப்பின் யான்
சென்று பகைவரை வெல்வேன்' எனல்

என்ற போதில், அப் புதல்வனைப் பரிவுடன் ஈன்றாள்,
நின்ற மங்கையர்தங்களை நிரை நிரை நோக்கி,
'சென்ற காவலன் வரும் துணை, செங் கையில் படைகொண்டு,
ஒன்ற ஏகி, நம் எயில் புறம் காமின்!' என்று உரைத்தாள்.

28
உரை
   


உரைத்த அன்னையைக் கதுமென உத்தரன் வணங்கி,
'நரைத்த ஓதி! நின் திருமொழி நன்று!' என நகையா,
'அரைத்த ஆரமும், ஆரமும், மாலையும், அணிந்து, என்
வரைத் தடம் புயம் வளர்த்தது, மகளிர் போர் பொரவோ?

29
உரை
   


'கனை கடற்படையுடன் நிரைக் கணம் கவர்ந்தவரை
முனைபடப் பொருது, இமைக்கும் முன் முதுகு கண்டிடுவேன்;
வினைமுகத்தினை அறிந்து, தேர் விசையுடன் விட, என்
நினைவொடு ஒப்பது ஓர் சாரதி நேர்ந்திலன்' என்றான்.

30
உரை
   


வண்ண மகள், 'பேடி தேர் விடுவாள்' என்ன, சுதேட்டிணை
ஏவலால் பேடி தேர் விட, உத்தரன் போருக்குச் செல்லுதல்

உத்தரன் புகல் உறுதி கேட்டு, ஒப்பனைக்கு உரியாள்
கொத்து அரம் பொரு கூர் அயில் குமரனைக் குறுகி,
'வித்தரம் பெறு தேர் விடும், விசயனுக்கு இவள்' என்று,
அத் தரம் பெறு பேடியைக் காட்டினள், அன்றே.

31
உரை
   


நாடி, வாசியின் நல்லன நான்கு அவை பூட்டி,
தேடி, ஆயுதம் சிலைமுதல் தெரிந்தவை கொண்டு,
கோடி கோடி பைங்கோதையர் குழீஇயினர் வாழ்த்த,
பேடி தேர் விட, சென்றனன், சுதேட்டிணை பிள்ளை.

32
உரை
   


விலங்கல் மா மதில்களும் புற வீதியும் கடந்து, ஆங்கு
இலங்கு நேமி ஒன்று உடைய தேர் என்னலாம் தேர்மேல்,
துலங்கு பேர் ஒளி அருக்கனில் உருத்து எழு தோற்றத்து
அலங்கல் உத்தரன், உத்தர திசையை வந்து, அடைந்தான்.

33
உரை
   


விண் கொளா மதி மேன்மை கொள் மீன்இனம் என்ன,
மண் கொளா விறல் மன்னுடை வரம்பு இல் வான் படையை,
எண் கொளா மனத்து இராகவன் திருக்குலத்து இளைஞன்,
கண் கொளாவகை புகுந்து, தன் கண்ணுறக் கண்டான்.

34
உரை
   


சேனையைக் கண்டு உத்தரன் நடுங்கிச் சோர, பேடியாம்
பிருகந்நளை அவனுக்குத் தேறுதல் கூறுதல்

கைந் நடுங்கவும், கால் நடுங்கவும், கருத்து அழிந்து
மெய்ந் நடுங்கவும், நாப் புலர்ந்து, உயிர்ப்பு மேல் விஞ்சிச்
சொல் நடுங்கவும், சுடர் முடி நடுங்கவும், சோர்ந்தான்-
மைந் நெடுங் களிற்று உரனுடை விராடர் கோன் மைந்தன்.

35
உரை
   


'அஞ்சல், அஞ்சல்! நீ பகைவரை ஆர் உயிர் அடுதல்,
துஞ்சல், என்று இவை இரண்டு அலால், துணிவு வேறு உண்டோ?
வெஞ் சமம்தனில் வந்து, புண் படாது இனி மீண்டால்,
வஞ்ச நெஞ்சுடை வஞ்சியர் என் சொலார்?-மறவோய்!

36
உரை
   


'நிலையும் முட்டியும் நிலை பெற நின்று, நேர்படத் திண்
சிலை வளைத்து, வெஞ் சிலீமுகம் சிற்சில தொடுத்து,
மலை இலக்கு என யாரையும் மலைந்திடு; மலைந்தால்,
அலை கடல் புவி அரசரில் ஆர் எதிர் நிற்பார்?

37
உரை
   


உத்தரன் தேறாது, 'மீள வேண்டும்!' என்ன, அவள்,
'யான் பொருது பகை வெல்வேன்' எனல்

'தூண்டு மா இவை, சொரி மதக் களிறு இவை, துரங்கம்
பூண்ட தேர் இவை, பதாதி மற்று இவை!' எனப் புகல,
'ஈண்டு நின்றவை யாவையும் யா எனத் தெரியா,
மீண்டு போவதே உறுதி!' என்றனன் இகல் வீரன்.

38
உரை
   


வெயர்த்த மேனியை நறும் பனி நீரினால் விளக்கி,
'அயர்த்து, நீ முதுகிடாது ஒழி, இமைப்பொழுது; ஐயா!
உயர்த்த பல் கொடிப் பகைஞரைத் தனித்தனி ஓட்டி,
பெயர்த்து நல்குவேன் நிரையும்' என்று உரைத்தனள், பேடி.

39
உரை
   


உத்தரன் தேரில்நின்று குதித்து ஓட, அவனைப் பிடித்து
வந்து தேரில் கட்டி, முன் ஒளித்த வில் அம்புகளையும்
கொண்டு, விசயன் விரைவில் களம் புகுதல்

கொடித் தடந் தனித் தேரின்நின்று உகைத்து முன் குதியா,
அடித் தலம் பிடர் அடித்திட ஓடலும், அவனைத்
தொடித் தடம் புயம் இரண்டையும் தொடர்ந்து போய்த் துவக்கிப்
பிடித்து வந்து, ஒரு நொடியினில் தேருடன் பிணித்தான்.

40
உரை
   


பிணித்த தேரினைப் பெற்றமும் பிற்படக் கடாவி,
திணித்து அரும் பெரும் பொதும்பரில் சேர்த்திய சிலையும்
துணித்து மேவலர் முடி உகு சோரி தோய் தொடையும்
கணித்த எல்லையில், கொண்டு, மீண்டு, அமர்க் களம் கலந்தான்.

41
உரை
   


மரத்திலிருந்து கொண்டு வந்த படைகள் விசயனுடையவை
என்பது தெரிந்து, உத்தரன் அவனைப் பற்றி உசாவுதல்

'எரிப் புறத் தருத் தரு படை யா?' என வினவ,
'கிரிப் புறப் பெருங் கான் உறை கிரீடிய' என்ன,
'தெரிப்புறப் புகல்; எவ் வயின் சேர்ந்தனன், அவன்?' என்று,
அரிப் புறத் தடங்கண்ணியைக் கேட்டனன், அவனும்.

42
உரை
   


'விசயன் விரைவில் இங்குத் தோன்றுவான்' என்று கூறி,
உத்தரனது கட்டை அவிழ்த்து, அவனைத் தேர் செலுத்தத் தூண்டுதல்

' "கிரிடி எங்கு உளன்?" என்று எனைக் கேட்ட நீ, கேண்மோ;
இருடி ஆகி நின் தாதை ஓர் ஆசனத்து இருக்கும்
புருடன் இப் பதி புகுந்த நாள், வந்து உடன் புகுந்து, ஓர்
அரிடம் ஆன தன் விதியினால் பேடியும் ஆனான்.

43
உரை
   


'யாண்டு சென்றிலது; இன்னமும் ஈர்-இரு கடிகை
வேண்டுமால்; இனி, ஈண்டை அவ் விசயனும் தோன்றும்;
மீண்டு போகலை; விடு, விடு; விரை பரித் தடந் தேர்
தூண்டு நீ!' என, தோளில் அத் துவக்கையும் விடுத்தான்.

44
உரை
   


உத்தரன் தேரில் வரும் பேடியைத் துரோணன் முதலியோர் ஐயுறுதல்

அறிந்து, தாள் விழுந்து எழுந்து, பின் ஆங்கு அவன் அருளால்,
செறிந்த மால் பெருஞ் சிறப்பை அச் சிறுவனும் பெற்று,
பிறிந்த பற்பல பேர் அணி நால் வகைப் படையும்
முறிந்து போக, அத் தேர் விடு தொழிலினில் மூண்டான்.

45
உரை
   


'ஓடினானும் இத் தேர் விரைந்து ஊர்பவன்!' என்றும்,
'பேடி நாம் முதல் ஐயுறும் பெருந்தகை!' என்றும்,
நாடினார்-பலர், நந்தியாவர்த்த நாள்மாலை
சூடினான் நெடுஞ் சேனையில், துரோணனே முதலோர்.

46
உரை
   


'நீ அஞ்சாது தேர் விடு; நான் அம்பு பல எய்வேன்' என்று
உத்தரனுக்குக் கூறி, விசயன் அம்பு எய்து
பலரையும் அழித்தல்

பேடி, அன்று, தன் பெண்மையை ஆண்மையாய்ப் பிறர் கொண்-
டாட, அந்த வெஞ் சாபமும் தொடிக் கையில் ஆக்கி,
'கோடி அம்புகள் ஓர் ஒரு தொடையினில் கோத்து,
வீடுவிப்பன்; நீ அஞ்சிடா விடுக, தேர்!' என்றான்.

47
உரை
   


என்ற போது, அவன் தேரினை இமைப்பினில் செலுத்த,
சென்று, போர் முனைச் சிலை விடு சிலீமுகங்களினால்,
கொன்ற போர் மன்னர் ஈறு இலர்; குருகுலத்தவர் ஆய்
நின்ற போர் முடி மன்னரும் சுளித்து, உளம் நெளித்தார்.

48
உரை
   


விதுரன், 'நம் நிலத்தில் இவர் வரும்படி போர் செய
வேண்டும்' என, வீடுமன் முதலியோரும் அதுவே தக்கது எனல்

'அன்று போல் அலன், அருச்சுனன்; அம்பிகாபதிபால்
துன்று போர் புரி தவத்தினால் சுடு கணை பல பெற்று,
அன்று போரினில் அவுணரை அமரருக்கு ஆக
வென்று, போனகம் நுகர்ந்து, பொன் தரு மலர் வேய்ந்தான்.

49
உரை
   


' "தன் நிலத்தினில் குறு முயல் தந்தியின் வலிது" என்று,
இந் நிலத்தினில் பழமொழி அறிதி நீ; இறைவ!
எந் நிலத்தினும் உனக்கு எளிதாயினும், இவர் நம்
நல் நிலத்தினில் வர, அமர் தொடங்குதல் நன்றால்.'

50
உரை
   


என்று கூறினன் விதுரனும்; ஏனை அங்கு அருகு
நின்ற வீடுமன் துரோணனும், 'நினைவு இது' என்றார்;
அன்று நாக வெங் கொடியவன் கொடிய நெஞ்சு அழன்றான்;
குன்றம் ஆயினும் நீறு எழும், அருகுறக் குறுகின்.

51
உரை
   


துரியோதனன் நெஞ்சம் கொதித்து நிற்க, கன்னன்
ஏனையோரை இகழ்ந்து கூறுதல்

'தேரும் அங்கு ஒரு தேர்; தனித் தேரின்மேல் நின்று,
வீர வெஞ் சிலை வளைத்த கை வீரனும் பேடி;
யாரும் நெஞ்சு அழிந்து அஞ்சுவது என்கொல்?' என்று இசைத்தான்-
சூரன் மா மகன் ஆகிய சூரரில் சூரன்.

52
உரை
   


கோவலரை நிரை கொண்டு போகச் சொல்லி, தம்பியரோடு
தானும் பேடியை எதிர்க்கத் துரியோதனன் மீளுதல்

'கொண்ட கோ நிரை கோவலர் கொண்டு முன் போக!
தண்டு நிற்க!' எனத் தம்பியர் அனைவரும் தானும்,
திண் திறல் பெரும் பேடியைத் தேர்மிசைக் கண்டு,
'மிண்டுவீர்!' எனக் கூறியே, சுயோதனன் மீண்டான்.

53
உரை
   


விசயன் அரசர்களைத் தடுத்து, ஆநிரைகளை மீட்டல்

மான மா முடி மன்னரை விலக்கி, வல் விரைந்து,
கோ நிரைக் குலம் கொண்டுபோம் கோ நிரை துரந்து,
போன பேடி, வெம் பூசலும் பொழுதுறப் பொருது,
தூ நிறத்து இளங் கன்றுடைத் தொறுக்களும் மீட்டான்.

54
உரை
   


துரியோதனன் பக்கத்து இடையர் அடங்க, விராடன்
பக்கத்து இடையர் மகிழ்ச்சியினால் ஆர்த்தல்

முந்த ஆன்தொறு மீட்டலும், முன் கவர் பொதுவர்
வெந்த நெய் என ஆரவம் அடங்கினர், மிகவும்;
அந்த நெய்யினில் பால்-துளி உகுத்தென ஆர்த்தார்,
வந்த மச்சர் கோமகனொடும் வந்த கோபாலர்.

55
உரை
   


பால் எடுத்த பொற்குடம் நிகர் மடியின, பருவச்
சூல் எடுத்த நல் வயிற்றின, மழ விடை தொடர்வ,
கோல் எடுத்து இளங் கோவலர் கூவினர் துரப்ப,
வால் எடுத்தன, துள்ளி மீண்டு ஓடின, வனமே.

56
உரை
   


நாலு நாழிகையில் சாபம் நீங்க, விசயன் தன் முன்னை உருப்
பெற்று, தனது தேரினையும் கொடியினையும் பெறுதல்

கடிகை நால் அவண் சென்றபின், கடை சிவந்து அகன்ற
நெடிய கண்ணி, அன்று இட்ட வெஞ் சாபமும் நீங்க,
கொடியின்மீது எழும் அனுமனைக் குறிக்க, அக் கொடியும்,
முடி கொள் தன் தனி இரதமும், முன் வரக் கண்டான்.

57
உரை
   


உரிய தேரினை மீதுகொண்டு, உத்தரன் செலுத்த,
கரிய மேனியன், செய்ய தாமரைத் தடங் கண்ணன்,
புரிய வாங்கிய சிலையினன், நின்றனன்-பொலம் பொற்
கிரியின்மீது எழும் மரகத கிரி எனக் கிளர்ந்தே!

58
உரை
   


வேற்று உரு ஒழித்து நின்று, விசயன் நாண் ஒலி
செய்யப் பகைவர் நடுங்குதல்

படும் குறும் பனி புதைத்தலின் பரிதி தன் உருவம்
ஒடுங்குமாறெஒளித்த தன் பேட்டு உரு ஒழித்து,
நெடுங் கொடுங் கணை நிருபன் வெஞ் சேனையின் வேந்தர்
நடுங்குமாறு முன் தோன்றினன், நரன் எனும் நாமன்.

59
உரை
   


செருச் செய்வான் வரு சேனை வெண்திரையையும் கடப்பான்
பருச் சிலம்பில் நின்று உகைதரு பாவனை போல,
உருச் செழுஞ் சுடர் எறிப்ப, நின்று உலாவினன்-உண்மைக்கு
அருச்சுனன் தடந் தேர்க் கொடி ஆடையில் அனுமன்.

60
உரை
   


மரு மிகும் தொடைத் தடம் புய மகபதி மதலை
பெருமிதம் பட வளைத்த வில் பிறங்கு நாண் ஒலியால்,
செருமி, எங்கணும் கரி, பரி, தேர்மிசை நின்றோர்,
உருமின் வெங் குரல் கேட்ட கோள் உரகரோடு ஒத்தார்.

61
உரை
   


பல வகை ஒலிகளைக் கேட்ட உத்தரன் தேர் விடு
தொழில் மறந்து மயங்கி வீழ, விசயன் அவனைத்
தேற்றித் தேர் விடச் செய்தல்

குறித்த சங்கு ஒலி, சிங்க நாதத்து ஒலி, குனி வில்
செறித்த நாண் ஒலி, செவிப்பட, சிந்தனை கலங்கி,
பொறித்த பாவையின் உத்தரன் பொறி மயக்குற்று,
மறித்தும் வீழ்ந்தனன், மா விடு தொழிலையும் மறந்தே.

62
உரை
   


தாழ்ந்த ஆடையின் உயர் கொடித் தண்டுடைத் தேர்மேல்
வீழ்ந்த பாகனை, மீளவும் விரகுறத் தேற்றி,
சூழ்ந்த தன் பெருந் துணைவனைச் சூதினால் துரந்து
வாழ்ந்த மன்னன்மேல் ஏவினான், வரி சிலை வல்லான்.

63
உரை
   


மச்ச நாடன் மா மதலை, அம் மன்னவன் மொழியால்,
அச்சம் அற்று இருந்து, உளவுகோல் அருணனின் கொள்ள,
உச்ச வானிடைப் பகலவன் ஊர்ந்த தேர் பூண்ட
பச்சை வாசியின் ஓடின, சுவேத வெம் பரி மா.

64
உரை
   


துரியோதனனை நெருங்கி, விசயன் பொருதல

'உரவினால் வட மேருவைக் கொடு முடி ஒடித்து,
விரவி என் பெருந் தாதை நின் தாதையை வென்றான்;
பரிவின் நின்னை யான் வெல்வன்' என்று, அவனிபன் பதாகை
அரவை மற்று இவன் பதாகையில் அனுமன் வந்து அடுத்தான்.

65
உரை
   


வட்டமாக வில் வளைத்து, எதிர் மண்டல நிலையாய்த்
தொட்ட வாளியான், அடி முதல் முடியுறத் துணிப்புண்டு,
இட்ட மா மணிக் கவசமும் பிளந்து, எதிர்ந்துள்ளார்
பட்டொழிந்தனர்; ஒழிந்தவர் யாவர், புண்படாதார்?

66
உரை
   


வேகம் வற்றிய நதி அன வித நடைப் புரவி,
பாகு அவற்றினைத் தலை அற மலைந்து, பாழ்படுத்தி,
மா கவற்றினில் பொய்த்த சூது ஆடிய வஞ்ச
நா கவற்றிய புன்மொழி நிருபனை நகைத்தான்.

67
உரை
   


தப்பியோடத் தேர் ஒன்றில் பாய்ந்த துரியோதனனை,
விசயன் இகழ்ந்து மொழிதல்

பாகும் வாசியும் அமைந்தது ஓர் தேர்மிசைப் பாய்ந்து,
மாகு சூழவும் தப்பிய வரி நிற மாபோல்,
ஏகுகின்ற பேர் இராசராசனை எதிர் தகைந்து,
கோகு தட்டிடு தனஞ்சயன் இவை இவை கூறும்:

68
உரை
   


வீமன் நகைத்து, கீசகனை இரு கையால் பற்றி
வீழ்த்தி, அவனுடன் பொருதல்

'கார்முகம் கைத்தலத்து இருப்ப, கைம்மிகு
போர்முகம் தன்னில் நீ புறந்தந்து ஏகினால்,
ஊர்முகக் களிற்றின்மேல் உலாவும் வீதியின்
வார் முகக் கன தன மாதர் என் சொலார்?

69
உரை
   


'இருபுறம் சாமரம் இரட்ட, திங்கள்போல்
ஒரு குடை நிழற்ற, இவ் உலகம் நின்னதா,
மருவலர் கைதொழ, வாழுகின்ற நீ,
பொரு முனை காண்டலும், போதல் போதுமோ?

70
உரை
   


'உன் பெருந் துணைவரோடு உன்னை, ஓர் கணத்து,
என் பெருங் கணைகளுக்கு இரைகள் ஆக்குவேன்;
வன் பெருங் கொடிமிசை மடங்கல் ஏற்றினான்-
தன் பெரும் வஞ்சினம் தப்புமேகொலாம்!

71
உரை
   


'எங்களைக் கானில் விட்டு, இரவி ஏக வெண்
திங்களைப் போல், நெடுந் திகிரி ஓச்சினீர்!
சங்கு அளை பயில் வள நாடன், தண்டினால்,
உங்களைக் களப்பலி ஊட்டும், நாளையே.

72
உரை
   


'இரவலர், இளையவர், ஏத்தும் நாவலர்,
விரவிய தூதுவர், விருத்தர், வேதியர்,
அரிவையர், வெஞ் சமர் அஞ்சுவோர், பெருங்
குரவர், என்று இவர்களைக் கோறல் பாவமே!'

73
உரை
   


அப்போது, துரோணன் முதலியோரும் அருச்சுனனை வந்து வளைத்தல்

பற்பல உரை இவன் பகரும் ஏல்வையில்,
சொற் பயில் நான் மறைத் துவசன், வீடுமன்,
கற்பகம் நிகர் கொடைக் கன்னன், ஆதியோர்
மல் புய நிருபனை வந்து கூடினார்.

74
உரை
   


கன்னன் போருக்கு அழைக்க, அவனுடன் விசயன் பொருதல்

மின்னுடன் மின்மினி வெகுளுமாறுபோல்,-
தன்னுடன் நிகர் இலாத் தடக் கை வண்மையான்,-
மன்னுடன் இகல்வது வார்த்தை அன்று; இனி
என்னுடன் மலைதி, நீ!' என்று கூறினான்.

75
உரை
   


கரக் கவுள் மதம் பொழி காய் களிற்றை விட்டு,
உரக் கொடுவரியின்மேல் ஓடும் யாளிபோல்,
நிரக்கும் அந் நிருபனும் நிற்க, வந்து, போர்
இரக்கும் அக் கன்னன்மேல் இரதம் ஏவினான்.

76
உரை
   


இரதமும் இரதமும் எதிர்ந்த போது, இரு
குர துரகதங்களும் குமுறி ஆர்த்தன;
உரைதரு பாகரும் உடன்று கூவினார்;
விரை தனு வளைத்தனர்; வீரர்தாமுமே.

77
உரை
   


இருவரும் எதிர் எதிர் ஏவும் வாளியால்,
வெருவரும் இருள் உற, விசும்பு தூர்த்தனர்;
பொரு அரும் அமர் நெடும் போது தாக்கியும்,
ஒருவரும் இளைத்திலர், ஒத்த ஆண்மையார்.

78
உரை
   


கன்னன் மூன்று முறை விசயனுக்குத் தோற்றோடுதலும்,
அசுவத்தாமன் அவனை இகழ்ந்து பேசுதலும்

மற்று ஒரு தொடையினில் சுவேதவாகனன்,
முற்று ஒரு கணத்திடை, மூன்று கோல் விட;
இற்று, ஒரு கணத்திடை, இவுளி, பாகு, தேர்,
அற்று, ஒருவினன், அடல் ஆண்மை அங்கர் கோன்.

79
உரை
   


ஒருவியிட்டு ஓடி, மற்று ஓர் ஒர் தேர்மிசை
மருவியிட்டு, எதிருற வந்து மோதியும்,
உருவியிட்டன கணை ஒன்றுபோல் பல;
வெருவியிட்டனன், அவன், மீள மீளவே.

80
உரை
   


இம் முறை வந்து வந்து, எதிர்ந்து, வெஞ் சமர்
மும் முறை முறிதலும், முனிவன் மா மகன்,
அம் முறை முதுகிடும் அருக்கன் மைந்தனை,
தெவ் முறைமையின் சில வார்த்தை செப்புவான்:

81
உரை
   


' "தேரும் ஒன்று; ஒருவனே, தேரில் ஆளும்; இங்கு
யாரும் அஞ்சுதிர்!" என இகழ்ந்து உரைத்த நீ,
போர் உடைந்து ஓடுதல் போதுமோ?-நறுந்
தாருடன் பொலிதரு தாம மார்பனே!

82
உரை
   


'சொல்லலாம், இருந்துழி; சொன்ன சொற்படி
வெல்லலாம் என்பது விதிக்கும் கூடுமோ?
மல்லல் ஆளியைப் பல வளைந்து கொள்ளினும்,
கொல்லலாய் இருக்குமோ, குஞ்சரங்களால்?'

83
உரை
   


துரோண வீடுமர்களின்மேல் அருச்சுனன் அம்பு செலுத்துதல்

கொழுதும் அம்பினும் மிகக் கொடிய கூற்று இவை
பழுது அறு நாவினான் பகரும் வேலையில்,
முழுது உணர் முனியையும், முந்தைதன்னையும்,
தொழுது, பற்குனன், சில தொடைகள் ஏவினான்.

84
உரை
   


துரோணன் தன்னை நோக்கித் தேரைச் செலுத்த, விசயன்
அவனைத் தொழுது, சில கூறுதல்

தாள் இணை இறைஞ்சிய தனஞ்சயன் தொடும்
வாளி கண்டு, உளம் மிக மகிழ்ச்சி கூரவும்,
மீளிமை உடைய அவ் வீரன்மீது எழும்
தூளி செய் தேரினைத் துரோணன் உந்தினான்.

85
உரை
   


உந்து தேர் முனியை அந்த உதிட்டிரன் இளவல் நோக்கி,
சிந்தையில் அன்பு கூர, சேவடி பணிந்து போற்றி,
'அந்தணர் அரசே! உன்தன் அருளினால், அடவி நீங்கி
வந்தனம்!' என்று சிற்சில் வாசகம் இயம்புவானே:

86
உரை
   


'உன்னோடு போர் புரிதல் தகாது' என்ற விசயனை நோக்கி,
துரோணன்,'நான் செஞ்சோற்றுக் கடன் கழிக்கப் பொருதல் வேண்டும்' எனல்

'யாதும் ஒன்று அறியா என்னை, "இவன் அலாது இலை" என்று, இந்த மேதினி மதிக்குமாறு வில்முதல் படைகள் யாவும்
தீது அறத் தந்த உண்மைத் தெய்வம் நீ; என்றால், பஞ்ச
பாதகம்தன்னில் ஒன்று, உன் பதயுகம் பிழைப்பது ஐயா!

87
உரை
   

‘மன்னொடு சூழ நின்ற மாசுணம் உயர்த்த கோவை
மின்னொடும் உரும்ஏறு என்ன வெகுண்டு அமர் புரிவது அல்லால்,
நின்னொடும், கிருபனோடும், நின் மகனோடும், முந்தை-
தன்னொடும், புரியேன், வெம் போர்; தக்கதோ? சரதம் பாவம்!’
88
உரை
   

அம் முனிதன்னோடு இவ்வாறு அருச்சுனன் புகல, வல் வில்
கைம் முனிவனும், ‘செஞ்சோற்றுக் கடன் கழித்திடுதல் வேண்டும்;
தெவ் முனை மதியா வீரா! தேவர்தம் பகையை வென்ற
வெம் முனை காணுமாறு, உன் வில் வளைத்திடுக!’ என்றான்.
89
உரை
   

துரோணன் விசயனுடன் பொருது, தோற்றோடுதல்
குருவும், அக் குருவைத் தப்பாக் குருகுலக் கோவும், தங்கள்
அரு வரைத் தோளில் நாணி அறைதர, பிறைவில் வாங்கி,
கரு உயிர்த்து எழுந்த கால மழை முகில் கால் கொண்டென்ன,
ஒருவருக்கு ஒருவர் வாளி ஓர் ஒரு கோடி எய்தார்.
90
உரை
   

அதிரதர்தம்மை எண்ணில், அணி விரல் முடக்க ஒட்டா
முதிர் சிலை, முனியும், வீர முனிவு இலா முகனும்; விட்ட
கதிர் முனைப் பவன வேகக் கடுங் கொடும் பகழி யாவும்
எதிர் எதிர் கோத்த அல்லால், பட்டில, இருவர் மேலும்.
91
உரை
   

வண்டுதான் முரலும் கஞ்ச மாலையான், பயிற்றுவித்து,
பண்டு, தான் கண்ட கூற்றின் பதின் மடங்கு உயர்ந்த பண்பால்,
மிண்டு தானவரை வென்ற விறலுடை விசயன் வின்மை
கண்டு, தான் அவன்தனோடு கற்பதற்கு உன்னினானே!
92
உரை
   

ஏறு தேர் முரிய, வேதம் எழுதிய துவசம், வீழ,
தாறு பாய் புரவி நான்கும் சாரதி தலையும் சிந்த,
கூறு போர் நாணியோடு குனி சிலை துணிய, பின்னர்,
ஆறு கோல் தொடுப்ப, வெள்கி, ஆரியன் முதுகிட்டானே.
93
உரை
   


அடுத்து, அசுவத்தாமன் பொருது தோற்றல்

தந்தை போர் அழிந்து போன சாபலம் கண்டு, வெம்பி,
இந்திரன் மதலையோடும் எதிர்த்தனன், இவுளித்தாமா;
முந்துற இருவர் வில்லும் முரண் படக் குனித்த போரின்,
அந்தணன் கணையால், மன்னன் வில்லின் நாண் அற்றது அன்றே.

94
உரை
   


மந்தரம் அனைய தோளான் மற்று ஒரு வரி வில் வாங்கி,
'இந்த வெம் பகழிக்கு எல்லாம் ஈடு அறான் இவன்' என்று எண்ணி,
சந்திரமவுலி தந்த சாயகம் தொடுத்தலோடும்,
நொந்து, 'இனி என் செய்வோம்!' என்று ஊர் புக நோக்கினானே.

95
உரை
   


கிருபன் முதலியோர் தோற்றோட, சூரியனும் உச்சிப் பொழுதை அடைதல்

கிருபனும், அவனைக் கண்டு கெட்டனன்; கேடு இலாத
நிருபர்கள் பலரும் மோதி, நேர் பொருது, ஆவி மாய்ந்தார்;
பொரு படைச் சேனை யாவும் புக்குழி யாவர் கண்டார்?
ஒரு பரி ஒற்றை ஆழித் தேரவன் உச்சம் ஆனான்.

96
உரை
   


வீடுமன் விதுரன் முதலிய பலரும் நான்கு திசையிலும் வளைய,
விசயன் நாற்புறமும் அம்பு செலுத்தித் தாக்குதல்

வென்னிடும் அளவில், நின்ற வீடுமன், விதுரன், வண்டு
தென்னிடும் அலங்கல் மாலைச் சுயோதனன், சிந்து ராயன்,
துன்னிடு நிருபர் சூழ, சூழ் திசை நான்கும் வந்து,
முன்னிடு தேரோன்தன்னை முனை உற வளைந்துகொண்டார்.

97
உரை
   


இவர், பெருந் தேரின் மேலோன் ஒருவனே இலக்கது ஆக,
தவர் உடன் குனித்து, அநேக சாயகம் தொடுத்த காலை,
கவுரி பங்காளன்தன்னைக் கண்ணுறக் கண்ட காளை,
பவுரி வந்து, ஒன்றும் தன்மேல் படாமல், வெம் பகழி கோத்தான்.

98
உரை
   


குட திசை மகவான் வாளி, குண திசை வருணன் வாளி,
வட திசை மறலி வாளி, தென் திசை மதியின் வாளி,
அடல் உற இமைப்பின் ஏவி, அவர் அவர் மார்பும் தோளும்
படர் உற, படைகள் நீறு படப்பட, பரப்பினானே!

99
உரை
   


விசயன் மோகனக் கணையால் துரியோதனன் படையோரை
மயங்கி விழச் செய்து, அவர்தம் ஆடைகளைப் பறித்தல்

கோ கன நாக வேகக் கொடியவன் சேனை யாவும்,
மோகனக் கணை ஒன்று ஏவி, முடி அடி படிக்கண் வீழ்த்தான்;
மா கனற்கடவுள் தந்த மணிப் பொலந் தடந் தேர் வெள்ளை
வாகனக் குரிசில் வின்மை வல்லபம் இருந்தவாறே!

100
உரை
   


இத் தரை, இடம் கொளாமல் இறந்தனர் போல வீழ்ந்த
மத்தரை, மயிர் கொய்தென்ன, மணிக் கொடித் தூசும், தூசும்,
உத்தரை வண்டற் பாவைக்கு உடுத்துதற்கு என்று கொய்தான்-
அத்தரை மவுலித் திங்கள் அமுது உகப் புடைத்த வில்லான்.

101
உரை
   


மயங்கியோர் உணர்வு தோன்றியதும், தத்தம் ஊர்தியில்
ஏறி, ஊருக்கு மீளுதல்

விழுந்தவர் நெடும் போதாக, மெய் உணர்வு எய்தி, மெல்ல
அழுந்திய பகழியோடும், அரிபடு கவசத்தோடும்,
எழுந்து, தம் இரதம், யானை, இவுளியின், ஏறி, ஏறி,
தொழும் தகு தெய்வம் அன்ன சூரனைத் துதித்து, மீண்டார்.

102
உரை
   


விசயன் துரியோதனனை மகுட பங்கம் செய்தல

கொடி மதில் பாகை வேந்தன், கொங்கர் கோன், புரவிக் காலால்
வட திசை அரசர்தங்கள் மா மணி மகுடம் போல,
அடலுடை விசயன், ஒற்றை அம்பினால், மீண்டும் சென்று,
பட அரவு உயர்த்த கோவைப் பண்ணினான், மகுட பங்கம்!

103
உரை
   


'உரிய காலத்திற்கு முன் வெளிப்பட்ட இவரை
மீண்டும் காடு புகச் சொல்' என்று துரியோதனன்
வீடுமனுக்குக் கூற, அவன், 'நேற்றே குறித்த காலம்
முடிந்தது' எனல்

'வல்லினில் அழிந்து நின் முன் மன் அவைதன்னில் அன்று
சொல்லிய காலம் செல்லாமுன், இவர் தோற்றம் செய்தார்;
புல்லிய கானின் இன்னம் போக, நீ புகறி!' என்று
வெல் படை வேந்தன் சொல்ல, வீடுமன் மீண்டும் சொல்வான்:

104
உரை
   


'செந்நெலே கன்னல் காட்ட, சேர்ந்து அயல் செறுவில் நின்ற
கன்னலே கமுகு காட்டும் கங்கை நீர் நாட! கேண்மோ:
இன்னலே உழந்தோர் காலம், இந்துவின் இயக்கம்தன்னால்,
நென்னலே சென்றது' என்றான்-நெஞ்சினில் அழுக்கு இலாதான்.

105
உரை
   


துரியோதனனும் தன் நகர்க்கு மீளுதல்

அரவினை உயர்த்த கோமான் அவ் உரை கேட்ட போழ்தே,
பரவையின் இரவி கண்ட பனிமதி போல மாழ்கி,
வர வர, அறிதும்!' என்று, மா பெருஞ் சேனையோடும்,
இரவிடை யாரும் துஞ்ச, எயில் வளை நகரி புக்கான்.

106
உரை
   


விசயன் மீண்டு வந்து வன்னிமரப் பொந்தில் முன்போல்
ஆயுதங்களை வைத்து, பேடி வடிவம் கொண்டு,
உத்தரனுடன் நகர்க்கு மீளுதல்

வேந்தனை முதுகு கண்ட வெந் திறல் வீரன், மீண்டு
போந்து, முன் எடுத்த வன்னிப் பொதும்பரின் புறத்து வந்து,
வாய்ந்த ஆயுதங்கள் யாவும் வைத்து, எழில் வடிவம் மாற்றி,
ஆம் தகவு எண்ணி, பேடி ஆயினான் என்ப மாதோ!

107
உரை
   


இவ் வெயில் எறிக்கும் பைம் பொன் இலங்கு தேர்
                                                            மீண்டும் ஏக,
கை வெயில் எறிக்கும் பைம் பூண் காளைதன் தேரில் ஏறி,
வெவ் வெயில் ஆறும் வண்ணம் விரைந்துபோய், விராடன் மூதூர்
அவ் எயில் சூழ்ந்த காவில் அமர்ந்தனன், அரசர் ஏறே.

108
உரை
   


விசயன் தனது வரலாறு கூறி, உத்தரன் வெற்றியோடு மீண்டு
வருதலைத் தெரிவிக்க விராடனுக்குத் தூதரை அனுப்புதல்

ஆறிய பசுந் தண் காவின் அசைவு ஒரீஇ, இருந்த வீரன்,
'ஏறிய கானில் பல் யாண்டு இருந்தபின், ஏனை ஆண்டு
மாறிய வடிவத்தோடு இவ் வள நகர் வைகினோம்' என்று,
ஊறிய அமுதச் சொல்லால் உத்தரற்கு உரைசெய்தானே.

109
உரை
   


' "பேடி தேர் செலுத்தச் சென்ற பிள்ளையும், பெரும் போர்
                                                            வென்று,
கோடி தேர் முதுகு கண்டு, கோ நிரை மீட்டான்" என்று என்று,
ஓடி நீர் சொன்மின்!' என்று தூதரை ஓடவிட்டான்-
நீடு நீர் பரக்கும் கங்கை நாடுடை நிருபர் கோமான்.

110
உரை
   


தன் நகர்க்கு மீண்ட விராடன், உத்தரன் போர்க்குச்
சென்ற செய்தி கேட்டு, மயங்கி வீழ்தல்

இங்கு இவன் இவ்வாறு உய்ப்ப, முற்பகல் ஏகி, ஆங்கண்
கங்குலில் சேனையோடும் கண்படை இன்றி வைகி,
செங்கதிர் எழுந்த பின்னர், தென் திசைப் பூசல் வென்ற
வெங் கழல் விராடன்தானும் மீண்டு, தன் நகரி புக்கான்.

111
உரை
   


தடம் பதி அடைந்த காலைத் தன் மனை இருந்த பேடி
திடம் படு தடந் தேர் ஊர, திருமகன் சென்ற செய்கை
விடம் படு வெகுளி வேற்கண் சுதேட்டிணை விளம்பக்
                                                            கேட்டு, ஆங்கு
உடம்பு உயிர் இன்றி வீழ்ந்தது என்னுமாறு, உருகி வீழ்ந்தான்.

112
உரை
   


கங்கன் தேற்ற, மன்னன் தேறி இருந்த
காலையில், உத்தரன் வெற்றிச் செய்தியைத்
தூதுவர் வந்து அறிவித்தல்

சந்தன அளறும், வாசத் தண் பனிநீரும், வீசி,
வெந் திறல் வேந்தன்தன்னை மெய்ம் மெலிவு, இருந்து, தேற்றி,
'மைந்தன் இப்பொழுதே வென்று வருகுவன், பொன்-தேர்
                                                            ஊர்ந்தாள்
அந்த மெய்ப் பேடி ஆகில்' என்றனன், அந்தணாளன்.

113
உரை
   


அறன் மகன் வாய்மை தேறி, அரசன் ஆங்கு இருந்த எல்லை,
மறனுடை உரககேது வன் சமர் அழிந்தவாறும்,
உற மலைந்து ஒரு தன் தேர்கொண்டு உத்தரன் வென்றவாறும்,
தொறு நிரை மீட்டவாறும், தூதர் போய், தொழுது, சொன்னார்.

114
உரை
   


விராடன் மகிழ்ந்து, உத்தரனை எதிர்கொள்ளுமாறு சேனாதிபரை ஏவுதல்

சீதள அமுத வாரி செவிகளில் செறிந்தது என்னத்
தூதர் வந்து உரைத்த சொல்லால், சோகமும் துனியும் மாறி,
தாதை அன்று ஏது செய்தான்' தனை ஒழிந்து உள்ள சேனை
ஆதிபர் எவரும் எய்தி, அண்ணலை, எதிர்கொள்க!' என்றான்.

115
உரை
   


சோரர்தம் கருவைத் தங்கள் கரு எனத் தோளில் ஏந்தி,
ஆர்வம் உற்று உருகு நெஞ்சின் அறிவிலார் தம்மைப் போல,
வீரன் வெஞ் சமரம் வெல்ல, விராடன், 'உத்தரன் வென்றான், அப்
போரினை!' என்னா, மேனி புளகு எழப் பூரித்தானே.

116
உரை
   


பூழிகள் அடக்கி, செம்பொன் பூரண கும்பம் வைத்து,
வாழையும் கமுகும் நாட்டி, மணி ஒளித் தீபம் ஏற்றி,
சூழ வன் பதாகை கட்டி, தோரணம் பலவும் நாட்டி,
ஏழ் உயர் மாட மூதூர் எங்கணும் கோடித்தாரே.

117
உரை
   


'மகன் வரும் அளவும் சூதாடுவோம்' என்று கங்கனுடன்
விராடன் ஆடும்போது, அவன் தன் மகன் வெற்றி பேச,
கங்கன், 'அது பேடியின் வெற்றியே' எனல்

'மகன் வரும் அளவும், வெஞ் சூது ஆடுதும்; வருக!' என்று, ஆங்கு
அகம் மிக மகிழ்ந்து, வேந்தன் அந்தணன்தன்னோடு ஆட,
மிக முனி அடுத்து வெல்ல, 'வென்றி உத்தரன்முன் மேவார்
இகல் அழிந்தென்ன, இப் போர் அழிதி நீ, எந்தை!' என்றான்.

118
உரை
   


என்று அவன் மொழிந்த போதில், 'எண் இல் வெஞ் சேனையோடு
வன் திறல் உரககேது வலி அழிந்து, உடைந்து போக,
வென்றவன் பேடியே! தன் மெய்ந் நடுங்காமல் போரில்
நின்று, நின் சிறுவன் வெல்ல வல்லனோ?-நிருபர் ஏறே!

119
உரை
   


'பிருகந்நளை என்று ஓதும் பேடியைப் பேடி என்று
கருதல் நீ! அவனே முன்னம் காண்டவம் எரித்த காளை;
ஒரு தனித் தடம் பொன்-தேர் ஊர்ந்து, உம்பருக்காக உம்பர்
அரிகளை அரிதின் வென்றான்' என்றனன், அந்தணாளன்.

120
உரை
   


' "கோடியின் கோடி ஆன குருக்கள் வெஞ் சேனைதன்னை
ஓடி, என் புதல்வன்தானே ஒரு தனி பொருது வென்று,
நீடிய நிரையும் மீட்டு மீண்டனன்" என்ன, நீ அப்
பேடியை விறல் கொண்டாடிப் பேசுதி, பிரம மூர்த்தீ!

121
உரை
   


'புன் நவை ஆன மாற்றம் புகன்றனர் எனினும், கேட்டு, ஆங்கு,
"இன்னவை நன்று நன்று" என்று, இதம்பட மொழிவது அல்லால்,
மன் அவை இருந்து நாளும் வழிபடும் மாந்தர், மன்னர்
சொன்னவை மறுத்து, மாறு சொல்வரோ? சுருதி வல்லாய்!'

122
உரை
   


என்னவும், இடம் கொடாமல், எதிருற, இருடி, மீண்டும்,
'கன்னன், வில் துரோணன், மைந்தன், காங்கேயன், முதலினோரை,
மன்னவ! வெல்ல, நின் சேய் வல்லனோ? வந்து சொன்னால்
பின்னை நீ தெளிதி' என்றான், 'பீடுடைப் பேடிதன்னை.'

123
உரை
   


விராடன் சினம் மூண்டு, கங்கனது நெற்றியில் இரத்தம்
பொசியுமாறு கவற்றால் எறிதல்

'கொடு வில் ண்மையினால் இன்று என் குமரன் வென்றிடவும்,
                                       சற்றும்
நடுவு இலாதவரின் பல் கால் என்கொல் நீ நவில்வது?' என்னா,
கடு இல் ஆடு அரவின் பொங்கி, கவற்றினால் எறிந்து, நக்கான்,
வடு இலா முனியை மன்னன் வடுப்படுமாறு மன்னோ.

124
உரை
   


நெற்றியில் பொசியும் இரத்தத்தை விரதசாரிணி கண்டு,
தன் ஆடையால் மாற்றுதல்

எற்றிய கவறு நெற்றி, எதிர் உற இருந்த கங்கன்
நெற்றியில் சென்று, வாசம் நிறைத்த குங்குமத்தின் சேற்றால்
பற்றிய திலகம் போலப் படுதலும், பாங்கர் நின்ற
வற்றிய ஓடை அன்ன வனப்பினாள் மருண்டு கண்டாள்.

125
உரை
   


'பல்கிய கிளையும், தேசும், பார்த்திவன் வாழ்வும், தாங்கள்
அல்கிய நகரும் இன்றே அழியும்' என்று அஞ்சியேகொல்?
நல்கிய நேயமேகொல்? நயனம் நீர் மல்க, மல்க,
மல்கிய குருதிதன்னை மாற்றினாள், வண்ண மாதே.

126
உரை
   


விராடன் தன் செயலுக்கு இரங்கி வருந்தல்

கண்ணில் நீர் மல்க, வண்ணக் காரிகை, கலையால், அந்த
வண்ண மா முனிவன் சோரி மாற்றிய காலை, ஐயுற்று,
எண்ணமும் செயலும் வேறாய், 'என் செய்தோம்! என்
                               செய்தோம்!' என்று
அண்ணலும், தன்னை நொந்து, ஆங்கு, 'அருஞ் சினம்
                               பாவம்!' என்றான்.

127
உரை
   


அந்திப் பொழுதில், மன்னர் சூழ, உத்தரன் நகரை
அடைந்து, உலாவருதல்

ஆயிடை அத்தக் குன்றுக்கு ஆதபன் அணியன் ஆக,
சேயிடை எதிர் கொள் கொற்றச் சேனை மன்னவர்கள் சூழ,
வீயிடை வரி வண்டு ஆர்க்கும் வியன் பெருங் காவு நீங்கி,
போய் இடை நெருங்கி, வேந்தன் புதல்வன், அப்
                               புரத்தைச் சேர்ந்தான்.

128
உரை
   


பரந்து வெம் படைகள் மின்ன, பல் இயம், பணிலம்,
                              ஆர்ப்ப,
சுரந்து மும் மதமும் பாயும் துதிக்கை வாரணங்கள் சூழ,
புரந்தரன் நகரில் காளப் புயல் வருமாறு போல,
உரம் தரு பேடி தன் தேர் ஊரவே, வீதி உற்றான்.

129
உரை
   


விராடன் மகனை எதிர் கொண்டு தழுவுதல்

வென்று மீள் குமரன்தன்னை வீதிகள்தோறும், மாதர்
அன்று எதிர்கொண்டு, நல் நீராசனம் எடுத்து, வாழ்த்த,
குன்று எறிந்தவனைக் கண்ட குன்ற வில்லியைப்போல், முந்தச்
சென்று, அவன் பிதாவும் தேர்மேல் சிக்கெனத்
                               தழீஇக்கொண்டானே.

130
உரை
   


மனை புகுந்த உத்தரன் கங்கனை வணங்கி, நெற்றி வடுவைக்
கண்டு, தந்தையால் நிகழ்ந்தமை அறிந்து, பொறுக்குமாறு
இருவரும் வணங்குதல்

தழுவிய அரசன் தாளில் தலை உற வீழ்ந்து, வேந்தர்
குழுவிடைக் கொண்டு போக, கோயிலில் புகுந்த பின்னர்,
பழுது அறு வாய்மை வேத பண்டிதன் பாதம் போற்றி,
செழு மலர் வதனம் நோக்கி, திரு நுதல் வடுவும் கண்டான்.

131
உரை
   


'திகழ்ந்த நின் நுதலின் ஊறு செய்தவர் யார்கொல்?' என்ன,
நிகழ்ந்தமை தந்தை கூற, நெஞ்சினால் தந்தைதன்னை
இகழ்ந்தமை நுவலும்போதைக்கு எல்லை இன்று; 'இவனைப் போல
அகழ்ந்த நீர் ஆடை ஞாலத்து ஆர்கொலோ, அமைவின் மிக்கோர்?'

132
உரை
   


'செறுப்பது பெருமை அன்று; சிறியவர் செய்த தீமை
பொறுப்பதே பெருமை' என்று பூசுரன் பாதம் போற்றி,
வெறுப்பது விளைத்த தாதை வீழ்ந்தபின், தானும் வீழ்ந்து,
மறுப்பது புரியா ஞானி, மனத் துனி அகற்றினானே.

133
உரை
   


விராடனும் உத்தரனும் சுதேட்டிணை கோயில் புக, அவள்
மகனைக் கண்டு பெரு மகிழ்வு எய்துதல்

ஆன்று அமைந்து அடங்கு கேள்வி அண்ணலும், அவனைப் பெற்ற
தோன்றலும், பின்னர்ச் சென்று, சுதேட்டிணை கோயில் எய்த,
ஈன்ற அப்பொழுதின் ஓகை எண் மடங்கு ஆக விஞ்ச,
சான்ற தன் மகனைக் கண்டு, மகிழ்ந்தனள், தவத்தின் மிக்காள்.

134
உரை
   


பேடி தான் கவர்ந்த சுகளை உத்தரையின் பாவைக்கு
அளித்து, சுதேட்டிணையின் பின் நிற்றல்

ஓடி உத்தரன் தேர் ஊர, ஒரு முனையாகத் தன்னை
நாடி, உத்தரிக்க மாட்டா நராபதிபர் பதாகைத் தூசும்,
கோடி உத்தரியப்பட்டும், குழமகன்தனக்கு நல்கி,
பேடி உத்தரை தன்னோடும் பெற்ற தாய் பின்பு நின்றாள்.

135
உரை
   


தந்தையுடன் உத்தரன் தனித்து இருந்து, போர் நிகழ்ச்சிகளைக் கூறுதல்

தந்தையும், தானும், ஆங்குத் தனித்து இருந்து, அடையலாரை
முந்திய அமரில் சென்று, முனைந்து, போர் விளைத்தவாறும்,
வந்தவர் சாய்ந்தவாறும், மணி நிரை மீட்டவாறும்,
சுந்தர கிரிகள் போலும் தோளினான், தோன்றச் சொல்வான்:

136
உரை
   


மாற்று வடிவு கொண்ட கங்கன் முதலியோர், பாண்டவரும்
திரௌபதியும் எனல்

'உருப்பசி வெஞ் சாபத்தால் பேடியான உருவம் ஒழித்து,
                  அருச்சுனன் தன் உருவம் கொண்டு,
பொருப்பு அனைய கவித் துவசத் தேர்மேல், வண்ணப் பொரு
                  சிலை தன் கரத்து ஏந்தி, புகுந்த போது,
செருப் புரவி இரவி எதிர் திமிரம் போல, திறல் அரி ஏற்று
                  எதிர் கரியின் திறங்கள் போல,
நெருப்பு எதிர்ந்த பதங்கம்போல், அழிந்தார்-ஐய!-நிரை போக்கி,
                  அணி ஆகி, நின்ற வேந்தர்.

137
உரை
   


'அருகு விடாது, உனக்கு உயிர் நண்பு ஆகி, நீதி அறம்
                  உரைப்போன் அறத்தின் மகன் ஆக வேண்டும்;
மரு மலரும், மான்மதமும் துறந்த கூந்தல் வண்ண மகள்
                  பாஞ்சாலன் மகளே போலும்!
வெருவரும் மற் போர் கடந்த மடையன்தன்னை வீமன் என
                  அயிர்க்கின்றேன்; வேந்தே! மற்றை
இருவரினும் மா வலான் நகுலன்தானே; இன் நிரையின்
                  காவலான் இளைய கோவே.

138
உரை
   


'ஆளையே அடும் களிற்றார் தம்மை யாரும் அறியாமல்,
                  இந் நகர்க்கண் அடங்கி நின்றார்;
நாளையே வெளிப்படுவர்; நெருநலே தம் நாள் உள்ள
                  கழிந்தனவால்; நயந்து கேண்மோ;
வேளையே அனைய எழில், தோகை வாகை வேளையே
                  அனைய விறல், விசயன் என்னும்
காளையே, அடியேனுக்கு இளைய காதல் கன்னிகைக்கு
                  வரன் என்று கருதுவாயே.'

139
உரை
   


பாண்டவர் தம் முன்னை உருக்கொள்ள, பகலவனும் உதயம் செய்தல்

மகன் இவை மற்று உரைத்த அளவில், தாதை கேட்டு, மனம்
                  நடுங்கி, நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி கூர்ந்தான்;
பகல் அமரில் ஏறிய மெய்ப் பராகம் மாற, பகலோனும் புனல்
                  படிவான் பரவை சேர்ந்தான்;
தகவுடைய பாண்டவரும் வண்ண மாதும் தனித்து எண்ணிப்
                  பரகாய சரிதர் போலப்
புகல் அரிய பழைய தம வடிவம் கொண்டார்; போன பகலவன்
                  உதயப் பொருப்பின் மீண்டான்.

140
உரை