25. வாசுதேவனைப் படைத்துணை அழைத்த
சருக்கம்

கன்னனும் வீடுமனும் கொண்ட வெகுளி மாற்றி,
மந்திரிமாருடன் தனித்து இருந்து, துரியோதனன் எண்ணுதல்

புரோகிதன் தூது வந்து போனபின், புயங்க கேது,
விரோசனன் சுதனைக் கங்காசுதனொடும் வெகுளி மாற்றி,
துரோணனை முதலா மிக்க தொல் மதி அமைச்சரோடும்,
சரோருக சதனம் என்ன, தனித்து இருந்து எண்ணினானே.

1
உரை
   


மன்னர் பலர்க்கும் தூது போக்கி, கண்ணனைத்
துணை சேர்க்கக் கருதி, துரியோதனன் துவாரகைக்குச்
செல்லுதல்

தேயம் எங்கு எங்கும் செங்கோல் செலுத்தும் அத் திகிரி
                                  வேந்தர்-
ஆயவர் தம்மைக் கூட்ட, அடைவினின் தூது போக்கி,
காயமும் உயிரும் ஆகிப் பொருள்தொறும் கலந்து நின்ற
மாயவன்தன்னைக் கூட்ட, வளர் மதில் துவரை சேர்ந்தான்.

2
உரை
   


துவாரகையில் உள்ள மதில் முதலியவற்றின் சிறப்பு

மாட நீள் வீதி மூதூர் வயங்கும் மா மதிலின் தோற்றம்,
ஏடு அவிழ் துளப மால் அங்கு இருந்தனன் என்று கேட்டு,
சேடன் வந்து, அனந்த கோடி செங் கதிர் மணியின் பத்திச்
சூடிகா மகுடத்தோடும் சூழ்ந்தது ஓர் தோற்றம் போலும்!

3
உரை
   


கார்க்கடல் வண்ணன், தன்பால் கண்துயில் ஒழிந்து, போந்து,
மேற்கடல் துவரை மூதூர் மேவரும் விரகு நோக்கி,
போர்க்கு அடல் பொறிகள் யாவும் பொறுத்த அப் புரிசைதன்னைப்
பாற்கடல் வளைத்தது ஒக்கும், பல் மலர் அகழி அம்மா!

4
உரை
   


'ஈண்டு நீ வரினும், எங்கள் எழிலுடை எழிலி வண்ணன்
பாண்டவர்தங்கட்கு அல்லால், படைத் துணை ஆகமாட்டான்;
மீண்டு போக!' என்று என்று, அந்த வியன் மதில் குடுமிதோறும்
காண்தகு பதாகை ஆடை கைகளால் தடுப்ப போன்ற.

5
உரை
   


'அருள் குடியிருக்கும் கண்ணான் அவதரித்தனன்' என்று எண்ணி,
தரணியின்மீது வந்து, தன்னுடைச் சோதி வைகும்
பரம மா ஞான போகப் பதி குடி இருந்தது அன்ன,
திரு நகர் வீதி புக்கான்-சித்து அசித்து உணர்வு இலாதான்.

6
உரை
   


துரியோதனன் நகரில் புகுந்தமை அறிந்த கண்ணன்,
'துரியோதனன் வரின், எனக்குத் தெரிவியாமலே வரவிடுங்கள்'
என்று காவலர்க்குக் கூறி, யோகத் துயில் கொள்ளுதல்

வந்தமை அறிந்து, கொற்ற வாயிலோர்தம்மை நோக்கி,
'அந்தன் மா மதலை வந்தால், அறிவியாது அழைமின்!' என்று,
சந்திரன் ஒடுங்கி நிற்ப, தபனனே சரிக்குமாறு,
பந்தனை இலாதான், யோகத் துயில் வரப் பள்ளி கொண்டான்.

7
உரை
   


துரியோதனன் கண்ணனது திருமுடிப் பக்கத்துள்ள தவிசில்
அவன் துயிலுணருமளவும் வீற்றிருத்தல்

பொற்புடைப் புனிதன் கோயில் புறத்தினில் அனிகம் நிற்ப,
சற்ப வெம் பதாகை வேந்தன் தடை அற, தனி சென்று எய்தி,
உற்பல வண்ணன் பள்ளி உணர்தருகாறும், இட்ட
சிற்ப வண் தவிசின் ஏறி, திருமுடிப் பக்கம் சேர்ந்தான்.

8
உரை
   


விசயன் அங்கு வந்து, கண்ணன் திருவடிப் பக்கம் நிற்க,
கண்ணனும் துயிலுணர்ந்து, அவனை நோக்கி அருள்செய்தல்

'வந்திலன் விசயன்' என்று, வான் துயில் புரிந்த அண்ணல்
சிந்தனை செய்யும் வேலை, சிந்தையின் கடிய தேரோன்
பந்தனை அறுக்கும் பாத பங்கயம் பணிந்து நிற்ப,
முந்துற விழித்து நோக்கி, முகம் மலர்ந்து அருள்செய்தானே.

9
உரை
   


நின்ற விசயன் துரியோதனன் இருத்தலைக் கூற, கண்ணன்
எழுந்து, அவனைத் தழுவி முகமன் கூறுதல்

நின்றவன் இருந்த வேந்தன் வரவினை நிகழ்த்த, நேமிப்
பொன் திகழ் படையோன் அந்தப் பொய்த் துயில் பாயல் நீங்கி,
'மன்றல் அம் தொடையல் மார்பா! வரவு எமக்கு உரைசெயாது என்?'
என்று, உரம் நெருங்கப் புல்லி, இன் சொலால் உவகை செய்தான்.

10
உரை
   


இருவரும் வந்த காரியத்தைக் கண்ணன் வினவ, இருவரும்,
'எமக்குப் போர்த் துணையாக வேண்டும்' என வேண்டுதல்

'இருவிரும் வந்தவாறு என்? இயம்புதிர்!' என்று, வாச
மரு விரி துளப மாலை மரகதவண்ணன் கேட்ப,
'செருவில் நீ எமக்கு வெம் போர் செய் துணை ஆக வேண்டும்
பொருவிலோய்!' என்று கொண்டு அவ் இருவரும் புகன்றகாலை,

11
உரை
   


கண்ணன் பாண்டவர்க்குத் தான் துணையாதலை அறிவித்தல்

'உற்று அமர் உதவி செய்வான், உதிட்டிரன்தனக்கு முன்னே
சொற்றனம், ஆங்கண்; இங்கும், துயில் உணர் பொழுதத்து, இன்று,
வில்-திறல் விசயன் முந்த விழிக்கு இலக்கு ஆனான்' என்று,
பற்று அறத் துணிந்து சொன்னான்-பாண்டவர் சகாயன் ஆனான்.

12
உரை
   


'போரில் ஆயுதம் எடாது ஒழி' என்னும் துரியோதனன்
வேண்டுதலுக்குக் கண்ணன் ஒருப்பட்டு, விசயனிடம், 'ஆயுதம்
இன்றிச் செய்யும் உதவியைக் கூறு' எனல்

முடை கமழ் முல்லை மாலை முடியவன்தன்னை, 'போரில்
படை எடாது ஒழிதி!' என்று பன்னக துவசன் வேண்ட,
நெடிய மா முகிலும் நேர்ந்து, 'நினக்கு இனி விசய! போரில்
அடு படை இன்றிச் செய்யும் ஆண்மை என்? அறைதி!' என்றான்.

13
உரை
   


விசயன், 'நீ என் தேர் விடின், எத்தகைய பகைவரையும் வெல்வேன்!' எனல

'செரு மலி ஆழி அம் கைச் செழுஞ் சுடர் நின்று, என் தேரில்
பொரு பரி தூண்டின், இந்தப் பூதலத்து அரசர் ஒன்றோ?
வெருவரும் இயக்கர், விண்ணோர், விஞ்சையர் எனினும், என் கை
வரி சிலை குழைய வாங்கி, மணித் தலை துமிப்பன்!' என்றான்.

14
உரை
   


கண்ணன் துரியோதனனுக்கு, 'ஆயுதம் எடேன்' என்று கூறி,
தன்னைச் சேர்ந்தாரை யெல்லாம் படைத்துணையாகக்
கொண்டு செல்க எனல்

அடர் சிலை விசயன் இவ்வாறு இசைத்தலும், அமலன், வஞ்சப்
பட அரவு உயர்த்த வென்றிப் பார்த்திவன்தன்னை நோக்கி,
'நடையுடைப் புரவித் திண் தேர் நான் இவற்கு ஊர்வது அன்றி,
மிடை படை ஏவி, நும்மோடு அமர் செயேன், வேந்த!' என்றான்.

15
உரை
   


'எம்மையே ஒழிய உள்ள யாதவ குலத்துளோர்கள்-
தம்மையும், எம்முன் ஆன தாலகேதுவையும், சேர,
செம்மையோடு உதவியாகக் கொண்டு நீ செல்க!' என்று,
மும்மையும் உணர்ந்த நாதன் முன்னுற, பின்னும் சொன்னான்:

16
உரை
   


'கிருதவன்மா அக்ரோணி கிளர் படையோடு நின்பால்
வருவன்' என்று உரைத்து, வேண்டும் மதுர வாய்மைகளும் கூறி,
மருது போழ்ந்திட்ட செங் கண் மாயவன் விடுப்ப, ஏகி,
கருதலான் வினயம் ஒன்றும், கண்ணன் முன்னோனைக் கண்டான்.

17
உரை
   


துரியோதனன் பலராமனிடம் சென்று, செய்தி தெரிவித்து,
அத்தினாபுரி புக, கண்ணனும் விசயனும் உபப்
பிலாவியத்தை அடைதல்

கண்ணன் அங்கு அருளிச் செய்த கட்டுரைப்படியே, சங்க
வண்ணனுக்கு, இளவல் சொன்ன மாற்றமும் அரசன் சாற்றி,
'எண்ண அருந் தொகைகொள் சேனை யாதவ குமரரோடே
அண்ணலே! வருக!' என்று ஓதி, அத்தினாபுரி புக்கானே.

18
உரை
   


கூறிய வேக நாகக் கொடியவன் அகன்ற பின்னர்,
தேறிய விசையினோடும், செழும் புனல் துவரை நீங்கி,
ஆறு-இரு நாமத்தோனும், ஐ-இரு நாமத்தோனும்,
ஊறிய கருணை நெஞ்சின் உதிட்டிரன் இருக்கை புக்கார்.

19
உரை