26. சஞ்சயன் தூதுச் சருக்கம்

துரியோதனன் கண்ணனிடம் சென்று வந்த செய்தி
கேட்டபின், திருதராட்டிரன் சஞ்சயனை அழைப்பித்து,
பாண்டவரிடம் தூது அனுப்புதல்

நஞ்ச நாகம் உயர்த்த மீளி தன் நகர் புகுந்துழி, நண்பு அறக்
கஞ்ச மாமனை வென்றவன் செயல் கண்ணிலானொடு உரைத்தபின்,
வஞ்ச மைந்தரொடு உயவி, மீளவும், மண் கொடாத குறிப்பினன்,
'சஞ்சயன்தனை வருக!' என்று இரு தாள் பணிந்து, இவை சாற்றுவான்:

1
உரை
   


'குருகுலத்து அரசர்க்கு உறும் தொழில் கூறும்
                               நற் குரு ஆதலால்,
இரு குலத்தினும் உற்பவித்தவர் என்றும் நின்
                               சொல் மறுத்திடார்,
பெருகு உலைக்கனல் அன்ன பிள்ளைகள் பேசுகின்ற
                               பிணக்கு அறுத்து,
ஒரு குலத்தவர் உததி சூழ் புவி ஆளுமாறு இனி
                               உட்கொளாய்!

2
உரை
   


'அறத்தின் மைந்தனும், இளைஞரும், புவி ஆசை அற்று,
                               அகல் அடவியின்
புறத்து இருந்து, தவம் செயும்படி பரிவு உரைத்தருள்,
                               போய்' என,
செறுத்திடும் திருதராட்டிரன் தன சிந்தை ஒப்பன செப்பினான்;
மறுத்திலன், பெரு முனியும்; மற்று அவர் பாடிவீடு உற
                               மன்னினான்.

3
உரை
   


சஞ்சயனை எதிர்கொண்டு பாண்டவர் உபசரிக்க,
முனிவன் தவிசில் இருந்து, அவர்களுக்கு
அறம் எடுத்துரைத்தல்

சென்ற அம்முனி செலவு அறிந்து, எதிர்சென்று, தத்தம
                               சென்னி, தாள்
ஒன்ற வைத்து, வணங்கி, ஆசி உரைக்கும் மெய்ப் பயன்
                               உற்ற பின்,
மன்றல் அம் துளவோனும், நல் அறன் மைந்தனும்,
                               திறல் அனுசரும்,
துன்று பொன்-தவிசினில் இருத்த, இருந்து, சில்
                               உரை சொல்லுவான்:

4
உரை
   


உலூகனைத் திருதராட்டிரனிடம் பாண்டவர் கருத்து
உரைக்கத் தூது செல்லப் பணித்து, கண்ணன
துவாரகைக்கு மீளுதல்

'புடவி ஆளுதல் விட்டு, நல் நெறி புரியும்
                               மா தவர்தம்மின், நீர்
அடவி ஆளவும் வல்லிர் ஆயினிர்; ஆதலால்,
                               நலம் ஆனதே;
மடவியார் நிலை அற்ற செல்வம் மகிழ்ந்து, வாழ்
                               தினம் மாறினால்
விடவி ஆர் அழல் உற்றென, பெரு நரகில் ஆழ்வுற வீழ்வரால்.

5
உரை
   


'உற்ற யோனிகள்தம்மில் உற்பவியாமல், மானுட உற்பவம்
பெற்று, வாழுதல் அரிது; மற்று அது பெறினும், மாயை
                               செய் பெரு மயக்கு
அற்ற ஞானியர் ஆய், விளங்குதல் அரிது; வீடு உறும்
                               அறிவு பின்
பற்றுமாறு அரிது; இங்கு உனக்கு இவை பண்பினோடு
                               பலித்தவே!

6
உரை
   


'திகந்த எல்லை உறப் பெரும் புவி செல்ல நேமி
                               செலுத்தும் நும்
அகந்தையோடு அமர் ஆட எண்ணல்! அரவ
                               கேதனன் உங்களோடு
உகந்து வாழ ஒருப்படான்; இனி உற்ற தாயமும்,
                               உரிமையும்,
இகந்து, மா தவம் முயறலே கடன், ஈறு இலா உலகு எய்தவே..

7
உரை
   


'பராசரன் குலம் ஆகினும், பெறு பயன் இறுக்கிலர்,
                               பாரிலே;
துராசர், அன்பு இலர், என் சொல் இன்று சுயோதனாதியர்
                               கைக் கொளார்;
சராசரங்கள் அனைத்தும் ஆகிய சுகனையே நிகர்
                               தன்மையாய்!
நிராசர் நின் அளவில் குறித்தவை உறுதி என்று இனி
                               நீ கொளாய்!

8
உரை
   


'பாரில் ஆசையும், நின் இராச பதத்தில் ஆசையும்,
                               மன்னு வெம்
போரில் ஆசையும், நேய மங்கையர் போகம் அன்பொடு
                               புதிது உணும்
சீரில் ஆசையும், விட்டு, நல் நெறி சேர உன்னுதி,
                               நீ!' எனத்
தூரில் ஆசை அறத் துறந்தருள் சுருதி மா முனி
                               சொல்லவே.

9
உரை
   


தருமன் முனிவனது கருத்தை மறுத்து உரைத்தல்

செம்மை, அல்லது, விரகு இலாது தெரிந்த மேதகு
                               சிந்தையான்,
மும்மையும் தெரி முனி உரைத்த சொல் முன்னி, ஒண்
                               குறு முறுவல் செய்து,
'இம்மையே வசை நிற்க, வீடு உற எண்ணி, நீ புகல்வு, என்னினும்,
வெம்மை ஏழ் நரகும் தனித்தனி வீழ்வதே நலம், மிகவுமே;

10
உரை
   


'நின் அறத்தினின் நீர்மைதன்னை விளங்குமாறு நிகழ்த்தினும்,
மன் அறத்தினை விட்டு, நல் அறம் மன்னர் ஆனவர்
                                       முயல்வரோ?
என் அறத்தினின்நின்று, தெவ்வரை இரு விசும்பினில் ஏற்றினால்,
பின் அறத்தினில் நினைவு கூரும்' எனக் கனன்று, இவை பேசினான்.

11
உரை
   


வீமன், 'போரே எமக்கு உரிய தவம்!'
எனச் சினந்து மொழிதல்

முனியும், அப் பெரு முரசு உயர்த்தவனும், புகன்றன
                               முன்னி, 'நாம்
இனி உரைப்பது கடன்' என, துணை விழி சிவப்பு
                               எழ, எழிலியின்
தனிதம் உற்று எழு உருமின் வெஞ் சினம் மூள, மற்று
                               இவை சாற்றுவான்-
கனி எனத் தினகரனை வௌவிய கடவுள் மாருதி துணைவனே:

12
உரை
   


'எமக்கு நீ பிரமப் பெருங் குரு; எங்களோடு
                               எதிர் ஆகுவார்-
தமக்கும் ஒக்கும்; ஒர் உழையிலே அருள் சார
                               ஓதுதல் தக்கதோ?
அமர்க்கு, நென்னல், உலூக நாமனொடு அறுதியிட்டனன்;
                              அரவுஇனம்
சுமக்கும் மேதினி ஆளுவோர் வினை வேறுபட்டது சொல்வரே?

13
உரை
   

' 'இடக் கண் ஆக, வலக் கண் ஆக, இரண்டும்
                               ஒக்கும்' எனாமலே,
பிடர்க்கணே மதியான கண்-இலி பெற்றி அல்லன பேசினான்;
கடற்பெரும் படை கூடி, நாளை அணிந்த வெய்ய
                               களத்தில், நான்
அடல் கடுங் கதையால் அடித்திடும் அதிசயந்தனை,
                               ஐய! கேள்:
14
உரை
   


'உவந்து நீ மொழி தவம் அருந் தவம் அல்ல; ஒன்னலர்
                               உடல் உகும்
சிவந்த சோரியில் மூழ்கி மாழ்கு சிரங்கள் போய்,
                               நடமாடும் அக்
கவந்த கானகம் மேவி, ஊடு உறு தீய வெவ் வினை
                               களைவதே,
தவந்தனில் தலையான வீடு உறு தவம் எமக்கு! இது சாலுமே!

15
உரை
   


'போரது ஆகிய பூமிசாலையில், வேலை சூழ்தரு பூமியின்
பாரமான சுயோதனாதியர் என்னும் நூறு பசுப் படுத்து,
ஈரம் ஆன தயாமனத்தொடு இராயசூய மகம் செயும்
வீர மா முனிதன்னை வெங் கள வேள்வியும் புரிவிப்பனே!'

16
உரை
   


கண்ணன், 'நமது உரைகளால் பயன் ஒன்றும் இல்லை' எனல்

நேமியான் இவை சொன்ன வீரனை, 'நிற்க!' என்று நிறுத்தி, உள்
காமியாத முனிக்கு நல் உரை கட்டுரைத்தனன்; 'இவர்கள் இப்
பூமி ஆளுதல், அவர்களுக்கு அமர் உலகம் ஏறுதல், புரி தவம்;
யாம் யாதும் உரைத்தும் என் பயன்? நீ எழுந்தருள்!' என்னவே,

17
உரை
   


சஞ்சயன் மீண்டு வந்து, திருதராட்டிரனுக்கு
நிகழ்ந்தவற்றைத் தெரிவித்தல்

இருந்த பேர் அவை விட்டு, மற்று அவர் இதயம்
                               இப்படி என நினைந்து,
அருந் தவக் கடல் மீள, அத்தினபுரி அடைந்து, அவனிபனுடன்
பரிந்து, அறன் தரு காளை சொற்றதும், வீமன் நின்று பகர்ந்ததும்,
குருந்து ஒசித்தருள் முகில் உரைத்ததும், உண்மை
                               ஆம் வகை கூறினான்.

18
உரை