29. முதற் போர்ச் சருக்கம்

கடவுள் வாழ்த்து

மே வரு ஞானானந்த வெள்ளம் ஆய், விதித்தோன் ஆதி
மூவரும் ஆகி, அந்த மூவர்க்கும் முதல்வன் ஆகி,
யாவரும் யாவும் ஆகி, இறைஞ்சுவார் இறைஞ்ச, பற்பல்
தேவரும் ஆகி, நின்ற செங்கண் மால் எங்கள் கோவே.

1
உரை
   

கண்ணன் தத்துவம் உணர்த்தி விசயனது மயக்கத்தைத் தெளிவித்தல்

'மாயை என்று ஒருத்திதன்பால் மனம்எனும் மைந்தன் தோன்றி,
தூய நல் அறிவன் தன்னைத் தோற்றம் இன்றாக்கி வைத்தான்;
தாயொடு, தந்தை, மக்கள், தாரம், என்று இவர்பால் வைத்த
நேயமும் அவன்தனாலே நிகழ்ந்தது ஓர் நினைவு கண்டாய்.

2
உரை
   


'குயின்ற ஐம் பொறிவாய் நின்று, குறித்த ஐம் பொருளும் தானே
அயின்று, முக் குணங்களோடும், அறு வகைப் படைகளோடும்,
பயின்று, அரசாளும் அந்த மனம் எனும் பகைவன், ஆங்குத்
துயின்றபோது, ஒளித்து நின்ற தோன்றலும் தோன்றும் கண்டாய்!'

3
உரை
   


'அந்த நல் அறிவன்தன்னை அறிந்தவர் அறிஞர் ஆவார்;
தந்தையால் வகுக்கப்பட்ட சராசரப் பொருள்கள்தோறும்
வந்து, அவன், தீம்பால் நெய்போல் உயிர்க்கு உயிர்
                 ஆகி, வாழும்
பந்தமது உணர்ந்து, நேரே பார்க்குங்கால், பகை யார்?
                  நண்பு ஆர்?

4
உரை
   


'உம்பரும், முனிவர்தாமும், யாவரும், உணரா ஒன்றை
இம்பர், இன்று, உனக்கு நானே இசைவுற உணர்த்தாநின்றேன்;
ஐம் பெரும் பூதத்தானும் அமைந்தன உடலம், யார்க்கும்;
நம்பனும் ஒருவன்; உள்ளே ஞானியாய், நடத்துகின்றான்.

5
உரை
   

'என்னை நீ புகலக் கேண்மோ! எங்கும் ஆய், யாவும் ஆகி,
மன்னிய பொருளும் யானே; மறைக்கு எலாம் முடிவும் யானே;
உன்னை யான் பிறிவது இல்லை; ஒரு முறை பிறந்து, மேல் நாள்-
நல் நிலா எறிக்கும் பூணாய்!-நரனும், நாரணனும் ஆனோம்.

6
உரை
   

'பின் ஒரு பிறப்பின் யாமே இராம லக்குமப் பேர் பெற்றோம்;
இந் நெடும் பிறப்பில், நீயும் யானுமாய் ஈண்டு நின்றோம்;
நின்னிடை மயக்கும், இந்த நேயமும், ஒழிக!' என்று,
தன் நிலை அவற்குக் காட்டி, தத்துவம் தெளிவித்தானே.
7
உரை
   

வந்த மன்னவரைத் தருமன் எதிர்கொண்டு,
துரியோதனன்நாடு தர மறுத்துப் போர் புரிய
முன் வந்ததைக் கூறுதல்

தான் வணங்குநர், தன் கழல் வணங்குநர், தங்களைத்
                  தழீஇக் கொண்டு,
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்தபின், சென்று,
                  அவர் முகம் நோக்கி,
'யான் வணங்கி, மா மாயனைத் தூதுவிட்டு, 'எனது பார்
                  எனக்கு' என்ன,
வான் வணங்கினும் வணங்கலா முடியினான், மறுத்து,
                  'அமர் புரிக!' என்றான்.

8
உரை
   

கண்ணன் பாண்டவருடன் வீடுமனை அடுத்து, 'நீயே
போர் செயின் வெல்லுதல் கூடுமோ?' என்ன,
அவன் தன்னை வெல்லும் உபாயம் உரைத்தல்

பூண்ட வெம் பரித் தேர்மீது, அப் பொய் இலா மெய்யினானும்,
பாண்டவர்தாமும் ஆகப் பகீரதி மைந்தன்தன்பால்
ஈண்டினான், எய்தி, 'நீயே இவருடன் மலையின், மற்று உன்
காண்தகு போரின் வென்று களம் கொளத் தகுமோ?' என்றான்.

9
உரை
   

மற்று அவன், 'தருமராசன் மைந்தனே அவனிக்கு எல்லாம்
கொற்றவன் ஆகும்; என்னைக் கொல்ல, நீ உபாயம் கேண்மோ:
அற்றை வெஞ் சமரில் சீறும் அம்பை என்று ஒருத்திதானே
செற்றிட, தவமும் செய்து, சிகண்டியாய்ப் பிறந்து நின்றாள்.
10
உரை
   

'பன்னு சீர் யாகசேனன் குமரனைப் பத்தாம் நாளில்
என் எதிர் அமரில் காட்டில், யான் படை யாவும் தீண்டேன்;
பின் அவன் வெகுண்டு செய்யும் பெருமிதம் கண்டு, மீண்டு,
கன்னனை வெல்ல நின்ற காளை கைக் கணையால் வீழ்வேன்.

11
உரை
   

'நின்றனை, அருளோடு ஆங்கே, நீல மா மேனியாய், நீ!
வென்றி மற்று இவரே அல்லால், வேறு யார் எய்துகிற்பார்?'
என்றனன்; என்ற போது, அப் பிதாமகன் இரு தாள் போற்றி,
நின்றவர் தம்மைக் கொண்டு, சிலைமுனி நிலையில் போனான்.

12
உரை
   

பின் துரோணனிடம் சென்று, 'நீ அருள் செயின்
இவர்க்கு வாழ்வு உண்டு' என்ன, அவன் தான்
மாளும் வகை உரைத்தல்

போய், அவர் குருவின் பாதம் போற்றி, முன் நிற்ப, செங் கண்
மாயவன் அவனை நோக்கி, 'வாகை அம் தாமம் சூட,
நீ இவர்க்கு அளித்தி ஆகில், உண்டு; அலால், நின்னை வையம்
தாயவர் தமக்கும் வேறல் அரிது' எனச் சாற்றினானே.

13

உரை
   

'மன் மகன் தருமன் வென்று, வையகம் எய்தி நிற்பான்;
என் மகன் எனக்கு முன்னே இறந்தனன் என்று, வானில்
வில் மகபதியை ஒக்கும் வேந்தன் முன் சொல்லின், சூரன்
தன் மகன் மகனே! பின்னைச் சாபம் ஒன்று எடுக்கிலேனே.
14
உரை
   

'என் பெருஞ் சாபம் கைவிட்டு யான் எதிர் நிற்றலானும்,
தன் பெருஞ் சாபத்தாலும், சமரிடைத் திட்டத்துய்மன்
வன்புடன் எனக்குக் கூற்றாய் மலைகுவன்; மலைந்த அன்றே,
நின் பெருங் கருத்து முற்றும்; ஏகுவீர், நீவிர்!' என்றான்.
15
உரை
   


பின், பாண்டவர் சேனையை அசல வியூகம் வகுத்து,
விந்தையை வணங்கி, மாயோன் சொன்னதும்
போர் தொடங்குதல்

முனிவனை விடை கொண்டு ஏகி, முகுந்தனும் தாமும், முன்னம்
தனி வனம் திரிந்து மீண்டோர், தானை அம் கானில் புக்கார்-
பனி வனம் நிறைந்த பொய்கைக் கரை, நிழல் பரப்பும் தேமாங்
கனி வனம் என்ன, யார்க்கும் உதவி கூர் கருணைக் கண்ணார்.

16
உரை
   

கொற்றவர் தம்மை ஏழ் அக்குரோணி வெஞ் சேனையோடும்,
பற்றுடை அசலம் ஆகும் பான்மையால் வியூகம் ஆக்கி,
'வெற்றி தந்து அருள்க!' என்று, ஏத்தி, விந்தையை
                  வணங்கி, மாயோன்
சொற்றபின், தூசியோடு தூசி சென்று உற்றது அன்றே.
17
உரை
   


முரசும் சங்கும் முழங்க, சேனைகள் ஒன்றோடொன்று பொருதல்

புரசை யானைப் பொரு பரித் தேருடை
அரசன் மாத் துவசத்தனஆதலால்,
குரைசெய் வான் பணைக் குப்பைகள் யாவினும்,
முரச சாலம் முழங்கின, சாலவே.

18
உரை
   

மலர்ந்த பற்ப வனம் நிகர் பைந்துழாய்
அலங்கல் வித்தகன் ஏந்தினஆதலால்,
வலம்புரிக் குலம், 'வாழ்வு பெற்றேம்' எனா,
சலஞ்சலத்தொடும், சங்கொடும், ஆர்த்தவே.

19
உரை
   

சென்று தேர்களும் தேர்களும் சேர்ந்தன;
வென்றி வேழமும் வேழமும் ஊர்ந்தன;
நின்ற வாசியும் வாசியும் நேர்ந்தன;
வென்றி வீரரும் வீரரும் மேவினார்.

20
உரை
   

பார வாளமும் வாளமும் பாய்ந்தன;
கூர வேல்களும் வேல்களும் குத்தின;
வீர சாபமும் சாபமும் வீக்கின;
தூர வாளியும் வாளியும் தோய்ந்தவே.
21
உரை
   

இட்ட தார்முடி மன்னவரோடு, எதிர்
இட்ட தார்முடி மன்னவர் எய்தினார்;
பட்டவர்த்தனப் பார்த்திவர் தம்முடன்,
பட்டவர்த்தனப் பார்த்திவர் எய்தினார்.
22
உரை
   

மந்திரத்தவர் தம்முடன், மா மதி
மந்திரத்தவர் வந்து எதிர் மோதினார்;
தந்திரத்தவர் தம்மிசையே செல,
தந்திரத்தவர் சாயகம் ஏவினார்.
23
உரை
   

மண்டலீகர் தம் மார்பு உறை ஆகவே,
மண்டலீகர் தம் வாட் படை ஓச்சினார்;
சண்ட வார் சிலை சாமந்தர் வாங்கவே,
சண்ட வார் சிலை சாமந்தர் வாங்கினார்.

24
உரை
   


அம்பினால் அவயவம் இழந்து நிற்போரின் நிலை

முடி இழந்த நிருபர், முகுந்தனால்
இடி படும் தலை ராகுவொடு, ஏயினார்;
அடி இழந்தவர், ஆதபன் தேர் விடும்
தொடி நெடுங் கை வலவனின், தோன்றினார்.

25
உரை
   

பர் தங்கள் புயங்களும், மார்பமும்,
சாப வெங் கணை தைத்து உகு சோரியால்,
தீபம் என்னவும், செம் மலர்க் கோடுடை
நீபம் என்னவும், நின்றனர், ஆண்மையால்.
26
உரை
   


அம்பு முதலிய இழந்து நின்ற போது வீரர்கள்
காட்டிய தீரச் செயல்கள்

கையில் வாளி தொலைந்த பின், காய்ந்து, தம்
மெய்யில் வாளிகள் வாங்கி, வில் வாங்கினார்;
பொய் இலா மொழிப் பூபதி சேனையின்
மை இல் ஆண்மையினார் சில மன்னரே.

27
உரை
   

வலக் கை அற்று விழவும், மனத்து ஒரு
கலக்கம் அற்ற வெங் கார்முகத்தார் சிலர்,
துலக்கு எயிற்றுக் கணை தொடுத்தார், தொடை
இலக்கம் அற்ற படை இலக்கு ஆகவே.

28
உரை
   


தாள் இரண்டுடைச் சிங்கம் அன்னார் சிலர்
வாள் இரண்டு ஒர் தொடையினில் வாங்கினார்-
கோள் இரண்டும் என, குறுகார் தடந்
தோள் இரண்டும் துணிந்து எதிர் வீழவே.

29

உரை
   

ஓடி முட்டலின், தேர்கள் உடைந்தன;
நாடி முட்டலின், நாகங்கள் வீழ்ந்தன;
கூடி முட்டலின், கொய்யுளை மாய்ந்தன;
சாடி முட்டலின், ஆள்களும் சாய்ந்தனர்.
30
உரை
   

பற்றி நின்று ஒருவன் படை வாள், எதிர்
உற்றவன் தலை சிந்திட, ஓச்சினான்;
அற்ற தன் தலை கொண்டு, அவனும் தனைச்
செற்றவன் தலை சிந்திட, வீசினான்.

31
உரை
   

புங்கம் மெய் புதையப் புதைய, சிலர்,
சிங்கம் என்ன, செருக்களத்து ஆடினார்-
கங்கம் இட்ட பைங் காவண நீழலில்,
அங்கை கொட்டி, அலகை நின்று ஆடவே.

32
உரை
   

வாளி ஆயிரம் தைத்த வழி எலாம்
ஓளியாக ஒழுகும் குருதியால்,
தாள் இலான் நடத்தும் தடந் தேருடை
மீளி ஆம் என நின்றனர், வீரரே.
33
உரை
   

வெட்டினார், படை; மெய்யில் படாமை நின்று,
ஒட்டினார், இமைப் போதினில் ஓடியே,
தட்டினார், உடலைத் தழுவிக்கொடு
கட்டினார், விழுந்தார்-சில காளையர்.


34
உரை
   

பல தேச மன்னர்களும் நெருங்கிப் பொருதல்

கொங்கர், போசலர், போசர், சிங்களர், குகுதர்,
                  ஆரியர், துளுவரும்,
கங்கர், சோனகர், யவனர், சீனர், கலிங்கர்,
                  தத்தர், தெலுங்கரும்,
வங்கர், கோசலர், தமிழர், குண்டலர், ஒட்டர்,
                  மாளவர், மகதரும்,
இங்கும் அங்கும் அணிந்து நின்றவர், எதிர்
                  முனைந்தனர் இகலியே.

35
உரை
   

விசயன் வீடுமனுக்கு எதிரே போர் தொடங்குதல்

விசையன் வெஞ் சிலை வீடுமற்கு எதிர் அமர்
                  தொடங்கலும், வெருவ, எண்
திசையும் ஒன்ற வளைந்து கொண்டன, இருவர்
                  தம் பொரு சேனையும்;
மிசை எழும் துகளால் இமைத்தனர், மேலை
                  நாகரும்; வெங் கழுத்து
அசைய நின்று சுமந்து இளைத்தனர், கீழை
                  நாகரும் அடையவே.

36
உரை
   

உகவைதன்னொடு, வீடுமற்கு உறும் உதவியாக மகீபனும்,
சகுனி சல்லியன் இவரையும், பல தம்பிமாரையும், ஏவினான்;
மிகு கொடுஞ் சின வீமன், விந்தரன், அபிமன்,
                  ஆதியர், விசயனுக்கு,
இகல் நெடும் படை அரசன் ஏவலின், உதவி ஆம்
                  வகை எய்தினார்.

37
உரை
   

வீடுமனும், அவனுக்கு உதவியாக வந்தவரும் சலிக்கும்
வண்ணம் வீமன், அபிமன் முதலியோர் பொருதல்

வன் பனைக் கொடிமீது பன்னிரு வாளி, மெய்க் கவசத்தின்மேல்
ஒன்பது, இப்படி ஏவி, வீடுமன் மெய்ந் நடுங்க உடற்றினான்;
மன் பரப்பொடு, சகுனி, சல்லியன், வந்த தம்பியர் அனைவரும்,
பின்படப் பல கணை தொடுத்தனன்;-வரு சதாகதி பிள்ளையே.

38
உரை
   

ஏசு இலாது உயர் தன் பிதாவின் எழில் பிதாமகன்
                 ஏறு தேர்
வாசி நாலும் விழத் தொடுத்தனன், வாளி நால்,
                 அபிமன்னுவும்;
மாசு இலா விறல் உத்தரன், திறல் மத்திராதிபனுடன்
                 உடன்று
ஆசு இலா அடல் அப்பு மா மழை சிந்தினான்,
                 முகில் அஞ்சவே.

39
உரை
   

சல்லியன் வேலால் உத்தரன் மடிய, வீமன் வெகுண்டு வருதல

வாவி மேல்வரு புரவி வீழவும், வலவன் வீழவும்,
                 மற்றுளார்
ஆவி வீழவும், அவன் எடுத்த வில் அற்று வீழவும்,
                 அமர் செய்தான்;
'பாவியோடு இனி வில் எடுப்பது பாவம்' என்று,
                 ஒரு பார வேல்
ஏவினான், எதிர் சென்று சல்லியன்; இவனும்
                 வானகம் ஏறினான்.

40
உரை
   

'இன்று பட்டனன் மச்சர் கோமகன்' என்று, தங்களில் நேரலார்
ஒன்று பட்டு, மிகைத்து எழுந்தனர் ஊழிவாய்
                 எழும் உததிபோல்
அன்று பட்ட கலக்கம் அப்படி, ஐவர்தம் படை; அமரின்மேல்
வென்று பட்டம் அணிந்த வாரணம் என்ன வந்தனன், வீமனே.

41
உரை
   

தாமன் மேல் வர வர உடைந்திடு தமம் எனும்படி, தண்டுடன்
வீமன் மேல் வர வர உடைந்தனர், மேவலார்கள்; வலம்புரித்
தாமன் மேல்வர வரவு கண்டு, தரிக்கிலாது எதிர் சென்றனன்-
காமன்மேல் அரன் என்ன, நெஞ்சு கனன்று,
                 கண்கள் சிவக்கவே.
42
உரை
   

வீமன் துரியோதனனுடன் பொருது, அவனது வில்லை
ஒடித்து, தேரையும் எடுத்து எறிய, மன்னர்
பலர் துரியோதனனுக்கு உதவ வருதல்

செண்டினால் வசுகிரி திரித்திடு செழியன் என்ன, எடுத்த கைத்
தண்டினால், எதிர் சென்று, தேர் அணி திரிய வன்பொடு சாடினான்;
மண்டினார் மணி முடியும், வேழமும், வாசியும், பல துணிபடக்
கெண்டினான்; முனை நின்ற பன்னககேதுவோடு அமர் மோதினான்.

43
உரை
   

மோதி ஆயிர பேதமாக முனைந்து, தங்களில் இருவரும்
சாதியாதன இல்லை, மீளி மடங்கல் ஏறு அன தன்மையார்;
காதி ஆடு அமர் புரியும் மேதினி காவலன் குனி கார்முகம்
சேதியா, ஒரு கைகொடு ஏறிய தேர் எடுத்து, எதிர் சிந்தினான்.

44
உரை
   

'fஆர் அழிந்தன; உருள் அழிந்தன; அச்சு அழிந்தன; வச்சிரத்
தேர் அழிந்து, கொடிஞ்சியும் பல சின்னமானது; மன்னனும்,
போர் அழிந்தனன்' என்று, சேனை புறக்கிடாவரு பொழுதினில்,
கூர் அழிந்தது எனக் குறித்து, அணி நின்ற காவலர் கூடினர்.

45
உரை
   

பரித்த தேரொடு பரிதியைச் செறி பரிதிபோல், இரு பக்கமும்
தரித்த வேலினர், தாரை வாளினர், தாம வில்லினர், ஆகவே,
விரித்த வெண்குடை மன்னர் சூழ்தர, வீமன் நிற்பது ஓர்
                
மேன்மை கண்டு,
எரித்த நெஞ்சொடு, விரைவில், மைத்துனர் ஆன
                
கொற்றவர், எய்தினார்.

46
உரை
   

வீமன் கதை கொண்டு பொர, சிவேதனும் ஈசன்
அளித்த வில்லோடு தோன்றுதல்

எய்து மைத்துனர் எய்து, தெவ்வரொடு எண் இல்
                 போர் செய, விண்ணிடைச்
செய்து பெற்றன தேரினின்றும் இழிந்துளான்,
                 நனி சீறினான்-
மொய் திறல் பவமானன் அன்று முருக்கும்
                 முக்குவடு என்னவே,
கைதவப் படை மன்னர் மா முடி சிதைய, அங்கு
                 ஒரு கதையினால்.

47
உரை
   

அம்பரத்தவர் கண்டு நின்றவர் அதிசயித்திட வானின்மேல்,
இம்பர் இப்படி தெவ்வர் வெம் படை இரிய, வன்பொடு திரியவே,
'தம்பி பட்டனன்' என்று கொண்டு, எழு சாகரத்து எழு தழல் என,
தும்பையுற்று மிலைச்சி, ஈசன் அளித்த வில்லொடு தோன்றினான்.

48
உரை
   

சிவேதன் சல்லியனிருக்குமிடம் நாடிச் சென்று, பொருதல்

சங்குஇனங்கள் முழங்கவும், பணை முரசுஇனங்கள்
                 தழங்கவும்,
துங்க வெங் களிறு, இவுளி, தேரொடு தானை
                 மன்னவர் சூழவும்,
'எங்கு நின்றனன், எங்கு நின்றனன், மத்திரத்து அரசு?'
                 என்று போய்,
அங்கு நின்ற மகீபர் வென்னிட, அவனை முந்துற
                 அணுகினான்.

49
உரை
   

சல்லியன் எனப் பெயர் தரித்து வரு கோமுன்,
வல்லியம் எனத் தகு சிவேதன், அமர் வல்லான்,
பல்லியம் முழக்கியது என, பலவும் வீரம்
சொல்லி, ஒருவர்க்கு ஒருவர் தொடு சிலை குனித்தார்.

50
உரை
   

துரியோதனன் சல்லியனுக்கு உதவியாகத் தன் தம்பியர்
அறுவரை விடுத்தல்

'ஒருவரும் இவர்க்கு நிகர் இல்லை' என உற்றே,
இருவரும் மலைந்திட, இராச குலராசன்,
'பருவரல் கொள் மத்திரபதிக்கு உதவி ஆக!' என்று
அரு வரையொடு ஒத்த புயர் அறுவரை விடுத்தான்.

51
உரை
   


தரணிபதி தம்பியர்கள் தானையொடு வந்தே,
இரணமுகம் ஒன்றும் மயிலோன் என எதிர்த்தார்;
திரள் நறைகொள் தார் புனை சிவேதன், அவர் அந்தக்-
கரணம் வறிதாகும்வகை கணை பல தொடுத்தான்.

52
உரை
   

முரண்டு எதிரும் மன்னவர் முரண்கொள் சிலை, ஓர் ஒன்று
இரண்டு சிலை ஆக, ஒரு வீரன் இவன் எய்தான்;
திரண்டு வரு மன்னர் முடி சிந்தி, உடல் மண்மேல்
புரண்டு விழ, வாளி மழை தூவு புயல் போல்வான்.
53
உரை
   

தேரும், விசை கூர் இவுளியும், செறி பனைக்கைக்
காரும், அயில் வாள் சிலை தரித்து வரு காலாள்
யாரும், வெடி பூளை வனம் என்ன, ஒருதானே,
ஊரும் ஒரு தேர் அனிலம் ஒக்கும் என, நின்றான்.

54
உரை
   


துரியோதனன் தூண்டுதலால் வீடுமன் சிவேதனை எதிர்த்தல்

பட்டன ஒழிந்த பல படையும் இவன் அம்பில்
கெட்ட நிலை கண்டு, உரககேதனன் உரைப்ப,
தொட்ட வரி வில்லினொடு சூறை அனிலம்போல்
விட்ட பரிமா இரத வீடுமன் எதிர்ந்தான்.

55
உரை
   

மத்திரனை விட்டு, மிசை வந்த மகிபதிமேல்
அத்திரமும் விட்டு, அவன் அடல் சிலை அறுத்தான்;
சித்திரம் எனும்படி திகைத்தனன், விராடன்
புத்திரன் விடும் கணை பொறாது, புலிபோல்வான்.

56
உரை
   

வீடுமனும் மீள ஒரு விற்கொடு, சிவேதன்
சூடு முடி வீழ, ஒரு சுடு கணை தொடுத்தான்;
கோடு சிலை வாளி பல கொண்டு, இவன், அவன் தேர்
நீடு கொடி ஆடையை நிலத்துற அழித்தான்.

57
உரை
   


பின்னையும் அவன் தனி பிடித்த வரி சாபம்-
தன்னையும் இவன் பல சரங்கொடு துணித்தான்;
மின்னையும் நகும் பகழி வீடுமன் வெகுண்டு, ஆங்கு,
'என்ன அமர் செய்வது இனி!' என்று தளர்வுற்றான்.

58
உரை
   


வீடுமன் தளர்வுற, துரியோதனன் மன்னர் பலரை ஏவுதலும், அவர் சிவேதன் எதிர் நிற்கலாற்றாது தோற்றோடுதலும்

தளர்ந்த நிலை கண்டு, துரியோதனன், 'அரும் போர்
விளைந்தது சிவேதனுடன்; வீடுமன் இளைத்தான்;
இளந்தலை உறாதபடி ஏகுமின்' என, போய்க்
கிளர்ந்த முடி மன்னர் பலர் கிட்டினர், விரைந்தே.

59
உரை
   


அந்த முடி மன்னவர் அநேகரையும், முன்னம்
வந்த வழி மீளவும் வரும்படி துரந்தான்-
தம் தம் வரி வில்லும், அணி தாரும், விடு தேரும்,
சிந்த, எரி கால்வன சிலீமுகம் விடுத்தே.

60
உரை
   

வெவ் அனலம் நேர் குகுர ராசனையும், வேறு ஓர்
ஐவரையும், ஏவினன்; முனைந்தனர்கள், அவரும்;
செவ் வரைகள் போல்பவர் சிரங்களும், வளைக்கும்
கை வரி விலும், துணிபட, கணை தொடுத்தான்.

61
உரை
   


வீடுமன் சிவேதன் எதிர் மீண்டும் சென்று, வில்
இழந்து நிற்றல்

கங்கை மகன் மற்றும் ஒரு கார்முகம் வளைத்து,
சிங்கம் என, அப்பொழுது உறுக்கி, எதிர் சென்றான்;
அங்கு அவன் நகைத்து, ஒரு தன் அம்புகொடு, மீளப்
பங்கம் உற, வில் துணி படுத்தி, எதிர் நின்றான்.

62
உரை
   

ஆன பொழுது, அந்தரம் நெருங்கி அமர் காணும்
வானவர், விராடபதி மைந்தனை மதித்தார்;
'வேனிலவன்மேல் நுதல் விழித்தவன் அளிக்கும்
கூனல் வரி சாபம் இது கொண்டனன், வரத்தால்;
63
உரை
   

'ஏறு அனைய வீடுமன் இளைத்தபடி கண்டால்,
வேறு அவனை வில்லவரில் வெல்ல உரியார் யார்?
மாறுபடு வெஞ் சமரில் வஞ்சனையில் அன்றிக்
கோறல் அரிது' என்றனர், குலப் பகை முடிப்பார்.

64
உரை
   


'வில் ஒழிய வேறு படை கற்றிலையோ?' என்று வீடுமன் வினாவ, சிவேதன் வாள் கொண்டு பொருதல்

ஓகை நிகழ் எண் வகை வசுக்களில் ஒருத்தன்
ஆகிய நராதிபதி அம் முறை அறிந்தான்;
'வாகை வரி வில் ஒழிய, வாள், அயில்கள் என்னும்
வேகம் உறு வெம் படைகள் கற்றிலைகொல், வெய்யோய்?'

65
உரை
   

என்று எதிர் சிவேதனொடு இயம்புதலும், வெள்கி,
குன்று சிலை கொண்டவன் அளித்த சிலை கொள்ளான்,
வென்றி வடி வாள் உருவி, மேலுற நடந்தான்;
நின்றவனும் வேறு ஒரு நெடுஞ் சிலை குனித்தான்.

66
உரை
   


வீடுமன் தன் வில்லால் சிவேதன் கை ஒன்றைத்
துணித்து, உயிரையும் கவர்தல்

வாளின் எதிர் வெஞ் சிலை வளைத்து, வய வீரன்
தோள் இணையில் ஒன்று துணியக் கணை தொடுத்தான்;
காளை ஒரு கை விழவும், மற்றை ஒரு கையால்,
மீளவும் வெகுண்டு, சுடர் வாளினை எடுத்தான்.

67
உரை
   

எடுத்த வடி வாளினொடும் எண் இல் பல பாணம்
தொடுத்து வரு வீடுமனை, மா முடி துணிப்பான்
அடுத்து வருபோது, அவன் அழன்று, ஒரு சரத்தால்
நடுத் தகை உறாமல், அவன் நல் உயிர் கவர்ந்தான்.

68
உரை
   

வானோர் மகிழ, துரியோதனன் பக்கத்து
அரசர்கள் மகிழ்வடைதல்

பூழி பட நிலமிசை அப் பொற் சுண்ணம் கமழ்
                 மேனிப் புதல்வன் வீழ,
வாழி மொழிந்து, உளம் மகிழ்ந்தார், அந்தர துந்துபி
                 முழங்க, வானோர் உள்ளார்;
ஊழி பெயர்ந்து, உலகு ஏழும் உள் அடக்கி, திசை
                 நான்கும் உகளித்து ஏறி,
ஆழி பரந்து ஆர்ப்பது என ஆர்த்தனர், அப் பெருஞ்
                 சேனை அரசர் எல்லாம்.

69
உரை
   


படுகளக் காட்சிகள்

உடைந்த தடந் தேர் உருள்கள், உகு குருதிப்
                 புனல்தோறும், உம்பர் வானில்
அடைந்த வயவருக்கு வழி ஆய சுடர் மண்டலத்தின்
                 சாயை போலும்;
மிடைந்த குடை காம்பு அற்று மிதப்பனவும், கரிய
                 புகர் வேற்கண்
மாதர் குடைந்த நறும் பரிமளச் செங் குங்கும நீர்-இடை
                 எழுந்த குமிழி போலும்.

70
உரை
   

வெங் கலங்கல் கடுங் குருதி வெள்ளத்துக் கொடி
                 ஆடை மிதக்கும் தோற்றம்,
செங் கலங்கல் புதுப் புனலில் விளையாடித் திரிகின்ற
                 சேல்கள் போலும்;
பொங்கு அலங்கல் நிருபர் தலை புனை மகுடத் துடன்
                 கிடப்ப, பொறி ஆர் வண்டு
தங்கு அலங்கல் வண் கனக சததள பங்கய முகுள
                 சாலம் போலும்.

71
உரை
   

எண் இழந்த குருதி நதி, இரு மருங்கும், கரி, பரி,
                 ஆள், கரைகள் ஆக,
கண் இழந்த பறை இடையே செருகிய கால்வாய்த்
                 தலையின் கண்கள் போலும்;
மண் இழந்து படும் அரசர் மணிக்கலங்கள் பல
                 சிந்தி, வயங்கு தோற்றம்,
விண் இழந்து, பரந்த செழுங் கடலிடையே
                 மீன்இனங்கள் வீழ்ந்த போலும்.

72
உரை
   


சூரியன் மறைய யாவரும் தத்தம் பாடிவீடு அடைதல்

பட்ட நுதல் களி யானைப் பாண்டவர்தம் படைத்
                 தலைவன் பட்டானாக,
தொட்ட கழல் தட மகுடச் சுடர் வடி வாள் மகிபர்
                 எலாம் துணுக்கம் எய்தி,
விட்ட படங்கு இயல் பாடிவீடு அணைந்தார்;
                 வெயிலோனும், மேல்பால் குன்றில்
கிட்ட, அவன் வடிவமும் இக் குருதியினால் சிவந்தது
                 என, கிளர்ந்தது அம்மா!

73
உரை
   


புதல்வரை இழந்த விராடனுக்கு, கண்ணனும்
தருமனும் தேறுதல் உரைத்தல்

திரு நெடுமால் முதலான தேர் வேந்தர் விராடனுழைச்
                 சென்று, 'உன் மைந்தர்
இருவரும் இன்று ஒருபடியே வெஞ் சமரில் எஞ்சினர்
                 என்று இரங்கல், ஐயா!
பொரு முனையில் வீடுமனைப் புறங்கண்டு, நிருபர்
                 எலாம் பொன்ற வென்று,
விரகுடன் வாள் எடுப்பித்த பிறகு அன்றோ, தொடு
                 சரத்தால் வீழ்ந்தது!' என்றார்.

74
உரை
   

'பேய் செய்த அரங்கு அனைய பெருங் கானில்
                 திரிவோர்க்கு, பெற்ற காதல்
தாய் செய்த உதவியினும், தகும் உதவி பல செய்தாய்;
                 சமரூடு இன்று உன்
சேய் செய்த உயிர் உதவி தேவர் எலாம் துதிக்கின்றார்;
                 செறிந்தோர் தம்மில்
நீ செய்த பேர் உதவி யார் செய்தார்!' என உரைத்தான்-
                 நெறி செய் கோலான்.

75
உரை
   


தன் உயிரும் தருமனுக்கு உரியதே என விராடன்
மறுமொழி பகர்தல்

'உன் உயிர்போல் நீ வளர்த்த உத்தரன்தன் உயிரும்,
                 உருத்து எழும் சிவேதன்-
தன் உயிரும் போர் அரசர்தாம் இருந்து கொண்டாடச்
                 சமரில் ஈந்தார்;
என் உயிரும் நினது அன்றி, யாரது, இனி? சதுர்
                 முகத்தோன் ஈன்ற பாரின்
மன்னுயிருக்கு உயிர் அனையாய்!' என உரைத்தான்-
                 வள மலி சீர் மச்சர் கோமான்.

76
உரை
   


இரவி எழ, இருள் மறைதல்

முப்பொழுதும் உணர் கேள்வி முகுந்தனுடன் பாண்டவரும்
                 முடி சாய்த்து, ஆங்கண்
'எப்பொழுது விடிவது?' என நினைதரும் எல்லையில்,
                 வல்லே இரண்டு போரும்,
அப்பொழுது காண்டற்கு வருகின்றான் என, தடந் தேர்
                 அருக்கன் வந்தான்;
மைப் பொழுதும் சிவேதன் எதிர் மத்திரத்தான் வரூதினிபோல்
                 மாய்ந்தது அம்மா!

77
உரை