30. இரண்டாம் போர்ச் சருக்கம்

கடவுள் வாழ்த்து

எந்த எந்த யோனி பேதம் எங்கும் எங்கும் உள்ளன,
அந்த அந்த யோனிதோறும் ஆவி ஆன தன்மையைச்
சிந்தையின்கண் ஒரு கணத்தில் நிகழுமாறு, தேவர்கோன்
மைந்தன் உய்ந்திட, புகன்ற வள்ளல் தாள் வணங்குவாம்.

1
உரை
   


திட்டத்துய்மனைச் சேனாபதியாகக் கண்ணன் நியமித்தல்

சோனை மேகம் என்ன வாளி தூவு திட்டத்துய்மனை,
'சேனை நாதன் ஆகி, நீ செருச் செய்க!' என்று செப்பினான்-
வானை ஆதி ஆன பூத பேதம் ஆகி, மாயை ஆய்,
ஏனை ஞான ரூபி ஆகி, யாவும் ஆய எம்பிரான்.

2
உரை
   


இருபக்கத்துச் சேனைகளும் களத்தில் வந்து கலத்தல்

ஐவர் சேனை இங்கு எழுந்தது; அங்கு எழுந்தது, அடலுடைத்
தெவ்வர் சேனை; வெகுளியோடு எழுந்து, இரண்டு சேனையும்,
பவ்வம் ஓர் இரண்டு எழுந்து படர்வது என்ன, வெருவரும்
கவ்வையோடு வந்து, வெங் களத்திடைக் கலந்தவே.

3
உரை
   


வெம் பராகம் வெளியில் உற்று எழுந்த போது, வேழ வில்
சம்பராரி தகன நாளில் அன்று எழுந்த தன்மை என்று
உம்பரார் நடுங்கினார்; உருத்து வீழும் உரும் என,
இம்பரார் நடுங்கினார், இரங்கு பல் இயங்களால்.

4
உரை
   


தருமன் தம்பியர் முதலியோர் சூழ, திட்டத்துய்மனோடு
களத்தில் அணி வகுத்து நிற்றல்

அளவு இல் மன்னர் ஏறு தேர்கள் ஆறு-இரண்டு பத்து நூறு,
இளவலோடு கச துரங்கமங்களோடும், இடம் வர;
பளகம் அன்ன எழுபது உற்ற பத்து நூறு தேரொடும்,
வளவர் ஆதி மன்னரோடும், நகுலராசன் வலம் வர;

5
உரை
   


மிடல்கொள் வாள் அமைச்சரோடு விரைவின் வீரர் பின் வர;
முடுகு சேனை அபிமன், வீமன், விசயன், மாயன், முன் செல;
நடுவு நால்வகைப் படும் பதாதியோடு, நாயகன்,
கடக நாதனுடன் அணிந்து நின்றனன், களத்திலே.

6
உரை
   


வீடுமன் அணிவகுத்து, துரியோதனனோடு நடுவண் நிற்றல்

மாடு இரண்டும் எண் இல் கோடி மன்னர் சேனை நிற்கவும்,
பீடு கொண்டு அநேக மன்னர் பேர் அணிக்கண் நிற்கவும்,
சூடு தும்பை மண்டலீகர் தூசியாக நிற்கவும்,
வீடுமன் மகீபனோடு நடுவண் வந்து, மேவினான்.

7
உரை
   


திட்டத்துய்மன் துரோணனோடு பொருது தோற்று ஓடுதல்

வீசு கொண்டலுடன் எதிர்ந்து கோடை உந்தி வீசவே,
மூசு கொண்டல் ஓர் இரண்டு முடுகி நின்று பொழிவபோல்,
தூசி நின்ற வீரரோடு தூசி வீரர் வில் வளைத்து,
ஆசுகங்கள் வீச வீச, அந்தரம் புதைந்தவே..

8
உரை
   


சொல் கையாத வாய்மை வல்ல துருபதன் குமாரனும்,
விற்கை ஆசிரியனும் உற்று எதிர்ந்து தம்மில் வெகுளவே,
பொற் கை வெஞ் சராசனம் பொழிந்த கோல், இழிந்த வான்
உற்கை என்ன, ஒருகைமா முகங்களூடு ஒளித்தவே.

9
உரை
   

வீர சாபமுடன் உரைக்கும் வெய்ய சாபம் வல்ல அத்
தீரன் வாளியால் அழிந்து, சிலையும் ஏறு தேரும் விட்டு,
ஈர மா மதிக்கு உடைந்த இருள்கொல் என்ன ஏகினான்-
ஆரவாரமுடன் மலைந்த ஐவர் சேனை அதிபனே.
10
உரை
   


சேனைத் தலைவன் நிலை கண்டு, வீமன் தேரில் நெருங்கி
வந்து பொர, சக்கரதேவன் எதிர்த்தல்

உடைந்து உடைந்து சேனை மன்னன் வருதல் கண்டு, உருத்து, வான்
மிடைந்த கொண்டல் என அதிர்ந்து, வீமசேனன் வேலையைக்
கடைந்த குன்றொடு ஒத்த தேர் கடாவி வந்து, முனிவனோடு
அடைந்த மன்னர் உட்கி ஓட, ஒரு கணத்தில் அமர் செய்தான்.

11
உரை
   


உக்ரமாக வீமன் வந்த உறுதி கண்டு, அநேக போர்
விக்ர மா மதத் தடக் கை வேழ வீரர் தம்முடன்,
வக்ர சாப மழை பொழிந்து-வட கலிங்க மன்னவன்,
சக்ரதேவன்,-முகில் எறிந்த உரும் எனத் தலைப்பெய்தான்.

12
உரை
   


தூசியிலுள்ள யானைப்படை வீமனால் அழிந்தமை கண்டு,
சக்கரதேவன் வில் ஏந்தி வருதல்

கதிக் கடுந் தேரினின்று இழிந்து, காலிங்கன்
மதிக்கும் மும் மத கரி வந்த யாவையும்
துதிக்கை வன் கரங்களால் சுற்றி, எற்றினான்-
விதிக்கு ஒரு விதி அனான் வீமசேனனே.

13
உரை
   

மின் பொழி படையுடை மேவலார் உடல்
என்பு உக, இபங்களை எடுத்து எறிந்தனன்-
தன் பெருந் துணைவனாம் தாம மாருதி
வன்புடன் பறித்து எறி வரைகள் என்னவே.
14
உரை
   

வெம்பி மேல் வரு திறல் வீமன், மும் மதத்
தும்பிமேல் விழ விழ, தும்பி வீசுவ-
பம்பி மேல் எறிதரு பவனனால், கடல்
அம்பிமேல் விழ விழும் அம்பி போன்றவே.
15
உரை
   

வரு களிறு ஒரு கையால் வாங்கி, வீசலின்,
பொரு பணை மண்ணுறப் புதைய வீழ்ந்தன-
விரி திரை நெடுங் கடல் விசும்பு தூர்த்த நாள்,
இரு நிலம் இடந்திடும் ஏனம் போன்றவே.
16
உரை
   

கழல் அணி பொலங் கழல் காளை கைகளால்,
எழ எழ, மத கரி எடுத்து வீசலின்,
விழுவன அன்றி, மேல் விசையின் போவன-
பழைய கல் சிறகுடன் பறப்ப போன்றவே.
17
உரை
   

புகலுறு கலிங்கர்கோன் போரில் வென்னிட,
இகலுடன் எடுத்து எடுத்து இவன் எறிந்த போது,
அகல் வெளி முகடு உற அதிர்ந்து, மேல் எழும்
முகபட முகில்கள் வான் முகில்கள் போன்றவே.
18
உரை
   


வென்னிடு கட கரி வீரன், வீமன் முன்
முன் அணி கலங்குற முறிந்தவாறு கண்டு,
'என் இது?' என மொழிந்து, ஏறு தேரொடும்
தன் ஒரு சிலையொடும், தானும் தோன்றினான்.

19
உரை
   


'களத்திடை மடிந்தன, கலிங்கன் வேழம்' என்று,
உளத்து அழல் கண் இணை சிவப்ப, உந்திட,-
தளத் தரணிபர் எனும் தானை யானைகள்-
வளைத்தன, மருத்தின் மா மடங்கல்தன்னையே.

20
உரை
   


கலிங்கமன்னன் சக்கரதேவனும் அவன் மைந்தர்களும்
மாண்டமை கண்டு, வீடுமன் வீமனோடு
நெருங்கி வந்து பொருதல்

கந்து அடர் களிற்றுடன் கலிங்க பூபதி,
மைந்தரும், சேனையும் பொருது மாய்ந்தபின்,
இந்திரனால் சிறகு இழந்த குன்றுபோல்,
சிந்தை நொந்து, உடன்றனன், சேனை மன்னனே.

21
உரை
   

வீமனும் தனது தேர்மேல்கொண்டு, ஆங்கு ஒரு
தாம வேல் அவன் புயத்தடத்தில் ஓச்சினான்.
மா மரு மாலையான்தானும் மற்று அ(வ்) வேல்
தோமரம் ஒன்றினால் துணித்து, வீழ்த்தினான்.
22
உரை
   

ஓடும் இரதத்து இவுளி நாலும் உடல் அற்று விழ,
                ஓர் ஒர் கணை தொட்டு, இரதமும்
ஈடு குலைய, துவசம் வீழ, அனிகத்தவரும் ஏக,
                எதிர் முட்டுதலுமே-
நீடு வரை ஒப்பது ஓர் கதாயுதம் எடுத்து, அணுகி,
                நேர்பட, அடித்தனன்அரோ,
வீடுமன் மனத்து அனைய தேர் வலவனை, கடிதின்,
                வீமன் எனும் வெற்றி உரவோன்.
23
உரை
   


வேகமுடன் இப்படி அவ் வீமனும் உடற்றி, அடல்
                வீடுமனொடு ஒத்த முது போர்,
மோகர விதத்து அரசர் மா மகுட ரத்நமுடன்
                மூளைகள் தெறிக்க அடியா,
நாகமொடு எடுத்து இவுளி தேர் சிதறி முற்ற, ஒரு
                நாழிகையில் எற்றி வரவே,
ஆகவம் முழுக்க உரும்ஏறு எறிவது ஒக்கும் என,
                ஆரவம் மிகுத்தது அறவே!

24
உரை
   


வீடுமனும் வீமனும் ஒத்துப் பொருகின்ற நிலையில்,
அபிமன் உதவிக்கு வருதல்

மீளவும் வளைத்த சிலை வீடுமன், அதிர்த்த குரல்
                வீமனொடு உருத்து, இருவரும்
காள முகிலுக்கு முகில் நேர் மலைவது ஒக்க, எரி
                காலும் நயனக் கடையினார்,
மூள எதிர் முட்டி, இரு சேனையும் நிலத்து உதிர,
                மோது பொழுதத்து, வெகுளா,
வாள் அபிமன் வெற்றி வரி வார் சிலை குனித்து,
                வய வாளிகள் தொடுத்து வரவே,

25
உரை
   

வார் சிலையை வட்ட வடிவு ஆம்வகை வணக்கி,
                எதிர் மாறுபட உற்று வருவோர்
ஓர் ஒருவர் நெற்றிதொறும் ஓர்ஒரு வடிக் கணைகள்
                ஊடு உருவ விட்டு நகுவோன்-
மேருவை வளைத்து, நெடு வாசுகி, பிணித்து, மழை
                மேகம் நிகர் மெய்க் கணை தொடா,
ஆர் அழலின் முப்புரமும் நீறு எழ, நகைத்த
                அரவு-ஆபரணன் ஒத்தனன்அரோ.
26
உரை
   


வீமனும் அபிமனும் வீடுமனை வளைத்துப் பொர, துரியோதனன்
உதவிக்குப் பல மன்னர்களை அனுப்புதல்

மேவலர் விதப் படையும் வீடுமனும் உட்கும்வகை,
                வீமனும், விறல் புதல்வனும்,
பூவலயம் முற்றும் எழு கால இறுதிப் பரவை-போல்
                இகல் விளைத்த பொழுதில்,
கூவலின் நிலைப் புனலும் மீது எழுவது ஒத்தது ஒரு
                கோபமொடு, சர்ப்ப துவசக்
காவலன் உரைப்ப, இருவோரையும் வளைத்தனர்கள்,
                காவலர் எனைப் பலருமே.

27
உரை
   


அது கண்டு, அருச்சுனன் வீம அபிமருக்குத் துணையாக வருதல்

தானவர் சமத்தும் இரு தோள்வலியும், அற்று,
                முனைதானை புறகிட்டு அழியவே,
வானவர் துதிக்க, வய வாகை புனைய, கடவுள்
                வாழ்வு இனிது அளித்து வருவோன்,
'மீனவன் எனத்தகைய காளையொடு எடுத்த கதை
                வீமனை வளைத்தனர்' என,
கூனல் வரி விற் பகழி தூவி, இரதத்தின்மிசை கூவி,
                அவரைக் குறுகினான்.

28
உரை
   


வீடுமன் படை பின்னிட்டுப் பாசறையை நோக்கி ஓடுதல்

வீசு பகழித் துளியின் மேகம் என, விற்கொடு இவன்
                மேலுற நடக்கும் அளவில்,
தேசுடை அருக்கன் எதிர் மூடு பனி ஒத்து, அரசர்
                தேர் அணி கெடச் சிதறினார்;
மாசுண மணிக் கொடி மகீபதி படைத்தலைவன் வார்
                சிலை வளைத்திலன்; நெடும்
பாசறை புகக் கடவினார், கட களிற்றின் அணி பாய்
                பரி அணிப் படைஞரே.

29
உரை
   


சூரியன் மறைவும், வீரர்கள் பாடிவீடு புகுதலும்

வேலை அமுதுக்கு வரு வானவர்கள் ஒத்தனர்கள்,
                வீடுமன் முதல் படைஞரார்;
ஆலம் நிகர் ஒத்தனன், அனீகினி தொலைத்து ஒரு
                தன் ஆண்மை நிலையிட்டு வருவோன்;
'மேல் இனி இமைப்பொழுது நாம் வெளியில் நிற்கில்
                இவன் மேலிடும்' எனக் கருதினான்-
போல், எழு வயப் புரவி ஊரும் இரதத்து இரவி
                போய், உததியில் சொருகினான்.

30
உரை
   

ஆதபன் ஒளித்த திசையோ ஒளி சிவந்தது? அற ஆழ்
                குருதி மெத்துகையினால்,
மாதிரமும் மைக் கடலும் மாநிலமும் முட்ட, ஒரு மாசு
                அறு சிவப்பு வடிவாய்,
ஏதில் இருள் புக்கு உலவலாம் இடம் அற, கடையின்
                ஏறு அனலி ஒத்தது; இகலி,
பாதகம் மிகுத்த கொலை வாள் நிருபர் தத்தமது பாடி
                நகர் புக்கனர்களே.
31
உரை
   


பின்னிட்டு வந்த அரசர்களைத் துரியோதனன் அச்சுறுத்துதல்

கூளிகள் செருக்கி நடமாடு களம் விட்டு, அரசர்
                கோமகனை உற்ற அளவிலே,
'வாள் அபிமனுக்கும், ஒரு தேர் விசயனுக்கும்,
                நம் வரூதினி புறக்கிடுவதே!
நாளை முதுகிட்டவரை ஆர் உயிர் செகுத்திடுவன்,
                நான்' என உரைத்தனன்அரோ.
மீளவும் உதித்தனன், விரோசனன், முதற் பகலில்
                வீரர் விறலைக் கருதியே.

32
உரை